"உள்ளுராட்சித் தேர்தல்களை உடன் நடத்துக!" -வானவில்



லங்கையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உரிய காலத்தில் நடாத்தாது இழுத்தடிக்கப்படும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இந்த வருடத்துக்குள் நடாத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருக்கிறார். அதன் அர்த்தம் இன்னும் மேலதிகமாக ஒரு வருடம் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் இழுத்தடிக்கப்படப் போகின்றது என்பதே. அதன் பின்னரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுமா என்பதற்கு எவ்விதமான உத்தரவாதமும் இல்லை.

இந்த விடயத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மட்டுமே உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை காலதாமதம் இன்றி உடனடியாக நடாத்தும்படி அரசை அடிக்கடி வலியுறுத்தி வருகின்றது.


நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற அழகான பதாகையை வைத்துக் கொண்டு இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்போ, எதிர்க்கட்சிப் பிரதம கொறடா பதவியை வைத்துக் கொண்டிருக்கும் ஜே.வி.பியோ, முஸ்லீம் மக்களின் பிரதான கட்சியான சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசோ, இந்திய வம்சாவழி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மனோகணேசன் தலைமையிலான முற்போக்குக் கூட்டணியோ பேச்சுமூச்சு இல்லாமல் இருக்கின்றன.

அதற்குக் காரணம் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தால் என்ன செய்யும் என்று நன்கு தெரிந்து கொண்டே இந்தக் கட்சிகள் எல்லாம் கூட்டுச் சேர்ந்து இந்த அரசைப் பதவிக்குக் கொண்டு வந்தன.
எனவே இந்த அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலும் பரவாயில்லை, தமது பதவியையும் சொத்துச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தால் மட்டும் போதும் என இவர்கள் கருதுகின்றனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் 2015 ஜனவரி 08 ஆம் திகதி நடைபெற்று அதில் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டினார். அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு சோதிடர் கொடுத்த ஒரு முட்டாள்தனமான ஆலோசனை காரணமாக அவர் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு வருடங்கள் முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடாத்தப்போய் இருந்த பதவியையும் இழக்க வேண்டியதாயிற்று. இல்லாவிடினும் கூட சர்வதேச பிற்போக்கு சக்திகள் மகிந்தவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற விட்டிருப்பார்களோ என்பது சந்தேகத்துக்குரியதே.

ஏதாவது காரணங்களுக்காக கடந்த ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்தில் நடாத்தாது ஒருநாள் பிந்தித்தன்னும் மகிந்த ராஜபக்ச நடாத்தியிருந்தால், அன்றைய எதிரணியில் இருந்த இன்றைய ஆட்சியாளர்களும், அவர்களது சர்வதேச எசமானர்களும், ‘மகிந்த அரசு ஜனநாயகத்தை மீறுகின்றது’ என எத்தகைய கூச்சல் போட்டிருப்பார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இத்தகைய ஜனநாயக ஜம்பவான்களும், அவர்களது ஜனநாயகப் பாதுகாவலர்களும்தான் இன்று உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களை உரிய காலத்தில் நடாத்தாது இரண்டரை ஆண்டுகள் தள்ளிப் போட்டிருக்கிறார்கள். இந்த அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயல் குறித்து நல்லாட்சிக்காகவும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும் கடந்த காலத்தில் உரத்துக் குரல் கொடுத்த சர்வதேச நாடுகளோ, மனித உரிமை இயக்கங்களோ இன்று எதுவும் கூறாமல் மௌனமாக இருக்கின்றன.
இதிலிருந்தே இவர்கள் எலலோரும் கடந்த ஆட்சிக் காலத்தில் மனித உரிமைகளுக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் உரத்துக் குரல் எழுப்பியது போலியானது என்பதும், அவற்றைப் பயன்படுத்தி இலங்கையில் தமக்குச் சாதகமான ஒரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதே அவர்களது நோக்கமாக இருந்தது எனபதும் தெளிவாகின்றது.

உண்மையில் இலங்கையைப் பொறுத்த வரையில் உள்ளுராட்சி சபைகள் என்பது மத்திய அரசாங்கத்தையும், நிறைறே;று அதிகார ஜனாதிபதி முறையையும் விட முக்கியமானது. ஏனெனில் முன்னைய இரண்டையும் விட உள்ளுராட்சிச் சபைகளே கூடுதலாக அடிமட்ட மக்கள் பங்குபற்றும் நிர்வாக அமைப்புகளாகும். அடிமட்டத்தில் மக்களுடைய நாளாந்த விவகாரங்களுடன் தொடர்புபட்ட நிறுவனங்கள் இந்த உள்ளுராட்சி சபைகளே.
இத்தகைய சபைகளின் தேர்தல்களை அரசாங்கம் இழுத்தடிப்பது என்பது அரசாங்கம் உள் நோக்கத்துடன் செய்யும் ஒரு திட்டமிட்ட செயலாகும். அதற்குக் காரணம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.

இன்றைய ‘நல்லாட்சி’யின் பங்காளர்களான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் தேர்தலைக் கண்டு பயப்படுவதே இதற்கான காரணமாகும். ஒரு பக்கத்தில், ஐ.தே.க. தனது மக்கள் விரோதக் கொள்கைகள் காரணமாக நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், தேர்தலில் தாம் தோற்றுவிடுவோமோ என்கின்ற அச்சத்தில் இருக்கிறது. அதே அச்சம் சுதந்திரக் கட்சிக்கும் இருக்கின்றது.

இதைத் தவிர, சுதந்திரக் கட்சி பிளவுபட்டிருப்பதும், அதில் ஜனாதிபதி மைத்திரியின் அணியை விட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அணி பலமாக இருப்பதும்; சுதந்திரக் கட்சிக்கு தோல்விப் பயத்தை ஏற்படுத்தி இருக்கின்ற இன்னொரு காரணமாகும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தென் பகுதியில் நடைபெற்ற சில கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் அணி பெரும் வெற்றியீட்டிய நிலைமையும், ஐ.தே,கவும், சுதந்திரக் கட்சியும் தோல்வி அடைந்த நிலையும் இந்த உண்மையை எடுத்துக் காட்டியிருந்தன. இதன் அர்த்தம் முன்னைய காலங்களைப் போல ஐ.தே.கவும் சுதந்திரக் கட்சியும் அல்ல எதிரும் புதிருமான கட்சிகள். அவை இரண்டுக்கும் ஒன்றிணைந்த எதிரணிக்கும் இடையிலேயே இன்று பிரதான போட்டி நிலவுகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மைத்திரி அணியும் ரணில் அணியும் இணைந்து நின்று போட்டியிட்டதும், அவர்களை தமிழ் – முஸ்லீம் கட்சிகள் ஆதரித்ததும்தான் அவர்களது வெற்றிக்கு அடிப்படையாய் அமைந்தது. ஆனால் உள்ளுராட்சிச் சபைத் தேர்தல்களில் அப்படியான ஒரு சூழல் இல்லாதிருப்பதுடன், ஐ.தே.கவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் பிளவும் அதிகரித்துள்ளது.
இந்த நிலைமையில் ஆட்சியின் பங்காளிக் கட்சிகள் இரண்டும் தேர்தல் ஒன்றைச் சந்திப்பதற்குப் பயப்படுகின்றன. அதனாலேயே சாக்குப் போக்குகளைச் சொல்லி உள்ளுராட்சித் தேர்தலை நடாத்துவதை ஒத்திப் போட்டு வருகின்றன.

ஜனாதிபதி அதிகாரத்தையும் நாடாளுமன்ற அதிகாரத்தையும் வைத்திருக்கும் இந்த இரணடு பிரதான கட்சிகளும், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடாத்தி மக்களுக்கான அதிகாரத்தை வழங்குவதை மட்டும் இழுத்தடித்து வருகின்றன. இது ஜனநாயக மறுப்பு மட்டுமல்ல, அதிகாரப் பகிர்வுக்கு எதிரான போக்குமாகும்.
நாட்டில் நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கின்ற அடிமட்ட நிறுவனங்களான உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தலை உரிய காலத்தில் நடாத்தி அதிகாரங்களை மக்களுக்கு வழங்க மறுப்பவர்கள், அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக புரையோடிப் போயிருக்கும் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகணடு எப்படி சிறுபான்மை இனங்களுக்கு அதிகாரத்தைப் பங்கிட்டளிக்கப் போகிறார்கள் என்ற நியாயமான கேள்வி இந்த இடத்தில் எழுகின்றது.

உண்மையில் இந்த அரசாங்கம் புதிய அரசமைப்பின் மூலம் சிறுபான்மை இனங்களுக்கு அதிகாரத்தைப் பங்கிட்டளிக்கப் போவதாகச் சொல்வது உண்மையானால், முதலில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை இனியும் இழுத்தடிக்காது நடாத்தி அடிமட்ட மக்களுக்கான அதிகாரத்தை முதலில் வழங்கட்டும். அதை விடுத்து பொய் வாக்குறுதிகளை தினமும் அவிழ்த்துக் கொட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

Source: VAANAVIL -ISSUE -76_APRIL 2017

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...