வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள் !!

 வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள் !!


எஸ்.எம்.எம் பஷீர்


சமூக சேவகர்களின், சட்டத்தரணிகளின், அரசியல் வாதிகளின் சமாதானப்பணி நோர்வே அரசின் அனுசரணையுடன் எவ்வாறு நடந்தது.   இலங்கையில் சமாதானப்பணி புரிவதில் காட்டிய அக்கறைக்கு கனதியான வெகுமதிகளை  எப்படி பெற்றார்கள் .  சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இலங்கையில் எவ்வாறு மீள் காலனித்துவம் (Recolonisation )  முன்னெடுக்கப்பட்டது என்பது பற்றி சுசாந்த குணதிலக்க ஒரு நூலே எழுதியுள்ளார். சர்வதேச தன்னார்வ தொண்டுப் போர்வையில் இலங்கை புத்தி ஜீவிகள் எப்படி  ஜீவிதம் செய்தார்கள் பற்றிய சர்ச்சைகளும் "சமர்களும்" நடைபெறும் ஒரு அனுபவ சாரளத்திநூடே  அண்மையில் முஸ்லிம் சமாதான செயலகத்தினருக்கு , அதன் முன்னாள்   தலைவர்களில் ஒருவரான ஜாவிட் யூசுப் எழுதிய கடிதம் இப்போது பத்திரிகை ( நன்றி மீள்பார்வை )  செய்தியாகிவிட்டது. 


முஸ்லிம் சமாதான செயலகம் பற்றி நான்28/07/2009  எழுதிய கட்டுரையில் குறிப்பிட்ட விடயங்களுடன் வாசிப்பது இன்று எழுத்துள்ள சூழ் நிலையை நன்கு படம் பிடித்துக் காட்டுவதுடன்  எங்கள் பெயரால் பிழைப்பு நடத்தியோரையும் விரைவில் அடையாளம் காணப்பட்டு  தண்டிக்கப்படவும்  வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் , நான் ஏற்கனவேஎழுதிய கட்டுரையுடன் ..தொடர்ந்து ஜாவிட் யூசுபின் கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.

இது முஸ்லிம் சமாதான செயலகம் குறித்து எழுந்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு ஆனால் , ஏனைய இனங்களின் மதங்களின் , அரசின் , புலிகளின் சமாதான செயலகங்களின் செயற்பாட்டாளர்களின்  சங்கதிகளும் சந்திக்கு வர வேண்டும் எனபதை இது சுட்டிக்காட்டுகிறது.


 

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (பாகம்-6)


தொடர் கட்டுரை திடீரென்று நின்று போனதால்; நானும் “முடங்கிப்போன முஸ்லிமானேனோ” என்ற கேள்வயினை நட்புடன் சிலர் ஒருபுறம் எழுப்ப, இன்னுமொரு புறம் இலங்கையிலும், மத்திய கிழக்கிலுமிருந்து இக்கட்டுரையினைத் தொடருமாறு பலர் நட்புடன் வேண்டுகோள் விடுக்க மீண்டும் வேலைப்பளுவுக்கு மத்தியிலும் நேரத்தினைக் கடன்வாங்கிக்கொண்டு “முடங்காத முஸ்லிமைத்”  தேடித் தொடர்கிறேன். முஸ்லிம் சமாதானச் செயலகத்தில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது ஏகபோகத்தினை நிலைநாட்ட முயற்சித்தாலும் இது அரசியல் சார்ந்த நிறுவனமாக நிலவவேண்டுமென்பதில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முயற்சிகளில் தடையேற்பட்டது. ஏனெனில் தேசிய ஐக்கிய முன்னணி அரசியல் அதிகாரத்தில் இருந்தபடியினாலும், அவர்களையும் பங்காளிகளாக சேர்த்துக்கொண்டு செயற்படவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் ஆரம்பகால தலைவர்களாக செயற்பட்டவர்களான எம்.ஐ.எம் முகைதீன், ஜாவிட் யூசுப் ஆகியோh விலகிக்கொள்ள சூழ்நிலையும் எற்பட்டது. அதிலும் ஜாவிட் யூசுப் கட்சி அரசியல் சார்புநிலை அதில் அதில் மேலோங்குவதையும், நிர்வாக முறைகேடுகளையும் சகிக்க முடியாமல் அதிலிருந்து விலகியதாக கூறப்படுகின்றது.
இவர் ஒரு நேர்மையான மனிதர் என்பதுடன் சவூதி அரேபியாவின் முன்னாள் தூதுவர் பதவியிலிருந்தும் பின்னர் கொழும்பு சாஹிராக் கல்லூரியின் அதிபர் பதவியிலிருந்தும் சுதந்திரமாக தான் செயற்படமுடியாது என்பதால் தன்னிச்சையாக பதவியிலிருந்து விலகிக்கொண்டவர் ஆவார். இவருடன் மனித உரிமைகளுக்கும், அபிவிருத்திக்குமான சட்டத்தரணிகள் (Lawyers for Human Rights and development) ஸ்தாபனத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்குண்டு. இன்னுமொருவரான எம,.ஐ.எம் முகைதீன் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் செயற்பட்டதுடன், முஸ்லிம் காங்கிரஸ்; அரசதரப்பாக சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டபோது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை பிரதிநிதித்துவப்படுத்தியவராவார்.. ஆயினும் இவர் குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இறுதியாக சுவிஸில் இடம்பெற்ற அரசு –புலி பேச்சவார்த்தையின்போது அவ்வேளை அரச பிரதிநிதியாக கலந்துகொண்ட பேரியல் அஸ்ரப் அவர்கள் வடகிழக்கு முஸ்லிம்கள் தொடர்பான ஆய்வறிக்கைகளை தந்துதவுமாற கேட்டபோது அவற்றிற்கு குறிப்பிட்ட பணம் தருமாறு கேட்டதாக குற்றச்சாட்டு அவர்மீது முன்வைக்கப்பட்டது. இது எவ்வாறாயினும் நோர்வே அரசும் ஒரு எதிரிடையான முஸ்லிம் சமாதானச் செயலகம் ஏற்படாதிருப்பதில் கவனமாக இருந்தனர். ஏனெனில் மறுபுறம் புலிகள் ஏகபோகமான தமிழர்பிரதிநிதிகளாக இருப்பதனை உறுதிசெய்வதிலும் கவனமாக இருந்தனர். தமிழர்களுக்கென புலிகளின் சமாதானச் செயலகம் மாத்திரம் இயங்கியதுடன் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள், குழுக்கள், கருணா பிளவின் பின்னரான கிழக்கு தமிழர்களை மையப்படுத்தும் சமாதான பிரிவினைக் குரல்களை அலட்சியம் செய்துவந்தனர் முழுக் கட்டுரையையும் வாசிக்க (  http://www.bazeerlanka.com/2011/04/6.html ) 



   

 

முஸ்லிம் சமாதான செயலகத்தின் 46 மில்லியன் நிதிக்கு என்ன நடந்தது?


JavidYoosufகேள்வி எழுப்புகிறார் சட்டத்தரணி ஜாவிட் யூஸுப்
முஸ்லிம் சமாதான செயலகத்தின் அங்கத்தவரும் ஸ்தாப செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி ஏ. ஜாவிட் யூஸுப், செயலகத்தின் நிதி ஒழுங்கீனங்கள் தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளார். இதனை செயலகத்தின் பணிப்பாளர் சபைக்கு தெரியப்படுத்தியபோதிலும், அவர்கள் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜாவித் யூஸுபின் பகிரங்கக் கடிதம்
2, 33ஆவது லேன், கொழும்பு 03,
2011 டிசம்பர் 28,
ஜனாப் எம். ஷிப்லி அஸீஸ்,
தலைவர்
முஸ்லிம் சமாதான செயலகம் (ககு–)
கொழும்பு.

அன்புக்குரிய ஜனாப் அஸீஸ் அவர்களே,

10 மாதங்களுக்கு மேலாக பொறுத்திருந்ததன் பின்னர், இப்பகிரங்கக் கடிதத்தை உங்களுக்கு எழுத வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் முஸ்லிம் சமாதான செயலகத்தில் (Peace Secretariat for Muslims - PSM) இடம்பெற்ற பல்வேறு நிதி மற்றும் ஏனைய முறைகேடுகள் தொடர்பாக எனக்கு எவ்விதத் தெளிவும் விளக்கமும் கிடைக்கவில்லை. (இதற்குப் பின்னர் முஸ்லிம் சமாதான செயலகம் PSM எனக் குறிப்பிடப்படுகிறது.)
இவ்வருடம் (2011) பெப்ரவரியில் இடம்பெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில் நான் இந்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பினேன். பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் சிலரால், அவ்வப்போது இவ்வாறான தெளிவுபடுத்தல்கள் தரப்படும் என எனக்கு உறுதியும் வழங்கப்பட்டது.
வருடாந்த பொதுக் கூட்டத்திற்கு நீங்கள் சமூகமளிக்காததால், அதில் என்ன நடந்தது என நான் சுருக்கமாக முன்வைக்கிறேன். (இது தொடர்பாக உங்களுக்கும் ஏனைய பணிப்பாளர் சபையினருக்கும், 2011 ஜூலை 5 இல் நான் அனுப்பிய கடிதத்தில் விரிவாக விளக்கியுள்ளேன்.)
1. PSM ஐ ஒரு சிவில் சமூக நிறுவனமாக மாற்றியமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாப் ஏ.எம். பாயிஸ் கூட்டத்தின் ஆரம்பத்தில் தெரிவித்தார். இது எனக்கு வியப்பளித்தது. ஏனெனில், இவ்விடயம் தொடர்பாக ஆலோசிப்பதற்கோ தீர்மானிப்பதற்கோ அங்கத்தவர்கள் எவரும் எந்தக் கூட்டங்களுக்கும் அழைக்கப்படவில்லை.
இது PSM இன் அரசியல் பண்பில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தும் விடயமாகும். இனப்பிரச்சினைத் தீர்வின்போது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை உறுதிப்படுத்துவதைப் பிரதான இலக்காகக் கொண்டே PSM உருவாக்கப்பட்டது.
PSM ஐ உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இந்தப் புரிதலே உள்ளது. இவ்வுடன்படிக்கையில் ஜனாப் றவூப் ஹக்கீமும் ஜனாபா ஃபேரியல் அஷ்ரபும் கைச்சாத்திட்டிருந்தனர்.
2. வருடாந்த பொதுக் கூட்டத்தில் அங்கத்தவர் அல்லாத பலர் கலந்து கொண்டதோடு, அவ்வாறானவர்கள் பிரேரித்த நபர்கள் பணிப்பாளர் சபைக்கு தெரிவுசெய்யப்பட்டும் இருந்தனர். இது தொடர்பாகவும் நான் அங்கு கேள்வி எழுப்பினேன். உதாரணமாக ஜனாப் ஹில்மி அஹ்மட் என்பவர் ஒரு அங்கத்தவர் அல்ல. அவர் அங்கு பலரைப் பிரேரித்தார். அவர் பிரேரித்த நபர்கள் பணிப்பாளர் சபைக்கு தெரிவுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனால்தான் தற்போதைய பணிப்பாளர் சபையின் சட்டபூர்வத் தன்மை குறித்து நான் கேள்வி எழுப்புகிறேன். PSM இன் தற்போதைய பணிப்பாளர் சபை சட்டபூர்வமானதல்ல. அத்துடன் அது முறையாக உருவாக்கப்படவுமில்லை என நான் கருதுகிறேன். ஆதலால், எனது பார்வையில் PSM இல் எந்த செயற்பாடுகளும் சட்டபூர்வமானவை அல்ல. பணிப்பாளர்களாக செயற்படும் ஒவ்வொருவரும், PSM இன் பெயரால் செய்யப்படும் எல்லா செயல்களுக்கும், எல்லா செலவுகளுக்கும் தனிப்பட்ட முறையில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் ஆவர்.
கூட்டத்தில் முக்கிய விடயங்கள் மீளாய்வுக்கு எடுக்கப்பட்டபோது நான் பின்வரும் விடயங்கள் தொடர்பாக கவனயீர்ப்பை வேண்டினேன்.
அ) PSM இன் வருடாந்த பொதுக் கூட்டம் இரு வருடங்களுக்குப் பின்னரே இடம்பெறுகிறது. மீளாய்வுக்கு உட்படுகின்ற 2008 / 2009 மற்றும் 2009 / 2010 ஆகிய இக்காலப் பகுதிகளில் நிதி வழங்குனர்களிடமிருந்து 46 மில்லியன் ரூபா நிதி பெறப்பட்டுள்ளது.
வருடாந்த பொதுக் கூட்டம் இடம் பெற்ற தினத்தில் வங்கிக் கணக்கில் மீதமாக இருந்த 3 இலட்சம் ரூபா தவிர, ஏனைய முழுத் தொகையும் செலவிடப்பட்டுள்ளது. எவ்வாறான செயல்பாடுகளில் இந்தப் பணம் செலவிடப்பட்டது என்பது தொடர்பான பணிப்பாளர் சபையின் அறிக்கை எதுவும் வருடாந்த பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
நான் இக்கேள்வியைக் கேட்டபோது, 2011 பெப்ரவரியில் முடிவுறும் காலத்திற்கான பணிப்பாளர் சபையின் செயற்பாடுகள் அடங்கிய அறிக்கை முன்வைக்கப்படும் என, ஜனாப் பாயிஸ் உறுதியளித்தார். ஆனால், பத்து மாதங்களாகியும் அவ்வாறான எந்த அறிக்கையும் எனக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. ஆதலால், இக்காலகட்டத்தில் எவ்வித செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. அத்தோடு, 46 மில்லியன் ரூபா முறையாக செலவழிக்கப்படாமல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.
ஆ) மீளாய்வு செய்யப்படும் இரு வருடங்களுக்கான கணக்காய்வு அறிக்கை, இந்தப் பணத்திற்கு என்ன நடந்தது என்ற தகவலைத் தருகிறது. கணக்காய்வாளர்களின் அறிக்கையின் பிரகாரம், பல தனிப்பட்ட கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கு தனிப்பட்ட பணிப்பாளர்களே அனுமதியும் வழங்கியுள்ளனர். ஆனால், PSM இன் விதிகளின்படி, இதற்கு பணிப்பாளர் சபையின் அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால், அவ்வாறான எந்த அனுமதியும் பெறப்பட்டிருக்கவில்லை.
இ) 2009/2010 காலப் பகுதிக்கான பணிப்பாளர் சபைக் கூட்டங்களுக்கு 1,168,207 ரூபா செலவிடப்பட்டுள்ளதாக கணக்கறிக்கை கூறுகிறது. இரு மாதங்களுக்கு ஒரு முறை பணிப்பாளர் சபைக் கூட்டம் இடம்பெற்றது என எடுத்துக் கொண்டால், ஒரு கூட்டத்திற்கு அண்ணளவாக 2 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. (ஆனால், இக்கால கட்டத்தில் எந்த செயற்பாடுகளும் இடம்பெறாததால், கூட்டம் நடந்ததா என்பதே சந்தேகத்திற்குரியது.)
ஈ) பெயர் தெரியாத ஆலோசகர்களுக்கு 1,853,096 ரூபா துறைசார் ஆலோசனைக் கட்டணமாக வழங்கப்பட்டுள்ளது. இது புதிராக உள்ளது. ஏனெனில், PSM இன் எந்த செயற்பாடுகளிலும் இந்த ஆலோசனைகள் பிரதிபலிக்கவில்லை.
சில பணிப்பாளர்கள் கடந்த காலத்தில் மேலதிக நிதியிலிருந்து, தங்களுக்குத் தாங்களே செலுத்திய முழுநேர சம்பளம் பற்றிய தரவுகளும் பதிவுகளில் உள்ளன. ஆனால், இவர்கள் வேறு இடங்களில் முழுநேர ஊழியர்களாகப் பணியாற்றினர். இவர்களுக்கு இவ்வாறான கொடுப்பனவுகளை வழங்க நோர்வே நிதி வழங்குனர்கள் மறுப்புத் தெரிவித்திருந்தனர். இவர்கள் தங்களுக்குத் தாங்களே கொடுப்பனவுகளை வழங்கியது போன்ற முறைகேடுகள் மூலம் யார் இந்த ஆலோசகர்கள் என்பதை இலகுவில் புரிந்துகொள்ளலாம்.
PSM இன் யாப்பின் பிரகாரம், இந்த எல்லா பணிப்பாளர்களும் முஸ்லிம் காங்கிரஸ், நுஆ ஆகிய கட்சிகளின் தலைவர்களால் நியமிக்கப்பட்டவர்களே. இந்த முறைகேடுகளை போதிய தரவுகளுடனும் ஆதாரங்களுடனும் முஸ்லிம் காங்கிரஸ், நுஆ தலைவர்களுக்கு பல கடிதங்கள் மூலம் நான் ஏற்கனவே தெரியப்படுத்தியிருந்தேன்.
அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருந்துவிட்டனர். இந்த முறைகேடாளர்கள் தமது வழிகளில் காரியங்களைத் தொடர்வதற்கு இது ஊக்கமளித்தது. இந்த ஆலோசகர்கள் யார் என்றும், அவர்கள் இந்தக் கொடுப்பனவை பெறுவதற்கு என்ன செய்தார்கள் என்றும் அடையாளம் காண்பது, பணிப்பாளர் சபையின் பொறுப்பே ஆகும். இந்தக் கட்டத்தில் கூட சபை இதனை செய்யவே வேண்டும்.
3. 2011 ஜூலை 5 ஆம் திகதி அனுப்பிய கடிதத்தின் பின்னர், உங்களோடு சாதாரணமாக உரையாடியபோது, PSM இல் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு அறவே தெரியாது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
2011 ஜூலை 5 ஆம் திகதியிடப்பட்ட எனது கடிதத்திற்கு PSM இன் உப தவிசாளரான ஜனாபா ஃபாரா ஹனீபா பதிலளித்திருந்தமை இதை எனக்கு மேலும் உறுதிப்படுத்தியது. ஃபாரா ஹனீபா கூட எனது கேள்விகளுக்கு பதிலளிப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. PSM ஐ நீங்கள் பொறுப்பெடுக்கவுள்ளதால், கடந்த காலத்தில் அங்கு என்ன நடைபெற்றது என்று ஆராய்வது உங்களுக்கு மிகவும் பயன் மிக்கது.
அ) பொதுவாக இனப்பிரச்சினை என சித்தரிக்கப்படும் விடயத்திற்கு தீர்வு காணப்படும்போது, முஸ்லிம் சமூகத்தின் ஒருமித்த பொது நிலைப்பாட்டை அடைவதே PSM இன் நோக்கமாகும். எல்லா அரசியல் பங்காளர்களையும் உள்வாங்கி, இணைத்து செயற்படுவதற்கே PSM உருவாக்கப்பட்டது.
ஆனால், PSM இலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள், அதனுள் ஏனைய அரசியல் பங்காளர்களை உள்வாங்குவதற்கு எதிராக கடுமையாக வேலை செய்தார்கள். இந்த மனோபாவத்தை ஜனாப் பாயிஸ் ஒருமுறை கூறிய கருத்து மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. தாம் 70% முஸ்லிம் வாக்குகளைப் பெற்றிருப்பதால், ஒவ்வொரு ஆளாக விடயங்களைக் கேட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லைஎன்று அவர் ஒருமுறை கூறினார்.
ஆ) PSM இன் பணிப்பாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று, அவர்களாக வேண்டிக் கொண்டபோது, நோர்வே அதை மறுத்து விட்டது. எனினும் நிதி வழங்குனர்களுக்குத் தெரியாமல் பணிப்பாளர்கள் தமக்குத் தாமே கொடுப்பனவுகளைச் செய்துகொண்டனர். சில பணிப்பாளர்கள் சில மில்லியன் ரூபாய்களை சுருட்டிக் கொண்டதை நான் நன்கு அறிவேன். இந்த விடயத்தை ஜனாப் றவூப் ஹக்கீம், ஜனாபா ஃபேரியல் அஷ்ரப் ஆகியோரின் கவனத்திற்கு நான் எழுத்து மூலம் கொண்டு வந்தேன். இது தொடர்பாக விசாரணை நடத்துமாறும் வேண்டியிருந்தேன். துரதிஷ்டவசமாக அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இ) அப்போதைய செயலாளர் நாயகம் ஜனாப் எம்.ஐ.எம் மொஹிதீனின் அனுமதியைப் பெற்று நான் கணக்குகளை பரிசீலனை செய்தேன். அப்போது பல முறையற்ற கொடுப்பனவுகளை கண்டுபிடித்தேன். நான் கணக்குகளை ஆய்வு செய்வதை அறிந்து கொண்ட ஜனாப் பாயிஸ், கணக்குகளை ஆய்வு செய்ய என்னை அனுமதிக்க வேண்டாம் என கணக்காளரை வேண்டிக்கொண்டார். ஆனால், அமைப்பின் யாப்பு விதிகளின் பிரகாரம் அவ்வாறு செய்வதற்கு எனக்கு அனுமதியுள்ளது. ஜனாப் பாயிஸின் இவ்வாறான நடவடிக்கைக்கான காரணம் மிகத் தெளிவானது.
ஈ) 2006 ஜூன் 15, 2007 ஜூன் 13, 2008 ஜூன் 23 ஆகிய தினங்களில் ஜனாப் றவூப் ஹக்கீம், ஜனாபா ஃபேரியல் அஷ்ரப் ஆகியோருக்கு இந்த விடயத்தையும் வேறு விடயங்களையும் எழுத்து மூலம் நான் தெரியப்படுத்தியிருந்தேன். அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தகவலுக்காக அந்தக் கடிதங்களின் பிரதிகளை உங்களுக்கு தனியான அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கிறேன்.
உ) PSM இன் கணக்குகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளனவா என ஆராய்வதற்கு, நோர்வே தூதரகம் விஷேட கணக்காய்வொன்றை செய்யுமாறு பணித்துள்ளது என நான் அறிகிறேன். PSM இன் செயற்பாடுகள் தொடர்பாக அவர்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களின் பின்னரே, அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர் என நான் கருதுகிறேன்.
இதன் மொத்த விளைவு என்னவெனில், நோர்வே PSM இற்கு வழங்கும் நிதியை இப்போது முற்றாகவே நிறுத்தி விட்டது. நோர்வேதான் இதற்கு அதிகூடிய நிதியை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊ) மேலே கூறப்பட்டுள்ளவற்றுள் சில விடயங்கள், ஜனாப் லதீப் பாரூக் எழுதியுள்ள ‘Nobody’s people’ (யாருக்கும் சொந்தமில்லாத மக்கள்) என்ற நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. (இதில் உள்ள PSM தொடர்பான அத்தியாயத்தைப் பார்வையிடவும்.)
4. இந்த சூழ்நிலைக்குத் தீர்வாகவும், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பணத்தை மீளப் பெறவும் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என அறிய கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நான் ஆவலோடு காத்திருந்தேன். 2011 பெப்ரவரி 11 ஆம் திகதி இடம் பெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில் சமூகமளித்தோருக்கு நான் பின்வரும் கருத்தை கூறியிருந்தேன். அதாவது தனிப்பட்டவர்களாயினும் சரி- நிறுவனங்கள் சார்பான நபர்களாயினும் சரி - தாம் சொல்வதை தாமே முதலில் செய்பவர்களாக இருக்க வேண்டும். இவர்கள்தான் அரசாங்கத்திற்கும் உலகத்திற்கும் பொறுப்புக் கூறல், நல்லாட்சி ஆகியவை பற்றி புத்தி சொல்கின்றனர் என்பது சுவாரஸ்யமான விடயம்.
46 மில்லியன் ரூபா எவ்வாறு செலவுசெய்யப்பட்டது என்ற எவ்வித விளக்கமும் கோரப்படவில்லை. அத்தோடு பாரியளவில் முறைகேடுகள் இடம்பெற்றதற்கான சான்றுகளும் உள்ளன. இந்த நிலையில் மற்றவர்களிடம், அவர்கள் செய்யும் செயல்கள் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்பதற்கு இவர்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது?
இது விடயத்தில் பணிப்பாளர் சபையின் மௌனம் நீடிக்கிறது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் காலம் நீண்டு கொண்டே செல்கிறது. அச்சபையின் அங்கத்தவர்கள் இதனை சீரியஸான விடயமாக எடுக்கவில்லை என்ற மனப்பதிவையே இது எனக்குத் தருகிறது. இந்த உண்மை நிலையைப் புரிந்துகொள்வதற்கு அல்லது இந்த விடயங்களை உணர்ந்து கொள்வதற்கு, அதிகபட்சம் மூன்று நாட்கள் கூட எடுக்காது. இந்த செயற்பாடற்ற தன்மை, பொது நிதியை தொடர்ந்தும் துஷ்பிரயோகம் செய்யவே தூண்டுகிறது.
மேலும், PSM இன் பெயரை மாற்றுவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. PSM இன் பெயரை மாற்றுவதற்கான முயற்சி சட்டபூர்வமானது அல்ல. அதன் பணிப்பாளர் சபை முறையாக உருவாக்கப்படவுமில்லை. அதனால் அது செல்லுபடியானது மல்ல. நிதி வழங்குனர்களையும் பொதுமக்களையும் பிழையாக வழிநடத்தும் முயற்சியே இது. பாரிய நிதி ஒழுங்கீனங்கள் இடம் பெற்ற PSM இலிருந்து வேறுபட்ட ஒரு நிறுவனமே இது என்று அவர்களை நம்ப வைக்கும் முயற்சியாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.
ஐந்து வருடங்களுக்கும் மேலாக, PSM இற்கு உள்ளே இந்த விடயங்களுக்குத் தீர்வுகாண நான் எடுத்து வந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இந்த சூழ்நிலையிலேயே இந்தப் பகிரங்கக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட சில நபர்கள், ஏனைய நிறுவனங்கள் தொடர்பான பிரதிகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் தகவல் நிலையம் (MIC) என்பவற்றின் பெயரால் செலவழிக்கப்பட்டதாகவும் அக்கணக்கறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பாக, விரைவான பதிலொன்றை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். இது தொடர்பாக மேலதிக தெளிவுகள் தேவையாயின் 0777 369 779 என்ற எனது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.
ஏ. ஜாவிட் யூஸுப்
அங்கத்தவர்/ஸ்தாபக செயலாளர் நாயகம்
முஸ்லிம் சமாதான செயலகம்

-

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...