“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா!” தொடர்: பன்னிரெண்டு



எஸ்.எம்.எம்.பஷீர் 

ஒவ்வொரு நட்பின் பின்னாலும் சில சுய அக்கறை இருக்கிறது. சுய அக்கறையின்றி நட்பில்லை . இது ஒரு கசப்பான  உண்மை - சாணக்கியன்

There is some self-interest behind every friendship.   There is no Friendship without self-interests. This is a bitter truth.” 
Chanakya )
 பேராளர்களும்” “ போராளிகளும்”! 
முஸ்லிம் காங்கிரஸ் கட்சின் "போராளிள் " என்று சொல்லப்பட்ட நிசாம் காரியப்பர் பின்னாளில் பேராளர்கள் என்று சொல்லப்பட்டவர்களால் திட்டமிட்ட வகையில் ஓரங்கட்டப்பட்டார்.
முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சியாக தன்னை , அதன் ஆறாவது மாநாட்டில்கொழும்பில் பாஷா  விழாவில் 29/11/1986 பிரகடனப்படுத்தி சில மாதங்களில் பிரதேசிய  சபைகளுக்கான தேர்தல்களை நடத்த அரசு பிரகடனப்படுத்தியது. முஸ்லிம் காங்கிரஸ் ஆரசியல் அங்கீகாரம் பெற்ற கட்சியாக 11ம் திகதி மாசி மாதம் 1988ஆம் ஆண்டு  சட்டபூர்வமாக பிரகடனப்படுத்த முன்னரே அந்த தேர்தலில் சுயேட்சை குழுவாக பங்குபற்ற முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்தனர்.   


முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாக சம்பிரதாய பூர்வமாக  நவம்பர் மாதம்  1987ஆம் ஆண்டு அறிவித்து  சுமார் ஐந்து மாதத்தின் பின்னர் பிரதேசிய சபை தேர்தல்கள் நடத்துவதற்கான அறிவித்தல் வெளியானதும முஸ்லிம் காங்கிரஸ் தனது தேர்தல் விண்ணப்பங்களை கிழக்கில் சில இடங்களில் சமர்ப்பித்தனர்.  
1987  பிரதேச சபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டபோது கிழக்கில் நிலவிய பயங்கரவாத சூழலில் தேர்தலில் போட்டியிடுவதா என்ற கேள்வி எழுந்தபோது கிழக்கின்  மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் சேகு தாவூத் பசீர் முஸ்லிம்கள் என்று ஒரு தனி இனமோ அல்லது சமூக அரசியல் அபிலாசையுள்ள , சுயநிர்ணய உரிமை உள்ள முஸ்லிம் சமூகமோ இலங்கையில் இல்லை என்றும் முஸ்லிம்கள் தமிழர்கள் அனைவரும் ஈழவர் எனும் இனம் என்றும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட  காலகட்டத்தில் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அப்போது முஸ்லிம் காங்கிரஸ் என்றால் என்னவென்று நன்கு அறிந்திருக்காதபோது , அதனுடன் எத்தகைய தொடர்பும் கொண்டிராத போது அன்று முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப உறுப்பினராகவிருந்த துடிப்புள்ள இளைஞரான நிசாம் காரியப்பர்   12/4/1987 ஆம் திகதி அட்டாளைச்சேனையில் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளரின் வீட்டில் கூடிய முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுக் கூட்டத்தில் பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று நியாயப்படுத்தி பேசியவர். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகால சவால்களை எதிர்கொண்ட காரியப்பர் அஸ்ரபின் மறைவோடு முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கும் அவருக்கு துதிபாடும் பங்காளிகளால் திட்டமிட்டு ஓரம் கட்டப்பட்டார். மேலும் சிலர் அவ்வாறு ஓரங்கட்டப்பட்டனர். ஆயினும் அவர்களில் நிசாம் காரியப்பர் மிக முக்கியமானவர் . கிழக்கில் தமக்கு எதிராக வேறு யாரும் சுயாதீனமாக கருத்துரைப்பவர்கள் ஆளுமை கொண்டவர்கள் , கட்சியின் ஆரம்ப முக்கிய செயற்பாட்டாளர்கள் தங்களின் முக்கியத்துவத்தை இழக்கும் வகையில் செயற்பட்டதனால் தான் அதாவுல்லா போன்றோரும் கட்சியை விட்டு வெளியேறி தங்களுக்கென கட்சி அமைப்பதோ அல்லது வேறு கட்சியில் இணைவதோ செய்ய நேரிட்டது.  
சரி ஏன் எது பற்றி இப்போது சொல்ல வேண்டி இருக்கிறதென்றால் இவர்களின் அரசியல் என்பதும் எப்போதும்போல் ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி கண்ணே ! என்ற பாணியில் தான் இருந்து வந்திருக்கிறது.


அந்த பிரதேச சபைத்  தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஓட்டமாவடி பிரதேச சபையில் மறைந்த புஹாரி விதானை தலைவராகவும் , மற்றும் ஓட்டமாவடி  எல்.எம் ஷரிப்  பிரதித் தலைவராகவும் போட்டியின்றி ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் பின்னர் புலிகளால் கொல்லப்பட்டனர். அதில் புஹாரி விதானையை இந்திய அமைதிப்படையுடன் சமூக தொடர்பாடல்களுக்காக கொண்டிருந்த தொடர்புகள் காரணமாக புலிகள் சந்தேகித்து அவரை கடத்தி கொன்றனர். ஷரிப் அலி புலிகளின் நண்பராக செயற்பட்டு அவர்களின் தொப்பிக்கல முகாமில் சிலநாட்கள் அவர்களின் விருந்தாளியாக தங்கியிருந்தவர் , புலிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்தவர் .  ஆனால் புலிகள் அவரை எவ்வித வெளிப்படையான காரணமுமின்றி கடத்திக் கொன்றனர்

முஸ்லிம் காங்கிரசை பொறுத்தவரை மறைந்த பிரேமதாசா எத்தகைய செல்வாக்கை  அக்கட்சி மீது செலுத்தினார் என்பதும் அதனால் முஸ்லிம் காங்கிரஸ் தனது சுயாதீன செயற்பாட்டுத் தன்மையை இழக்க வேண்டிய சூழல் இருந்தது என்பதற்கும் பல சம்பவங்களை குறிப்பிடலாம் ஆயினும் அவற்றில் முக்கியமான சம்பவங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தலில் ஹிஸ்புல்லாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு தடையாக பிரேமதாசா இருந்தார் என்பதாகும்
சிங்கள கொவிகம சமூக ஆதிக்க அரசியலில் அடிமட்ட மக்களின் செல்வாக்கை தளமாகக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் தனக்கு எதிராக கட்சிக்குள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முனைந்த லலித் அத்துலத் முதலியை புறந்தள்ளி அவருன் கூட்டு சேர்ந்து

தன்னை எதிர்த்து நின்ற  காமினி திஸ்ஸனாயகாவையும் புறந்தள்ளி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி ஈட்டியவர் பிரேமதாசா. ஜனாதிபதி தேர்தல் தயாரிப்புக்களில்  புலிகளை இந்திய எதிர்ப்பு மூலம் கைக்குள் போட்டுக்கொண்டது போலவே முஸ்லிம் காங்கிரசை வெட்டுப் புள்ளியை கொண்டு கைக்குள் போட்டுக் கொண்டார் பிரேமதாசா .
 இந்தியப் படைகளை வெளியேற்றுவதன் மூலம் புலிகளை நல்ல பிள்ளைகளாக்கி விடலாம் என்ற நப்பாசை பிரேமதாசாவுக்கிருந்தது இந்தியப் படைகளை கொண்டுவந்த அதே ஐக்கிய தேசிய கட்சியின் மூலமே இந்தியப்படைகளை வெளியேற்றுவதில் புலிகள் பிரேமதாசாவை பயன்படுத்திக் கொண்டனர் . புலிகளுடன் உறவைப் பேணி அவர்களுக்கு ஆயுதமும் வழங்கி அரச திறைசேரியிலிருந்து பல மில்லியன் ரூபாய்களை கூட வழங்கி  , இறுதில் புலிகளுக்கே அவர் போஷனமாகிப் போனார் . புலிகளை ஜனநாயக வழியில் அரசியலில் ஈடுபடுத்த அவர்களுக்கென ஒரு அரசியல் கட்சியையும் பதிவு செய்து கொடுத்தார் . எப்படியும் ஜனாதிபதி ஆவது ஒன்றே அவரின் ஒரே ஒரு கனவாக இருந்தது . தனக்கு கிடைத்த கட்சியின் சிரேஷ்ட அந்தஸ்தையும் , மேட்டுக்குடி சிங்கள ஆதிக்கத்திற்கெதிரான நாட்டுப்புற அரசியல் தலைமைகளின் ஆதரவையும் பெறுவதில் வெற்றிகண்டிருந்தாலும் , முஸ்லிம் காங்கிரசின் மாகான சபை தேர்தல் வெற்றி அவரை முஸ்லிம் காங்கிரசினை தம் பக்கம் வைத்துக்கொள்ளும் தேவையை ஏற்படுத்தியது. மொத்தமாக வட கிழக்கு தமிழ் முஸ்லிம் வாக்குகள் உறுதி செய்யப்படவேண்டிய தேவையில் அவர் இருந்தார் . எனவேதான் சிறிமாவுடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதில் வெற்றி கண்டிருந்த வேளையில் அவர்களை தம் பக்கம் இழுக்க, வட கிழக்கில் , தமிழ் அரசியல் பலத்திற் கெதிராக , தனித்துவ முஸ்லிம் அரசியல் சம காலத்தில் பலப்பட வேண்டிய தேவையை நன்கு உணர்ந்து கொண்ட பிரேமதாசா முஸ்லிம் காங்கிரசுக்கு முன்வந்து வழங்கிய தூண்டில் இரைதான் வெட்டுப்புள்ளி குறைப்பு.

புலிகளுக்கு வாங்கிய வாக்குறுதியையும் மிகத் தீவிரமாக செயற்படுத்த பிரேமதாசா முயற்சித்தார்.    11/07/1989 ஆம் திகதி எழுதிய இந்திய பிரதமருக்கு பிரேமதாசா எழுதிய கடிதத்தில்
ஒரு நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக விளங்கும் அரசுத் தலைவருடைய கட்டளைகளை ஏற்றுக் கொள்ளாத அந்நிய நாட்டு ஆயுதப்படை ஒன்று அந்த நாட்டின் ஆட்புல எல்லைக்குள் இயங்குவதற்கு உரிமை அளிப்பதாவது அந்நாட்டின் இறைமையோடு முரண்படுவதாக அமையும் என்றும்  மேலும்  4/7/1989 ஆம் திகதியன்று இந்திய பிரேமதருக்கு பிரேமதாசா அனுப்பிய ரேலக்ஸ்சில்  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இதுவரை தீர்க்கப்படாதுள்ள பிரச்சனைகளை பேச்சு வார்த்தைகளின் மூலமும் கலந்துரையாடல்களின் மூலமும் தீர்த்துக் கொள்ள திடசங்கற்பம் பூண்டுள்ளனர் என்பதையும் சனநாயக வழிக்கு வர அவர்கள் ஆயத்தமாக இருக்கின்றனர் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதிலிருந்து புலிகள் மீது அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அல்லது புலிகள் அவர் தங்கள் மீது அப்படியான நம்பிக்கை கொள்ளுமளவு அவருடன் நெருக்கமாக செயற்பட்டனர். சமாதான பேச்சுவார்த்தைகள் ஒரு புறம் நடைபெற்றபோது மறுபுறத்தில் பிரேமதாசாவின் அலுவலகத்தில் பாபு எனும் ஆளை வைத்தே புலிகள் தமது திட்டத்தை படிப்படியாக செயற்படுத்தி அவரை துண்டும் துகளுமாக்கி கொன்றனர். புலிகளுக்கும் பிரேமதாசாவுக்கும் உறவு முறிந்த போது புலிகள் பிரேமதாசாவை கொல்ல வகுத்த திட்டம்  1993 ஆம் ஆண்டு மே முதல் திகதியுடன் நிறைவேறியது. 
பிரேமதாசாவுக்கும் முன்னாள் தேசிய பாதுகாப்பு அமைச்சர் மறைந்த லலித் அதுலத் முதலிக்கும் இடையில் தொடர்ந்த உட்கட்சி முரண் லலித் அதுலத் முதலி தலைமையில் பிரேமதாசாவுக் கெதிரான உட்கட்சி ஆதரவாளர்களுடன் இறுதியில் நம்பிக்கை இல்லா பிரேரணையாக பிரேமதாசாவின் அதிகார துஸ்பிரயோகம், ஊழல் , திறனின்மை என்ற குற்றச்சாட்டுக்களை வைத்து நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.  

அந்த பிரேரணைக் கெதிராக அஸ்ரப் வழங்கிய ஆதரவு பற்றி முன்னர் குறிப்பிட்டேன்.தெற்கில் அதிகளவில் ஜே வீ பீ. இளைஞர்களை கொன்று குவித்த காலமது ஜே வீ பியினரின் விதைகளை நசுக்கி விடுங்கள்  (crush their balls)  என்று பிரேமதாசா பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டதாக சிறந்த , நம்பகத்தன்மை கொண்ட பிரபல சர்வதேச எழுத்தாளர் தனது நூலொன்றில் குறிப்பிட்டிருந்தார்.  பிரேமதாசாவை கொண்டே  புலிகள் பிடித்து வைத்திருந்த தமது கட்சி ஆதரவாளர்களை கூட  புலிகளுக்கும் பிரேமதாசாவுக்கும் இடையே நிலவிய தேன்நிலவு காலத்தில் முஸ்லிம் காங்கிரசால் விடுவிக்க முடிந்த நேரம்.  புலி -பிரேமா தேனிலவு முறிந்த காலகட்டத்தில் கிழக்கில் முஸ்லிம்கள் கூட புலிகளின் கொலைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் பிரேமதாசாவால் கைவிடப்பட்ட நேரம் , ஊழலும் அதிகார துஸ்பிரயோகமும் ஆட்கொண்டிருந்த காலத்தில் அஸ்ரப் பிரேமதாசாவுக்கு ஆதரவளித்து மட்டுமல்ல பின்னர் அவர்களின் கட்சி மாநாட்டு சுவரொட்டிகளிலும் அஸ்ரபின் புகைப்படத்துக்கு பக்கத்தில் பிரேமதாசாவின் புகைப்படத்தையும் சேர்த்து அச்சிட்டு பிரசுரிக்கவும் தீர்மானம் எடுக்குமளவு கட்சி பிரேமதாசாவின் புகழ் பாடுபவர்களாகவும் அவரை குஷிப்படுத்துபர்களாகவும் இருந்துள்ளனர்

மரணத்திலும் மறக்காத பகை

லலித் அதுலத் முதலி கொல்லப்பட்டவுடன் அவரின் சடலத்துக்கு மரியாதையை செய்ய சென்ற பிரேமதாசவையும் அவரின் சகபாடிகளையும் லலித் அதுலத் முதலியின் குடும்பத்தினர் அனுமதியளிக்கவில்லை  அதற்கான காரணங்களில் ஒன்று லலித்தை ் பிரேமதாசாவே  கொன்றிருக்கலாம் என  ஒரு சில ஊடக செய்திகளாக , பரந்துபட்ட வதந்திகளாக வெளிவந்த  செய்திகளாகும் என்பதுமட்டுமல்ல அவர்கள் இருவருக்குமிடையே இருந்த பகைமை அத்தகையதாகவிருந்ததுமாகும். லலித்தின் ஒரு  பிரித்தானிய ஆங்கிலேய நண்பரும் ( புரூஸ் பேளிங்) அவ்வாறே கருதினார்.  அதை அவர் எழுதக் கூட செய்தார்  .ஆனால் புலிகள் எப்போதுமே தமது எதிரி (களு)க்கு   எதிரி(கள்) இருக்கும் சூழ்நிலையில் தமது பழிவாங்கலை செய்து, அதன் மூலம் தமது எதிரியையும் பழிவாங்கி பழியும் பாவமும் அந்த எதிரியின் எதிரிக்கு சென்றடைவதில் கவனமாகவிருந்தனர். அதற்கேற்பவே காலத்தையும் சந்தர்ப்பங்களையும் தெரிந்து கொண்டு திட்டங்களை வகுத்தனர். ஆயினும் புலிகளின் ஆதரவாளர்கள் புத்திஜீவிகள் அவ்வாறான கொலைகள் குறித்து புலம் பெயர் தேசங்களில் மகிழ்ச்சியுடன் புலிகளுக்கு புகழாரம் சூடுவதும் பல சந்தர்ப்பங்களில் நடந்தேறியிருக்கிறது.  லலித் கொல்லப்பட்டதும் அதற்கான தமது பக்க நியாயத்தை புலி ஆதரவு இலண்டன் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று சூட்சுமமாக எழுதியிருந்தது.   

பிரேமதாசா லலித் அதுலத் முதலின் வீட்டிற்கு அவரின் இறுதிச் சடங்கிற்கு சென்ற பிரேமதாசாவை எப்படி லலித்தின் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லையோ ( அதற்கான காரணங்கள் வேறு விதமாக இருப்பினும் , ) அதையொத்த சூழ்நிலை 2000   ஆம் அஸ்ரபுடன் சேர்ந்து அஸ்ரப் தொடக்கி வைத்த இனவாத கட்சி அடையாளத்துக் கெதிராக மாற்றாக உருவாக்கப்பட்ட தேசிய ஐக்கிய கூட்டணியில் (நு ஆ ) மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு  1989 ஆம் ஆண்டு தேர்தலில் ஹிஸ்புலாவால் ஏமாற்றப்பட்ட  மொஹிதீன் அப்துல் காதரின் மரணச் சடங்கில் கட்டுரையாளர் கலந்து கொண்டபோது ஹிஸ்புல்லா அங்கு வந்தபோது அங்கு கூடியிருந்த மக்களால் அப்துல் காதரின் வீட்டிற்குள் அவரின உடலத்தை காண்பதற்கு அ
னுமதியளிக்கப் படவில்லை.ஹிஸ்புல்லா நையப்புடைக்கப்பட்டார். அங்கிருந்து அவர் திரும்பிச் செல்வதைத் தவிர வேறு வழி அவருக்கிருக்கவில்லை. ஹிஸ்புல்லாவை அஸ்ரப் தன்னோடு இணைத்து கொண்டிருந்தாலும் , பல வருடங்களின் பின்னர் சுமார் பத்தாண்டுகளின் பின்னரே முஸ்லிம் காங்கிரஸ் நு ஆ ( NUA-National Unity Alliance) மூலம் மட்டக்களப்பு தொகுதியில் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் அல்லது நு ஆ எனும் தமது சகோதர கட்சி மூலம் ஒரு உறுப்பினரை , அதுவும் அப்துல் காதரை பெற முடிந்தது.                  

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரபையும்  புலிகள் கொல்ல  முற்பட்ட சந்தர்ப்பங்கள் தவறிவிட்டதால் ( அது பற்றி வேறோ ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாக பார்ப்போம்) தமது நீண்ட நாள் திட்டத்தின்படி மெதுவாக கட்சிக்குள் உட்பட்டு அஸ்ரபை கொல்வதே  சாத்தியம் என்ற செயற்திட்டத்தில் புலிகளுக்கு பலிக்கடாக்கள் தேவைப்பட்ட போதுதான் அஸ்ரபுக்கும் சந்திரிகாவுக்கும் இடையில் அரசியல் முரண்பாடு ஏற்பட்டதுசந்திரிக்காவுக்கும் அஸ்ரபுக்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் சச்சரவை பயன்படுத்திஅவர் பயணம் செய்த ஹெலி கொப்டரையே தற்கொலை குண்டுதாரி மூலம் நடுவானில் தகர்த்தனர். இப்போது கொன்றது யார் என்ற ஊகம் எழுந்த போது இலகுவில் அது சந்திரிக்கா அரசின் வேலை என்று சேகு தாவூத் மேடைகளில் முழங்கி ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்கு பெற்றார்புலிகளின் திட்டமும் இலகுவாக பலி பாவத்தை  சந்திரிக்கா அரசின் மீது சுமத்த முடிந்தது. அஸ்ரபின் அகால மரணம் பற்றி  பத்திரிக்கையாளர் ஒருவர் புலிகளின் சமாதான செயலகத்தின் பேச்சாளரான புலித் தேவனிடம் கேட்டபோது அவர் அஸ்ரபுக்கும் சந்திரிக்காவிற்கும்  இடையே நிலவிய முரண்பாடு பற்றி குறிப்பிட்டு , அக் கொலைக்கான காரணத்தை நீங்களே புரிந்து கொல்லுங்கள என்று கூறிவிட்டார்.

ஆனால் அஸ்ரபை கொன்றவர்கள் புலிகள்தான் என்பதை அறிந்தும் அதனை செய்தது புலிகள்தான் என்று வெளிப்படையாக சொல்வதற்கே  முதுகெழும்பில்லாதவர்களை அஸ்ரபும் தனது கட்சியில் நம்பியிருந்திருக்கிறார் என்பது துரதிஷ்டமானதே.

தொடரும் ..



No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...