எஸ்.வி.ராஜதுரை பல்பரிமாண சமூகப் போராளி-–செ.சண்முகசுந்தரம்

 மிழ்நாட்டின் அறிவுச் சூழலில் மார்க்ஸிய-பெரியாரிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் குறிப்பிடத்தக்கவை. ஆயல் கலை இலக்கியப் பண்பாட்டுக் களம் சார்பாக, வாழ்நாள் சாதனையாளருக்கான ஆயல் விருது எஸ்.வி.ஆருக்கு வழங்கப்படவிருக்கிறது. அவர் ஒரு கம்யூனிஸ்ட், பெரியாரிஸ்ட். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா முழுமைக்குமான ஒரு சிறந்த மனித உரிமைப் போராளி. சுதந்திரத்துக்குப் பிந்தைய தமிழ்நாட்டின் வரலாற்றை அறிந்துகொள்வதற்கு எஸ்.வி.ஆரின் வாழ்க்கையையும் எழுத்துகளையும் ஒருவர் அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இளம் வயதில் திமுகவின் மீது குறிப்பாக ஈ.வெ.கி. சம்பத் மீது எஸ்.வி.ஆர். ஈடுபாடு கொண்டிருந்தார். 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார். எஸ்.வி.ஆர். ஒரு முறை பெரியார் பங்கேற்ற கூட்டத்துக்குத் தலைமைவகித்திருக்கிறார். நிகோலாய் ஆஸ்திரோவ்ஸ்கி எழுதிய ‘வீரம் விளைந்தது’ நாவல்தான் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் ஆக்கியது என அவர் சொல்வதுண்டு. சக மனிதர்களை நேசிப்பவர்களே கம்யூனிஸத்தை நோக்கி வர முடியும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு எஸ்.வி.ஆர்.

தொடர் வாசிப்பு அவரை மேலும் மேலும் இடதுபக்கம் திரும்பச் செய்தது. எஸ்.என்.நாகராஜன், கோவை ஞானி ஆகியோரோடு இணைந்து, கோவையில் சிந்தனையாளர் மன்றத்தைத் தொடங்கி, அதில் தத்துவ உரையாடல்களை மேற்கொண்டார். இதன் நீட்சியாக ‘புதிய தலைமுறை’ மார்க்ஸிய இதழ் தொடங்கப்பட்டது. தீவிர மார்க்ஸிய – லெனினிய கட்சி செயல்பாடுகளில் நுழைந்தார். ‘பரிமாணம்’ இதழிலும் அவர் தொடர்ச்சியாக எழுதினார். ‘இனி’ என்னும் சிறுபத்திரிகையை நடத்தினார். படைப்பிலக்கியத்தில் மிகப் பெரும் ஆளுமையாக வர வேண்டும் என்ற ஆசையும் அவருக்கு இருந்தது. ‘மனோ’ என்னும் பெயரில் எழுதிவந்த மனோகரனுக்கு எஸ்.வி.ஆர். என்ற புனைபெயரை வைத்தது அவரின் நெருங்கிய நண்பர் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன். 1980-களில் அவர் சென்னையில் வசித்தபோது, எஸ்.எஸ்.கண்ணனோடு இணைந்து கார்ல் மார்க்ஸ் நூலகத்தைத் தொடங்கினார். ரோஜா லக்சம்பர்க் படிப்பு வட்டத்தை ஏற்படுத்தி, அதில் தொடர்ச்சியாக மார்க்ஸிய உரையாடலை முன்னெடுத்தார்.

எஸ்.வி.ஆரின் தொடக்க கால நூலான ‘அந்நியமாதல்’ மார்க்ஸியம் பற்றிய பல பிரச்சினைகளை முதல் முறையாகத் தமிழில் அறிமுகப்படுத்தியது. அது மட்டுமல்ல, பல பிரச்சினைகளில் வழக்கமாக மார்க்ஸியவாதிகள் கொள்ளும் அணுகுமுறையிலிருந்தும் அது விலகி நின்றது. எஸ்.வி.ஆரின் அறிவு நாட்டமும் தேடலும் நமக்குப் பிரம்மிப்பை ஏற்படுத்தும். இணையவசதிகள் இல்லாத 1970-களில் சார்த்தர் குறித்தும், இருத்தலியல் குறித்தும் பயின்று, அதை மற்ற நண்பர்களுக்கும் போதித்தவர் எஸ்.வி.ஆர். தான் பெற்ற அறிவை மற்றவரும் பெற வேண்டும் என்ற பெரும் ஆவல் கொண்டவர். அவருக்கு வாசிப்பைத் தவிர இசையும் சினிமாவும் நாடகமும் கொள்ளைப் பிரியம். தான் வாழ்ந்துவரும் கோத்தகிரி வீட்டில் பெரும் நூலகத்தோடு இசைத்தட்டுகளையும் அழகாகப் பராமரித்து வைத்திருக்கிறார். எந்தவொரு அயல்மொழி திரைப்படம் குறித்தும், இசைமேதை குறித்தும் அவருடன் நீங்கள் உரையாட முடியும். எஸ்.வி.ஆரிடம் நீங்கள் ஒரு மாணவராக ஏராளம் கற்க முடியும்.

மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரும் இணைந்து படைத்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையும், இளம் மார்க்ஸிய அறிஞரான மார்ஸெல்லோ முஸ்ட்டோவின் நூலையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். எஸ்.வி.ஆர். எழுதிக் குவித்த நூல்கள் கிட்டத்தட்ட 80-க்கும் மேல் இருக்கும். கம்யூனிஸம், தத்துவம், சோவியத் இலக்கியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தலித்தியம், பெண்ணியம் என்னும் தலைப்புகளில் இந்நூல்களை அடக்கலாம்.

ஸ்டாலினிஸ சோவியத் ஒன்றியத்தை விமர்சனம் செய்த அதே நேரத்தில், லெனின் காலத்திய போல்ஷ்விக் சோவியத் மரபை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இச்சூழலில், அவர் உருவாக்கிய நூல்தான் ‘ரஷ்யப் புரட்சியின் இலக்கிய சாட்சியம்’. அவருடைய வாழ்வை ஆக்கிரமித்திருந்த இரு பெரும் பகுதிகளை இந்நூல் இணைத்தது. மார்க்ஸியம், ரஷ்யப் புரட்சி, போல்ஷ்விக் மரபு, போல்ஷ்விக் முன்னோடிகள் குறித்த வாசிப்பும் அக்கறையும் ஒரு பகுதி. தமிழ்ச் சூழலில் மார்க்ஸிய மரபை பெரியாரியத்தோடும், தமிழ் அடையாள அரசியலோடும் இணைத்து எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்துவார். மண்டல் கமிஷன் காலத்துக்குப் பிந்தைய சூழல் அவரை மெல்ல பெரியாரியத்தை நோக்கி நகர்த்தியது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற எஸ்.வி.ஆர்., ரோஜா முத்தையா நூலகத்தோடு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு, ‘குடிஅரசு’ இதழ்களைப் பதிவேற்றம் செய்யும் முயற்சியில் இறங்கினார். எழுத்தாளர் வ.கீதாவோடு இணைந்து அவர் எழுதிய நூல் ‘பெரியார்: சுயமரியாதை – சமதர்மம்’. ஆங்கிலத்திலும் வெளியான இந்நூல், தமிழ் அறிவுச் சூழலில் மட்டுமல்லாது இந்தியா முழுமையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரை தட்டையாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்த பெரியாரை நோக்கிப் பொதுவுடைமையர்கள் நகர்ந்துவருவதற்கு இந்நூல் பெரும் உதவிபுரிந்தது. அது மட்டுமல்ல, இந்நூலில் மார்க்ஸியத் தத்துவ அறிஞரான கிராம்சியோடு பெரியார் ஒப்புமைப்படுத்தப்பட்டிருந்தார். பெரியாரியத்தைக் கோட்பாடாக்கும் முயற்சியை இந்நூல் தொடங்கி வைத்தது.

மார்க்ஸிய – லெனினிய இயக்கங்களில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலங்களில், அதன் நீட்சியாக மனித உரிமை மீட்புச் செயல்பாடுகளில் அவர் தன்னை மிகத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். மரண தண்டனையிலிருந்து சன்னாசி என்பவரைக் காப்பாற்றியதில் எஸ்.வி.ஆருக்குப் பெரும் பங்கிருந்தது. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் நீதிபதி கிருஷ்ணய்யர், பாலகோபால் உள்ளிட்டோரோடு சேர்ந்து பல இயக்கங்களைக் கண்டவர். நீண்ட நாட்கள் சிறைபட்டிருந்த புலவர் கலியபெருமாளை விடுதலை செய்வித்ததில் எஸ்.வி.ஆருக்குப் பெரும் பங்குண்டு. பெருஞ்சித்திரனார், புலவர் கலியபெருமாள் மற்றும் 16 இயக்கங்களை இணைத்து ஒடுக்கப்பட்டோர் உரிமை மீட்புக் கூட்டமைப்பைத் தொடங்கியதிலும் எஸ்.வி.ஆரின் பங்கு அளப்பரியது. பெருஞ்சித்திரனார் தடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, ஐந்து மாதங்களாகப் பிணை வழங்கப்படாதிருந்தபோது, அதற்கு எதிராக அப்போது தமிழ்நாடு பி.யு.சி.எல். அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த எஸ்.வி.ஆர், நீதியரசர் கிருஷ்ணய்யர் உள்ளிட்ட நாடெங்கும் இருந்த மனித உரிமைப் போராளிகளிடம் கையெழுத்து இயக்கத்தை நடத்தி, நீதித் துறை வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார். அடுத்த ஓரிரு மாதங்களில் பெருஞ்சித்திரனாருக்குப் பிணை கிடைத்தது. இக்காலகட்டத்தில் தமிழ்த் தேசியத்தின் மீதான விமர்சனத்தோடும், அவர்களோடு இணைந்தும் எஸ்.வி.ஆர். பணியாற்றியவிதம் சிறப்புக்குரியது.

எஸ்.வி.ஆர். மிகவும் கறாரானவர். கோபக்காரர். குழந்தை மனம் கொண்டவர். மிக மோசமான உடல்நலத்தைச் சகித்துக்கொண்டு, கடந்த 20 ஆண்டுகளில் அவர் எழுதிக் குவித்தது ஏராளம். அதன் ரகசியத்தை நீங்கள் கேட்டால் சகு (துணைவியார்) என்பார். மிகச் சிறந்த மார்க்ஸிய – லெனினியக் கவிஞரான கோரக் பாண்டே மரணித்தபோது, அவர் தேம்பித் தேம்பி அழுதிருக்கிறார். சோவியத் உடைவுக்குப் பிறகு அங்கிருந்து வெளியான நாவல்களும் நூல்களும் விவரித்திருந்த சோவியத் காலக் கொடுமைகளை அவர் வாசித்தபோது, அவர் கடுமையான மனத்துன்பத்தை அடைந்தார் என அவரது தோழரான எழுத்தாளர் வ.கீதா கூறுவார். ஒரு அசலான மார்க்ஸியவாதியை நீங்கள் எஸ்.வி.ஆரின் பிம்பத்தில் காண முடியும்.

-இந்து தமிழ்
2022.05.29

Source: chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...