எதிர்க்கட்சியினரின் நோக்கம்தான் என்ன?


கொழும்பு ராஜகிரியாவில் உள்ள தேர்தல் ஆணையத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சர்வ கட்சி கூட்டமொன்றில் பங்குபற்றிய எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை காலவரையறையின்றி ஒத்தி வைக்கும்படி கோரியிருக்கின்றனர். கொரோனா நோய்த் தாக்கம் உலக நாடுகளை மட்டுமின்றி இலங்கையையும் ஆட்டிப்படைத்து வரும் நிலையில் எதிர்க்கட்சியினரின் கோரிக்கை நியாயமானது போலவே பலருக்கும் தோன்றும். அதில் உண்மையும் இல்லாமல் இல்லை.
ஏற்கெனவே பிரதமர் மகிந்த ராஜபக்ச அண்மையில் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியொன்றில், ‘எமக்கு தேர்தல் முக்கியமல்ல, கொரோனாவை கட்டுப்படுத்துவதே முக்கியம்’ என கூறியிருந்தார். அத்துடன் தேர்தலை நடத்துவதா விடுவதா, அப்படி நடத்துவதாயின் எப்பொழுது நடத்துவது போன்ற விடயங்களை அரசாங்கம் அல்ல, தேர்தல் ஆணையமே தீர்மானிக்க வேண்டும் எனவும் தெளிவுபடுத்தியிருந்தார்.
தேர்தலை காலவரையின்றி ஒத்தி வைக்கும்படி கோரும் எதிர்க்கட்சியினர், அதேநேரத்தில் கலைக்கப்பட்ட பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும்படியும் கோரியுள்ளனர். இந்தக் கோரிக்கை அவர்களது தேர்தலைக் காலவரையின்றி ஒத்தி வைக்கும்படி விடுத்த கோரிக்கைக்கு முரணாக உள்ளது.
மறுபக்கத்தில், இந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு வரும்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மகிந்த விடுத்த அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.


அரசியல் சாசனப்படி கலைக்கப்பட்ட பாராளுமன்றத்துக்கான தேர்தலை நடத்தாது காலவரையின்றி ஒத்திவைக்க முடியுமா என்பது தெரியவில்லை. அதேபோல கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியுமா என்பதும் தெரியவில்லை. அதுபற்றிக் கருத்துச் சொல்லும் அளவுக்கு நாம் அரசியல் பண்டிதர்கள் அல்ல. அதுபற்றி அரசியல் சாசன நிபுணர்கள் அல்லது நீதிமன்றம்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
ஆனால் எதிர்க்கட்சியினர் விடுக்கும் கோரிக்கைகளைப் பார்த்தால் கொரோனா தாக்கத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைப் பயன்படுத்தி நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தவும், அதன் மூலம் அரசியல் இலாபம் பெறவும்; முயல்கின்றனரோ என்ற சந்தேகம்தான் எழுகின்றது.
2019 நொவம்பர் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியினருக்கு ஏற்பட்ட படுதோல்வியிலிருந்து அவர்கள்; மீள முடியாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அடுத்து நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறாமல் பார்த்துக் கொள்வது என்பதே அவர்களது போராட்டமாக இருந்தது. இந்த நிலையில்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது.
ஆனால், கொரோனா நோய் இலங்கையையும் தாக்கியதால் குறித்த தேதியில் தேர்தல் நடத்தாது ஒத்தி வைக்கப்பட்டது. தேர்தலை ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையமே. ஆனால் தேர்தலை ஒத்தி வைத்தது அரசாங்கம்தான் என போலிப் பிரச்சாரத்தை மேற்கொண்ட எதிர்க்கட்சியினர், ‘அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பதன் மூலம் ஜனாதிபதி ஆட்சியின் மூலம் தனிநபர் சர்வாதிகார ஆட்சியை நடத்த முற்படுகிறது’ என கூப்பாடு போட்டனர்.
இந்த நிலையில் கொரோனா நோய் நாடு முழுவதும் வேகமாகப் பரவத் தொடங்கியது. இது எதிர்க்கட்சியினருக்கு உள்ளுர மகிழ்ச்சியை அளித்தது. ‘இத்தோடை கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சி சரி’ என அவர்கள் குதூகலித்தனர்.
ஆனால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவும், அவரது தலைமையிலான காபந்து அரசாங்கம் முழுமூச்சாக கொரோனாவைக் கட்டுப்படுத்தும் செயலில் இறங்கியது. சகல அரச ஊழியர்களும், முப்படையினரும், அரச வளங்களும் அந்த செயல்பாட்டிற்காக முழுமையாகப் பயன்படுத்தப்பட்டனர். அதன் காரணமாக மிகவும் வளர்ச்சி அடைந்த மேற்கு நாடுகளை விடவும் சின்னஞ்சிறிய இலங்கை இந்த கொடிய நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியை நிலைநாட்டியது.
இலங்கையின் இந்த சாதனையை பல உலக நாடுகளும், உலக சுகாதார அமைப்பும் கூட பாராட்டத் தவறவில்லை. ஒரு கட்டத்தில் அரசின் முயற்சியை முன்னைய அரசாங்கத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரியவும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கூடப் பாராட்டினர். அதுமட்டுமின்றி, கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவதில் மேற்கொண்ட முயற்சிகளை அனைத்து இலங்கை மக்களும் இன வேறுபாடு இன்றிப் பாராட்டியதுடன், அரசின் முயற்சிகளுக்குப் பூரண ஒத்துழைப்பும் வழங்கினர்.
ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிர்க்கட்சியினர் எந்தவிதமான ஆக்கபூர்வமான பங்களிப்புகளும் வழங்கவில்லை. வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டுமே இருந்தனர்.
இந்தச் சூழ்நிலையில்தான் தேர்தல் ஆணையம் மீண்டும் கூடி நிலைமையை ஆராய்ந்ததுடன், முன்னைய திகதியை மாற்றி யூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது எனத் தீர்மானித்தது. இப்படியான ஒரு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் எடுத்ததிற்குக் காரணம், முன்னர் தீர்மானித்த திகதியில் தேர்தல் நடத்த முடியவில்லை என்றால் இன்னொரு திகதியை அறிவிக்க வேண்டும் என்ற சட்ட விதி காரணமாகவே என அரசியலமைப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் எதிர்க்கட்சியினரின் ராகம் மாறத் தொடங்கியது. முன்னர் அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் சர்வாதிகார ஆட்சி நடத்த முற்படுகிறது எனக் கூச்சல் போட்டவர்கள், இப்பொழுது அரசாங்கம் கொரோனா நோய்க்கு மத்தியில் தேர்தலை நடத்தி அரசியல் ஆதாயம் (தேர்தல் வெற்றி) பெற முயற்சிக்;கிறது என ஒப்பாரி வைக்க ஆரம்பித்துள்ளனர். அதனால் தேர்தலை கால வரையறையின்றி ஒத்தி வைக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் இறைஞ்ச ஆரம்பித்துள்ளனர்.
இதற்குக் காரணம் மக்கள் மீதும் நாட்டின் மீதும் உள்ள பற்றுதல் அல்ல. தேர்தல் நடந்தால் தாம் முன்னர் எதிர்பார்த்ததிலும் பார்க்க மோசமாகத் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயம்தான். ஏனெனில், கொரோனா நோய் ஏற்படுவதற்கு முன்னர் இருந்த நிலவரப்படி தேர்தல் ஒன்று நடந்தால் கோத்தபாயவின் அரசாங்கம் நிச்சயம் வெற்றியீட்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமா என்ற சந்தேகமும் இருந்தது.
ஆனால் கோத்தபாய அரசாங்கம் கொரோனாவை கையாண்ட முறை காரணமாக நாட்டு மக்கள் மத்தியில் இப்பொழுது அது பெரும் செல்வாக்கைப் பெற்றுவிட்டது. அதன் காரணமாக இன்றைய சூழ்நிலையிலோ அல்லது கொரோனா முழுமையாகக் கட்டுப்பாட்டில் வந்த பின்னரோ, எப்பொழுது தேர்தல் நடந்தாலும் கோத்தபாய அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவது நிச்சயம் என்ற நிலை உருவாகிவிட்டது. அதனால்தான் பொதுத் தேர்தலைக் கால வரையின்றி ஒத்தி வைக்கும்படி எதிர்க்கட்சியினர் அடம் பிடிக்கின்றனர்.
அவர்களது வேண்டுகோளில் ஒரு முக்கியமான விடயத்தை அவதானிக்க வேண்டும். அதாவது, கொரொனா நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் தேர்தலை நடத்துங்கள் என அவர்கள் கோரவில்லை. தேர்தலை கால வரையின்றி ஒத்தி வைக்கும்படியே கோருகின்றனர். அப்படியானால் இனிமேல் தேர்தலே வேண்டாமா?
உண்மை என்னவெனில், இனி எப்பொழுது தேர்தல் நடந்தாலும் அரசாங்கக் கட்சிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைப்பது நிச்சயம் என்பது எதிர்க்கட்சியினருக்குப் புரிந்துவிட்டது. அப்படி அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமாயின் அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு கொண்டு வருவது உட்பட தனக்குத் தேவையான அனைத்தையும் செய்ய முடியும். அப்படி நடந்தால் அது எதிர்க்கட்சிகளுக்கு சாவுமணி அடித்ததாக முடிந்துவிடும். அதைவிட தேர்தல் நடவாமல் இருந்தாலும் பரவாயில்லை எனக் கருதுகின்றனர் போலும்.
அதற்குப் பதிலாக கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டும்படி அவர்கள் கோருவதும் விடயத்தோடுதான். அது என்னவெனில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடையாது. இந்தச் சூழ்நிலையில் அரசாங்கம் நாடாளுமன்றத்தைக் கூட்டி ஏதாவது ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முயன்றால் எதிர்க்கட்சிகளால் அதைச் சுலபமாகத் தோற்கடிக்க முடியும். அதை வைத்துக்கொண்டு அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரலாம். அதன் மூலம் ஜனாதிபதி கோத்தபாய அரசாங்கம் ஒன்று இல்லாமல் ஆட்சியைத் தொடரவேண்டி இருக்கும்.
அப்படி ஒரு அரசாங்கம் இல்லாத நிலை உருவானால் நாட்டில் குழப்பம் தோன்றி அரசியல் ஸ்திரம் அற்ற நிலை உருவாகும். அது அராஜகத்துக்கும் அந்நியத் தலையீட்டுக்கும் இட்டுச் செல்லும். இந்த நிலையை எதிர்பார்த்தே எதிர்க்கட்சியினர் காய்களை நகர்த்தி வருகின்றனர். ஆனால் அவர்களது கனவு பொரிமாத்தோண்டியின் கதையாக முடிவது நிச்சயம்.
உலகில் வல்லவனுக்கும் ஒரு வல்லவன் இருப்பான் என்பதை சில பேராசை பிடித்த மனிதர்கள் மறந்து விடுகின்றனர்.
மூலம்: வானவில் இதழ் நூற்றுபன்னிரெண்டு -20

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...