கள்ளியங்காட்டு க (தை)தா நாயகன் பித்தன் ஷா (கலந்தர் லெப்பை முஹம்மது ஷா ( 31. 07.1921 – 15.12.1994): ஒரு நினைவோட்டம்

எஸ்.எம்.எம்.பஷீர்

 

உண்மையும் உருவமற்றுப் போய்விட்டதோ? எல்லாமே பைத்தியக்காரத்தனம் சீ…!”-  பித்தன்    (பாதிக் குழந்தை)

மட்டக்களப்பு கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனியில் வாழ்ந்து , உள்நாட்டில் ஏதிலியாகி அங்கேயுள்ள முஸ்லிம் மையவாடியில் அடக்கப்பட்ட (கிழக்கிலங்கையின் சிறு கதை இலக்கிய முன்னோடியான மறைந்த பித்தன் ஷா மரணித்து இன்றுடன்  பதினேழு   வருடங்களாகின்றன. கள்ளியங்காட்டு கிராமத்தின் உயிர்நாடியாய் திகழ்ந்த கிழக்கின் முஸ்லிம் சிறுகதை இலக்கிய பிதாமகனை   கள்ளியங்காடு முஸ்லிம் மக்களின் பள்ளிவாயலும் இறுதியாய் இழந்து போன இன்றைய நிகழ்வுகளை நினைவில்  கொண்டு நினவு கூர்கிறேன்  )

கிழக்கிலங்கையின் மூத்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவரான கலந்தர் லெப்பை மீராஷா தனது இயற்பெயரால் அறியப்பட்டதைவிட  தானே தனக்கு சூட்டிக்கொண்ட  பித்தன் ஷா எனும் அடைமொழிப் பெயருடன்தான் அதிகம் தமிழ் இலக்கியப்பரப்பில் நன்கு அறியப்பட்டவர்.

 

அறுபதுகளின் ஆரம்பத்தில் கோட்டமுனையிலிருந்து சென்று கள்ளியங்காட்டில் குடியேறியவர்களுள் அவரின் குடும்பத்தினர்களும் அடங்குவர். அவரோடு சென்ற பலரின் இன மத பிரசன்னம் காரணமாகவே  அங்கு முஸ்லிம் கொலனி உருவானது. அந்த வகையில் கள்ளியங்காட்டின் ஒரு பகுதியை முஸ்லிம் கொலனி என்றும் கள்ளியங்காட்டின் மறு பெயரே முஸ்லிம் கொலனி என்று  அறியப்படுமளவு வாழ்ந்த சமூகத்தில் ஏழ்மையிலும் பெருமைப்பட வாழ்ந்த மறைந்த மனிதர் பித்தன் ஷா. அங்கிருந்த சாகிரா கல்லூரி, மஸ்ஜிதுல் பிர்தவுஸ்  (பள்ளிவாயல்) என சமூக நிறுவனங்கள்  அனைத்திலும் அவரின் ஈடுபாடு இறுக்கமாக  படர்ந்திருந்தது.

பித்தன் ஷா மட்டக்களப்பின்  முன்னோடி சிறுகதை எழுத்தாளராக  போற்றப்படுபவர். அவரினை எண்பதுகளின் பிற்பகுதியில் ஓரிரு தடவை தற்செயலாக சந்தித்த நினைவுகள் பசுமையாக உண்டு . மிக நேர்த்தியாக தலைவாரிய நீண்ட மெலிந்த தோற்றமும் எப்போதும்  சுத்தமான வெள்ளைநிற மேற்சட்டை அணிந்துகொள்ளும் அவரின் தனித்துவமும் , எப்போது சட்டைப்பைக்குள் எட்டிப்பார்க்கும் கண்ணாடியை முந்திக்கொண்டு   முகமன் கூறி குசலம் விசாரிக்கும் பண்பும் அவர் அதிகம் பேசும் சுபாவம் கொண்டவரல்ல என்பதால் பேசும் சூழ்நிலை ஏற்படவில்லை என்பது தவிர அவரின் நினைவுகள் இன்னமும் மனதில் நன்கு பதிந்திருக்கிறது.

இளம் வயதில் தனது ஜே எஸ்,சி பரீட்சையில் சித்தியடத் தவறியதுடன் தனது இளமை கலை ஆர்வம் காரணமாக யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தனது பதினெட்டாவது வயதில் வீட்டைவிட்டு தென்னிந்தியா சென்று அங்கு சென்னையில் ஸ்டார் பிரஸ் எனும் அச்சகத்தில் ஒரு காரியாலய பையனாக வேலை செய்த போதுதான்  புதுமைப்பித்தன்  எனும் புனைபெயர் கொண்ட மணிக்கொடிக்கால எழுத்தாளரான சொ. விருத்தாசலம் எனும் (ஏப்ரல் 25, 1906 - மே 5, 1948) தமிழ் சிறுகதை இலக்கிய வேந்தனை சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. மேலும் பல இந்திய எழுத்தாளர்களுடனும் நட்புறவு கொள்ளும் வாய்ப்பும் இங்கு இவருக்கு ஏற்பட்டது. எனினும் புதமைப்பித்தனின் எழுத்து மீது ஏற்பட்ட ஈர்ப்பு , அவரை நேரடியாக சந்திக்கும் பொது அவரின் பண்பில் கண்ட பிரமிப்பு என்பன அவருடன் இவரை நெருக்கமாக்கின. வறுமையிலும் கொள்கை பிடிப்புடன் தலைசாய்க்காது இலக்கியம் படைத்த மாண்பு என்பன பித்தன் ஷாவின் பண்புகளாக அடையாளம் காணப்பட்டன. வறுமைக்கு அசைந்து கொடுக்காத வைராக்கியம் இருவரிடமும் இருந்தது. புதுமைப்பித்தனுக்கும் பித்தன் ஷாவுக்கும் உள்ள சிறுகதை இலக்கிய கற்றல் என்பது  துரோணர் ஏகலைவன் கொண்ட மானசீக குரு சிஷ்ய உறவோ கொடூரமான குருதட்சனையோ கொண்டதல்ல .மாறாக நட்புடனும் மனித நேய எழுத்துக்களுடனும் ஈர்க்கப்பட்ட பின்பற்றல் காரணமாய் புதுமைப்பித்தனைப்போல் எழுத முனைந்தவர் .  அதில் வெற்றியும் பெற்றவர்.

 

அதனால்தான் முன்னாள் தினபதி சிந்தாமானி பத்திரிக்கைகளின் ஆசிரியர் எஸ் .டி சிவநாயகத்தால்  , அவர் தினகரன் பத்திரிக்கையில் பணியாற்றிய காலத்தில் பித்தன் ஷா எழுதிய "கலைஞனின் தியாகம்" எனும்  முதற் சிறுகதை பிரசுரிக்கப்பட்ட போது , அக்கதை பற்றி குறிப்பிடுகையில்" தமிழகத்தின் புதுமைப்பித்தன் இறந்து விட்டான் . இனி நம் இலங்கையில் ஒரு பித்தன் பிறந்து விட்டான் " என்று கூறியது பித்தன் ஷாவுக்கு மட்டக்களப்பின் புகழ்பூத்த பத்திரிக்கையாளன் எஸ்.டி சிவநாயகம்  வழங்கிய மோதிரக் குட்டுத்தான்.

 

பித்தன் ஷா இந்தியாவிலிருந்த போதே அங்கு இராணுவத்தில் சேர்ந்து இரண்டாம் உலக யுத்த போரில் இந்தியாவிலிருந்த சென்ற படையணியுடன் பயணித்து மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக எகிப்து , பாலஸ்தீன் உட்பட பல நாடுகளில் பணியாற்றி பதவி உயர்வுகளும் பெற்று இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றே 1947 லில் இலங்கை திரும்பினார். உலக யுத்தத்தில் உலகின் பல தேசங்கள் சென்று திரும்பியும் தனது சூழலில் வாழும் மக்களின் வாழ்க்கையை அவர்களின் நாளாந்த வாழ்வின் துயரங்களை ஏழ்மையின் அவலங்களை , தமது சமூகத்துள் நிலவும் வர்க்க முரண்பாடுகளின் கொடுமைகளை பகைப்புலனாக  சிறுகதைகளை படைக்கத் தொடங்கினார். 

இவர் இலங்கை திரும்பியதும் பல்வேறு விதமான சிறு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அவரால் ஒரு வெற்றிகர வியாபாரியாக வரமுடியவில்லை . இயல்பாகவே இவருக்கு எழுத்து மீதான ஆர்வம் மேலிட அவரின் இளமைக் கால நண்பர்களாகவிருந்த பலர் காரணமாகும். முன்னாள் அமைச்சர் சொல்லின் செல்வர் செல்லையா இராஜதுரை , பிரபல ஓவியர் சமூக சேவகர் , மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலை துணை அதிபர் மறைந்த எம்.எஸ்.ஏ .அசீஸ் ஆகியோருடன் சேர்ந்து லங்கா முரசு எனும் சஞ்சிகையினை 1949 களில்  வெளியிட்டு வந்ததும் இவரின் எழுத்து துறை மீதான ஆர்வத்தை காட்டுகின்றன. கவிஞர் திமிலைத்துமிலன் எஸ் டி சிவநாயகம் , செழியன் பேரின்பநாயகம் என பலரின் இலக்கிய நட்பின் காரணமாக வேல்மானிக்கம் எனும் இலக்கிய ஆர்வமுள்ள தையற்கடைக்காரின் கடையின் மேலுள்ள அறையில் இலக்கிய சந்திப்புக்களை கிராமமாக மேற்கொண்டு பல்வேறு கலை இலக்கிய நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். பின்னர் இவர் இராஜதுரையுடன் சேர்ந்து இளங்கோ அச்சகத்தினை நடத்தியதும், இவர் அரச விரோத பிரசுரங்களை அச்சிடுவதாக இவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதுடன் இவரது அச்சகம் சீல் வைக்கப்பட்டதும் இவரின் பொருளாதார ஆதாரத்தினை ஆட்டம் காணச் செய்தது.

புதுமைப் பித்தன் ஷா எனும் மீராஷாவின்  ‘இருட்டறைஎனும் சிறு கதை க பொ த தமிழ் இலக்கியம் (முன்னாள் பாடத்திட்டத்தில்) உள்ளடக்கப் பட்டிருந்துடன் க பொ த உயர்தர தமிழ் ( முன்னாள் பாடத்திட்டத்தில் ) ஈழத்து இலக்கிய வரலாறு பகுதியில் சிறுகதை எழுத்தாளர்கள் தொகுப்பில் இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது என்பதுடன் இவரை பற்றி மறைந்த பேராசிரியர் கைலாசபதி , இரசிகமணி கனக செந்திநாதன் போன்றோரும் இவரை பற்றி சிலாகித்துள்ளனர். இவர் ஆனந்த விகடன் சிறுகதை போட்டியொன்றில் கலந்து கொண்டு பரிசை பெறாதபோதும் அவரின் சிறுகதை சிறந்த கதை என்ற வகையில் ஆனந்த விகடனில் பிரசுரிக்கப்பட்டது. என்பதும் அவரின் சிறுகதை தரத்தினை கோடிட்டு காட்டுகிறது.

நாற்பதுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய பித்தன் ஷா அபூர்வமாகவே எழுதினார்.  ஒரு ஆண்டுக்கு ஓரிரு சிறுகதைகளையே எழுதினார். அவரின் சிறுகதைகளில் பயங்கரப்பாதை, ஆண் மகன், பாதிக் குழந்தை , அமைதிதாம்பத்தியம் பைத்தியக்காரன் , மயானத்தின் மர்மம் , அறுந்த கயிறு , இருட்டறை , நத்தார் பண்டிகை , சாந்தி , சோதனை, திருவிழா , ஊது குழல் , ஊர்வலம் , தாகம் , ஒரு நாள் பொழுது, மனச் சாந்தி , விடுதலை , தாலிக்கொடி என்பனவற்றை நிரலிட்டு குறிப்பிடலாம்.

இவர் தனது எழுதிய சிறுகதைகள் இலங்கையின் பிரபல தமிழ் பத்திரிக்கைகள் அனைத்திலும் வெளிவந்துள்ளன. அவரின் பல பூர்த்தி செய்யப்படாத , மீண்டும் திருத்தம் நாடி எழுதி வைத்திருந்த பல சிறுகதைப் பிரதிகள் , பிரசுரிக்கப்பட்ட பல கதைகளின் கையெழுத்து , அச்சப் பிரதிகள் என பல அவரின் பெறுமதிமிக்க ஆக்கங்கள் 1978 ஆம் ஆண்டு சூறாவளியில் அவரின் கள்ளியங்காட்டு வீட்டில் அழிந்துவிட்டன. அவரின் கதைகள் பலவற்றை சில  இலக்கிய ஆர்வலர்கள்  அவற்றினை பிரசுரிப்பதாக கூறி எடுத்துச் சென்று விட்டனர் என அவர் தன்னை சந்திக்க வந்த இலங்கையின் இலக்கிய படைப்பாளிகளை அவர்கள் பற்றிய தகவல் திரடடினை  காலச் சுவடு என்ற பெயரில்  தொடராக நூலுருவாக்கிய இலக்கியவாதியும் கல்விமானுமான எஸ்.எச்.எம். ஜெமீலிடம்  (முன்னாள் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சின் ஆலோசகராக பணியாற்றியவர் .)  கூறியுள்ளார் என்பதனை அவர் பற்றி ஜெமீல் எழுதிய காலச்சுவடு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பித்தன் ஷா பற்றிய எனது நேரிடையான அவரின் சகோதரர் பேரப்பிள்ளைகளை அனைவரின் தகவல்கள் பல எஸ்.எச் எம்.ஜெமீலினால் பித்தன் ஷாவை நேரடியாக சில தடவை சந்தித்தவர் என்ற வகையில் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன எனினும் அவர் பற்றிய இன்னும் சில விடயங்கள் அவரை மீண்டும் இலக்கிய உலகின் பதிவுகளுக்காக , அவரின் மானிட நேசிப்புக்காக எழுதப்பட வேண்டிய தேவையை ஏற்படுத்துகின்றன. மறுபுறம் கள்ளியங்காட்டின் முஸ்லிம் கொலனி தோற்றம் பெற தொடக்கப் புள்ளியிட்ட வரலாற்றினை இழந்து நிற்கும் முஸ்லிம் கொலனி மக்களின் கதாநாயகர்களில் முதன்மையான பித்தன் ஷாவின் வரலாற்றை மீட்டிப் பார்க்க வேண்டிய தேவையையும் ஏற்படுத்துகின்றன.

 

கள்ளியங்காட்டில் இன முறுகலுக்கு புலியின் இன விரோத செயற்பாடுகளுக்கு அஞ்சி  1990 ஆம் ஆண்டில் தாமே உருவாக்கிய தனக்கு மிக அன்னியோன்னியமான வாழிடத்தை விட்டும் ஏதிலியாக திகாரிய என்ற கிராமத்துக்கு வந்து அங்கு இடம் பெயர்ந்து வந்த அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அகதி முகாமிலே தனது இறுதிக்காலம் வரை பித்தன் ஷாவுக்கு இருக்க நேரிட்டது. வட புலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தெற்கின் பல பிரதேசங்களில் இடம்பெயர்ந்தும் அகதி முகாம்களில் , அகதிக் கிராமங்களில் வாழ்ந்தது போல் மறுபுறத்தில் கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்களிலிருந்தும் மொத்தமாக கிழக்கிலே வாழ்வது பாதுகாப்பல்ல என்று கருதி தெற்கிலே பலர் இடம்பெயர்ந்தனர். அந்த வகையில் கோட்டமுனை , கள்ளியங்காடு -முஸ்லிம் கொலனி- முஸ்லிம்கள் சிலர் அகதியாகி அந்தரித்து முஸ்லிம் கிராமமான திகாரிய உள்ளிட்ட கம்பஹா மாவட்டத்திலுள்ள பல முஸ்லிம் கிராமங்களுக்கு இடம் பெயர்ந்திருந்தனர். 

புதுமைப் பித்தனின் சிறு கதைகளை பிரசுரிக்க வேண்டும் என்ற ஜெமீல் போன்றோர்  1984 ஆம் ஆண்டில்  ஈடுபட்டபோது அது முடியவில்லை என்று அவர் குறிப்பிடுகிறார். ஆயினும்  ஆம் ஆண்டில் பித்தன் கதைகளை டொமினிக் ஜீவா மேமன் கவி ஆகியோர் முன்னின்று மல்லிகைப் பந்தல் வெளியீடாக 1995 ஆம் ஆண்டு பித்தன் கதைகள் என்ற பெயரில் வெளியிட்டனர். அப்புத்தக வெளியீட்டு முயற்சிகள் நடைபெற்ற காலகட்டத்தில் அவர் திகாரி அகதி முகாமில் இருந்ததார் அவரின் நூல் வெளியிடப்படும் சில நாட்களுக்கு முன்னரே அவர் வைத்தியசாலையிலிருந்து தனது சுய விருப்பின் பேரில் மட்டக்களப்பு திரும்பி அங்கே மரணித்துவிட்டார்.   எனினும் இவர் திகாரிய அகதி முகாமில் இறந்தபோது 1991 ஆம் ஆண்டில் இவரை இலக்கிய வேந்தர் எனும் பட்டமளித்து பணப்பரிசும் வழங்கி முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு கவுரவித்தது. அதுபோலவே  இந்து கலாச்சார அமைச்சராகவிருந்த தேவராஜும் தனது அமைச்சிலே இவரின் இலக்கியப் பணிக்காக இவரை கவுரவித்துள்ளார்.   

 ஆயினும் இறுதிவரை தான் வாழ்ந்த அந்த மண்ணில் உள்ள மையவாடியில் தான் அடக்கப்பட வேண்டும் என்பது அந்த கிராமத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த பித்தன் ஷாவின் இறுதி விருப்பமாக இருந்தது. ராகம வைத்தியசாலையில் சுவாசநோய் காரணமாக சிகிச்சை  பெற்று வந்த போதே தான் மட்டக்களப்புக்கு கொண்டு செல்லப்பட  வேண்டும்; தனது மரணம் நெருங்குகிறது என்பதை உணர்ந்து , தான்  இறந்தால் கள்ளியங்காட்டு மையவாடியில் அடக்கி விடும்படி தனது இளைய சகோதரரிடம் வேண்டிக் கொண்டார். அவ்வாறே மட்டக்களப்பில் -கோட்டமுனையில் - தனது குடும்ப உறவினர்களுடன் தங்கியிருந்த வேளையில் அன்று மரணமாகி கள்ளியங்காட்டிலே உள்ள முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டார். கள்ளியங்காட்டின் முஸ்லிம் கொலனியின்  வரலாற்று கதை நாயகன் இன்றில்லை அவன் முன்னின்று உருவாக்கிய முஸ்லிம் கொலனி கிராமமும் இன்றில்லை . அந்த மனிதனைப் போல பல நூற்றாண்டுகளாய் மட்டக்களப்பில் மரணித்த பலரை உள்வாங்கிய அந்த மையவாடியும் இனி வருங்காலத்தில் அங்கிருக்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை! 

 

பிற குறிப்பு :

இந்த ஆக்கம் பித்தன் ஷா பற்றிய ஒரு சிறு குறிப்பென்றே குறிப்பிடலாம்


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...