"ஜே.வி.பியும் தேசிய இனப் பிரச்சினையும்" -தோழர் மணியம்



1967 இல் ரோகண விஜேவீரவினால் ஆரம்பிக்கப்பட்ட “ஜே.வி.பி” என்று அழைக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு (தமிழில் மக்கள் விடுதலை முன்னணி) இப்பொழுது 50 வயது. அந்த இயக்கம் 1971 எப்ரலில் நடாத்திய முதலாவது ஆயுதக் கிளர்ச்சிக்கு (இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சி ஒன்றும் 1988-89 காலப்பகுதியில் நடாத்தப்பட்டது. அப்பொழுதுதான் ரோகண விஜேவீரவும் ஜேவிபி தலைமையும் அரச படைகளால் கைது செய்யப்பட்டு அழித்தொழிக்கப்பட்டனர்) இப்பொழுது 46 வயது.

ஜே.விபிக்கு இனிமேலும் ஒரு ஆயுதக் கிளர்ச்சி செய்யும் உத்தேசம் இருப்பதாகத் தெரியவில்லை. அது இப்பொழுது முற்றுமுழுதாக முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஊறிய கட்சியாக மாறிவிட்டது.


ஜே.வி.பி ஸ்தாபிதத்தின் 50 ஆண்டு நிறைவையும், அதன் முதலாவது ஆயுதப் போராட்டத்தின் 46 ஆவது ஆண்டு நிறைவையும் நினைவு கூர்ந்து எழுதும் இச்சிறு கட்டுரையில் அந்த இயக்கத்தின் முழு வரலாறையும் சொல்லிவிட முடியாது. எனவே இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் அதன் எரியும் பிரச்சினையாக இருந்து வரும் தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினையில் அந்த இயக்கத்தின் நிலைப்பாடும் செயல்பாடும் எப்படி இருந்து வருகிறது என்பதை மட்டும் சுருக்கமாகப் பார்ப்பதே இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.

பொதுவாக இலங்கையின் அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினால், பிரதான அரசியல் கட்சிகளாக சிங்கள மக்கள் மத்தியில் செயல்படும் கட்சிகள் சிங்கள தேசியவாதத்தையும், சிங்கள இனவாதத்தையும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றன. நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெறவதற்காகவே அவை தேசியவாதத்தையும் இனவாதத்தையும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தின என்ற வலுவான கருத்து நிலவுகின்றது. அதை நாடாளுமன்ற சந்தர்ப்பவாதம் என அழைக்கின்றனர்.

ஆனால் ஜே.வி.பியைப் பொறுத்தவரை, அது நாடாளுமன்றத் தேர்தல்களில் ஈடுபடுவதற்கு முன்பே ஒரு சிங்கள இனவாதக் கட்சியாகத் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறது. அதுவும் தன்னை ஒரு சோசலிசக் கட்சி என்று சொல்லி; கொண்டு, மார்க்சிய மூலவர்களான மார்க்ஸ்சும், ஏங்கெல்ஸ்சும், லெனினினும் தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமாக வரையறுத்துச் சொன்ன கோட்பாடுகளுக்கு எதிராகத்தான் ஜே.வி.பி. செயல்பட்டு வந்திருக்கிறது. ஜே.வி.பியின் ஆரம்பமே அந்த வழியில்தான் தொடங்கியது.
அப்போதைய சோவியத் யூனியனின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள பட்ரிஸ் லுமும்பா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்காக அனுப்பப்பட்ட ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவர் ரோகண விஜேவீர, படிப்பைத் தொடர முடியாமல் சோவியத் அரசாங்கத்தால் திருப்பி அனுப்பப்பட்டு இலங்கை வந்து சேர்ந்தார். வந்ததும் உடனடியாகவே நா.சண்முகதாசனை பொதுச் செயலாளராகக் கொண்டு செயல்பட்ட சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி என்று அழைக்கப்பட்ட பரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து வேலை செய்யத் தொடங்கினார்.

சோவியத் அரசாங்கத்தின் திரிபுவாதப் போக்கை தான் விமர்சித்ததாலேயே அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக அப்பொழுது விஜேவீர சொல்லித் திரிந்தார். (ஆனால் இலங்கையில் வேகமாக செல்வாக்குப் பெற்று வந்த புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஊடுருவி அதைச் சீர்குலைப்பதற்காகவே திட்டமிடப்பட்ட முறையில் விஜேவீர அனுப்பப்பட்டுள்ளார் என்ற சந்தேகம் கட்சிக்கு இருந்ததால் அவர் மீது கட்சி அவதானத்துடனேயே இருந்து வந்தது)

விஜேவீர கட்சியுடன் இணைந்து வேலை செய்த நேரத்தில் கட்சியின் தலைமையில் செயல்பட்டு வந்த வாலிபர் அமைப்பான இலங்கை வாலிபர் சங்க சம்மேளனத்தின் தேசிய மாநாடு ஒன்று பதுளையில் நடைபெற்றது. விஜேவீர மாநாட்டு வேலைகளில் தீவிர பங்கெடுத்துச் செயல்பட்டார். அப்பொழுதே அவரது சிங்களத் தேசியவாத உணர்வு வெளிப்பட்டுவிட்டது. அதாவது அந்த மாநாட்டில் விஜேவீர முயற்சி எடுத்து பிரித்தானியருக்கு எதிராகப் போராடிய சிங்களத் தேசியவாதியான புரன் அப்பு மீது வாலிபர் மாநாட்டுப் பிரதிநிதிகள் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். வழக்கமாக எந்தவொரு கம்யூனிஸ்ட் இயக்க நிகழ்ச்சிகளிலும் தேசியவாதிகள் நினைவுகூரப்படுவதோ, கௌரவிக்கப்படுவதோ இல்லை.

விஜேவீர வாலிபர் மாநாட்டு வெற்றிக்குத் தீவிரமாக உழைத்ததிற்குக் காரணம் வாலிபர் சம்மேளனத்தின் அடுத்த பொதுச் செயலாளராக வர வேண்டும் என்ற அவரது நோக்கம்தான். ஆனால் அவரது நோக்கத்தை சண்முகதாசன் குழுவினர் தந்திரமாக முறியடித்துவிட்டனர். அதனால் ஆத்திரம் அடைந்த விஜேவீர பரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறி தனது சொந்தக் கட்சியான ஜே.வி.பியை 1967இல் உருவாக்கினார்.
ஜே.வி.பியின் உருவாக்கத்துக்கான பிரச்சாரத்தின் போது இனவாதத்தையே விஜேவீர ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினார். அதாவது சண்முகதாசன் என்ற தமிழன் தலைமையில் இலங்கையில் புரட்சி ஒன்றை நடாத்த முடியாது, சிங்கள மக்கள் அதை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் எனப் பிரச்சாரம் செய்தார். அத்துடன் சண்முகதாசன் மலையகத்தில் வாழுகின்ற இந்திய வம்சாவழி தமிழ் தோட்டத் தொழிலாளர்களை வைத்தே இலங்கைப் புரட்சியை நடாத்தத் திட்டமிடுகிறார் என்றும், அது சாத்தியப்படாது, இலங்கைக்கு ஆபத்தானது என்றும் பிரச்சாரம் செய்தார்.

அதுமட்டுமின்றி, விஜேவீர தனது ஜே.வி.பி. இயக்கத்தை ஆரம்பித்த காலத்தில் அதை வளர்ப்பதற்காக இளைஞர்களுக்கு ஐந்து தலைப்புகளில் அரசியல் வகுப்புகளை நடாத்தினார். அதில் ஒன்று ‘இந்திய விஸ்தரிப்பு வாதம்’ பற்றியது. இந்தத் தலைப்பு விஜேவீரவின் சொந்தத் தலைப்பு அல்ல. புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியிடமருந்து இரவல் வாங்கிய தலைப்பு ஆகும்.
இந்தியா சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் ஆக்கிரமிப்பு யுத்தங்களில் ஈடுபட்டதுடன், தன்னைச் சுற்றிவர உள்ள எல்லா நாடுகளுடனும் எல்லைச் சச்சரவுகளில் ஈடுபட்ட பின்னருமே, புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி இந்திய அரசின் அயல் உறவுக் கொள்கையின் தன்மையை வர்ணிப்பதற்காக ‘இந்திய விஸ்தரிப்புவாதம்’ என்ற பதத்தைப் பயன்படுத்தியது.
ஆனால் விஜேவீர இந்தப் பதத்துக்கு வேறு விளக்கம் கொடுத்தார். அவர் இலங்கையின் மலையகப் பகுதிகளில் பணிபுரிந்த தமிழ் தோட்டத் தொழிலாளர்களைத் தாக்குவதற்கு இச்சொல்லைப் பயன்படுத்தினார். அத்தொழிலாளர்கள் பிரித்தானிய காலனித்துவவாதிகளால் தமிழகத்திலிருந்து கொண்டுவரப்பட்டதின் காரணமாகவும், அவர்கள் தங்கள் வீடுகளில் இந்தியத் தலைவர்களான காந்தி, நேரு, விவேகானந்தர், அண்ணாத்துரை போன்றவர்களின் படங்களைத் தொங்கவிட்டிருந்த காரணத்தாலும், அவர்களை “இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கைக்கூலிகள்” என விஜேவீர வர்ணித்தார்.
இது ஒருபுறமிருக்க, சோசலிசம் பற்றியும், இன சமத்துவம் பற்றியும் பேசிய ஜே.வி.பி., 1971இல் நடாத்திய தனது முதலாவது ஆயுதக் கிளர்ச்சிக்கு முழுப் பாட்டாளி வர்க்கமான மலையக மக்களையோ அல்லது வடக்கு கிழக்கில் இன ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்களையோ அணி திரட்டவில்லை என்பதும் தற்செயலான ஒரு நிகழ்ச்சி அல்ல.

1971 ஆயுதக் கிளர்ச்சிக்குப் பின்னர் மோதலில் இறந்தவர்கள் போக, எஞ்சியவர்களில் இயக்கத் தலைவர் விஜேவீர உட்பட பல்லாயிரக்கணக்கானோரை அப்போதைய சிறீமாவோ பண்டாரநாயக்க அரசு கைதுசெய்து சிறையில் அடைத்திருந்தது. ஆனால் 1977இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசு அவர்கள் அனைவரையும் நிபந்தனை ஏதும் இன்றி விடுதலை செய்தது.

அதன் பின்னர் ஜே.ஆர். அரசின் ஆதரவுடன் ஜே.வி.பி. நாடு முழுவதும் தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்தது. யாழ்.குடாநாட்டிலும் அதன் பிரச்சாரம் ஆரம்பமானது. அதற்காக ஜே.வி.பி. சுன்னாகத்தில் அலுவலகம் ஒன்றைத் திறந்தது. ஆனால் தனது வட பிரதேச அமைப்பாளராக வட பகுதியைச் Nர்ந்த தமிழர் ஒருவரை நியமிப்பதில் நம்பிக்கை இல்லாததாலோ என்னவோ, தென்னிலங்கைப் பெரும்பான்மை இனத்தவரான பொன்சேக என்பவரையே தனது அமைப்பாளராக நியமித்தது. (தற்பொழுது ஜே.வி.பியும் சேர்ந்து ‘நல்லாட்சி’யை பதவிக்குக் கொண்டுவந்த பின்னர், மீண்டும் அது யாழ்ப்பாணத்தில் அலுவலகம் ஒன்றைத் திறந்துள்ளது. இம்முறையும் வட பகுதியைச் சேர்ந்த எவரையும் ஜே.வி.பி. தனது யாழ்ப்பாண அமைப்பாளராக நியமிக்கவில்லை. மலையகத்தைச் சேர்ந்த இ.சந்திரசேகரன் என்பவரையே தனது யாழ்ப்பாண அமைப்பாளராக நியமித்திருக்கிறது)
1977 இல் ஜேஆர்.ஜெவர்த்தனவின் கீழ் ஜே.வி.பி. சுதந்திரமாக இயங்க அனுமதி;கப்பட்ட பின்னர், தமிழ் மக்களுக்கென ஒர் பகிரங்க பொதுக் கூட்டத்தை வெள்ளவத்தை இராமகிருஸ்ண மண்டபத்தில் ஒழுங்கு செய்தது. அக்கூட்டத்துக்கு ஜே.வி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் பொன்சேக தலைமைதாங்க, ஜே.வி.பியின் அப்போதைய பொதுச் செயலாளர் லயனல் போபகே சிறப்புச் சொற்பழிவாற்றினார்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக்கு வந்ததும் தமிழ் மக்களுக்கு எதிரான சில கொள்கைகளை அறிவித்திருந்தார். அதாவது, காணிக் கொள்கையைப் பொறுத்தவரை சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரும், ஐ.தே.க. தலைவருமான டி.எஸ்.சேனநாயக்கவின் கொள்கையைப் பின்பற்றப் போவதாக அறிவித்திருந்தார். டி.எஸ் தான் இலங்கையில் முதன்முதலாக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்தவர் என்றபடியால், ஜே.ஆரின் இந்தக் கருத்தின் அர்த்தம் மீண்டும் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடிறே;றங்கள் ஆரம்பிக்கப்படும் என்பதுதான்.

ஜே.ஆரின் அடுத்த திட்டம் சகல பாடசாலைகளிலும் மும்மொழித் திட்டத்தை அமுல்படுத்துவது என்பது. இது பார்ப்பதற்கு நல்ல திட்டம் போல் தோன்றினாலும் இதன் பின்னணியில் உள்ள ஜே.ஆரின் கபடத் திட்டம் என்னவென்றால், மீண்டும் தமிழ் பிள்ளைகளுக்கு சிங்களத் திணிப்பை நடைமுறைப்படுத்துவதுதான்.
தமிழ் மக்கள் ஜே.ஆரின் இந்த அறிவிப்புகள் பற்றிச் சந்தேகிப்பதற்குக் காரணம் இருந்தது.
ஏனெனில், 1977 பொதுத் N;தர்தலுக்கு முன்னர் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஜே.ஆர்., “மீண்டும் ஒரு பண்டா – செல்வா உடன்படிக்கை ஏற்பட்டால், மீண்டும் கண்டி யாத்திரை செல்வேன்” எனப் பேசியிருந்தார். இதன் அர்த்தம் என்னவெனில். 1957இல் இனப் பிரச்சினைத் தீர்வுக்காக அப்பேதைய பிரதமர் பண்டாரநாயக்கவுக்கும் தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகத்துக்கும் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டபொழுது, அதற்கெதிராக ஜே.ஆர். பௌத்த பிக்குமார்களைக் கூட்டிக்கொண்டு கண்டிக்கு பாதயாத்திரை மேற்கொண்டு அந்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய வைத்தது போல, மீண்டும் அப்படி ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டால், மீண்டும் கிழித்தெறிய வைப்பேன் என்பதுதான்.
ஜே.ஆர். யாழ்ப்பாணத்தில் வைத்து இப்படிப் பேசியதும் மக்கள் ஆக்ரோசமாகக் கிளர்ந்தெழுந்து அவரது கூட்டத்தைக் குழப்பியதால், அவர் அன்றிரவு யாழ்ப்பாணத்தில் தங்குவதற்குக் கூடப் பயந்து இரவிரவாக காரில் தென்னிலங்கைகக்கு ஓடிச் சென்றிருந்தார். யாழ்ப்பாணத்தில் தனக்கு நேர்ந்த அவமானத்துக்குப் பழிவாங்கவே பின்னர் தான் பதிவிக்கு வநததும் 1977, 1981, 1987 ஆகிய ஆண்டுகளில் அவரது அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இன வன்செயல்களைத் தூண்டிவிட்டதுடன், இனப் பிரச்சினையை யுத்தமாகவும் மாற்றியது.
இந்தச் சூழ்நிலையில் ஜே.ஆரின் அறிவிப்புச் சம்பந்தமாக வெள்ளவத்தைக் கூட்டத்தில் பேசிய லயனல் போபகேயிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகளைக் கேட்டவர்கள் இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள். அந்தக் குழுவில் 30 வருடங்களுக்கு முன்னர் கடல் பயணத்தின் போது காணாமல் போன தோழர் வி.விசுவானந்ததேவன், நான் உட்பட சுமார் 10 பேர் வரையில் இருந்தோம்.

ஜே.ஆரின் திட்டங்கள் பற்றிய எமது கேள்விகளுக்குப் பதிலளித்த போபகே, இலங்கையில் எல்லா மக்களும் எல்லா இடங்களிலும் வாழலாம் என்றும், மூன்று மொழிகளையும் கற்பது நல்லதுதானே என்றும் பதில் அளித்தார். அதாவது, ஜே.ஆரின் கபடத்தனமான நோக்கங்களை நல்ல திட்டங்கள் என்பது போல அவர் கூறினார்.

அவரிடம் இன்னொரு முக்கியமான ஒரு கேள்வியையும் நாம் கேட்டிருந்தோம். அந்தக் கேள்வி, “இனப் பிரச்சினைக்கு உங்கள் தீர்வுத் திட்டம் என்ன?” என்பதாகும். அதாவது, அரசியல் சாசன ரீதியாக (அமைப்பு ரீதியாக) ஒற்றையாட்சியா, சமஸ்டியா, பிரதேச சுயாட்சியா. இணைப்பாட்சியா என்பதாகும். இந்தக் கேள்வி கேட்டதற்கான முக்கியமான காரணம், ஜே.வி.பி எப்பொழுதும் எல்லா மக்களும் சமம் என்று மொட்டையாகச் சொல்வதுதான் வழக்கமேயொழிய, திட்டவட்டமான தீர்வு முறை எதையும் முன்வைப்பதில்லை.

எமது இந்தக் கேள்விக்கு லயனல் போபகே கடைசிவரை பதிலளிக்கவில்லை. நாம் பல தடவை அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கக் கோரிய பின்னர், அது ஒரு முக்கியமான கேள்வி என்றும், அடுத்த தமது ‘செஞ்சக்தி’ பத்திரிகையில் அதற்குப் பதில் எழுதப்படும் என்றும் மழுப்பிவிட்டுச் சென்றுவிட்டார். ஆனால் அவரோ அல்லது ஜே.வி.பியோ அந்தக் கேள்விக்கு இன்றுவரை பதிலளிக்கவில்லை. போபகே ஒருமுறை யாழ்ப்பாணம் வந்தபோது எமது யாழ் புத்தக நிலையத்துக்கு வந்தவிடத்து மீண்டும் இனப் பிரச்சினை சம்பந்தமாக நாம் சில பிரச்சினைகளைக் கிளப்பிய போது, அப்பொழுதும் அவர் சரியான பதில் எதுவும் அளிக்கவில்லை.

இப்பொழுது அவுஸ்திரேலியாவில் வாழும் லயனல் போபகே தான் ஒருபோதும் இனவாதியாக இருந்தது இல்லை எனக் காட்டப் பிரயத்தனப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. இன்றைய இளம் சந்திதியினர்க்கு (ஜே.வி.பியினர் உட்பட) இத்தகையவர்களின் முன்னைய வரலாறு தெரியாதபடியால் இப்படித் துணிந்து கயிறு திரிக்க முடிகிறது.
பின்னர் ஜே.ஆர். அரசாங்கத்தால் தமிழ் மக்கள் மேல் முழு அளவிலான இன அழிப்பு யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்கள் பாரிய அழிவுகளை எதிர்நோக்கிய காலத்திலும். தம்மை இடதுசாரிகள் என்று சொல்லிக் கொண்ட ஜே.வி.பியினர் தமிழ் மக்களுக்காக உருப்படியான செயல் எதனையும் செய்யவில்லை.

மாறாக, இந்தியாவின் நிர்ப்பந்தத்தால் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக 1987இல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, ஜே.வி.பி. அதை மூர்க்கத்தனமாக எதிர்த்து, 1957இல் பண்டா – செல்வா ஒப்பந்தம் எழுதப்பட்ட பொழுது ஐ.தே.க அதை எப்படி எதிர்த்ததோ, அதுபோல ஜே.வி.பி. எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. பின்னர் பதவிக்காகவும், வசதி வாய்ப்புகளுக்காகவும் ஜே.வி.பி. மாகாண சபைத் தேர்தல்களில் பங்குபற்றினாலும். தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்காக கொண்டு வரப்பட்ட அந்தத் குறைந்தபட்ச தீர்வைக் கூட ஜே.வி.பி. இன்றுவரை ஏற்கவில்லை.

அதன் பின்னர் சந்திரிக தலைமையிலான ஆட்சிக் காலத்தில் 2000ஆம் ஆண்டில் இனப் பிரச்சினைக்கான தீர்வாக இதுவரை காலமும் முன்வைக்கப்பட்ட தீர்வுகளிலேயே மிகச் சிறந்த தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்டது. அதையும் வழமைபோல ஐ.தே.க. எதிர்த்து நிறைவேற்றவிடாமல் முறியடித்தது. புலிகளினதும் எனைய சிங்கள இனவாத அமைப்புகளினதும் உதவியுடன் ஐ.தே.க. மேற்கொண்ட அந்த நடவடிக்கையில் ஜே.வி.பியும் முழு அளவில் பங்குபற்றித் தனது பங்களிப்பைச் செய்தது.
பின்னர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக் காலத்தில் இனப் பிரச்சினைத் தீர்வு பற்றி ஆராய்வதற்காக சர்வகட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டம் கண்துடைப்புக்காகக் கூட்டபபட்டது என தமிழ் தேசியவாதக் கட்சிகள் விமர்சித்த போதிலும், இனப் பிரச்சினைக்கான தீர்வின் அவசியத்தை அக்கூட்டம் உலகத்திற்கு எடுத்து இயம்பியது. ஆனால் அதில் கூட ஜே.வி.பி. பங்குபற்றாமல் பகிஸ்கரிப்புச் செய்தது.
இப்படி காலத்துக் காலம் இனப் பிரச்சினைத் தீர்வு முயற்சிகளைத் திட்டமிட்டுக் குழப்பியடித்து வந்த ஜே.விபியினர், இப்பாழுது “ரணிலும் சரியில்லை, மைத்திரியும் சரியில்லை, மகிந்தவும் சரியில்லை, எனவே 2020ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் எம்மை ஆட்சிபீடம் ஏற்றுங்கள்” எனப் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் இவர்களும் சேர்ந்துதான் ஆட்சியில் இருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கமொன்றைத் தோற்கடித்து இன்றைய ஏகாதிபத்திய சார்பு வலதுசாரி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தனர் என்ற உண்மையை மக்கள் மறந்துவிட்டனர் எனக் கருதுகின்றனர் போலும்.
இவ்வளவும் நடந்த பின்னரும் கூட, ஜே.வி.பியினர் இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வழங்கப்பட வேணடும் என்பதை ஏற்கவில்லை. அண்மையில் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புலம்பெயர் தமிழ் மக்களிடம் ஆதரவு தேட முயன்ற ஜே.வி.பி தலைவர்கள் சிலர் அந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் எழுப்பிய கேள்விகளால் திக்குமுக்காடிப் போயினர்.

“தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு உங்களது தீர்வு என்ன?” என்ற தமிழ் மக்களின் கேள்விக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. பதிலுக்கு சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் பொதுவான பிரச்சினைகள்தான் இருக்கின்றன என்ற பழைய புளித்துப்போன பதிலையே அவர்கள் தமிழ் மக்களின் கேள்விக்குப் பதிலாக அளித்தனர். சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் உள்ள பொதுவான பிரச்சினைகளை விட, தமிழ் மக்களுக்கு இன அடிப்படையிலான பிரத்தியேகப் பிரச்சினைகளும் இருக்கின்றன என்ற பட்டவர்த்தனமான உண்மையை ஜே.வி.பியினர் இன்றும்கூட ஏற்கத் தயாரில்லை.

இந்த நிலைமையில், தமிழ் மக்கள் ஜே.வி.பி. என்ற குட்டி முதலாளித்துவ சிங்கள இனவாதக் கட்சியை ஒருபோதும் நம்பப் போவதில்லை என்ற உண்மையை, அவர்கள் இனிமேலாவது புரிந்து கொள்வார்களோ என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
மூலம்: வானவில் ஏப்ரல் 2017

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...