தமிழர் அறிக்கைப் போரும் ஆதங்கமும் ! அரவணைக்க முஸ்லிம்களும்!!


                                                           

எஸ்.எம்.எம்.பஷீர்  
 
பாலதீனத்துக்கு திருப்பிச் செல்லும் இலக்கை அடைவதற்காக நாங்கள் எல்லோரும் சிலவேளைகளில் எங்களின் பற்களை இறுக்கி கடித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.  யாசீர் அரபாத்

இலங்கையில் நடைபெற்ற இன வன்முறைகள் சிவில் யுத்தம் காரணமாக மேற்கு நாடுகளில் புலம் பெயர்ந்த புலி எதிர்ப்பு தமிழர்கள் பலர்  இப்போது தமது புலிப் பயம் நீங்கி இலங்கைக்கு உல்லாசப் பிரயானிகளாய்    சென்று வருவதுடன் தமது முன்னைய அரசியலை அல்லது தாம் புலம் பெயர் நாட்டில் கண்டு கொண்ட , கற்றுக்  கொண்ட "ஜனநாய அரசியலை" இலங்கையிலும் செய்வதற்கு சூழல் தோன்றியுள்ளதை உணர்ந்து மீண்டும் இலங்கை அரசியல், சமூகத் தளத்தில் நுழைவதற்கு முயற்சிக்கின்றனர். இந்த புலம் பெயர் பிருகிருதிகளில் மிகச் சிலர் மீண்டும் தமது பிறந்த மண்ணுக்கு சென்று வாழ்வதையும், அங்கு அரசியல் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் விரும்புகின்றனர். இவர்களின் நியாயமான இந்த எண்ணத்திற்கும் செயலுக்கும் உண்மையில் இலங்கை மக்கள் ஆதரவளிப்பார்கள். ஆனால் நடைமுறையில் இவர்களில் சிலர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைகிறார்களா என்ற ஐயத்தையும் எழுப்புகிறது. ஏனெனில் இந்த புலம் பெயர் புத்தி ஜீவிகளில் சிலரின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் மட்டுமல்ல , அண்மைக்கால அரசியல் கருத்தோட்டமும் செயற்பாடுகளும் அத்தகைய கேள்வியை தோற்றுவிக்கிறது.







புலிகளின் படு தோல்வியின் பின்னர் இலங்கையிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில்  பல புத்தி ஜீவிகளுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் வடக்கு கிழக்கில் அரசியல் சமூக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.




எவ்வித திணிப்பும் கட்டுப்பாடும் இல்லாமல் சுயாதீனமாக   அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஊடல்களுக்கு மத்தியிலும் பல கூடல்களை செய்து பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கும் போது   தமிழ் புத்தி ஜீவிகள பல பல குழுக்களாய் அறிக்கைகளையும் விட்டுத் தள்ளுகிறார்கள். அதுவும் குறிப்பாக தமிழ் சிவில் சமூகம் என சுய நாமகரணம் இட்டுக் கொண்ட  சிலரால் முதல் அறிக்கை சென்ற மாதம் வெளிவந்தது. இலங்கையின் கத்தோலிக்க மத குருவான அதி வணக்கத்துக்குரிய கலாநிதி. இராயப்பு ஜோசப் மன்னார் கத்தோலிக்கப் பேராயர்
தலைமையில் உள்நாட்டில் வாழும் புத்திஜீவிகளின் அறிக்கை தமிழ் தேசிய தீவிரவாத தொனியுடன் மீண்டும் புலிகளின் எச்ச சொச்சங்கள் இருக்கிறோம் என்ற பாணியில் அரசுடன் பேச்சுவார்த்தையை மீளத் தொடங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எச்சரிக்கை விடுக்கும் அறிக்கையாகவே வெளிவந்தது.


அந்த அறிக்கை  காட்டமாக எங்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை என்று போய் விட்டுக் கொடுப்புக்கள் செய்துவிட்டால் புலிகளின் அரசியல் அபிலாசைகள் -புலியும் தமிழரும் நாமும் ஒன்றே என்று கூறியும் கூறாமலும் ஆதரித்து நின்ற கிறிஸ்தவ மதகுருக்களின்- பிரதிக்கினை என்னாவது என்ற ஆதங்கத்தை அந்த அறிக்கை வெளிப்படுத்தியது. எனவே தமது அறிக்கையில் தமிழர் ஒரு தேசிய இனம், தமிழர் ஒரு தேசம், எமக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்ற அரசியல் நிலைப்பாட்டை நாம் எடுத்தமையில் எந்தத் தவறும் இல்லை என்ற மனவுறுதி உங்களிடத்தில் எப்போதும் வெளிப்பட வேண்டும். இத்தகைய மனவுறுதி உள்ளவர்கள் தான் தமிழர் சார்பில் பேச வேண்டும். என்றும்


இந்த தீவிர கருத்தியலாளர்கள்   ஒரு படி மேலே சென்று  “தமிழ் தேசிய விரோத சக்திகள் விரோத அரசு சார்பு சக்திகள் (தமிழ்) குறித்து தாங்கள் சிந்திக்கப் போகும் மாற்று நடவடிக்கை பற்றி பற்றியும்  “  புலி பாஷையில் மறைமுக எச்சரிக்கையும்  விடுத்திருந்தனர். 

எந்த முஸ்லிம் மகனும் அந்த அறிக்கையில் கையொபமிட்டிருக்கவில்லை. ஒரு வேளை இலங்கையை சேர்ந்த அமெரிக்கா பிரஜையான அரசியல் பேராசிரியர் இம்தியாஸ்  இலங்கையில் இல்லை , இல்லாவிட்டால் ருத்திரகுமரனின் "தமிழ் ஈழத்துக்கு"  டிதம் எழுதி ஆதரவளித்தது போல் இந்த அறிக்கைக்கும் கையொப்பமிட்டிருப்பார். எப்படியும் மருந்துக்கு தன்னும் ஒரு முஸ்லிம் பிருகிருதி அந்த தமிழ் இனவாத வெறி கமழும் அறிக்கையில் கையொப்பமிட்டிருக்கவில்லை. ஆனால் அந்த அறிக்கையில் பொதுவாகவே  யாரும் கையொப்பம் இட்டிருக்கவில்லை.  தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் சட்டத்திறன் காட்டி "எனக்கு கிடைக்கப்பெற்ற கடிதத்தில் அநேகர் கையெழுத்தாளர்களாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் எவரும் அக்கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கவில்லை "    ஒரு பதிலை சமத்தாக ஆயருக்கு எழுதி இதுவரை ஆயரிடமிருந்து பதிலைக் காணோம்

 
அதற்கு பதிலாக அறிக்கையிடப்பட்டதுபோல் மாற்றாக ஆனால் எட்டு பத்திகளில் மூன்று பத்திகள் தவிர முஸ்லிம்களுக்கு ஐந்து பத்திகளை ஒதுக்கி வடக்கு முஸ்லிம்கள் சார்பில் , குறிப்பாக யாழ் முஸ்லிம்கள் மீள் குடியேற்றம் சார்பில் தமிழர் தரப்பில் , தமிழர்களை சாடி ஒரு அறிக்கை "தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 
 
          
மொத்தத்தில் இந்த அறிக்கையிட்டோரில் குரல் தரவல்லோர் என அறியப்பட்ட நிர்மலா ராஜசிங்கம் பீ பீ  சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் அறிக்கையில் இழையோடியிருந்த கருத்துக்களுக்கு விளக்கமளிக்கும் போது என்று கூட சொல்லலாம். அச் செவ்வியில் பீ பீ சி தமிழோசையின் கேள்வியான வடக்கு தமிழ் தலைமைத்துவம் குறித்த "யாழ்ப்பாணதிலிருந்து வருகின்ற தமிழ் தலைமைகள் முஸ்லிம் நலன்களுக்கு எதிரானவர்கள் என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு உண்டு." என்ற முஸ்லிம்களின் சந்தேகம் பற்றிய கேள்விக்கு அவர் முஸ்லிம் தமிழர்களுக்கு மிடையிலான பிரச்சினைகள் மட்டும் குறித்து பதிலளித்து தமது யாழ்மையவாத நலனை கச்சிதமாக மறைத்து " தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகளும் அரசும் குளிர் காயவும் பிசினஸ் பண்ணவும் பார்க்கிறார்கள்." என வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் பொதுமைப்படுத்தலுடன் இலாவகமாக விடையளித்து இறுதியில் முஸ்லிம்களுக்கு ஒரு நாசூக்கான எச்சரிக்கையை விடுக்கிறார்



அரசியல் தீர்வு என்பது தனித்தனியாக முஸ்லிம்களுக்கு என்றும் தமிழர்களுக்கு என்றும் இல்லை என்பதும் முஸ்லிம்களுக்கு வெட்டி கொடுத்து விடமாட்டார்கள் என்பதும் அதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் அவரின் எச்சரிக்கை , வடக்கு கிழக்கில் தமிழர்களுடன் சேர்ந்தும் பேசியும் அவர் சொன்ன குளிர் காய்கிற பிசினஸ் பண்ணுகிற தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளும் அந்த எச்சரிக்கையை புரிந்து கொள்ள வேண்டும்.. என்று சொல்லாமல் சொல்லியுள்ளார். ஏனென்றால் அந்த பிசினஸ் செய்யும் அரசுடன் டீல் அடிக்கும் முஸ்லிம் தமிழ் அரசியல் கட்சிகள்தான் இப்போது தமக்குள்ளே பேச வேண்டும் என பூர்வாங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்கு அது பிசினஸ் என்று எடுத்துக் கொண்டால் கூட அவர்கள் மக்களிடம் வாக்கு மூல ஆணை பெற்று ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத்துக்கு தெரிவானவர்கள், எவ்வாறு ஆயர் தலைமையிலான தமிழ் சிவில் சமூக அறிக்கையில் தேசியக் கூட்டமைப்புக்கு அரசுடன் விட்டுக்கொடுத்து பேசுவதை எதிர்த்ததோ , அது போலவே போலவே. அரச தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையையும் இந்த தமிழ் புத்தி ஜீவிகளின்  பேச்சாளர் பரிகசிக்கிறார்

இந்த வேண்டுகோளில் -அறிக்கையில்- கிழக்கிலே உள்ள ஓரிருவரே கையொப்பமிட்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கு தமிழ் சிவில் சமூக அறிக்கையிலும் கிழக்கில் சில சாமான்யர்களே ஒப்பமிட்டிருந்தார்கள். மொத்தத்தில் கல்வி கேள்விகளில் பெயர் பெற்ற கலாநிதிகளை பேராசிரியர்களை, மருத்துவ கலாநிதிகளை சட்டத்தரணிகளை கிழக்கில் கையொப்பமிட்டவர்களில் காண முடியவில்லை. அறிக்கையிட்டோர்களில் பெரும்பாலானோர் பிற நாட்டு குடியுரிமை பெற்று மஹிந்த அரசின் பயங்கரவாத வெற்றியின் பின்னர் பிறந்த மண்ணை தரிசித்தவர்கள்.அதிலும் ஒரு சிலர் முன்னாள் புலிகளின் பிதா மகர்கள் . அதிகமானோர் ஒரே குடுபத்தை சேர்ந்தோர் ( அவர்களை பலர் அடையாளம் கண்டு கொண்டிருப்பார்கள்)

ஆனால் இந்த அறிக்கையில் கிழக்கில் முஸ்லிம் கிராமங்களில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் குறித்து ஏதும் சொல்லப்படவில்லை. ஒருவேளை இப்போது அவர்களுக்கு அக்கறையுள்ள விவகாரம் யாழ் திரும்பும் முஸ்லிம்கள் பற்றியது. முஸ்லிம் விவகாரத்தை அங்குள்ள தேசிய வாத தமிழ் சிவில் சமூகத்துக்கு சொல்ல ஆளில்லை என்பதால் தாமே தமிழர்களில் முஸ்லிம்கள் மீது அக்கறையுள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் சிலரும் இந்த அறிக்கையாளர்களில் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை . ஒரு சிலர் நிஜமான அக்கறை கொண்டவர்களும் உண்டு என்பதையும் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும்.

ஆயினும் இந்த அறிக்கை குழுவில் இருப்பர்களில் சிலர் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செல்லப் பிள்ளைகள் , கலாநிதி குமார் டேவிட் , இக்குழுவின் தமிழோசை பேச்சாளர் ஆகியோர் இலங்கையில் ஆட்சி மாற்றம் எகிப்துப் போல் , இன்ன பிற தேசங்கள் போல் வரவேண்டும் என பகிரங்கமாக எழுதியவர்கள் அல்லது சில கூட்டங்களில் கத்தித் தீர்த்தவர்கள். மஹிந்த போய் பொன்சேகா வந்தால் நிம்மைதி அடைந்திருக்க வேண்டியவர்கள் ! இப்பொது ரணிலையாவது மாற்றி இலங்கையில் சுதந்திர ஜனநாயக ஆட்சி ஏற்படுத்த போராடுவதாகவும்  முஸ்லிம்களுக்கு சார்பாகவும் , தமிழ் தேசியக் கூட்டமைப்பை எதிர்ப்பதாகவும் கூறிக் கொண்டு இனப் பிரச்சினைக் காண தீர்வு என்று கூறி பிரச்சனைகளை குவித்து பூதாகரப் படுத்துபவர்கள், பிரச்சனைகளை மீண்டும் உருவாக்கி தீர்வு வேண்டும் என்று நடைமுறை நாளாந்த பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி தமது "திட்டமிட்ட"  தீர்வு தேட முஸ்லிம்களை துனைக்கழைப்பவர்கள்.

கிழக்கிலே கள்ளியங்காட்டு பள்ளிவாசல் தமிழ் அரச  நிருவாக மையங்களின் விரோதப் போக்குகளால் அடாத்தாக கபளீகரம் செய்யப்பட்டு  இந்துக் கோவிலாக மாற்றப்பட்டு இருக்கின்ற சூழலில் யாழிலே பல பள்ளிகள் இன்னும் அழிந்தாயினும் அடையாளத்துடன் நிற்கின்ற சூழலில் அங்கு மீள் குடியேற தடையை ஏற்படுத்தும் உங்களின் சகோதர்களை -நிர்வாக மையத்தில் - கல்வி ஸ்தாபனத்தில் , சிவில் சமூக நிறுவனங்களில் வைத்துக் கொண்டு சுய குற்றம் சுமத்தும் நீங்கள் , அவ்வாறான மையங்களில் நிறுவனங்களில் அங்கத்துவம் வகிக்கும் உங்களின் சகோதர்களை உங்களைப் போல் மவுனம் கலைத்து சுய விசாரணையும் விமர்சமும் செய்ய சொல்ல வேண்டிய தேவை உண்டு . ஆனால் உங்களின் எண்ணிக்கையை விட அந்த குறும் தமிழ் தேசியவாத புத்திஜீவிகள் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் . அவர்களை அசைத்துப் பாருங்கள். அரசுடன் "டீல்"   அடிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அறிக்கை போர் செய்வோர் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் ! வடக்கு கிழக்கில்   மீண்டும் முஸ்லிம் மக்களை எந்த தீர்வு வேள்வியிலும் ஆகுதியாக்கி விடாதீர்கள் . அவர்கள் உங்களை எங்களுக்காக போராடுங்கள் என்று கேட்கவில்லை. கேட்கவும் தேவையில்லை . உங்களை நீங்களே சுய விமர்சனம் செய்து உங்களின் சமூகத்தினையும் சுய விசாரணை செய்பவர்களாக மாற்றுங்கள்!  ஆட்சி மாற்றம் செய்வதற்காக உங்களின் சுய வக்கிரமான தேசிய வாத தீர்வுகளுக்காக  முஸ்லிம்களை பகடைக் காயாக்கி விடாதீர்கள்.   




புலிகளின் காட்டுத் தர்பார் சூழலிலும் யாழ் முஸ்லிம் பிரமுகர்கள் ஒரு கூட்டறிக்கையினை 20 /7/1997 அன்று பகிரங்கமாக வெளியிட்ட போது ஒரு தமிழ் அரசியல் கட்சியும் சிவில் சமூகமும் (இப்போது அறிக்கையிடுவோர்கள் உட்பட உள்நாட்டிலோ வெளி நாட்டிலோ ) அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. ஈ பீ ஆர் எல்ப் இயக்கம் மட்டும் அன்று அவர்களை வரவேற்பதாக கூறியது. அந்த அறிக்கையின் இறுதியில் பின்வரும் வேண்டுகோளை யாழ் முஸ்லிம்கள் விடுத்திருந்தனர். 

யாழ் முஸ்லிம்கல் சார்பில் இறுதியாக நாட்டில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் .வட பகுதியில் தமிழ் மக்கள் இயல்பான வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு அரசும் தமிழ் கட்சிகளும் இயக்கங்களும் வழி சமைக்க வேண்டும் . அப்போதுதான் அங்கு சென்று  முஸ்லிம்கள் நிம்மதியாக இன ஐக்கியத்துடன் வாழ முடியும் அதுவரை வடபகுதி முஸ்லிம்களுக்கு உங்களால் இயலக் கூடிய உதவி ஒத்தாசைகளை வழங்குங்கள் ஆனால் கிழக்கில் தமிழர் முஸ்லிம்களுக்கிடையே ஏற்பட்டுள்ள இன விரிசலை போன்று வடக்கிலும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். தமிழர் -முஸ்லிம் மீண்டும் இன ஐக்கியம் சீர் குலைய இடமளிக்க வேண்டாம் . யாழ் முஸ்லிம்கள் அங்குள்ள தமிழ் மக்களுடன் ஒட்டி வாழவே விரும்புகிறார்களே ஒழிய வெட்டி வாழ விரும்பவில்லை !. எமது தாயகமும் வடக்கே !

அது மாத்திரமின்று இருபத்தியைந்து யாழ் முஸ்லிம் குடும்பங்கள் பரீட்சார்த்தமாக மீண்டும் குடியேற முடியுமா  என்று யாழ் சென்று , அதற்கான சூழல் நிலவினால் படிப்படியாக திரும்பி தமது இடங்களை புனரமைப்பது பற்றிய பல திட்டங்களுடன் சென்ற போதும எந்த காத்திரமான ஆதரவையும்  கற்றறிந்த தமிழ் சிவில் சமூகம் வழங்கியாதா என்ற கேள்வியும் சேர்த்து சுய விசாரணைகளில் நீங்கள் உங்களின் காலத்தை கழியுங்கள், இலங்கை அரசின் உதவியுடன் நல்ல பல தமிழ் உள்ளூர் மக்களின் அனுசரணையுடன் யாழ் மீண்டும் முஸ்லிம்களை உள்வாங்கும் மனநிலையை பெற்றுவிடும் காலம் வெகு தூரத்திலில்லை.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...