பாரதீய ஜனதா கட்சியின் பண்பற்ற அரசியல்!-–ராஜன் குறை

 பாரதீய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டு அரசியலில் அதிக முக்கியத்துவமில்லை என்பதாலோ, அது மத அடையாளவாத கட்சி என்பதாலோ, பாசிசத்தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ்ஸால் வழி நடத்தப்படுவது என்பதாலோ அந்தக் கட்சியின் பண்பற்ற அரசியல் நடவடிக்கைகளை இயல்பானதாக எடுத்துக்கொள்ள முடியாது, கூடாது. அதைத் தொடர்ந்து கண்டிக்க வேண்டும்.

ஏனெனில், அந்தக் கட்சிதான் கடந்த எட்டாண்டுகளாக ஒன்றிய அரசில் ஆட்சி செய்து வருகிறது. அடுத்த 2024 தேர்தலிலும் அது வெற்றி பெறும் எனப் பலரும் கருத்துக்கூறும் அளவுக்கு அது வலுவான கட்சி என்று நம்பப்படுகிறது. நிச்சயம் வேறு எந்தக் கட்சியும் நினைத்துப் பார்க்கமுடியாத அளவு அது நன்கொடைகளை வாங்கிக் குவித்துள்ளது. யார் நன்கொடை கொடுத்தார்கள் என்பது வெளியில் தெரியாதவண்ணம், கொடுப்பதற்கான ஒரு தனிப்பட்ட சட்டத்தை இயற்றியிருந்தாலும், ஒன்றிய அரசதிகாரத்தின் மூலம் அந்தக் கட்சிக்கு உதவி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் நன்கொடையை அள்ளிக்கொடுத்திருப்பார்கள் என்பதை யூகிப்பது கடினமல்ல. எத்தனை பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தாலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்த வரிச்சலுகையை நீக்க மாட்டோம், வாராக்கடனை கேட்க மாட்டோம், என்பதே அரசின் கொள்கையாக இருப்பதையும் இத்துடன் இணைத்துப் புரிந்து கொள்ளலாம். இப்படி பெருமுதலீட்டிய ஆதரவுடன் செயல்படும் ஆட்சியின் பிரதமர் மோடி உலக அரசியலில் உக்ரைன் போருக்குப் பிறகு எழுந்துள்ள நெருக்கடியான சூழலில் இந்தியாவைப் பிரதிநிதித்துவம் செய்பவராக இருக்கிறார்.

அப்படி இந்திய அரசியலில் செல்வாக்காக இருக்கும் கட்சி அதன் தகுதிக்கு சிறிதும் பொருத்தமின்றி பண்பற்று நடந்துகொள்வதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. தமிழகத்தில் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை காரணமேயில்லாமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் முன் கோரிக்கைகளை எழுப்பியதை கடும் வார்த்தைகளில் கண்டித்துப் பேசியுள்ளார். அகில இந்திய அளவில் அதன் IT Wing தலைவர் அமித் மாளவியா, ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அரங்கில் நிகழ்த்திய உரையாடலைக் கேலி செய்திருக்கும் பாங்கும் தரக்குறைவாக இருக்கிறது. கடந்த வாரம் நிகழ்ந்த இந்த இரண்டு நிகழ்ச்சிகளை இணைக்கும் பொது சரடு இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்பதை பாரதீய ஜனதா கட்சி ஏற்பதில்லை என்பதுதான்.

முதல்வர் ஸ்டாலினின் உரிமை முழக்கம்

மாநில அரசின் முதலமைச்சர், ஒன்றிய அரசின் பிரதமர் இருவரையுமே வாக்களித்துத் தேர்ந்தெடுப்பது குடிமக்கள்தான். மக்களாட்சியில் வாக்களிக்கும் குடிமக்களே எஜமானர்கள். அப்படியிருக்கையில் பிரதமர், முதல்வர் இருவருமே குடிமக்களுக்கு பதில் கூற கடமைப்பட்டவர்கள். உதாரணமாக தமிழ்நாட்டு தேர்தல்களில் நீட் தேர்வை எதிர்க்கும் கட்சிகளுக்குத்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள். திமுக அதன் கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்லாமல், அஇஅதிமுக கூட கொள்கையளவில் நீட் தேர்வை எதிர்க்கத்தான் செய்கிறது. சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தீர்மானம் இயற்றி அனுப்பியது. தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சி மட்டுமே நீட் தேர்வை ஆதரிக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்த தொகுதியிலும் அது வெல்லவில்லை. ஆனால், வட மாநிலங்களில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றதால் மோடி இந்திய ஒன்றியத்தின் பிரதமராகிவிட்டார். அப்படியிருக்கும்போது அவர் தமிழக மக்களின் குரலுக்கு செவிசாய்க்கத்தான் வேண்டும். மாநில முதல்வர் மக்கள் சார்பாக உரிமை குரலை எழுப்பத்தான் வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக தமிழகத்துக்கு வந்தார் பிரதமர். ஒன்றிய அரசு நிதியில் சில கட்டுமான பணிகளைத் தொடங்கிவைக்க வந்தார். தமிழ்நாடு அரசு அவருக்கு முறையான வரவேற்பளித்தது. நேரு உள்விளையாட்டரங்கில் தொடக்க விழா பொதுமக்கள் பங்கேற்கும் பிரமாண்டமான விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் பேசுவதற்கு முன் பேசிய முதல்வர் தமிழக அரசின் பணிகளையும், கொள்கைகளையும் எடுத்துரைத்தார். பின்னர் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக சில முக்கிய கோரிக்கைகளைச் சுருக்கமாக முன்வைத்தார். தமிழ்நாட்டுக்கு அதன் பொருளாதார பங்களிப்புக்குப் பொருத்தமான விகிதத்தில் நிதி ஒதுக்குவது, தமிழ்மொழியையும் ஒன்றிய அரசின் ஆட்சி மொழியாக்குவது, கச்சத்தீவை இலங்கையிடமிருந்து திரும்பப் பெறுவது, நீட் தேர்விலிருந்து விலக்களிப்பது என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் அவை. கூட்டத்தினர் அவர் உரையை மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவர்களுக்காகத்தானே அவர் பேசுகிறார்.

முதல்வருக்குப் பின் பேசிய பிரதமர் ஒரு மரியாதை நிமித்தமாகக் கூட அந்த கோரிக்கைகளை தான் கேட்டுக்கொண்டதாகவோ, அவையெல்லாம் ஒன்றிய அளவில் விரிவாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவை என்றோ கூறவில்லை. அப்படி எதையும் முதல்வர் பேசவில்லை, தான் கேட்கவில்லை என்பது போன்றே நடந்து கொண்டார். தனக்கு வாக்களிக்காத தமிழ்நாட்டு மக்களுக்கும் தான் பிரதமர் என்று கூறிக்கொள்பவர், அவர்கள் கோரிக்கைகளைத் தான் கேட்டதாகக் கூட கூற மறுப்பது மக்களாட்சியின் அடிப்படையையே கேலி செய்வதாகும். தான் ஆட்சி செய்வது ஒன்றிய அரசு என்பதையும், மாநிலங்களுக்கு இறையாண்மையில் பங்குள்ளது என்பதையும், மாநிலங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாவிட்டாலும், அவற்றை தான் கேட்டுக்கொண்டதையாவது குறிப்பிட வேண்டும் என்று நினைக்காதவர் தன்னை ஒரு பழங்கால பேரரசராக நினைத்துக்கொள்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

அவர்தான் அப்படி தன் பதவியின் மாண்புக்கு பொருத்தமில்லாமல் நடந்து கொண்டார் என்றால், மாநில பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை அதன் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் முன்னால் முதல்வர் அப்படிப் பேசியது தவறு என்றும், அது பிரதமரை அவமதிப்பது என்று கூறியதும், என்ன விளையாடுகிறார்களா, மோதிப் பார்க்கிறீர்களா என்றெல்லாம் சீறியதும் சிறிதும் பண்பற்ற, அரசியல் நாகரிகமற்ற செயல். அவருக்கு பிரதமர் கட்சித் தலைவர் என்பதால் அண்ணாமலை பிரதமர் முன்னால் கைகட்டி வாய் பொத்தி நிற்கலாம். மக்களால் பெருவாரியாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு மாநில முதல்வர் எதற்காக அப்படி பிரதமர் முன்னால் பேசுவதற்கு தயங்க வேண்டும்? மாநில முதல்வர் என்ன ஒன்றிய அரசு நியமித்த ஆளுநரா? அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். “உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்” என்பதை திமுகவின் கொள்கையாக கலைஞர் வரையறை செய்து அரை நூற்றாண்டுக் காலம் ஆயிற்று. அண்ணாமலை அதையெல்லாம் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். மத்திய – மாநில அதிகாரப் பகிர்வு குறித்த ராஜமன்னார் குழு அறிக்கையைப் படிக்க வேண்டும். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் மிகுந்த பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

பொதுமக்கள் முன்னால் பிரதமருடன் பகிர்ந்துகொண்ட மேடையில் மாநிலத்தின் முக்கிய கோரிக்கைகளைப் பட்டியில் இட்டதன் மூலம் முதல்வர் ஸ்டாலின் மக்களாட்சி அரசியலின் மாண்பையும், பொதுமன்றத்தின் மாண்பையும் பன்மடங்கு உயர்த்தியுள்ளார். இத்தகைய பண்பட்ட, உயர்தர அரசியலைத்தான் மானுடம் முந்நூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்க முயன்று வருகிறது. பாரதீய ஜனதா கட்சி அத்தகைய உயர்ந்த அரசியல் பண்பினை வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்த பக்குவம் இருந்ததால்தான் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களால் ஜனதா அரசிலும், பின்னர் அவரே பிரதமராக இருந்த கூட்டணி அரசிலும் இயங்க முடிந்தது. ஐம்பதாண்டுக் காலம் இந்திய அரசியலில் அந்தக் கட்சியைக் காத்து நிற்க முடிந்தது. இன்றைய பாரதீய ஜனதா கட்சி அந்தப் பக்குவத்தையும், பண்பாட்டையும் பறிகொடுத்து நிற்கிறது. அந்த கட்சிக்கும், இந்திய அரசியலுக்கும் இது நல்லதல்ல.

ராகுல் காந்தி என்ற சிந்திக்கும் தலைவர்

இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சுருதி கபிலா என்ற பேராசிரியருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் கடந்த வாரம் பங்கேற்றார் ராகுல் காந்தி. அதில் அவர் கூறிய முக்கியமான கருத்துகள் பாரதீய ஜனதா கட்சிக்கு மிகுந்த எரிச்சலைத் தந்துள்ளது. அதில் தலையாயது என்னவென்றால், இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் (Union of States) என்றுதான் அரசியல் அமைப்பு சட்டம் வரையறுத்துள்ளது, தேசம் என்று வரையறுக்கவில்லை என்ற கூற்றாகும். இந்தியாவில் ஏன் அமெரிக்கா போலவோ, இங்கிலாந்து போலவோ இரு கட்சி அரசியலமைப்பு உருவாகவில்லை, ஏன் மாநிலக் கட்சிகள் பல இருக்கின்றன என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் அவ்வாறு விளக்குகிறார். பல்வேறு மாநிலங்களில் அந்த மாநிலத்துக்கே உரிய இரு கட்சி அமைப்பு உருவாகியுள்ளதை சுட்டிக் காட்டுகிறார். தமிழ்நாட்டையும் உதாரணமாக கூறுகிறார். இந்தியாவை இங்கிலாந்து போலவோ, அமெரிக்கா போலவோ கருத முடியாது, அது ஐரோப்பிய ஒன்றியம் போன்றது என்கிறார். ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தால் இன்னும் அரசியல் ரீதியாக முழுமையாக ஐக்கியப்பட முடியவில்லை; அதை இந்தியா எழுபதாண்டுகளுக்கு முன்னமே சாதித்து விட்டது என்று பெருமையாகக் கூறுகிறார். வழக்கம்போல பாஜக இது தவறான சித்தரிப்பு, ஆபத்தான சித்தரிப்பு என்றெல்லாம் பொங்குகிறது. அதாவது பரவாயில்லை. அவர்களுடைய புரிதல் எல்லைக்கு அப்பாற்பட்ட அரசியல் தத்துவ நுட்பத்தை ராகுல் காந்தி பேசியுள்ளதால் விளையும் பிரச்சினை என்று நினைக்கலாம். ஆனால் ராகுல் காந்தியின் தனிப்பட்ட காயத்தை எள்ளி நகையாடுவது அருவருப்பானது.

கலந்துரையாடலின் பிற்பகுதியில் சுருதி கபிலா அவரிடம் அவர் தனிப்பட்ட உணர்வுகளை கிளறும் விதமாக ஒரு கேள்வியைக் கேட்கிறார். நீங்களே வன்முறையால் பாதிக்கப்பட்டவர் என்று கூறி, உங்கள் தனிப்பட்ட அனுபவத்தையும் சேர்த்து சிந்தித்தால் இந்தியாவில் வன்முறைக்கும், வன்முறையற்ற அரசியலுக்கு உள்ள உறவு எத்தகையது, வன்முறையை எப்படி எதிர்கொள்வது என்று கேட்கிறார். ராகுல் காந்தி அந்த கேள்வியை உள்வாங்கி சிந்திக்கத் தொடங்குகிறார். சிறிது நேர மெளனத்திற்கு பிறகு “மன்னித்தல் என்பது முக்கியமானது…” என்று தொடங்குபவர், “மன்னித்தல்” என்பது அவ்வளவு சரியான வார்த்தையல்ல என்று கூறி மீண்டும் மெளனத்தில் ஆழ்கிறார். அப்போது பார்வையாளர்கள் சிலர் பொறுமையிழந்து கரவொலி எழுப்புகிறார்கள். அவர் புன்முறுவலுடன் நான் சிந்தித்துக் கொண்டுள்ளேன் என்று கூறுகிறார். சுருதி கபிலா உடனே உங்களை திணறச்செய்யும் கேள்வியை கேட்டுவிட்டேனா என்கிறார். அவர் அப்படியில்லை. நான் சரியான எதிர்வினையை சிந்திக்கிறேன் என்கிறார். இந்தக் கேள்வியை உங்களிடம் யாருமே கேட்டதில்லையா என்கிறார் சுருதி கபிலா. அதற்கு ராகுல் காந்தி “கேட்டுள்ளார்கள். ஆனால் நான் மேலும் ஆழமாக பரிசீலிக்க விரும்புகிறேன்” என்கிறார். பின்னர் தன் தந்தையின் மரணம் தனக்கு மிகுந்த வலியை தந்தாலும், அது தன் வாழ்நாளின் ஆகப்பெரிய கற்றல் அனுபவத்தை, புரிதலை சாத்தியமாக்கியது என்று சொல்கிறார். ஒருவர் என்னை காயப்படுத்தினால், அதற்காக கோபப்படுவதை விட அதிலிருந்து கற்கவே முற்படுவேன் என்கிறார். அதுவே வன்முறையை எதிர்கொள்ளும் காந்திய வழி என்று உரையாடலை முடிக்கிறார்கள்.

சிறு வயதிலேயே பாட்டியையும், பின்னர் தந்தையையும் எதிர்பாராத அரசியல் படுகொலைகளில் பறி கொடுத்தவர் ராகுல் காந்தி. அந்த சொல்லொண்ணா வலிமிகுந்த அனுபவங்களிலிருந்துதான் அவரது அரசியல் தொடங்குகிறது. உண்மையில் சொன்னால் அவற்றால் அரசியலை விட்டே விலகிச்செல்லாமல், அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அரசியலில் செயல்பட வேண்டும் என்று ராகுல் நினைப்பதே மிகவும் முக்கியமானது. அவரிடம் பொது மேடையில் இது போன்ற அந்தரங்க அனுபவத்தைப் பேசச் சொன்னால், எதையோ அலங்காரமாக சொல்லிவிட்டுப் போகாமல் உண்மையிலேயே ஆழ்ந்து சிந்திக்கிறார், தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொற்களைத் தேடுகிறார். இறுதியில் என் தந்தையின் மரணம் நிகழாவிட்டால் எனக்கு இன்றுள்ள அறிதலும், புரிதலும் வாய்த்திருக்காது என்கிறார்.

அவர் உணர்வுகளை மதிக்கத் தெரியாத பாஜக IT Wing தலைவர் அமித் மாளவியா அவரது மெளனத்தை எள்ளி நகையாடுகிறார். ஏன் முன்னமே தயாரிக்கப்பட்ட, ஜோடிக்கப்பட்ட நேர்காணல்களை அவர் நடத்தக் கூடாது என்று கேட்கிறார். அதை செய்யத்தான் பிரதமர் மோடி இருக்கிறாரே. அவர் பத்திரிகையாளர்களை சந்திப்பதே கிடையாது. ஒரு மாநில முதல்வர் மேடையில் கோரிக்கைகளை வைத்தால், அதற்கு சமயோசிதமாக எதிர்வினை புரியத் தெரியாது. அவர் மட்டும்தான் முன் தயாரிக்கப்பட்ட பேச்சைப் பேசுவார். மற்றவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

ராகுல் காந்தி அப்படியல்ல. அவர் வெளிப்படையாக சிந்திக்கிறார், பேசுகிறார். காலம் வலிமிகுந்த அனுபவங்களைத் தந்தாலும், அவருக்கு அரியதொரு புரிதலைத் தந்துள்ளது. அது என்னவென்றால் அது இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்பதுதான். ஐரோப்பிய ஒன்றியம் அரசியல் ரீதியாக மேலும் ஐக்கியப்பட்டால், அதாவது ஐரோப்பிய நாடாளுமன்றம் மேலும் சற்று வலுவடைந்து, ராணுவங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பாதுகாப்பை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டால் அது இந்தியாவுக்கு அருகில் வந்துவிடும். சரியானதொரு கூட்டாட்சிக் குடியரசு என்பது இன்றைய ஐரோப்பிய ஒன்றியமும், இந்திய ஒன்றியமும் ஒன்றை நோக்கி ஒன்று நகர்ந்து சந்திக்கும் புள்ளியில் இருக்கிறது. இன்னும் சற்று சிந்தித்தால் உலகமே அப்படியொரு கூட்டாட்சி குடியரசாக உருவாகாமல் மானுடம் அழிவிலிருந்து தன்னை காத்துக்கொள்ள முடியாது என்பதுதான் உண்மை.

அதனால்தான் அறிஞர் அண்ணா அமெரிக்க அரசியலாளர் வெண்டல் வில்கி முன்மொழிந்த உலக கூட்டாட்சி குடியரசை தன் எழுத்துகளில் ஆர்வத்துடன் குறிப்பிடுகிறார். அத்தகைய தீர்க்கதரிசனத்தை நோக்கி பயணிப்பதுதான் முதிர்ச்சி, அரசியல் பண்பாடு. பாரதீய ஜனதா கட்சி பயில வேண்டிய பண்பாடு. ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே கொள்கை, ஒரே மதம் என்று ஒரேடியாகப் பேசுவது பண்பாடல்ல. பண்மையே பண்பாடு.

Source: chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...