Saturday, 2 May 2020

தனிநபரும் சமூகமும் - தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆசிரியர் ஜி.எஸ்.வாசு


சில நாட்களுக்கு முன்பு ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் அதன் ஆசிரியர் ஜி.எஸ்.வாசு எழுதிய கட்டுரை பல காரணங்களால் கவனத்திற்குரியதாகும். நவீன தாராளமயக் கொள்கைகளின் ஆபத்தான விளைவை அம்பலப்படுத்திய அந்தக் கட்டுரையில் அடுத்து ஓர் ஒப்புதல் வாக்குமூலமும் உள்ளது. இந்தக் கொள்கைகளை ஆதரித்ததில் தானும் மற்றவர்களைப் போல் தவறுசெய்துவிட்டதாக அவர் கூறுகிறார். இந்தக் கொள்கைகளை வலுவாக ஆதரித்த  பத்திரிகை ஆசிரியரின் இந்த வார்த்தைகள் தனிப்பட்ட தல்ல. அவ்வாறு வெளிப்படையாகச் சொன்னதற்காக அவரைப் பாராட்டலாம்.

உண்மையில், கொரோனா காலம் பல அடையாளங்களைக் காண வழிகாட்டியுள்ளது. ‘மிகத் தகுதியுள்ளவர் மட்டுமே நிலைத்துநிற்க முடிகிற’ (சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட் – Survival of the Fittest) கொள்கையைத்தான் உலகமயம் பின்பற்றுகிறது. 2005-ல் கத்ரினா என்ற கொடும் புயல் அமெரிக்காவில் பெருத்த நாசத்தை ஏற்படுத்தியபோது, எதனால் கியூபாவில் மட்டும் மரண எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது என்ற கேள்வி அன்று பல ஆய்வுக் கட்டுரைகளுக்கும் விஷயப்பொருளாக இருந்தது
கத்ரீனா கொடும்புயல் அசுரவேகத்துடன் வீசுவதற்கான சாத்தியம் உள்ளதென்ற முன்னெச்சரிக்கை கிடைத்தவுடன் கியூபாவின் பிரதேசங்களிலெல்லாம் பிடல காஸ்ட்ரோவின் தலைமையில் சமூகப் பங்களிப்புடன் மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
கியூபாவின் மக்கள் தொகையில் 20 சதவீதம் மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டபோது 80 சதவீதம் மக்கள் மற்ற கியூபா மக்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டனர். அதேசமயம், அமெரிக்காவில் நியூஆர்லியன்ஸ் (New Orleans) மாகாணத்தில் 1800 பேர்  புயலில் சிக்கி மரணமடைந்தனர். நவீன தொழில்நுட்பத்திலும், ஆபத்துக் கால நிர்வகிப்பிலும் மிகத் திறமைபெற்ற – உலகில் மிகப் பெரிய இராணுவ பலமும் கொண்ட அமெரிக்காவில் எதனால் இவ்வளவு பெரிய ஆபத்து எற்பட்டது? நியூஆர்லியன்ஸில் மரணமடைந்தவர்களில் மிகப்பெரும்பாலானவர்களும் கறுப்பு இனத்தவர்களாவர். முன்னெச்சரிக்கை கிடைத்தவுடன் பணம் உள்ளவர்கள் அவரவர் வாகனங்களில் சொந்த செலவில் அங்கிருந்து தப்பினர். பணம் உள்ளவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான விரிவான சுதந்திரத்தை உறுதிசெய்கிற அதே கொள்கைதான் கொரோனா காலத்தில் அமெரிக்காவைக் கட்டுப்பாடற்ற நிலைமைக்குத் தள்ளிவிட்டது


எல்லாவற்றையும் சந்தையே தீர்மானிக்கும் என்பது தான் உலகமயக் கொள்கையின் அடிப்படை. அரசாங்கம் எல்லா விஷயங்களிலும் தலையிட வேண்டியதில்லை. பொது சுகாதாரப் பாதுகாப்பு, பொதுக்கல்வி, பொது விநியோகம் முதலானவையெல்லாம் அரசுகள் தவிர்க்க வேண்டியவையாகும். அவற்றில் மொத்த சமூகத்தையும் பார்க்கிற கொள்கைகளுக்கு இடமில்லை. தனிநபர்களின் பொருளாதார ரீதியிலான திறமைக்குச் சேவைகள் விட்டுக்கொடுக்கப்பட்டன.

அரசு என்பது தனியார்துறைக்கு வசதிகள் செய்து தருகிற ஓர் ஏற்பாடுதான். மொத்த சமூகத்திற்குமான உற்பத்தியாகவோ, நன்மையாகவோ சுகாதாரத்தையும் கல்வியையும் உலகமயக்கொள்கை காண்பதில்லை. இது சம்பந்தமான இரண்டு ஆங்கிலச் சொற்களை எழுத்தில் பார்க்க முடியும். பப்ளிக் குட்ஸ் (Public goods), பிரைவேட் குட்ஸ் (Private goods) என்பவையே அவை. தொண்ணூறுகள் வரை சுகாதாரப் பாதுகாப்பு என்பது மொத்த சமூகத்திற்கும் நன்மை செய்கிற உற்பத்திப் பொருளாகவே பார்க்கப்பட்டது. ஆனால், தாராளமயத்திற்கு வழிகாட்டிய ஆவணங்களில் உலக வங்கியும், ஐஎம்எஃப்-ம் (IMF) அது தனியார் உற்பத்திப் பொருள் என்றே (பிரைவேட் குட்ஸ்) அறிவித்தது. பொது நன்மையிலிருந்து தனியார் நன்மையாக அதைச் சுருக்கியது. இரக்கமற்ற சந்தைப் போட்டிக்குச் சுகாதாரத்துறை விட்டுக்கொடுக்கப்பட்டது.

செல்வந்தர்களுக்கு மட்டுமே சிறந்த சிகிச்சை
அமெரிக்காவில் எல்லா நவீன சிகிச்சை வசதிகளும் இருப்பதால்தானே பலரும் அந்த நிபுணத்துவச் சிகிச்சைக்குச் செல்கிறார்கள் என்ற கேள்வியைச் சிலர் கேட்பது உண்டு. அது உண்மைதான். தனிநபர்களுக்கோ அல்லது அவரது உடல் உறுப்புகளுக்கோ தேவையான பரிசோதனைகளிலும், மிகநவீன சிகிச்சைகளிலும் அவர்கள் (அமெரிக்கா) உலகில் முன்னணியில்தான் உள்ளனர். ஆனால், கொள்ளை நோய்களிலும், இயற்கைச் சீற்றங்களிலும் சமூகத்தின் மீதான மனிதநேயக் கண்ணோட்டம் என்பது அங்கே அந்நியமானது. “நாங்கள் அனைவரும் சேர்ந்து மக்களைப் பாதுகாப்பாக வேறு இடங்களுக்குக் கொண்டு சென்றபோது உங்களது அதிநவீன வசதிகளும் முழுத்திறனும் என்ன செய்து கொண்டிருந்தன?” என்ற பிடல் காஸ்ட்ரோவின் கேள்வி இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

வசதியுள்ளவர்களுக்கு பரிசோதனை வசதிகளும், வென்டிலேட்டர் உள்ளிட்ட உயிர்க்காப்பு உபகரணங்களும் அமெரிக்காவில் கிடைக்கும். வணிகத் தேவையும் வாங்குவதற்கான வசதியுமே முக்கியம். அது வாங்கத் திறனில்லாத சாதாரண மனிதர்களைக் கண்டுகொள்வ தில்லை. விலை குறைந்த உபகரணங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. லாபம்தான் சந்தையை நடத்துகிறது. முதலாளித்துவத்திற்கு வென்டிலேட்டர் என்பது உயிர்க்காப்பு உபகரணத்திற்கு அப்பால் லாபம்  உண்டுபண்ணுகிற சரக்கு மட்டும்தான். எல்லா சமயங்களிலும் தேவைப்படாத சரக்குகள் அவை. உயிர்க்காப்பு மருந்துகளில் அமெரிக்காகூட இந்தியாவைச் சார்ந்திருப்பது மருந்து உற்பத்தியில் அமெரிக்காவின் திறமைக் குறைவு அல்ல.
பல சமயங்களிலும் வருகிற தொற்று நோய்க்காக மருந்து உற்பத்தி செய்து பாதுகாத்து வைப்பது  என்பது, முதலாளித்துவத்தைப் பொறுத்தவரை அவை தேங்கிக்கிடக்கிற சரக்கு மட்டுமே – அதுவும்  பேட்டன்ட் முடிந்த,  ஏகபோக வாய்ப்பில்லாத மருந்தாகும்போது. ஆயிரக்கணக்கானோர் மாண்டுவிடுவார்களோ என்கிற பதைப்புடனான கேள்வியை ராஜாவாகிய சந்தை கேட்பதில்லை.

மனிதனின் கண்டுபிடிப்புகளின் நன்மை சமூகம் முழுவதற்கும் கிடைக்க வேண்டும் என்ற சிந்தனை அவர்களுக்கு முக்கியமல்ல. செலவு குறைந்த நோய் எதிர்ப்புக்கு முதல்முக்கியத்துவம் வழங்காததும் – செலவு அதிகமாகிற நோய்ச் சிகிச்சைக்கு முதல்முக்கியத்துவம் வழங்குவதும் லாப நோக்கமேயாகும்.

“பணம் தருவதற்கு முடியவில்லை என்பதன் பேரால் ஒருவருக்குக்கூட ஆரோக்கியப் பாதுகாப்பு மறுக்கக்கூடாது” என்று அறிவித்த போரே கமிட்டியின் அறிக்கையைச் சுதந்திரத்திற்கு முன்பு அங்கீகரித்த நாடுதான் இந்தியா. 1946-ல் இந்த அறிக்கைக்குப் பிறகு சுதந்திர இந்தியாவில் ஏராளமான கமிஷன்கள் அமைக்கப்பட்டுவிட்டன. ‘அனைவருக்கும் ஆரோக்கியம்’ என்ற முழக்கம் எழுப்பிய உலக சுகாதாரக் குழுவின் 1978-ஆம் ஆண்டு அல்மாட்டி மாநாட்டின் அறிவிப்பில் இந்தியாவும் கூட்டுச்சேர்ந்திருந்தது. இதை அமுல்படுத்துவதில் அரசுக்கு முக்கியப் பொறுப்பு உண்டு என்றும் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக 1983-ல் சுதந்திர இந்தியாவின் முதலாவது சுகாதாரக் கொள்கை அறிவிக்கப்பட்டது.  அரசின் முன்முயற்சியுள்ள ஏற்பாடுகள் மூலமாக 2000-மாவது ஆண்டில் அனைவருக்கும் ஆரோக்கியம் என்கிற இலட்சியம் நிறைவேறும் என்று அறிவிக்கப்பட்டது.

விலைகொடுத்து வாங்கவேண்டிய ஆரோக்கியம்
1990-ல் உலக சுகாதார நிறுவனம் ‘ஆரோக்கியத்துறை யில் முதலீடு செய்யுங்கள்’ என்ற அறிவிப்புடன் தாராளமயத்தின் நகலை அறிவித்தது. சமுதாய ரீதியான உற்பத்திப் பொருளிலிருந்து விலை கொடுத்து வாங்க வேண்டிய சரக்காக ஆரோக்கியப் பாதுகாப்பை மாற்றியது. அரசு வாபஸ் பெறுவதுடன் தனியார் மூலதனத்திற்கு வசதிகள் ஏற்படுத்துகிற புதிய உத்தரவாதம் செய்ய வேண்டு மென்று அறிவித்தது. அரசு ஏற்பாடுகள் பயனுள்ளதாக இல்லையென்ற பிரச்சார வேலை தீவிரமடைந்தது. தனியார் துறையின் வாய்ப்பை அது உயர்த்திக் காட்டியது. கொரோனா காலத்தில் இதை மதிப்பீடு செய்வது அவசியமானதாகும்.

இதன் தொடர்ச்சியாக 2002-லும், 2017-லும்  மத்திய அரசின் சுகாதாரக் கொள்கை இதை நடைமுறைப் படுத்துவதற்கான சூழலை உருவாக்கியது. மருத்துவமனையை ஒரு தொழிலாக அறிவித்தது. நூறு சதவீத அந்நிய மூலதனத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டது. மருந்துக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. பேட்டன்ட் சட்டம்  திருத்தி எழுதப்பட்டது. தனியார் துறைக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. தாராள விதிகளுடன் கடன் வழங்குவதை உறுதிசெய்கிற கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. பொதுசுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப் பட்டது. இன்சூரன்ஸ்  ஏற்பாடுகள் தனியார் துறையை வலுப்படுத்துவதற்கான கருவிகளாயின.

மொத்த சமூகத்தையும் காணாத கொள்கை என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது என்று சிலர் இப்போது மறு சிந்தனை செய்கிறார்கள். 2019-ல் உலக வறுமைக் குறி யீட்டு எண்ணின்படி 117 நாடுகளில் 102-வது இடத்தில் இந்தியா உள்ளது. 6 மாதத்திற்கும் 23 மாதத்திற்குமிடை யிலான வயதுக் குழந்தைகளில்  9. 6 சதவீதக் குழந்தைகளுக்கு மட்டுமே ஆரோக்கிய அளவீட்டின்படி ஊட்டச்சத்து உணவு  கிடைக்கிறது. 2019-ஆம் ஆண்டின் ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி 119 பெரும் கோடீஸ்வரர்கள் உள்ள இந்திய நாட்டில் தான் இந்த நிலைமை. தனிநபர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் செல்வத்தை அள்ளித் தருகிற கொள்கை ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்துகிறது. பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு இந்தியாவின் பட்ஜெட்டை விடப் பெரிது. ஜவுளி ஆலையின் உயர் நிர்வாகிக்கு இப்போது கிடைக்கிற சம்பளம் சாதாரண தொழிலாளிக்குக் கிடைக்க வேண்டுமென்றால் அந்தத் தொழிலாளி 941 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிவரும்! எடைக்  குறைவினால் மரணமடைகிற கர்ப்பிணிகளின் எண்ணிக்கையிலும் அவமானமான இடத்தையே இந்தியா தொடர்கிறது.

கையில் பணம் இல்லாத காரணத்தால் ஐந்தில் ஒருவர் தங்களுக்குச் சிகிச்சை வேண்டாம் என்று அவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். நாட்டில் 16 சதவீத ஆரம்ப சுகாதார மையங்கள் மட்டும்தான் இந்தியத் தரத்திலாவது உள்ளன. சிறப்பான ஆரோக்கியம் கிடைப்பதில் உலகில்  இந்தியா 145வது இடத்தில் உள்ளது. மறுபக்கம் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் அதிகரிக்கின்றன. சுகாதாரத் துறையில் ஒரு குடிமகனுக்கு – ஒருகுடிமகளுக்கு அரசாங்கம் ஒதுக்குவது ஆண்டுக்கு வெறும் 1112 ரூபா யாகும். இது, கார்ப்பரேட் மருத்துவமனை நிபுணத்துவ மருத்துவரின் ஒருமுறை கன்சல்டேஷன் ஃபீஸ் மட்டுமே!

எவ்வளவு காலம் இந்த முரண்பாடு தொடர முடியும் என்கிற கேள்வியை இந்தக் கொரோனா காலம் பலமாக  எழுப்புகிறது. சந்தை ராஜாவாகத் தொடருகிற கொள்கைகள் – ஆரோக்கியத்தை ஒரு சரக்காகக் காணுகிற கொள்கைகள் மாறவேண்டும். சமூகம் முழுமைக்கும் நன்மை செய்கிற கொள்கைக்காக விரிவான ஓர் ஒன்றுபட்ட  நிலைபாட்டைப் பின்பற்ற வேண்டுமென்று இந்தக் கொரோனா காலம் கோருகிறது.


–தமிழில்: தி.வரதராசன்
நன்றி: தேசாபிமானி – மலையாள நாளிதழ் (16.4.2020)

Courtesy: Chakkaram.com ஏப்ரல் 27, 2020

No comments:

Post a comment

The lessons of the 1953 mass uprising (hartal) in Sri Lanka By Saman Gunadasa

2 September 2020 A mass semi-insurrectionary uprising, popularly known as the “hartal” (a strike coupled with a general stoppage of work and...