"இலங்கை அரசின் மேற்கு நோக்கிய இன்னொரு அடியெடுப்பு! " -தனபதி



ட கொரியாவைச் சேர்ந்த நால்வர் இலங்கையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள வருகை தர இருந்த வேளையில் நாட்டுக்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் விசா மறுத்திருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தற்போதைய அரசாங்கம் மேலும் மேலும் மேற்கத்தைய சார்பாக மாறி வருவதின் இன்னொரு வெளிப்பாடு என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

2017 மார்ச் 17ஆம் திகதி இலங்கை – வட கொரிய நட்புறவுச் சங்கம் கொழும்புக்கு அருகே கட்டுநாயக்க பகுதியில் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கருத்தரங்கில் வட கொரியாவுடன் யப்பான், பங்களாதேஸ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில சுயசார்புக் குழுக்கள் பங்குபற்ற இருந்தன.


இவைகளில் வட கொரிய குழுவுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வட கொரியத் தூதுக்குழுவுக்கு அனுமதி வழங்கினால் தென் கொரியாவுடன் உள்ள உறவு பாதிக்கப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்ததாக, இலங்கை – வட கொரிய நட்புறவுச் சங்கத்தின் தலைவர் துமிந்த வெல்பொல nதிரிவித்திருக்கிறார். இதேவேளை வட கொரிய தூதுக்குழுவுக்கு விசா பெற்றுக் கொடுப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்ட போதிலும் அதுவும் பலனளிக்கவில்லை.
வட கொரியத் தூதுக்குழுவுக்கு விசா மறுத்ததிற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு சொல்லும் காரணம் வியப்புக்குரிய ஒன்றாக இருக்கின்றது. ஏனெனில் முன்னைய இலங்கை அரசுகள் (ஐ.தே.க. அரசுகள் உட்பட) எல்லாமே வட – தென் கொரியாக்களுடன் சமமான உறவுகளைப் பேணி வந்திருக்கையில், தன்னை ஏகாதிபத்திய எதிர்ப்பு கட்சி எனச் சொல்லிக் கொள்ளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்திருக்கும் இன்றைய அரசு மட்டும் வட கொரியத தூதுக்குழுவுக்கு விசா மறுப்பது, முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

வட கொரியா பொருளாதார ரீதியாக பெருமளவில் இலங்கைக்கு உதவாவிட்டாலும், இலங்கை சர்வதேச அரங்கில் நெருக்கடிகளைச் சந்தித்த நேரங்களில் தன்னலம் பாராது இலங்கைக்கு ஆதரவளித்து வந்துள்ளது. அந்த நன்றிக் கடனை தற்போதைய மேற்கத்தைய சார்பு இலங்கை அரசு முற்றாக மறந்து செயல்படுகின்றது.

முதலில் யப்பானிய ஆக்கிரமிப்பையும், பின்னர் அமெரிக்க ஆக்கிரமிப்பையும் எதிர்த்து முறியடித்தே வட கொரியா என்ற சோசலிச நாடு உருவானது. சீனாவிலும் வட கொரியாவிலும் சோசலிச அரசுகள் அமைந்த பின்பு, அமெரிக்கா அவற்றைச் சுற்றியுள்ள தனது நட்பு நாடுகளான தென் கொரியா, யப்பான், தாய்வான் என்பனவற்றில் தனது ஆயிரக்கணக்கான துருப்புகளையும், நவீன போர்த்தளபாடங்களையும் குவித்து வைத்திருப்பதுடன், அந்த நாடுகளுடன் அடிக்கடி போர்ப் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் எந்த நேரமும் தனது நாட்டின் மீது போர் தொடுக்கலாம் என்று அஞ்சும் வட கொரிய அரசு, தற்பாதுகாப்புக்காக என்று சொல்லி அணுவாயுதங்களையும், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளையும்தொடர்ந்து பரீட்சித்து வருகின்றது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பெரும் பதட்ட நிலை தொடர்ந்து நிலவி வருகின்றது.

இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் இலங்கையின் தற்போதைய மேற்கத்தைய சார்பு அரசு, முதல் தடவையாக வட கொரிய தூதுக்குழு ஒன்றுக்கு விசா மறுத்துள்ளது.
இதற்கு முன்னரும் 1971இல் ஜே.வி.பியின் ஆயுதக் கிளர்ச்சி நடைபெற்ற போது, அந்தக் கிளர்ச்சிக்கு சீனாவும் வட கொரியாவும் ஆயுதங்கள் விநியோகித்ததாக ஐ.தே.கவும், அன்றைய சிறீமாவோ அரசில் இருந்த வலதுசாரி சக்திகளும் பொய்ப் பிரச்சாரமொன்றைக் கட்டவிழ்த்துவிட்டு, அந்த இரு நாடுகளுடனான உறவைத் துண்டிக்க வைக்க முயன்றன. ஆனால் சிறீமாவோ அரசு அந்தப் பொய்ப் பிரச்சாரங்களை முற்றிலுமாக நிராகரித்துவிட்டது.
அதுபோல இன்றைய மைத்திரி – ரணில் குழுவினரும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் பின்பும் சீனாவுக்கு எதிராக மிகவும் மோசமான பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டனர். பின்னர் தமது மேற்கத்தைய எஜமானர்கள் உதவாத வங்குரோத்து நிலையில் சீனாவின் காலடியில் சாஸ்டாங்கமாகப் போய் விழுந்தனர்.

இப்பொழுது தமது மேற்கத்தைய எஜமானர்களைத் திருப்திப் படுத்துவதற்காக வட கொரியாவைச் சீண்டிப் பார்க்கின்றனர்.

மூலம்: இதழ் 76, வானவில் 2017

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...