‘வானவில்’ எதைச் சாதித்தது? – தோழர் மணியம்

வானவில்’ எதைச் சாதித்தது? இப்படியொரு கேள்வி இடையிடையே எம்மை நோக்கி எழுப்பப்படுகிறது. இந்தக் கேள்வியை எழுப்புபவர்கள் ஒரே ரகத்தினர் அல்ல. எமக்கு நேர் எதிர்க் கருத்துள்ளவர்களும் எழுப்புகிறார்கள். கருத்து வித்தியாசம் உள்ளவர்களும் எழுப்புகிறார்கள். எம்மை ஆதரிக்கும் சிலரும் எழுப்புகிறார்கள்.

பொதுவாக புலம்பெயர் நாடுகளில் வெளிவரும் நூற்றுக்கணக்கான பத்திரிகைகளை நோக்கி இத்தகையதோர் கேள்வி எழுப்பப்படுவது அபூர்வமாகவே இருக்கும். ஏனெனில் தனி நபர்களாக அந்தப் பத்திரிகைகளை நடாத்தும் பெரும்பாலானோரின் ஒரே குறிக்கோள் பணம் சம்பாதிப்பதே. தமது பத்திரிகையை விற்று அவர்கள் பணம் சம்பாதிக்க முடியாது. ஏனெனில் தாயகத்தில் வெளிவரும் பத்திரிகைகள் போல் புலம்பெயர் நாடுகளில் பத்திரிகைகளை விலைக்கு விற்பதில்லை. எல்லாமே இலவச விநியோகம்தான்.



எனவே பணம் சம்பாதிப்பதற்கு ஒரேவழி வர்த்தகர்களிடம் விளம்பரங்களைப் பெற்றுப் பிரசுரிப்பதுதான். வர்த்தகர்களில் பெரும்பாலானோர் தமிழ் தேசியத்துக்கும், அதைக் ‘கட்டிக் காத்த’ புலிகளுக்கும் விரும்பியோ விரும்பாமலோ ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளவர்கள். எனவே பத்திரிகை நடாத்துபவர்களும் கண்ணை மூடிக்கொண்டு தமிழ் தேசியத்தையும், புலிகளையும் ஆதரித்து எழுதினால்தான் விளம்பரங்களைப் பெற்று நாலு பணம் சம்பாதிக்க முடியும். ஊடக சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் நான்காவது கால் என்பார்கள். ஆனால் துரதிஸ்டவசமாக தமிழ் சூழலில் அது அறவே இல்லை என்பதுதான் நமது உண்மையான நிலை.
இந்தப் பத்திரிகைகளுடன் ஒப்பிடும் போது ‘வானவில்’ மிகவும் ‘சிறிசு’. அதன் வடிவம்  சிறிது. பக்கங்கள் குறைவு. வண்ண வண்ண ஜிகினா வேலைப்பாடுகள் எதுவுமில்லை. விளம்பரம் இல்லை. இப்படிப் பல இல்லைகளைக் கூறலாம். ஆனால் வானவில்லின் நோக்கும் போக்கும் வித்தியாசமானது. அதன் காரணமாகவே எமது பத்திரிகை நண்பர்களினதும் எதிரிகளினதும் கவனிப்பைப் பெறுகின்றது.

‘வானவில்’ ஆரம்பிக்கப்பட்டு 6 வருடங்கள் உருண்டோடிவிட்டன. இப்பொழுது ஏழாவது ஆண்டில் காலடி வைத்துள்ளது. அதாவது ‘அரிவரி’ வகுப்பினை இப்பொழுதுதான் தாண்டியுள்ளது. இருப்பினும் கடந்த 6 வருட காலத்தில் ‘வானவில்’ பல ஆயிரம் மின்னஞ்சல் வாசகர்களைப் பெற்றுள்ளது. சில நூறு அச்சுப் பிரதி வாசகர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தச் சாதனையைப் பார்க்கும் போது எமக்கே வியப்பு ஏற்படுவதுண்டு. ஏனெனில் ‘வானவில்’ தொடர்ந்து வெளி வருமா என சந்தேகப்பட்டவர்களில் நாமும் உள்ளடங்கி இருந்தோம் என்பதுதான் உண்மை. ஆனால் எல்லாத் தடைகளையும் தாண்டி இதுவரை அது நின்று பிடித்துள்ளது. இனிமேலும் அது தொடரும் என்ற அசையாத நம்பிக்கை எமக்கு உண்டு.

ஆறு வருடங்களுக்கு முன்னர் நாம் வானவில்லை ஆரம்பித்த போது எமக்கு இரண்டு குறிக்கோள்கள்தான் பிரதானமாக இருந்தன. முதலாவது நோக்கம், ஒற்றைப் பரிமாணமான தமிழ்த் தேசியம் என்ற அபினி மயக்கத்திலிருந்து தமிழ் மக்களை விடுவித்து, அவர்களுக்கு வாழ்வின் மீது பன்முகப் பார்வை கொண்ட  உண்மையான ஜனநாயக உணர்வை ஊட்டுவது. இந்த நோக்கத்தில் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், ‘விரலுக்குத் தக்க வீக்கம்’ என்பது போல ஓரளவு திருப்பிகரமான நிலையை உருவாக்கியுள்ளோம். இந்த உண்மையை தாயகத்திலிருந்தும், உலகம் முழுவதுமிருந்தும் தினசரி எமக்கு வரும் மின்னஞ்சல்கள் எடுத்து இயம்புகின்றன.

எமது இரண்டாவது நோக்கம், ‘விடுதலைக்கான ஆயுதப் போராட்டம்’ என்ற போர்வையில் தமிழ் தேசிய பாசிசத்தால் ஏறத்தாழ 30 ஆண்டுகளாக சிதறடிக்கப்பட்டிருந்த முற்போக்கு சக்திகளை இந்தப் பத்திரிகையின் ஊடாக மீண்டும் ஒரு தொடர்பில் கொண்டு வரும் முயற்சியாகும். அந்த முயற்சியைப் பொறுத்தவரை, இன்னமும் அந்த சக்திகளை ஒரு முழுமையான அமைப்பு வடிவத்தில் இணைக்க முடியவில்லையாயினும், உலகம் முழுவதும் பரந்து வாழும் அந்த சக்திகளை தொடர்பு கொள்வதில் ‘வானவில்’ ஒரு கணிசமான அளவு வெற்றியை ஈட்டியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் சொல்லலாம். உலகம் முழுவதும் சமூக மாற்றங்களை ஏற்படுத்திய புரட்சிகளில் பத்திரிகைகள் ஒரு வலிய ஆயுதமாகப் பயன்பட்டிருக்கின்றன என்ற உண்மையை நாம் என்றும் நினைவில் கொண்டுள்ளோம்.
தற்போதைய நிலையில் இந்த இரண்டு சாதனைகளுமே ‘வானவில்’ நோக்கி கேள்வி எழுப்புபவர்களுக்கான நடைமுறைரீதியிலான எமது பதில்களாகும். ‘வானவில்’ போன்ற ஒரு சிறிய பத்திரிகை கடல் போன்ற மிகப்பெரிய சன சமுத்திரத்தில் இதைவிட பெரிதாக நீச்சலடிக்க முடியாது என்பதே யதார்த்த நிலையாகும்.

இந்தச் சாதனைகளைக் கூட நிலைநாட்டியதில் சில காரணிகள் பக்கபலமாக இருந்திருக்கின்றன. 
முதலாவது காரணி, வானவில்லை வெளியிடுவது ஒரு தனிநபரல்ல. ஒரு குழுவே வெளியிடுகின்றது. அது ஒரு சிறிய குழுவாக இருப்பினும், சரியானதும் தெளிவானதுமான அரசியல் நோக்கைக் கொண்டிருப்பதும், அதை உருக்குப் போன்ற ஒற்றுமையுடன் செயல்படுத்துவதுமாகும்.
இரண்டாவது காரணி, வெளியீட்டுக் குழுவினர் ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பண உணர்வுடன் மாதந்தோறும் ‘வானவில்’ அச்சிடுவதற்கான செலவு, அதைத் தபாலில் அனுப்புவதற்கான செலவு, என தத்தமது நிதிப் பங்களிப்பை மனமுவந்து வழங்குவதாகும்.
மூன்றாவது காரணி, வானவில்லை உருவாக்குவதில் சில தோழர்கள்  சேவை மனப்பான்மையுடன் மனமுவந்து வழங்குகின்ற தொழில்நுட்ப (தட்டச்சு, பக்க வடிவமைப்பு, ஒப்புநோக்கு, அச்சக வேலை) உதவிகளாகும்.

நான்காவது காரணி, வானவில்லின் அச்சுப் பிரதிகளை கனடாவிலும், இலங்கையிலும் சிரமத்தைப் பாராது விநியோகம் செய்யும் தோழர்களினதும், நண்பர்களினதும் தன்னலம் கருதாத பங்களிப்பாகும்.
இவர்கள் அனைவரினதும் பங்களிப்பு இல்லாமல் ‘வானவில்’ இவ்வளவு காலமும் நிலைத்திருந்திருக்க முடியாது.
எமது பத்திரிகை ஆறாவது ஆண்டைப் பூர்த்தி செய்துள்ள இந்தச் சூழ்நிலையில், மேலும் எமது வளர்ச்சிக்கு வழமைபோல வாசகர்களின் சாதகமானதும் பாதகமானதுமான விமர்சனங்களை எப்பொழுதும் வரவேற்கக் காத்திருக்கின்றோம். எனவே தோழர்களே, நண்பர்களே, தயங்காது உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
“நூறு பூக்கள் மலரட்டும், நூறு சிந்தனைப் போக்குகள் முட்டி மோதட்டும், அதில் நாறும் கீழ்மைகள் தகரட்டும்” என்பதே எமது தாரக மந்திரமாகும்.

இதழ் 75, கட்டுரை 3

மார்ச் 22, 2017


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...