சுவாமி விவேகானந்தரின் சிதைக்கப்பட்ட சிலையும் சீர்மை பெற்ற சமூக பிரதிபலிப்பும் !  
எஸ்.எம்.எம்.பஷீர்

எழுமின் விழுமின் எண்ணிய கருமம் கைகூடும் வரை உழைமின் “ 
                                                                                 சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர்  1893ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்  11ஆம் திகதி அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் நடைபெற்ற சமயங்களின் உலக காங்கிரஸ் மாநாட்டில் எப்படி கணீரென்ற குரலில் கலந்து கொண்டு பேசினார் என்பதை எனது ஆங்கில ஆசிரியர் மறைந்த திரு. சாமித்தம்பி மிக உணர்வு பூர்வமாக எங்களின் வகுப்பறையில் விவரித்தது மனதின் ஒரு மூலையில் இன்னமும் நினைவில் இருக்கிறது. அந்த மாநாட்டில் பலர் வெளியேறிய தருவாயில் அன்புமிகு அமெரிக்கா சகோதரர்களே சகோதரிகளே!” ( Dear Sisters and Brothers of America)  என்று அவர் விளித்து தொடங்கிய உரை பலரை அங்கு மீண்டும் அமர வைத்தது என்று ஆசிரியர் பெருமிதத்துடன் சொன்னதும் அந்த உலகப் புகழ் பெற்ற சிக்காகோ உரையை முழுமையாக வாசித்து விட வேண்டும் என்ற அவாவை ஏற்படுத்தியது. ஆங்கிலத்தில் வாசிக்க நேர்ந்த அந்த உரை மொழி நயம் கருத்து நயம் காரணமாக அதிகம் கவனத்தை ஈர்த்தது.


சுவாமி விவேகானந்தரின் ஆங்கில மொழித் திறன் கொண்டு தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் ஆளுமை என்னைக் கவர்ந்தது. விவேகானந்தரின் சிக்காக்கோ உரையத்தேடி வாசிக்க சுவாமி விவேகானந்தரை தனது மானசீக குருவாகக் கொண்டு , அவரின் சிக்காகோ உரையினை மனப்பாடமே செய்து வைத்திருந்த எனது பாடசாலை நண்பன் மறைந்த தங்கவேல் ஜீவகன் உதவினான். சுவாமி விவேகானந்தர் கூட இப்படித்தான் பேசியிருப்பார் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் விதத்தில் தனது கணீரென்ற குரலில் ஆங்கிலத்தில் அந்த உரையை ஜீவகன் சில வேளைகளில் வகுப்பிலும் ஒப்புவிப்பான். அந்த தேடலின் பின்னர் விவேகானந்தரின் நூல்கள் சிலவற்றை வாசிக்கும்  சந்தர்ப்பங்கள் அவன் மூலம் எனக்கு கிடைத்தது. அவரின் மதம் பற்றிய கருத்துக்களுக்கு அப்பால் அவரின் நல்ல பல கருத்துக்கள் பொதுவாக " எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்; அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதரிது" எனும் குறளுக்கிணங்க அவரின் மனித ஆளுமை வீரியம் விவேகம் பற்றிய கருத்துக்கள் என்னை கவர்ந்தன. அவரின் ஹிந்து மத நம்பிக்கைகள் பலவற்றில் சில சீர் திருத்தக் கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்தின . விவேகானந்தரின் மத நம்பிக்கைகள் , அவர் ஒரு ஹிந்து மத துறவி  என்ற அடையாளங்களுக்கும் அதனோடு இணைந்த சில மத கருத்துக்களுக்கும் அப்பால் மனித குலம், சமூக விழுமியங்கள் , அவர் கண்ட மதங்களுக் கிடையிலான சமரச போக்கு என்பனவற்றினை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. அவரில் நான் கண்ட பண்பியல்புகளை  அவரின் எதிர்கால இந்தியா பற்றிய கனவுகளை அனுபவக் கருத்துக்களை , ஒரு நூற்றாண்டை தாண்டியும் மனித அறிவின் ஆற்றலின் எல்லைகளை தேடும் மனித உளவியல் சார்ந்த சுய முனைப்பூட்டும் சிந்தனைகளை விவேகானந்தரை வாசிப்போர் கண்டு கொள்ளாமலிருக்க முடியாது  

இராமகிருஷ்ண பரமகம்சரின் முதன்மை சீடரான இவர், இந்து மதத்தில் துறவறம் பற்றிய கருத்து சீர்திருத்தம் செய்தவர் என்று கூட சொல்லலாம் ஏனெனில் விவேகானந்தர் ஆங்கிலத்தில் கல்வி கற்றவர் என்பதுடன் கிறித்ஸ்தவ மிசன்களின் சமூக தொடர்பாடல்கள் இந்து மத துறவிகளிடம் (இராம கிருஷ்ணர் உட்பட) இருந்திருக்கவில்லை. அவை வெறுமனே மடாலயங்களாக இருந்தன என்பதும் ஒருவேளை கிறிஸ்தவ மிசனரிகளை ஒத்த சமூக ஒழுங்கினை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று நம்ப இடமுண்டு, ஏனெனில் அவரின் மத ஒப்பீட்டில் காணுகின்ற பல அம்சங்களை விமர்சனங்களை ஆய்கின்ற ஒருவர் அந்த முடிவுக்கே வரலாம் என்பது எனது கருத்து. இவர் சில ஒப்பீட்டளவில் சில முஸ்லிம் மத கருத்துக்களையும் சிலாகித்துக் கூறியுள்ள இடங்களும் உண்டு ( சில கடுமையான பிழையான விமர்சனங்களாக இருப்பினும்) முகம்மதிய மதம் என்ற வகையிலே அவர் இஸ்லாமிய மதத்தை ஆங்கிலேயர் அன்றைய காலனித்துவ ஆட்சிக் காலத்தில் குறிப்பிட்டவாறே குறித்துரைத்துள்ளார் .

உலகின் பல பாகங்களுக்கும் இலண்டன் உட்பட இலங்கைக்கும் (15/01/1897) கூட விஜயம் செய்துள்ளார் என்பதை விட இலங்கையில் இராம கிருஷ்ண மிசன் மூலம் கிழக்கில் மட்டக்களப்பு கல்லடியில் சுவாமி விபுலானந்தர் அமைத்த ஆச்சிரமம் சிவானந்த வித்தியாலயம் என்பன விவேகானந்தரையும் சேர்த்து நினைவு கூரும் இடமாகவே உள்ளன. அங்குள்ள விடுதிக்கும் விவேகானந்தா மண்டபம் என்ற விடுதி அறையே பெயரிடபபட்டிருக்கிறது. இங்கு பின்னாளில் பெரிதாக இலங்கையளவில் அறியப்பட்ட முஸ்லிம் அமைச்ச்சர்களாகவிருந்த அண்மையில் மறைந்த முன்னாள் அமைச்சர் எம் .ஏ.அப்துல் மஜீத், (சம்மாந்துறை)  மறைந்த முன்னாள் அமைச்சர் மூதூர் மஜீத் ஆகியோரும் இன்னும் பலரும் சிவானந்த வித்தியாலயத்தில் விடுதியில் தங்கி கல்வி கற்றவர்கள் , ஒருவேளை அங்குள்ள விவேகானந்தரின் விடுதி அறையிலும் தங்கி அவர்கள் கல்வி கற்றிருக்கலாம். ஆக விவேகானந்தர் சென்ற தலைமுறையில் முஸ்லிம் கிழக்கின் அரசியல் தலைவர்கள் சிலருக்கும் ஞாபகங்களில் சம்பாசனைகளில் இடையோடும் சொல்லாக நிச்சயமாக செல்வாக்கு செலுத்தியிருக்கும். 

சில நாட்களுக்கு முன்னர் ஆரையம்பதி காத்தான்குடி எல்லையில் வைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் சிலையை சில விசமிகள் சேதப்படுத்தியிருக்கிறார்கள். அதனை தொடர்ந்து தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியல் இயக்கங்கள் அப்பிரதேச உள்ளூர் ஆட்சி மன்றங்கள் ஆகியன தமது கண்டனங்களை தெரிவித்துள்ளதுடன் சமூக ஐக்கியத்துக்கு எதிரானவர்கள் இதனை செய்துள்ளார்கள் என்பதால் இது குறித்து மிக அவதானமாக இருக்கும்படி வேண்டி கொண்டதுடன் , இவ்வாறான சமூக விரோத செயலுக்கு பொறுப்பானவர்களை கண்டு  பிடித்து தகுந்த நடவடிக்கையை காவல் துறை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்கள். இந்த உடனடி நடவடிக்கை பரஸ்பரமாக இரு சமூகப் பிரிவினரும் மிகப் பொறுப்புடன் விசமிகளின் விருப்பங்களுக்கு எதிராக வீரியத்துடன் செயற்பட்டுள்ளார்கள் என்பதை  காட்டுகிறது, விவேகானந்தரின் சிலையை உடைத்தவர்கள் யார் என்ற சந்தேகம் , சம்பந்தப்பட்ட இரண்டு ஊர் மக்களின் இடையிடையே எழும் பிரச்சினைகளுடன் தவிர்க்க முடியாமல் தொடர்புபடுத்தப்பட்டு பார்க்கப்பட்டாலும் , இந்த சிலைச் சேதத்தினை தமிழர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்ற அனுமானத்திலும் , ஒருவேளை மூன்றாவது சக்தியாக யாரும் இதனை செய்திருக்கலாம் என்ற ஊகத்திலும் கருத்துக்கள் பரிமாறப்படுவதை உள்ளூர் மட்டத்தில் தவிர்த்திருக்கிறார்கள். சகலரும் சட்டத்தை துணைக் கழைத்திருக்கிறார்கள். இந் நிலைப்பாடு  ஆரோக்கியமானதே. இது ஒரு சிறிய அளவிலான சேதமாயினும் ஒரு சமூகத்தின் , ஒரு பிரதேசத்தின் மத , நம்பிக்கை, அடையாளத்தின்  மீதான அத்துமீறலாக , அடாவடித்தனமாகவே பார்க்கப்படல் வேண்டும்.

ஆனால் துரதிஸ்டவசமாக இந்த வேகத்துடனும் வீரியத்துடனும், விவேகத்துடனும் தமிழ் அரசியல் வாதிகளோ முஸ்லிம் அரசியல் வாதிகளோ தமிழ் இயக்கங்களோ மத சமூக சிவில் நிறுவனங்களோ, தனி நபர்களோ  கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனி பள்ளிவாயல் தரைமட்டமாக்கப்பட்ட போது, அல்லது அதன் மீது பிரும்ம குமாரி தியான நிலையம் கட்டப்பட்டபோது கண்டனம் தெரிவிக்க , தமிழ் நிர்வாக அதிகாரிகளின் மேலாதிக்கத்தை கண்டிக்க , அடிப்படை உரிமை மீறலுக்காய் சட்ட நடவடிக்கை எடுக்க, சரி அது போகட்டும் ஒரு அடையாள எதிர்ப்பை தன்னும் காட்ட முன் வரவில்லை. வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் மொழியை, கலாச்சாரத்தை , பண்பாட்டை காப்பதே தமது தலையாய பனி என்று கனடாவில் அண்மையில் சூளுரைத்த சம்பந்தனார் தனது "சகோதர" தமிழ் பேசும் இனத்தின் மத உரிமை கலாச்சார உரிமையை கள்ளியங்காட்டு முஸ்லிம் மக்களிடம் தமிழ் நிர்வாக ஆசாமிகளால் பறிக்கப்பட்டு போயிருக்கிறதே:அதற்கு குரல் கொடுக்கும் அரசியல் நேர்மை அவருக்குமில்லை, அவரின் கட்சிக்குமில்லை, அவரின் எதிர் தமிழ் கட்சி ஆசாமிகளுக்குமில்லை.

ஒரு சமூகத்தின் உரிமை மீறலுக்கு ஆட்பட்ட சமூகமே இன்று கையறு நிலையில் உள்ளது. மனித உயிர்களை காவு கொள்ளும்  கொலைஞர்களையே கண்டுபிடிக்கமுடியாத ஒரு சூழல் இன்னமும் இருக்கிறது என்ற யதார்த்த சூழலில் சிலையை உடைத்த்வனை எப்போது யார் கண்டு பிடிப்பது? சமூகங்களுக்கு இன்னமும் நேர்மையான நெஞ்சில் உறுதி கொண்ட சமூக செயற்பாட்டாளர்களின் அரசியல்வாதிகளின் தேவை வெற்றிடங்கள் நிரம்பவே உண்டு என்பதையே இவ்வாறான சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன.       .
         
இந்த சம்பவத்தை முந்திய பல சிலை உடைப்புடனும் அரச சதி போன்றும் காட்ட முற்படும் சில பிரச்சாரங்களையும் நாம் கண்டு கொள்ளாமலிருக்க முடியாது, எங்கும் தமிழ் தேசியம் எதிலும் சிங்கள் விரோதம் என அலைவோரும் மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு சிலை உடைப்புக்களை நிரல் படுத்தலாம் , ஆனாலும் இலங்கையில் சிலை வைப்பதில் சாதனை படைக்கும் செய்திகளும் வந்தவன்னமிருப்பதையும் மறுக்க முடியாது. உதாரணமாக இறக்குவானையில் அமைக்கப்படும் மிகப்பெரிய முருகன் சிலை திருகோணமலையில் அமைக்கப்பட்ட்ட சிவனின் சிலை என்பனவற்றை பல தமிழ் தேசிய பௌத்த எதிர்ப்பு பிரச்சாரகர்கள் கண்டு கொள்வதில்லை. "நாங்கள் பிரபஞ்ச சகிப்புத்தன்மையை நம்புவது மட்டுமல்ல, எல்லா மதங்களும் உண்மை என்று நம்புகிறோம்" ( We believe not only in universal tolerance but we accept all religion as true)  என்று சொன்ன விவேகானந்தரின் சிலைக்கு ஊறு விளைவித்து தமது சகிப்பின்மையை  யார் காட்டியிருப்பார்?    

 இன்னுமொரு சிலையை உடைத்து மனிதர் தலைகளை சமூக விரோதிகள் உருட்டாமலிருக்க சமூகங்கள் உஷார் படுத்தப்படல் வேண்டும் , காவல் துறை கடமையை செய்தல் வேண்டும். சமூக விழிப்புணர்வு குழுக்கள் மீண்டும் விழித்துக் கொள்ள வேண்டும். இந்த சமூக மத கலாச்சார அடக்குமுறைகளுக்கு எதிராக சகல சமூகங்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கவும் ஐக்கியப்படவும் வேண்டும். கள்ளியங்காட்டு பள்ளிவாசல் கபளீகரம் அடங்கலாக!! .     

No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...