மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு சரியான தலைமையும் வழிகாட்டலும் அவசியம்


மார்ச் 22, 2017

லங்கையில் இப்பொழுது எங்கு திரும்பினாலும் ஒரே போராட்டமயமாக இருக்கின்றது. முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு மக்கள் நாளாந்தம் போராட்டக்களங்களை நோக்கி அணி வகுத்துச் செல்வதைக் காண முடிகிறது.

இலங்கையில் மாத்திரமின்றி, உலகம் முழுவதும் 1960களின் பிற்பகுதியில் ஏற்பட்டது போன்ற மக்கள் எழுச்சி ஒன்றுக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
கடந்த சில மாதங்களில் நமது அண்டை நாடான இந்தியாவின் தமிழக மாநிலத்தில் ஜல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டம் (ஜல்லிக்கட்டு பற்றிய எமது கருத்து வேறாக இருந்தபோதும்), நெடுவாசல் இயற்கை எரிவாயுத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் என இரண்டு மிகப் பிரமாண்டமான மக்கள் தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்று ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன.



இப்படியான ஒரு தன்னெழுச்சிப் போராட்டம் கடந்த ஆண்டு எமது நாட்டின் மலையகத் தோட்டத் தொழிலாளர்களால் நடாத்தப்பட்டு, அது ஒரு சிறிய அளவு வெற்றியும் ஈட்டியது. இவ்வாறான பல போராட்டங்கள் தற்பொழுது இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு தரப்பட்ட மக்களால் நடாத்தப்பட்டு வருகின்றன.

இந்தப் போராட்டங்களில் சில குறிப்பிட்ட அமைப்புகளால் திட்டமிட்ட முறையில் நடாத்தப்படுவன. சில போராட்டங்கள் – சில மறைமுக வழிநடத்தல்கள் இருந்தபோதும் – தன்னெழுச்சியாக ஆரம்பமானவை.

குறிப்பாக நீண்டகாலமாக காலத்துக்காலம் நடைபெறும் தமிழ் கைதிகளின் போராட்டம், இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயங்களில் தமது காணிகளை மீட்கும் போராட்டம், காணாமல் போனோரைக் கண்டறியும் போராட்டம், கிளிநொச்சி பன்னங்கட்டிப் பகுதியில் குடியிருக்கும் இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் நில உரிமைக்கான போராட்டம் என்பன தன்னெழுச்சியாக உருவாகி நடைபெறும் போராட்டங்கள்.

அதே நேரத்தில் தலைநகர் கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற துறைமுக ஊழியர்களின் போராட்டம், புகையிரத ஊழியர்களின் போராட்டம், சுங்க ஊழியர்களின் போராட்டம், தாதியர்களின் போராட்டம், வைத்தியர்களின் போராட்டம் போன்றவையும், தற்போது ‘சைட்டம்’ என்ற தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான மாணவர்கள், வைத்தியர்கள், வைத்திய அதிகாரிகள் ஆகியோர் நடாத்தும் போராட்டமும் திட்டமிட்ட முறையில் அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் போராட்டமாகும்.

இவற்றில் எமது கவனத்தைப் பெறுபவை தன்னெழுச்சியாக நடைபெறும் போராட்டங்களாகும். அதற்குக் காரணம் இந்த மக்கள் ஏன் தன்னெழுச்சியாகப் போராடப் புறப்பட்டார்கள் என்பதாகும். ஏனெனில் இலங்கையில் எல்லாவிதமான மக்களும் ஏதோ ஒருவகையில் ஏதாவது ஒரு அரசியல் தலைமையின் கீழேயே இருந்து வருகிறார்கள். அப்படி இருக்க ஏன் தமது அரசியல் தலைமையை மீறித் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் மக்கள் குதித்துள்ளார்கள் என்பதே கேள்வியாகும்.
குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்களே பெரும்பாலும் தன்னெழுச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருவதைக் காண முடிகிறது. அவர்களது இந்தத் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு இரண்டு விதமான காரணங்களைக் கூற முடியும்.
முதலாவது காரணம், சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை மாறி மாறி தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கியவர்கள் அனைவரும் முதலில் அகிம்சைப் போராட்டம் என்றும், பின்னர் ஆயுதப் போராட்டம் என்றும் பல  போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் அவற்றால் தமிழ் மக்களின் ஒரு சிறு பிரச்சினையைக் கூடத் தீர்த்து வைக்க முடியவில்லை. மாறாக மக்களுக்கு அழிவுகள்தான் மிஞ்சின. எனவே இன்றைய தமிழ் தலைமைகளில் நம்பிக்கை இழந்த தமிழ் மக்கள் பிரச்சினையைத் தமது கைகளில் எடுத்து தமது சொந்தக்காலில் நின்று போராடும் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இரண்டாவது காரணம், மிக நீண்டகாலமாக அரசாங்க இராணுவ ஒடுக்குமுறைக்கும், புலிகளின் பாசிச ஒடுக்குமுறைக்கும் உள்ளான தமிழ் மக்கள், இவற்றில் மிக மோசமான ஒடுக்குமுறையான புலிப் பாசிச ஒடுக்குமுறையிலிருந்து 2009 மே மாதத்துடன் விடுதலை அடைந்துவிட்டனர். ஆனால் அரச ஒடுக்குமுறை தொடர்கிறது. ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் அந்த ஒடுக்குமுறையில் இன்றைய சர்வதேசச் சூழ்நிலை காரணமாக ஒரு தளர்வு ஏற்பட்டுள்ளது.

இதை ஒரு சிறிய ஜனநாயக இடைவெளி என்றும் சொல்லலாம். நினைத்திருந்தால் இந்த இடைவெளியை தமிழ் தலைமை (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) நன்கு பயன்படுத்தி தமிழ் மக்களின் உரிமைகளில் சிலவற்றையேனும் வென்றெடுத்திருக்கலாம். ஆனால் முன்னைய அரசை தமிழ் மக்களுக்கு எதிரான கொடுங்கோல் அரசு என வர்ணித்த இந்தத் தமிழ் தலைமை, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்குப் பதிலாக, இன்றைய மக்கள் விரோத, தமிழின விரோத, ஏகாதிபத்திய சார்பு அரசுடன் கைகோர்த்துச் செயல்படுகின்றது.
இந்தச் சூழ்நிலையில்தான் தலைமை செய்யத் தவறியதை, சற்றுத் துணிச்சலுடன் மக்கள் செய்ய முன் வந்திருக்கின்றனர். அதாவது கிடைத்திருக்கின்ற சிறிய ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்த முயல்கின்றனர். ஆனால் இந்த இடைவெளியை எவ்வளவு காலத்துக்கு அரசு அனுமதிக்கும் என்பதில்தான் இதன் எதிர்காலம் அடங்கியிருக்கின்றது.

அதே நேரத்தில் இந்தத் தன்னெழுச்சியான போராட்டங்களில் சில அபாயங்களும் இருக்கின்றன. ஏனெனில் இந்தப் போராட்டங்களுக்கு சரியான ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தலைமையோ, திட்டவட்டமான கொள்கைகளோ கிடையாது. இப்படியான போராட்டங்களில் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு தலைமைகளும் கொள்கைகளும் அமைவது வழமை. அப்படியான ஒரு நிலைமை மக்களின் போராட்டங்களைத் திசைதிருப்பிடவும், தடம் புரளச் செய்யவும் கூடும். உதாரணமாக மத்திய கிழக்கில் சில வருடங்களுக்கு முன்னர் தன்னெழுச்சியாக ஆரம்பமான ‘அரபு வசந்தம்’ (Arab Spring)  என அழைக்கப்பட்ட போராட்டங்கள் இறுதியில் ஏகாதிபத்தியத்தால் பயன்படுத்தப்பட்டதை நாம் கண்டோம். (எகிப்தில் இந்தப் போராட்டத்தால் முதலில் தீவிரவாத இஸ்லாமிய அரசு ஏற்பட்டதும், பின்னர் அந்த ஆட்சியைக் கவிழ்த்து இன்று இராணுவ ஆட்சி ஏற்பட்டிருப்பதும் ஒரு உதாரணம்)

தமிழ் மக்கள் மத்தியில் நடைபெறும் போராட்டங்களிலும் இத்தகைய சில போக்குகளை அவதானிக்க முடிகிறது.
அவர்களது தன்னெழுச்சியான போராட்டங்களில் ஊடுருவவும், அதைத் திசை திருப்பவும், இறுதியாக தமது வெளிநாட்டு எஜமானர்களின் தேவைக்கு அதைப் பயன்படுத்தவும் சில சக்திகளால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது.
ஏனெனில் இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்த நேரத்தில் நாட்டை எட்டியும் பார்க்காது அமெரிக்கா போன்ற மேற்கத்தைய நாடுகளில் சுகபோகமாக வாழ்ந்த சிலர், போர் முடிவுற்ற பின்னர் நிரந்தரமாக நாடு திரும்பி – குறிப்பாக வட பகுதிக்கு – சமூக ஆய்வுகள், மக்களை விழிப்பூட்டல், போன்ற இன்னோரன்ன ‘சேவைகளில்’ ஈடுபட்டிருக்கின்றனர்.

இவர்கள் கடந்த காலத்தில் செய்த ‘சேவைகளை’ எடுத்துப் பார்த்தால் இவர்களது சுயரூபங்கள் அம்பலத்துக்கு வரும். பாசிசப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான போர் நடைபெற்ற காலத்தில் இந்தப் பேர்வழிகள் சர்வதேச அரங்கில் ஒருதலைப்பட்சமாக இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை மட்டுமே உரத்துப் பிரச்சாரம் செய்தனர். மேற்கத்தைய நாடுகள் பல இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததிற்கு இத்தகையவர்களது பிரச்சாரமும் ஒரு காரணம்.
போர் முடிவுற்ற பின்னர் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இத்தகையவர்களில் சிலர் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் இலங்கைக்குள் கால் பதித்தனர். இத்தகையவர்கள் அடுத்ததாக மேற்கொண்ட ‘சேவை’ 2015 ஜனவரி 08 இல் அப்போதிருந்த ஏகாதிபத்திய விரோத அரசை வீழ்த்தி, மேற்கத்தைய சார்பு வலதுசாரி அரசொன்றைப் பதவிக்குக் கொண்டுவர வேலை செய்ததாகும். அந்த நோக்கத்தில் வெற்றிபெற்ற பின்னர், தமிழ் தலைமையை இன்றைய அரசுடன் ஒட்ட வைத்து, தற்போதைய வலதுசாரி அரசைப் பாதுகாப்பதில் முனைந்திருக்கின்றனர்.

இத்தகையவர்கள்தான் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை பின்னாலிருந்து இயக்குபவர்களாக, ஊக்குவிப்பவர்களாக இருக்கின்றனர். பின்னர் இன்று மக்கள் செல்வாக்கை இழந்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன் – சுமந்திரன் தலைமையூடாக அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, அப்போராட்ங்களை ‘வெற்றி’ பெற அல்லது நீர்த்துப்போக வைப்பவர்களாகவும் இவர்களே இருக்கின்றனர். இதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலதுசாரித் தலைமையையும், இன்றைய மைத்திரி – ரணில் வலதுசாரி அரசையும் பாதுகாப்பதற்கான ஒரு மனோநிலையை மக்கள் மத்தியில் உருவாக்க முயல்கின்றனர்.
எனவே, இன்று மக்கள் மத்தியில் உருவாகியுள்ள தன்னெழுச்சியான போராட்டங்களைக் கூர்ந்து அவதானித்து, அவற்றுக்கான ஒரு சரியான தலைமையையும், வழிகாட்டுதலையும் வழங்க வேண்டிய பொறுப்பு முற்போக்கு சக்திகளுக்கு முன்னால் உள்ளது. ஏனெனில் முற்போக்கு சக்திகளினால் வழிநடாத்தப்படும் போராட்டங்கள் மட்டுமே சரியானதும் நிரந்தரமானதுமான வெற்றியைப் பெற்றுள்ளன என்பதற்கு உலகம் முழுவதிலும், இலங்கையிலும் ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன.

இந்த உண்மையை முற்போக்கு சக்திகள் கிரகித்து, பிற்போக்கு சக்திகளுக்கோ, ஏகாதிபத்திய அடிவருடிகளுக்கோ மக்கள் மத்தியில் ஒரு தளம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளது என்பதை ஒவ்வொருவரும் மனதில் இருத்திச் செயல்படுவது இன்றைய காலகட்டத்தில் அவசியமாகும்.

வானவில் இதழ் 75




No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...