வரலாற்றை திரும்பிப் பார்த்தல்: 1970 ஆண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு-–கே.மாணிக்கவாசகர்Sirimavo of Sri Lanka: Refocusing on World's first Women Prime ...
திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க
சுதந்திரத்துக்கு பிந்தைய இலங்கையின் வரலாற்றில் 1970ஆம் ஆண்டு ஒரு முக்கியமான ஆண்டாகும். அதற்குக் காரணம் அந்த ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ‘ஐக்கிய முன்னணி’ (United Front) மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த ஐக்கிய முன்னணியில் சிறீமாவோவின் சொந்தக் கட்சியான, அவரது கணவரான எஸ்.டபிள்யு.ஆர்.பண்டாரநாயக்க 1951இல் ஆரம்பித்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன், இலங்கையின் பழமை வாய்ந்த இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சியும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கம் வகித்தன.
1970இல் ஐக்கிய முன்னணி அதிகாரத்தைக் கைப்பற்றி 2020 மே மாதத்துடன் 50 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. பிரித்தானிய முதலாளித்துவ ‘வெஸ்ற்மின்ஸ்ரர்’ (Westminster) பாராளுமன்ற ஜனநாயத்தைப் பின்பற்றும் இலங்கையில் 30 வருட போர் நடைபெற்ற காலத்தில் கூட பெரும்பாலும் 5 வருடத்துக்கு ஒருமுறை தவறாது தேர்தல் நடத்தப்பட்டு வந்துள்ளது. அது இலங்கை ஜனநாயகத்தின் சிறப்பம்சம். இருப்பினும் இந்த 1970ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு மேலும் ஒரு சிறப்பு அம்சம் இருக்கின்றது.


அது என்னவென்றால், இலங்கையில் முதன்முதலாக இரண்டு கட்சி ஆட்சி முறையை நிலைநிறுத்திய, முதன்முதலாக பண்டாரநாயக்க ஆட்சியைக் கைப்பற்றிய 1956 பொதுத் தேர்தலின் போது, பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சி பிலிப் குணவர்த்தன தலைமையிலான மகாஜன எக்சத் பெரமுனவுடன் (மக்கள் ஐக்கிய முன்னணி) இணைந்தே ஆட்சியைக் கைப்பற்றியது. மற்றைய இடதுசாரிக் கட்சிகள் இரண்டும் பண்டாரநாயக்க அரசாங்கத்தின் ஏகாதிபத்திய விரோத, மக்கள் நலத் திட்டங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்தனவே தவிர அரசில் சேரவில்லை.
1957இல் பண்டாரநாயக்க பிற்போக்கு சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவரது மனைவி சிறீமாவோ கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவர் தலைமையில் 1960 பொதுத் தேர்தலில் கட்சி போட்டியிட்டது. அந்த ஆண்டு இருதடவைகள் தேர்தல் நடந்தது. மார்ச் 19ந் திகதி நடந்த தேர்தலில் எக்கட்சியாலும் ஆட்சியமைக்க முடியவில்லை. ஜுலை 20ந் திகதி நடந்த தேர்தலில் சிறி.சு,கட்சி 75 ஆசனங்களுடன் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சியமைப்பதற்கு ஓர் ஆசனம் போதாமலிருந்தது. எனினும் அதிக ஆசனங்களை வென்ற கட்சியென்ற அடிப்படையில், சிறீமாவோ உலகின் முதல் பெண் பிரதமராக பெருமையுடன் பதவியேற்றார். பிரதமர் பதவி பொறுப்பெற்றிருந்தாலும் அவர் அனுபவம் குறைந்தவராகவே இருந்தார். அத்துடன் கட்சிக்குள்ளும் அமைச்சரவையிலும் சி.பி.டி.சில்வா போன்றவர்களின் தலைமையில் வலதுசாரி அணியொன்று பலமாகவும் இருந்தது. அந்த அணி சிறீமாவோ தனது கணவர் பண்டாரநாயக்கவின் ஏகாதிபத்திய விரோதக் கொள்கையைத் தொடர்வதற்கும் இடையூறாக இருந்தது.
Sirimavo Bandaranaike became the world's first elected woman head ...
மறுபக்கத்தில், இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மகாஜன எக்சத் பெரமுன என்பன இணைந்து ‘இடதுசாரி முன்னணி’ என்ற பெயரில், மொத்தம் 19 ஆசனங்களுடன் மிகப்பெரிய ஐக்கிய முன்னணி ஒன்றையும் உருவாக்கியிருந்தன. இந்த முன்னணி இலங்கையில் இருக்கின்ற அனைத்து தொழிலாளி வர்க்கம் சார்பாக 21 கோரிக்கைகளை முன் வைத்து மாபெரும் போராட்டம் ஒன்றுக்கு தயாராகி வந்தது. அந்தப் போராட்டம் நிகழ்ந்தால் அது 1953இல் நடைபெற்ற, நாட்டையே ஸ்தம்பிக்க வைத்த, புகழ்பெற்ற ஹர்த்தால் போராட்டத்தை ஒத்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலைமையில் சிறிமாவோ இருபக்க நெருக்கடியை எதிர்நோக்கினார். ஒரு பக்கம் கட்சிக்குள் இருக்கும் வலதுசாரிகள் கொடுக்கும் நெருக்கடி. மறுபக்கம் வெளியிலிருந்து இடதுசாரிகள் கொடுக்கும் நெருக்கடி. இதில் இடதுசாரிகள் கொடுக்கும் நெருக்கடியே உடனடி ஆபத்தாக இருந்ததால், முதலில் அதற்குத் தீர்வு காண்பதற்கு முயன்றார்.
அதன் பொருட்டு சிறீமாவோ மிகச் சாதுரியமாகச் செயற்பட்டு 1964 ஆம் ஆண்டில் லங்கா சமசமாஜக் கட்சியை இடதுசாரி ஐக்கிய முன்னணியிலிருந்து பிரித்தெடுத்து அந்தக் கட்சியின் தலைவரும், பொருளாதாரத்தில் இரட்டைக் கலாநிதி பெற்றவருமான டாக்டர் என்.எம்.பெரேராவுக்கு தனது அரசில் மிக முக்கியமான நிதியமைச்சு பொறுப்பை வழங்கினார். அதன் பின்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையிலான உறவு படிப்படியாக அதிகரித்து வந்தது. அதன் தொடர்ச்சியே 1970 தேர்தலின் போது மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடவும், தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறவும் வழிவகுத்தது.
1970இல் அமைந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் முதல் முறையாக இரண்டு இடதுசாரிக் கட்சிகளும் (லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி) அங்கம் வகித்ததால் அந்த அரசாங்கம் பல முற்போக்கு நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது. அந்த நடவடிக்கைகள் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் அவற்றின் உள்ளுர் பிரதிநிதிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ் பிற்போக்கு கட்சிகளுக்கும் உவப்பானதாக இருக்கவில்லை. எனவே அவை பல எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சீர்குலைவு வேலைகளை மேற்கொள்வதற்கும் தருணம் பார்த்துக் காத்திருந்தன.
Women Prime Ministers and Presidents: 20th Century
சிறிமாவோ இந்தியப்பிரதமர் இந்திரா காந்தியுடன்
ஆனால் அரசுக்கு எதிரான முதல் நடவடிக்கை ஆயுதக் கிளர்ச்சி என்ற வடிவத்தில் இடதுசாரிப் போர்வையில் இருந்த ஜே.வி.பியிடம் இருந்து உருவானது. மக்கள் வழங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் உருவான அரசாங்கத்தை அதன் ஒரு வருடம் பூர்த்தியாவதற்கு முன்பே கவிழ்ப்பதற்கு 1971 ஏப்ரல் 5ஆம் திகதி ஜே.வி.பி. ஆயுதக் கிளர்ச்சி ஒன்றை ஆரம்பித்தது. ஆனால் அந்தக் கிளர்ச்சிக்கு மக்களின் ஆதரவு இல்லாமையினால் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. கிளர்ச்சியை முறியடிப்பதற்கு இலங்கையின் நெருங்கிய நட்பு நாடுகளான இந்தியா, சோவியத் யூனியன், சீனா என்பன பல வழிகளிலும் ஒத்தாசை வழங்கின. ஜே.வி.பி. கிளர்ச்சியின் பின்னணியில் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளும், ஐ.தே.கவும் இருந்தது பின்னர் நிரூபணமானது.
இந்த அரசாங்கத்திலும் சமசமாஜக் கட்சித் தலைவர் டாக்டர் என்.எம்.பெரேராதான் நிதியமைச்சராக இருந்தார். அவர் பெரும் தனவந்தர்களிடம் இருந்த கறுப்புப் பணத்தை வெளிக் கொணர்வதற்காக 100 மற்றும் 50 ரூபா நாணயத் தாள்களை திடீரென செல்லுபடியற்றதாக்கி ஒரு ‘புரட்சி’ செய்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தளவு கறுப்புப் பணம் வெளிவரவில்லை. காரணம் என்னவென்றால் பணம் பதுக்கி வைத்திருந்தவர்கள் முன்னரே இதை அறிந்து கொண்டு அவற்றை வங்கியில் வேறு பெயர்களில் வைப்புச் செய்தும், அந்தத் தாள்களை 10 மற்றும் 5 ரூபா தாள்களாக மாற்றியும் அதிலிருந்து தப்பிவிட்டனர். கிளிநொச்சியில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக இருந்த முன்னாள் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே தன்னிடமிருந்த ஒருதொகை பணத்தை தனது சங்கத்தில் கொடுத்து மாற்றிச் சென்றார் என்றால், தென்னிலங்கையில் நிலவரம் எப்படி இருந்திருக்கும் என எண்ணிப் பார்க்கலாம். இந்தத் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிய தொகை 100 மற்றும் 50 ரூபா தாள்களை வைத்திருந்த மத்தியதர வர்க்கத்தினர்தான்.
ஐக்கிய முன்னணி அரசாங்கம் செய்த மிகப்பெரும் சாதனைகளில் தலையாயது 1972இல் புதிய குடியரசு அரசியல் சாசனம் ஒன்றைக் கொண்டு வந்ததாகும். அதுவரை காலமும் பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் அவர்கள் நியமித்த சோல்பரி பிரபு என்பவர் வரைந்த அரசியல் சாசனம்தான் நடைமுறையில் இருந்து வந்தது. ஒரு ஏகாதிபத்திய நாடு தனது காலனி நாடு ஒன்றுக்கு வரையும் அரசியல் சாசனம் எப்படியிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அந்த அடிமைச் சாசனத்தை மாற்றியமைக்க ஐக்கிய முன்னணி அரசாங்கம் முடிவு செய்தது.
அதன்படி அதுவரை காலமும் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் ஒரு நாடாக இருந்து வந்த இலங்கை அதிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு தன்னை ஒரு குடியரசு நாடாகப் பிரகடனம் செய்து கொண்டது. இலங்கையின் பெயர் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என மாற்றப்பட்டது. ஆங்கிலத்தில் இலங்கைக்கு சிலோன் (Ceylon) என பிரித்தானியர் வைத்த பெயர் சிறீலங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
Willam Gopallawa, who served as the last Governor General of Ceylon and became the first non-executive President, with Prime Minister Sirima Bandaranaike.
Willam Gopallawa, who served as the last Governor General of Ceylon and became the first non-executive President, with Prime Minister Sirima Bandaranaike.
இலங்கையை குடியரசாக்கியது பிரித்தானியர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே அவர்கள் அதற்கு எதிராக தமது செல்லப் பிள்ளைகளான பிற்போக்கு தமிழ் இனவாதிகளைத் தூண்டிவிட்டனர். அதன் அடிப்படையில் தமிழரசுக் கட்சி சட்டத்தை மீறி குடியரசு எதிர்ப்புப் போராட்டங்களை தமிழ் பிரதேசம் எங்கும் தொடங்கி நடத்தியது. தமது போராட்டத்துக்கு நியாயம் கற்பிப்பதற்காக அவர்கள் சொன்ன காரணம், முன்னைய சோல்பரி அரசியல் சாசனத்தில் சிறுபான்மை இனங்களுக்கு பாதுகாப்பளிப்பதற்காக சேர்க்கப்பட்டிருந்த 28ஆவது சரத்து புதிய குடியரசு அரசியல் சாசனத்தில் நீக்கப்பட்டுவிட்டதுடன், புதிய சாசனத்தில் பௌத்த மதத்துக்கு முதன்மை இடம் வழங்கப்பட்டுவிட்டது என்பதுமாகும். உண்மையில் இது போராட்டத்துக்குப் பதிலாகப் பேசித் தீர்த்திருக்க வேண்டிய பிரச்சினை.
இந்தப் பிரச்சினையுடன் இன்னொரு பிரச்சினையும் தமிழ் இனவாதிகளுக்குத் தீனி போட்டது. அதாவது, அரசாங்கம் பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் முறையொன்றை அறிமுகப்படுத்தியது. இந்த முறை இன அடிப்படையிலானது என ஆட்சேபம் தெரிவித்து தமிழரசுக் கட்சி தமிழ் மாணவர்களை தூண்டிவிட்டு அரச எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியது. ஆனால் அரசாங்கம் இதில் உள்ள தவறுகளை அமைச்சர் பீட்டர் கெனமன் தலைமையிலான குழு ஒன்றின் மூலம் ஆராய்ந்து களைந்துவிட்டது. இந்த தரப்படுத்தல் முறையைக் கொண்டு வந்தபோது கல்வி அமைச்சராக இருந்தவர் தமிழ் இனத்தை விட சிறுபான்மை இனமான முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த பதியுதீன் மஹ்மத் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் தமிழரசுக் கட்சி தனது அந்தரங்க நோக்கத்துக்கான போராட்டத்தை கைவிடவில்லை. தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை போன்ற அமைப்புகளை உருவாக்கி தமிழ் இனவாதத் தீயை பட்டிதொட்டி எங்கும் விசிறிப் பரப்பியது. தரப்படுத்தல் முறையை எதிர்ப்பதற்காக அதைக் கொண்டு வந்த கல்வியமைச்சர் பதியுதீனை எதிர்பதாகச் சொல்லிக்கொண்ட அவரை இனவாத அடிப்படையில் “முக்கால் மந்திரி மஹ்முத் ஒழிக” என்ற கோசம் எழுப்பப்பட்டது. குடியரசு எதிர்ப்பு, தரப்படுத்தல் எதிர்ப்பு என்ற இரட்டைக் குழல் துப்பாக்கி மூலம்தான் தமிழீழப் போராட்டத்துக்கு கால்கோள் இடப்பட்டது.
Marriage to S.W.R.D. Bandaranaike
எஸ்.டபிள்யு.ஆர்.பண்டாரநாயக்க சிறிமாவோ திருமணம் – ஒக்ரோபர் 03, 1940
பிற்போக்கு சக்திகள் ஐக்கிய முன்னணி அரசைக் கவிழ்ப்பதற்கு சிங்கள இனத்திலிருந்து இடதுசாரிப் போர்வையில் தேர்ந்தெடுத்த ஜே.வி.பியின் போராட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டாலும், தமிழ் இனத்திலிருந்து வலதுசாரி சக்திகள் மூலம் உருவாக்கப்பட்ட இனவாதப் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. அது 30 வருட உள்நாட்டுப் போராக உருமாறி பலத்த அழிவுகளுக்குப் பின்னர் 2009இல்தான் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
ஐக்கிய முன்னணி அரசாங்கம் செய்த இன்னொரு முக்கியமான சாதனை மலைநாட்டிலிருந்த வெளிநாட்டு – உள்நாட்டு தனியார் கம்பனிகளுக்குச் சொந்தமான 502 தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களைத் தேசியமயமாக்கியதும், காணி சீர்திருத்தத்தின் மூலம் காணி உச்ச வரம்பை 50 ஏக்கர் ஆக்கியதுமாகும். அந்தக் காலகட்டத்தில் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் 30 சதவீதம் தேயிலை, இறப்பர், தெங்குப் பொருட்கள் மூலம் கிடைத்து வந்தது. இலங்கை ஈட்டிய அந்நிய செலாவணியில் அதன் பங்கு 90 வீதமாகும்.
தேசியமயம் என்பது இலங்கைக்கோ ஏனைய புதிதாகச் சுதந்திரம் அடைந்த நாடுகளுக்கோ புதிய விடயம் அல்ல. இலங்கையைப் பொறுத்தவரை 1956இல் பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்தது முதல் அந்நியருக்குச் சொந்தமான நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டு வந்துள்ளன. அது அவரது மனைவி சிறீமாவோவின் 1960 – 64 ஆண்டுப் பதவிக் காலத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் அந்நியர் ஆதிக்கத்தில் இருந்த வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், துறைமுகம், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம், பெற்றோலியம், தனியார் பாடசாலைகள், பஸ் கொம்பனிகள் உட்பட பல நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டன. அந்த அடிச்சுவட்டைப் பின்பற்றியே பெருந்தோட்டங்களும் தேசியமயமாக்கப்பட்டன. (1977இல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கம் தேசியமயமாக்கப்பட்ட பெருந்தோட்டங்களை மீண்டும் தனியார்துறைக்கு தாரை வார்த்தது)
ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடன் இருந்த, வரலாறு விட்டுச் சென்ற இரண்டு பிரச்சினைகளுக்கு வெற்றிகரமாத் தீர்வு காணப்பட்டது. அதில் ஒன்று இலங்கையிலுள்ள மலையகத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவழி மக்களின் பிரச்சினை. (இவர்களது பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் 1948இல் சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தை அமைத்த டி.எஸ்.சேனநாயக்க தலைiமையிலான ஐ.தே.க. அரசாங்கம் பறித்து அந்த மக்களை நாடற்றவர்களாக்கியிருந்தது)
ஏற்கெனவே இந்தப் பிரச்சினை சம்பந்தமாக 1964 ஒக்ரோபர் 30இல் இலங்கைப் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கவுக்கும், அப்போதைய இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரிக்கும் இடையில் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா ஒரு குறிப்பிட்ட தொகை இந்திய வம்சாவழி மக்களை ஏற்றுக் கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக மிகுதியாக இருந்த மக்கள் சம்பந்தமாக 1974 யூன் 28இல் இலங்கைப் பிரதமர் சிறீமாவோவுக்கும், அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்திக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகி நாடற்றவர் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணப்பட்டது.
Daily Mirror - Aftermath Of Bandaranaike's Assassination ...
அது தவிர, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அமைந்திருந்த மனிதர்கள் வசிக்காத, அதேநேரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கச்சதீவு விவகாரத்துக்கும் சிறீமாவோ – இந்திரா பேச்சுவார்த்தையின் மூலம் 1974இல் இறுதித் தீர்வு காணப்பட்டது. இரு நாடுகளும் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் கச்சதீவு மீதான இலங்கையின் ஆதிபத்தியம் (உரிமை) உறுதி செய்யப்பட்டது. இந்த இரு ஒப்பந்தங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் இந்தியத் தலைமையுடன் சிறீமாவோ பண்டாரநாயக்க கொண்டிருந்த ஆழமான நட்புணர்வும், அவரது இராஜதந்திரமும் முக்கிய பங்கு வகித்தன என்றால் அது மிகையாகாது. அதேநேரத்தில் அமெரிக்கா சார்பாகவும், தமிழர் விரோதமாகவும் இருந்த ஜே.ஆர்ஜெயவர்த்தனவுக்கும் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் 1987இல் செய்து கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தம் சிறீமாவோ இந்தியத் தலைவர்களுடன் செய்த ஒப்பந்தங்களிலிருந்து தன்மையில் மாறுபட்டது என்பதை இங்கு அவதானிக்க வேண்டும்.
ஐக்கிய முன்னணி அரசாங்கம் தனது பதவிக் காலத்தில் செய்த இன்னொரு முக்கியமான சாதனை பத்திரிகை ஏகபோகத்தை தகர்த்ததாகும். இலங்கையில் ஐ.தே.க. குடும்பத்தைச் சேர்ந்த டி.ஆர்.விஜேயவர்த்தனவினால் ஆரம்பிக்கப்பட்ட ‘லேக்ஹவுஸ்’ (ஏரிக்கரை) நிறுவனம் மும்மொழிகளிலும் தினசரி, வார இறுதி, வாராந்த, மாதாந்த அடிப்படையில் சுமார் 16 பத்திரிகைகளை நடத்தி வருகின்றது. இந்த நிறுவனம் கடந்த காலங்களில் அரசியலில் ஐ.தே.கவுக்கு ஆதரவாக பல அரசியல் பிரச்சாரங்களைச் செய்து வந்துள்ளது. அவை தேசத்துரோகமானவையாகவும், மக்கள் விரோதமானவையாகவும் இருந்தன. எனவே இந்த நிறுவனத்தை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. குறிப்பாக இடதுசாரிக் கட்சிகள் இந்தக் கோரிக்கையை விடுத்து வந்தன.
1960இல் பதவிக்கு வந்த சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் லேக்ஹவுஸ் நிறுவனத்தை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கான மசோதா ஒன்றை 1964இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் லேக்ஹவுஸ் நிறுவனம் சில ஆளும் கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கியதின் மூலம் அந்த மசோதா ஒரு மேலதிக வாக்கால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இதனால் சிறீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் பதவி விலகி புதிய தேர்தல் ஒன்றுக்கு வழிவிட வேண்டியதாயிற்று. அந்த தோல்வி அடைந்த முயற்சி ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1973 நொவம்பர் 28ஆம் திகதி கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்றின் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
The Non-Aligned Summit in Colombo Sri Lanka in 1976 | Vernon Corea ...
The Non-Aligned Summit in Colombo Sri Lanka in 1976
ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு சர்வதேச அரங்கில் புகழ் ஈட்டித்தந்த இரண்டு நிகழ்வுகள் நடைபெற்றன. ஒன்று 1976ஆம் ஆண்டு ஓகஸ்ட் 16 முதல் 19 வரை கொழும்பில் நடைபெற்ற அணிசேரா இயக்கத்தின் 5ஆவது உச்சி மாநாடாகும். 1961இல் யூகோஸ்சிலோவாக்கியாவின் தலைநகர் பெல்கிரேட்டில் உருவாக்கப்பட்ட அணிசேரா இயக்கத்தின் ஸ்தாபக நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். அந்தக் கூட்டத்திலும் அப்போது இலங்கையின் பிரதமராக இருந்த சிறீமாவோ கலந்து கொண்டார். இலங்கையின் அந்தப் பங்களிப்பு காரணமாக 5ஆவது மாநாட்டை நடாத்தும் வாய்ப்பும் பெருமையும் இலங்கைக்குக் கிடைத்தது.
ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் இன்னொரு சர்வதேச சாதனை இந்து சமுத்திரம் சமாதானப் பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை ஐ.நாவில் கொண்டு வந்து 1973 டிசம்பர் 06இல் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றியதாகும். அதற்குக் காரணம், அந்தக் கட்டத்தில் வியட்நாமில் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்கா, டியாகோகார்சியாவில் இருந்த தனது இராணுவத் தளம் மூலம் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் தனது ஆதிக்கத்தை விஸ்தரிக்க முயன்று வந்தது. மறுபக்கத்தில், இந்திராகாந்தியின் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்த சோவியத் யூனியன் இந்தியாவுடன் சேர்ந்து ‘ஆசிய கூட்டு பந்தோபஸ்து’ என்ற போர்வையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் காலூன்ற முயன்று வந்தது.
இந்த இரண்டு மேல்நிலை வல்லரசுகளின் ஆதிக்கத்தை முறியடித்து அணிசேராக் கொள்கையை நிலைநாட்டவே இலங்கை இந்து சமுத்திரம் சமாதானப் பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐ.நாவில் முன்மொழிந்தது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தின் போது இலங்கையின் பிரதமராக இருந்த சிறீமாவோ நேரடியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
Mao Tse-tung and Sirima – Colombo Telegraph
சிறிமாவோவுடன் சீனத்தலைவர் மாவோ
தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் கூட, ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்தக் காலத்தில்தான், அதாவது 1974 ஓகஸ்ட் 01ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முதன்முதலாக பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கவால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழக உருவாக்கத்தில் பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் எவ்வித பங்களிப்பும் வழங்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழர்களின் வாழ்வில் பெரும் நிகழ்வாக அமைந்த இந்தப் பல்கலைக்கழக திறப்பு விழாவுக்கு வருகை தந்த பிரதமர் சிறீமாவோக்கு எதிராக தமிழரசுக் கட்சி வட மாகாணத்தில் இரு நாட்கள் துக்க தினம் அனுட்டித்து ஹர்த்தால் நடத்தியது.
அதற்கு காரணம், ‘தமிழ் மக்களுக்கு தமிழ் பல்கலைக்கழகம் வேண்டும்’ என்றும், ‘இல்லை, இல்லை தமிழ் மக்களுக்கு இந்துப் பல்கலைக் கழகம் வேண்டும்’ என்றும் தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் அரசியல் நோக்கத்துடன் கயிறு இழுவையில் ஈடுபட்டதால், அவர்களால் தமிழ் பகுதியில் ஒரு பல்கலைக்கழகத்தைக் கொண்டுவர முடியாமல் போய்விட்டது. உண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைக் கொண்டு வருவதில் முன்னின்று உழைத்தவர்கள் இடதுசாரிகளும், ஐக்கிய முன்னணி அரசில் அங்கம் வகித்த முற்போக்கு சக்திகளுமேயாவர்.
அதேநேரத்தில் இந்தக் காலகட்டத்தில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தேசிய ஒருமைப்பாடு மாநாடொன்றை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தியது. இந்த மாநாட்டில் இலங்கை முழுவதுமிருந்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க, எழுத்தாளர் சங்கம் தேசிய இனப் பிரச்சினை தீர்வு சம்பந்தமாகவும், நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்குவது சம்பந்தமாகவும் தயாரித்த 12 அம்சங்கள் அடங்கிய மகஜரைப் பெற்றுக்கொண்டு அதற்குச் சாதகமாக உரையாற்றினார்.
ஐக்கிய முன்னணி அரசாங்கம் பொதுவாக நாட்டின் நலன் கருதி பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், சில பாதகமான செயல்பாடுகள் அரசாங்கத்தின் முன்னேற்றத்துக்கு இடையூறாக அமைந்தன. அதில் முக்கியமானது 1973இல் ஏற்பட்ட உலகளாவிய எண்ணெய் நெருக்கடியாகும். இந்த நெருக்கடியால் இலங்கையில் பொருளதார நெருக்கடியும் உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டன. அந்த இக்கட்டான நேரத்தில் அரசியல் விரோதம் காரணமாக மேற்கு நாடுகள் இலங்கைக்கு உதவ மறுத்தன. சீனா மட்டும் தன்னாலான உதவியைச் செய்தது.
N M Perera - Alchetron, The Free Social Encyclopedia
டாக்டர் என்.எம்.பெரேரா
இந்தக் காலகட்டத்தில் அரசாங்கம் சில கட்டுப்பாடுகளையும் சிக்கன நடவடிக்கைகளையும் அமுல்படுத்தியது. அதனால் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவியதுடன் விலையும் பல மடங்கு அதிகரித்தது. பாண் வாங்குவதற்காக மக்கள் அதிகாலையிலேயே பேக்கரி வாசல்களில் காத்துக் கிடந்தனர். தேநீர்க் கடைகளில் மக்கள் சீனி போடாத ‘காட்ட’ என்ற வெறும் தேநீரை அருந்தும் நிலை உருவானது. அதனால் சாதாரண மக்கள் அரசின் மீது அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையை எதிர்க்கட்சியான ஐ.தே.க. தனக்குச் சாதகமாக நன்கு பயன்படுத்திக் கொண்டது.
இன்னொரு பக்கத்தில் தமிழ் பிற்போக்கு சக்திகள் அனைத்தும் ஓரணியாகத் திரண்டு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி 1976இல் வட்டுக்கோட்டையில் ஒரு மாநாட்டைக் கூட்டி தமிழீழ அரசு அமைக்கப் போவதாகப் பிரகடனம் செய்தனர். 1977 தேர்தலை மனதில் வைத்து போலியாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டாலும், அது தமிழ் மக்களைத் தேசிய வாழ்விலிருந்து மேலும் தனிமைப்படுத்தியது.
பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி என்பன வளர்ந்து வந்த நிலையில் அரசாங்கத்திற்குள் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, அனுர பண்டாரநாயக்க போன்ற வலதுசாரிகளின் கை ஓங்கியது. அவர்கள் இடதுசாரிக் கட்சிகளின் அமைச்சர்களின் செயல்பாடுகளில் தலையீடுகளை மேற்கொண்டனர். இதனால் ஒருபுறத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், மறுபுறத்தில் லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி என்பனவற்றுக்கும் இடையில் முரண்பாடுகள் வளர்ந்து இடதுசாரிக் கட்சிகள் இரண்டும் அரசை விட்டு வெளியேறின. இது ஐ.தே.கவுக்கும் தமிழ் பிற்போக்கு சக்திகளுக்கும் வாய்ப்பாக அமைந்துவிட்டது.
அதனால் சுதந்திரக் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் 1977 பொதுத் தேர்தலில் தனித்தனி அணிகளாகப் போட்டியிட்டன. அதன் காரணமாக, 1956 தேர்தலில் ஐ.தே.க. எட்டு ஆசனங்கள் மட்டும் எடுத்தது போல, 1977 தேர்தலில் சுதந்திரக் கட்சியும் எட்டே எட்டு ஆசனங்களை மட்டும் வென்றது. இடதுசாரிக் கட்சிகள் வரலாற்றில் முதல் தடவையாக ஆசனங்கள் எதுவும் கிடைக்காமல் நாடாளுமன்றத்துக்கு வெளியே விடப்பட்டன. மறுபக்கத்தில் ஐ.தே.க. ஆறில் ஐந்து பெரும்பான்மை பெற்று அடுத்து வந்த 17 வருடங்களுக்கு தனது தனது எதேச்சாதிகார ஆட்சியை ஸ்தாபித்துக் கொண்டது.
Source: Chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...