இலங்கை வழியில் மேலும் 69 நாடுகள்!

சுழற்றி அடிக்கும் பொருளாதார நெருக்கடி- கடன் சுமை: எச்சரிக்கும் உலக வங்கி

டுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை உருக்குலைந்துள்ள நிலையில், இதே போன்ற நெருக்கடியை நோக்கி 69 நாடுகள் சென்று கொண்டிருப்பதாக உலக வங்கி, ஐ.நா. போன்றவை எச்சரித்துள்ளன. உணவுத்தட்டுப்பாடு மட்டுமின்றி கடன் சுமையும் இந்த நாடுகளை மூழ்கடித்து வருகின்றன.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் உலகளாவிய பொருளாதார சிக்கலை அதிகரித்துள்ளது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. ஏற்கெனவே பொருளாதாரம் வேகமெடுத்துள்ளதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்து வருகின்றன. சமையல் எண்ணெய் தொடங்கி கோதுமை வரை பல உணவுப்பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகளில் பொருளாதார சிக்கல் உருவாகி வருகிறது. இலங்கையை போன்றே வேறு சில நாடுகளிலும் இதேபோன்ற பொருளாதார பாதிப்பு, கடன் சுமை ஏற்பட்டுள்ளது.

பெப்ரவரி 15-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்குவதற்கு 9 நாட்களுக்கு முன்பாக உலக வங்கி மிக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 70 நாடுகள் பெரும் கடன் சுமை, அந்நியச் செலாவணி இழப்பு போன்ற சூழலில் இருப்பதாக தெரிவித்து இருந்தது. இந்த நாடுகளில் 2022-ம் ஆண்டில் இந்த நாடுகளில் பொருளாதாரம் அழியும் சூழலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து ஐ.நா. வெளியிட்டுள்ள பொருளாதாரம் சா்ர்ந்த அறிக்கையில் 107 நாடுகளின் பொருளாதாரம் மிக மோசமான சூழலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உயரும், கச்சா எண்ணெய் மற்றும் மின்சாரம் விலை அதிகரிக்கும். கடன் சுமையால் இந்த நாடுகளில் நிதிநிலை மோசமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் 170 கோடி மக்கள் இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வழியில்….

இதில் 69 நாடுகளில் இலங்கையின் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 25 நாடுகள் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவை. 25 நாடுகள் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளை சேர்ந்தவை. 19 நாடுகள் இலத்தின் அமெரிக்கா நாடுகளாகும்.

இதில் முதல் நாடு எகிப்து. ஏற்கெனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் எகிப்து, உக்ரைன்- ரஷ்யா போருக்கு பிறகு பெரும் சிக்கலில் உள்ளது. உக்ரைன்- ரஷ்யாவிடம் இருந்து அதிகஅளவு கோதுமை இறக்குமதி செய்யும் நாடான எகிப்து போர் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் கோதுமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மக்கள் உணவுக்காக தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கோதுமை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வந்தது. ஆனால் இப்போது இந்தியாவிலும் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.

அடுத்ததாக துனிஷியா. இந்த நாட்டில் வர்த்தக பற்றாக்குறை 9 மில்லியன் டாலராக உள்ளது. துனிஷியாவின் பணவீக்கம் 7 சதவீதமாக உள்ளது. இதனால் அந்த நாட்டில் உள்நாட்டு போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

கடும் நெருக்கடியில் துருக்கி

துருக்கியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு ஆண்டு பணவீக்க விகிதம் 61.14 சதவீதம் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

அங்கு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு முன்பாகவே அங்கு பொருளாதார பாதிப்பு தொடங்கி விட்டது. விநியோகச் சங்கிலித் தடை, துருக்கிய நாணயமான லிராவின் மதிப்பில் கடும் சரிவு, அதிகரித்து வரும் பணவீக்கம் போன்ற கடுமையான பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகிறது. பின்னர் கொரோனா ஏற்பட்ட பிறகு பெரும் பாதிப்பை அந்நாடு எதிர்கொண்டு வருகிறது. தொழில், வர்த்தகம் சரிவடைந்தது.

பணவீக்கம் உயர்ந்து விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. தொழில்துறை வளர்ச்சியை முன் வைத்து வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கையை அதிபர் எர்டோகன் மேற்கொண்டார். செப்டம்பரில் மத்திய வங்கி 500 அடிப்படை புள்ளிகளை தளர்த்தி வட்டி விகிதங்களை குறைத்தது. இதனால் லிரா பலவீனமடைந்ததால் பணவீக்கம் மேலும் அதிகரித்து வருகிறது.

ரஷ்யா-உக்ரைன் மோதலால் துருக்கியில் கடுமையான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் விலையும் உயர்ந்துள்ளது. துருக்கிய நாணயமான லிராவின் மதிப்பும் கடும் சரிவு கண்டு வருகிறது.

உணவுக்கு கையேந்தும் அவலம்

பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் நாடுகளில் லெபனானும் உள்ளது. பெய்ரூட்டில் நடந்த குண்டுவெடிப்பில் நாட்டின மிக முக்கிய உணவு குடோன் தகர்க்கப்பட்டது. இதனால் உணவு தானியங்கள் இல்லாமல் லெபனான் தவிப்பில் உள்ளது. கோதுமை, சமையல் எண்ணெய் என அனைத்தின் விலையும் உயர்ந்து பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. லெபனானின் உணவுப்பொருட்களின் விலை 11 மடங்கு உயர்ந்து விட்டது.

லெபனான் நாணயத்தின் மதிப்பு 90 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனையடுத்து உணவு தேவையை காரணம் காட்டி உலக வங்கியிடம் 150 மில்லியன் டொலர்கள் கடன் வாங்கியுள்ளது. அடுத்த நாடு ஆர்ஜென்ரீனா. பெரும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் ஆர்ஜென்ரீனா வாங்கிய கடனுக்கான வட்டியை திருப்பிச் செலுத்தாமல் 9 முறை தவணை தவறியுள்ளது.

இதுபோலவே எல்சல்வடோர், பெரு போன்ற நாடுகளும் இதுபோன்ற மோசமான பொருளாதார சூழலை எதிர்கொண்ட வருகிறது. இந்தநாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் மோசமான சூழல் உள்ளது.

கானா, கென்யா, தென்னாப்பிரிக்கா, எத்தியோப்பியா போன்ற நாடுகளும் கடன் சுமையால் தவித்து வருகின்றன. தென்னாப்ரிக்காவிலும் கடனால் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

இந்த நாடுகள் அடுத்த 12 மாதங்களில் மிகப்பெரிய ‘டெட் கிரைசிஸ்’ (Dead crisis) என அழைக்கப்படும் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் என்றும் இதில் 10-க்கும் மேற்பட்ட நாடுகள் திவாலாகும் நிலைக்கு தள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனை ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

‘குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 60 சதவிகிதம் கடன் துயரத்தில் அல்லது அதற்கு அருகில் உள்ளன. அவர்களின் கடனை திருப்பிச் செலுத்தும் திறன் ஆபத்தான நிலையில் உள்ளது. உக்ரைன் போர் உணவு ஏற்றுமதியை சீர்குலைத்துள்ளது. உணவு பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. கடன் வாங்கியுள்ள நாடுகள் பணம் திருப்பிச் செலுத்துவதில் பெரும் சங்கடங்களை சந்தித்து வருகின்றன’

இவ்வாறு அவர் கூறினார்.

-இந்து தமிழ்
2022.05.16

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...