தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் அமரர் எஸ். அருளானந்தம் (25.12.1947 -08-04.2017)

காலஞ்சென்ற திரு எஸ்.அருளானந்தம் நினைவாக அவரின் "தினகரனுக்குள் கறுப்பு ஆடுகள் அல்ல; ஞான சூனியங்கள்! " என்ற தலைப்பில் "தமிழ்க் குரல்" மற்றும் "தேனீ "இணையத்திலும் வெளியான அவரின் கட்டுரை அவரின் தார்மீக குரலின் ஒலியாய் இங்கு மீள் பதிவு செய்யப்படுகிறது. 
Image may contain: 2 people, people standing


தினகரனுக்குள் கறுப்பு ஆடுகள் அல்ல; ஞான சூனியங்கள்! .
- எஸ்.அருளானந்தம், முன்னாள் பிரதம ஆசிரியர் - தினகரன்
லேக்ஹவுஸ் நிறுவன 'தினகரன்' பத்திரிகைக்குள் கறுப்பு ஆடுகள்' என்ற தலைப்பில் 'தேனீ' இணையத்தளத்தில் வெளிவந்த விடயதானத்தைப் பார்வையிட்டேன். அதில் விமர்சிக்கப்பட்டிருந்த இரண்டு கட்டுரைகளையும் முன்னதாகவே வாசித்தபோது அதிர்ச்சியடைந்தேன். இரண்டுமே குறுந்தேசியவாதிகளுக்கும் புலிப் பயங்கரவாதிகளின் வால்பிடிகளுக்கும் சாமரம் வீசும் கடடுரைகள் என்பதுதான் எனது கருத்தும். பச்சைப் பொய்களுடன் இனமுறுகலை ஏற்படுத்தும் பாணியிலமைந்த இந்தக் கட்டுரைகள் அரச சார்புப் பத்திரிகையான தினகரனில் வெளிவந்தமையே எனக்கு அதிரச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தினகரனை வெளியிடும் லேக்ஹவுஸ் நிறுவனத்தில்,  1976ஆம் ஆண்டிலிருந்து 2002ஆம் ஆண்டு இறுதி வரை கடமை புரிந்தவன் நான்.  உதவி ஆசிரியராகத் தினகரனில் இணைந்து, பிரதம உதவி ஆசிரியர், செய்தி ஆசிரியர், பிரதிப் பிரதம ஆசிரியர், பிரதம ஆசிரியர் பதவிகளை படிப்படியாக வகித்தவன் என்ற வகையில் இது தொடர்பாகக் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு எனக்குண்டு.

2011 டிசம்பர் 11இல் வெளிவந்த 'நாங்கள் - நாங்களாக வாழ்வது எப்போது?', டிசம்பர் 18இல் வெளிவந்த 'TNA பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம்', டிசம்பர் 25இல் வெளியான 'தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை' ஆகிய மூன்றுமே தமிழ்பேசும் மக்களுக்குப் பிழையான தகவல்களையும் கருத்துகளையும் வழங்குகின்றன. பிரிவினைவாத சக்திகளின் தொங்கு சதைகள் வெளியிட்ட கருத்துகளே அவை.

டிசம்பர் 11இல் வெளிவந்த சிவராசாவின் கட்டுரை தொடர்பாக:
1995 அக்டோபர் 17இல் ஆரம்பிக்கப்பட்ட 'சூரியக்கதிர்' இராணுவ நடவடிக்கையால் ஆறு இலட்சம் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்தனர் என்பது தவறு. இது மூன்றாவது ஈழப்போர் சம்பந்தமானது. சந்திரிகா அரசுடன் சுமார் நூறு நாட்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த புலிகள் 1995 ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி திருகோணமலைக் கடற்பரப்பில் வைத்து இரு கடற்படைக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதன் பின்னரே யுத்தம் வெடித்தது. நான்காவது ஈழப்போரின்போது சுமார் மூன்று இலட்சம் மக்களைப் புலிகள் பணயக் கைதிகளாகப் பிடித்து வதை;திருந்தனர். 3ஆவது ஈழப்போரின்போது 'சூரியக்கிர்' இராணுவ நடவடிக்கையையடுத்து சுமார் மூன்று இலட்சம் மக்களை யாழ் நகரிலிருந்து புலிகள் வன்னிக்கு விரட்டினர். அக்டோபர் 30ஆம் திகதி வாகனங்களில் சென்று ஒலிபெருக்கிகள் மூலம் மக்களை வெளியேறுமாறு புலிகள் எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் மிகுதியாகத் தங்கியிருந்த மக்களை மிரட்டியம், குண்டுத் தாக்குதல்களை நடத்தியும் புலிகள் வெளியேற்றினர். சுமார் இரண்டு வாரங்களாக இந்தக் கொடூரம் தொடர்ந்தது. (இது தொடர்பான விபரமான விளக்கக் கட்டுரையொன்றினை விரைவில் 'தமிழ்குரல்' இணையத்தளத்தில் வெளியிடவுள்ளேன்)

டிசம்பர் 18இல் வெளியான 'TNA பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம்' என்ற அறிக்கை தொடர்பாக:-

ந்த அறிக்கையில் முதலாவதாகக் கைச்சாத்திட்டிருப்பவர் ஆயர் இராயப்பு யோசப். புலிகள் முள்ளிவாய்க்காலுக்குள் அழித்தொழிக்கப்படுவதற்க முன்னதாக வெளிப்படையாகவும், அப்பட்டமாகவும் புலி ஆதரவுக் கருத்துக்களை வெளியிட்டு வந்தவர் இவர். இந்த அறிக்கைகூட புலிச்சார்புக் கருத்துக்களையே பிரதிபலிக்கின்றன. அரசாங்கத்தோடு தமிழ்க்கூட்டமைப்பு பேசக்கூடாது, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் TNA பங்குபற்றக்கூடாது போன்ற பல புலம்பெயர் வாழ் புலிச்சார்புப் பிரதிநிதிகளின் கருத்துக்களையே இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

'தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை' என்ற தலைப்பில் டிசம்பர் 25இல் வெளியான கட்டுரையை எழுதியவர் இதயச்சந்திரன். இதயச்சந்திரன் என்பவர் யார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரிடமிருந்து உவத்தல் காய்தல் இன்றி நியாயங்களைக் கூறும் கட்டுரைகளை எதிர்பார்க்க முடியுமா?

இந்த விடயங்களை அம்பலப்படுத்திய கனடாவாழ் ஊடகவியலாளர் குழுவுக்கும் 'தேனீ' இணையத்தளத்துக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட வேண்டும். இதேவேளை சில தவறுகளையு; சுட்டிக்காட்டலாமென நினைக்கிறேன்.


தினகரன் வாரமஞ்சரி ஆசிரியர் அருள் சத்தியநாதன் என்றும் தினகரன் பிரதம ஆசிரியர் தில்லைநாதன் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது தவறானது. தினகரன் வாரமஞ்சரி மற்றும் யாழ் தினகரன் பதிப்பு ஆகியவற்றின் பிரதம ஆசிரியர் செந்திவேலவர். தில்லைநாதன் தினகரன் தினசரியின் பிரதம ஆசிரியர்;.

1994இல் பொதுசன ஐக்கிய முன்னணி ஆட்சிபீடமேறிய பின்னர் முற்போக்காளர்களான ராஜ ஸ்ரீகாந்தா, சிவாசுப்பிரமணியம் போன்றோர் தினகரனின் பிரதம ஆசிரியர்களாகவும், எஸ்.அருளானந்தம் செய்தி ஆசிரியராகவும் இருந்தனரெனத் தெரிவிக்கப்பட்டிருப்பது தவறு. நான் 1994இல் தினகரனின் பிரதம ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்டேன். அதுவரை ராஜ ஸ்ரீகாந்தாவோ, சிவா சுப்பிரமணியமோ தினகரனில் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை.

புலிகளுக்கு வால் பிடித்த சில இடதுசாரிகள் என்று கூறப்பட்ட பிரபலங்களின் இடையூறுகள் காரணமாகவும், புலிகளின் மரண அச்சுறுத்தலுக்கு அஞ்சியுமே நான் 1997இன் இறுதிப்பகுதியில் தினகரன் ஆசிரியர் பீடத்திலிருந்து விலகி லேக்ஹவுஸ் வெளிநாட்டு செய்திப்பிரிவின் பிரதம ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டேன். தமது சுயநலத்துக்காக இடதுசாரிகள் என்று கூறிக்கொண்ட சிலர் புலிச்சாயம் பூசிக்கொண்டார்கள். அவ்வாறு புலிச்சாயம் பூசிக்கொண்ட பேராசிரியர் சிவத்தம்பியின் கருத்துகளுக்கு எதிராகவும் நான் எழுதியிருந்தேன்.

1957 முதல் 1961 வரை தினகரனின் பிரதம ஆசிரியராகப் பதவி வகித்தவர் பேராசிரியர் கைலாசபதி அவர்கள். 'அது ஒரு பொற்காலம்'. அவரைக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்று அப்போதைய லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவரும் ரணில் விக்கிரமசிங்கவின் தந்தையாருமான எஸ்மன்ட் விக்ரமசிங்கவிடம் போட்டுக் கொடுத்தவர் ஆர்.சிவகுருநாதன்.

கைலாசபதிக்குப் பின்னர் 1961இல் பிரதம ஆசிரியராகப் பதவியேற்ற சிவகுருநாதன் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ளும் தந்திரோபாயம் நன்கு தெரிந்தவர். அதனால், சுமார் 33 வருடங்கள் 1994ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை பிரதம ஆசிரியராகப் பணி புரிந்தார்.

அதன் பின்னரே நான் பிரதம ஆசிரியர் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டேன். எனக்குப் பின்னர்தான் ராஜ ஸ்ரீகாந்தாவும் சிவா சுப்பிரமணியமும் பிரதம ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டார்கள். முதுமை காரணமாக சிவா சுப்பிரமணியம் பிரதம ஆசிரியர் பொறுப்பிலிருந்து விருப்பு ஓய்வு பெற்றுச் சென்றார் என்பதும் தவறானது. யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்தபோது புலிச்சஞ்சிகையான 'சாளரம்' வெளிவந்து கொண்டிருந்தது. அதன் ஆசிரியர் குழுவில் சிவா இடம்பெற்றிருந்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனாலேயே அவர் நீக்கப்பட்டார்.

புலிகள் ஆதிக்கம் செலுத்திய காலத்திலேயே புலிகளின் அராஜகங்களை எதிர்த்து அரசியல் கட்டுரைகளையும் ஆசிரியர் தலையங்கங்களையும் எழுதியவன் நான். 2009இல் புலிகள் அழித்தொழிக்கப்படும்வரை புலிகளுக்கு எதிராக எதனையும் எழுதாதவர்கள் பலர் இன்று எழுதுகிறார்கள். மனோரஞ்சன், சண்முகம் சுப்பிரமணியம் போன்றவர்களுக்கு இது நன்கு தெரியும். கனடாவுக்குப் புலம்பெயர வேண்டுமென்பதற்காகப் 'புலிகளின் தியாகம் மதிக்கப்பட வேண்டும்' என்று 1997இல் திடீரெனப் பிரசாரம் செய்த இடதுசாரிகள் என்று கூறிக்கொண்டவர்களையும் எனக்குத் தெரியும்.

தினகரனுக்குள் கறுப்பு ஆடுகள் என்பது சரியல்ல. ஒரு ஊடகநிறுவனத்தில் கருத்துகள் செய்திகளை வெளியிடுபவர்களுக்கு விஷய ஞானம் இருக்க வேண்டும். அது இல்லாமையாலேயே இவ்வாறான தகவல்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. புலிகள் இயக்கம் ஒழுக்கமும் கட்டுப்பாடுமுள்ள அமைப்பு, திம்புப் பேச்சுவார்த்தையில் தமிழ்க்குழுக்கள் முன்வைத்த நான்கு கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன போன்ற படுபிழையான ஐம்பதுக்கு மேற்பட்ட தவறுகள் தற்போது தினகரனில் வெளிவந்திருக்கின்றன.

இறுதியாக, எனது அண்மைய சில அரசியல் கட்டுரைகளை மீள்பிரசுரம் செய்தமைக்கு 'தேனீ' இணையத்தளத்துக்கு எனது நன்றிகள்.

எஸ்.அருளானந்தம்
முன்னாள் பிரதம ஆசிரியர் - தினகரன்
நன்றி: தமிழ்க்குரல்

---------------------------------------


இவரின் மறைவு குறித்து "சித்தீக் காரியப்பர்" முகப்பு புத்தகத்தில் வெளியான  தகவல் இங்கு தகவலுக்காக பதிவு செய்யப்படுகிறது.  

தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர்
அமரர் எஸ். அருளானந்தம்!
--------------------------------------------------------
தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் முன்னாள் பிரதம ஆசிரியர் எஸ். அருளானந்தம் காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 70 ஆகும். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், நேற்று காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
அன்னாரின் பூதவுடல் ஜயரத்தின மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 4.00 மணியளவில் இறுதி கிரியைகள் நடைபெற்று பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். \
1947ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த எஸ். அருளானந்தம், ரஷ்ய தூதரகத்தின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய பின் தினகரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இணைந்தார்.
பின்னர் செய்தி ஆசிரியராக பணியாற்றிய அவர், 1995 ஆம் ஆண்டு தினகரன் பிரதம ஆசிரியராகப் பதவி உயா்வு பெற்றார். 1997 ஆம் ஆண்டு வரை தினகரன் ஆசிரியராகப் பணியாற்றிய அவர்,
லேக் ஹவுஸ் நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்ற நிலையில் தினமுரசு, தமிழ் நாதம் உட்பட பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். \\\
முற்போக்குச் சிந்தனையாளரான இவர், சிறந்த எழுத்தாளராகத் திகழ்ந்தார். 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழப்பாணத்தில் நடைபெற்ற தீண்டாமை எதிர்ப்பு ஆலயப் பிரவேசப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர். \\\\\\\\\\\
இடதுசாரி இயக்கங்களோடும் இளமைக் காலத்தைக் கழித்த எஸ். அருளானந்தம், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். பின்னர், தென்பகுதி இடதுசாரிக் கட்சிகளோடு சேர்ந்து செயற்பட்டார்.
(தகவலுக்கு நன்றி- தினகரன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் கே. குணராசா)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...