ஊதிப் பெருப்பிப்பது எதற்காக?-மணியம் சண்முகம்



இலங்கையில் பொருளாதார நெருக்கடி இருப்பதும், அதனால் மக்கள் சிரமப்படுவதும் உண்மையே. அதே நேரத்தில் இது இலங்கைக்கு மட்டும் உரித்தான ஒன்றும் அல்ல என்பதும் உண்மையே. சொல்லப் போனால் வளர்ச்சியடைந்த நாடுகளே இந்த நெருக்கடியால் அல்லாடுகின்றன.

See the source image

Courtesy: image : blogspot.com

ஆனால் இலங்கையின் விசமம் மிக்க எதிர்க் கட்சிகளும், முதலாளித்துவ ஊடகங்களும் இலங்கையில் மட்டும்தான் இப்படியான பிரச்சினை இருக்கிறதென்றும், அதற்குக் காரணம் இன்றைய அரசாங்கமும், ராஜபக்ச குடும்பமும்தான் என ஓயாமல் பிரச்சாரம் செய்து வருகின்றன. உண்மையில் இந்தப் பிரச்சினை நாடு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து படிப்படியாக உருவாகி வந்து, இன்றைய சர்வதேச மற்றும் உள்நாட்டுக் காரணிகளால் உச்சம் பெற்றுள்ளது. ஆகையால் இன்றைய அரசாங்கத்தைக் குற்றம் சாட்டும் இன்றைய எதிர்க் கட்சியினரும் முன்னைய ஆட்சியாளர்களுமான அவர்களும் இதற்கான காரண கர்த்தாக்களே.

ஆனால், அண்மையில் எனக்குத் தெரிந்த பல புலம்பெயர் தமிழர்கள் இலங்கை சென்று மாதக்கணக்கில் தங்கியிருந்துவிட்டு திரும்பியுள்ளனர். அவர்கள் சொல்லும் தகவல்கள் இந்த எதிர்க் கட்சிகளும் ஊடகங்களும் சொல்வதற்கு எதிர்மாறானதாகவே இருக்கின்றன. லண்டனில் இருந்து இணையத்தளம் ஒன்றை நடத்தும் ஒருவர் அண்மையில் இலங்கை சென்று திரும்பி வந்து தனது அனுபவங்களை முகுநூலில் பதிவிட்டுள்ளார். அவரது அனுபவமும் ஊடகங்கள் சொல்வதற்கு எதிர்மாறாகவே இருக்கிறது.



நான் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் எனது 16 ஆவது வயதில் இருந்து 56 ஆவது வயது வரை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பல வருடங்கள் முழுநேர ஊழியராகவும், பின்னர் பகுதி நேர ஊழியராகவும் பணியாற்றியிருக்கிறேன். 2004 இல் புலம்பெயர்ந்து வந்த பின்னரும் அங்குள்ள பழைய தோழர்களுடன் அடிக்கடி உரையாடுவதுண்டு. அவர்கள் எல்லோரும் அடிமட்ட வாழ்க்கைத்தரத்தை உடையவர்கள். ஆனால் கொள்கை ரீதியாக இன்னமும் பழைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர்கள். அவர்கள் கூறும் கதைகளைக் கேட்டால் இலங்கையின் இன்றைய நிலைமை பற்றி எதிர்க் கட்சிகளும் முதலாளித்துவ ஊடகங்களும் கூறுவது அத்தனையும் சுத்தப் பொய் என்று தெரிய வருகிறது.

அது மட்டுமின்றி, எனது இரண்டு சகோதரிகளினதும், மூத்த சதோதரனினதும் குடும்பங்களும் அங்குதான் வாழ்கிறார்கள். அவர்களுடனும் நான் அடிக்கடி உரையாடுவது வழமை. அவர்கள் கூட இந்த ஊடகங்கள் கிளப்பி விடும் புரளிகள் போல எதையும் சொல்லவில்லை.

எனது சொந்த அனுபவத்தையும் இங்கு சொல்ல வேண்டும். நான் 1999 முதல் 2004 வரை எனது குடும்பத்துடன் கொழும்பு – கிரிலப்பனையில் ஒரு சிங்கள இனத்தவருடைய வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தேன். அந்தக் காலம் புலிகள் வடக்கு கிழக்கிலும், தலைநகர் கொழும்பிலும், தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் குண்டுத் தாக்குதல்களையும், தற்கொலைத் தாக்குதல்களையும் நடத்தி சிங்கள அரசியல்வாதிகளை மட்டுமின்றி பல சிங்களப் பொதுமக்களையும் கொலை செய்த காலம். ஆனால் அதற்குப் பதிலடியாக நாம் வாழ்ந்த சூழலில் இருந்த சிங்கள மக்கள் எந்தக் கெடுதியும் எமக்குச் செய்தது கிடையாது. எப்பொழுதும் நட்புறவுடனும் புன்சிரிப்புடனும் எம்முடன் பழகினார்கள்.

அந்த நேரத்தில் ஜேர்மனியில் இருந்த எனது ஒரு உடன் பிறந்த சதோதரரும், வெளி நாடுகளில் இருந்த நெருங்கிய உறவினர்களும் என்னை அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'உங்கை கொழும்பிலை சிங்களவர்கள் தமிழர்களை அடிக்கிறார்களாம், வெட்டுகிறார்களாம். ஆனபடியால் நீங்கள் யாழ்ப்பாணத்திற்கு போய் இருங்கள்' என அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதற்குக் காரணம், புலம்பெயர் நாடுகளில் கோலோச்சிய புலிப் பினாமிகள் இலங்கை பற்றிச் செய்த பொய்ப் பிரச்சாரங்கள்தான். (உண்டியல் குலுக்குவதற்காக) பின்னர் அப்படி எங்களை எச்சரித்தவர்களே யுத்தம் முடிந்த பின்பு இலங்கைக்குப் பல தடவைகள் சென்று உல்லாசமாகப் பொழுது போக்கிவிட்டு வந்திருக்கிறார்கள். (போக வேண்டிய நான்தான் இன்னமும் போகவில்லை) எனவே இலங்கையின் வங்குரோத்து எதிர்க் கட்சிகளும், முதலாளித்துவ ஊடகங்களும் அவிழ்த்து விடும் புளுகு மூட்டைகளை நம்பி விடாதீர்கள்.

ஒரு பிற் குறிப்பு:

சமீபத்தில் கனடாவிலிருந்து இலங்கை சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒரு இடதுசாரித் தோழர் (இவர் பிரபாகரனின் மிக நெருங்கிய உறவினர்) சொன்ன தகவலின்படி, லண்டனிலிருந்து வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சுமார் 20 குடும்பங்கள் வல்வெட்டித்துறைக்கு சென்று தமது வீடுகளைப் புதுப்பிப்பதிலும், காணி வாங்கி புதிய வீடுகளைக் கட்டுவதிலும் ஈடுபட்டிருக்கின்றனராம்.

இன்னொருவர் சொன்ன தகவலின்படி, இவ்வருடம் நடைபெறும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாவில் பங்கேற்பதற்காக பல்லாயிரக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள் இப்பொழுதே விமானச் சீட்டுகளைப் பதிவு செய்திருப்பதுடன், யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து தங்கு விடுதிகளிலும் முன்பதிவும் செய்திருக்கிறார்கள்.
நல்லது கொண்டாடுங்கள். ஆனால், இலங்கை நிலவரம் குறித்து பொய்ப் பிரச்சாரம் செய்யாது உண்மையைப் பேசுங்கள். அப்படி நீங்கள் பேசினால் நீங்கள் நம்பும் கடவுளும் உங்களை மன்னிக்க மாட்டார்.


2022/04/21

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...