பொது இடங்களில் துப்புவதற்கு இனியேனும் இந்தியச் சமூகம் விடை கொடுக்கட்டும்

கரோனாவின் வரவுக்குப் பிறகு மக்களுக்கு மட்டுமல்ல; அரசுக்கும் பொது ஆரோக்கியச் சிந்தனையில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்று அரசு அறிவுறுத்தியிருப்பதும், அப்படி மீறித் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியிருப்பதும் மிகவும் வரவேற்கத்தக்கது. எச்சில் மூலம் வியாதிக் கிருமிகள் பரவும் என்பது அடிப்படை அறிவியல். ஆனால், எச்சிலைக் கண்ட இடங்களிலும் கண்டபடி துப்புகிறவர்களும், அதைத் தடுக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்த்திருப்பதும் நம் நாட்டின் தேசிய கலாச்சாரங்களாக மாறிவிட்டன.
கரோனா தொற்றைத் தவிர்க்க வாயையும் மூக்கையும் மூடும் பழக்கத்தை வரவேற்றுள்ள மருத்துவர்கள், இது அந்த நோயை மட்டுமல்ல; காசநோயையும் பரவாமல் கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். காசநோய் மட்டுமல்ல; எத்தனையோ தொற்றுநோய்கள் இருமல், தும்மல், சளி, எச்சில், சிறுநீர் வழியாகப் பரவக்கூடியவை. இவை காற்றில் பரவும்போது மட்டுமல்லாமல் தரையில் விழுந்து காயும் முன்னர் வெறுங்காலோடு ஏதோ சிந்தனையில் நடக்கும் ஏழை எளியவர்கள், பெண்கள், சிறு குழந்தைகளைத்தான் பீடிக்கும். பொது இடங்களில் அசுத்தம் செய்யக் கூடாது என்று சட்டம் இருந்தாலும் பொது சுகாதாரத் துறை, காவல் துறை இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் இவையெல்லாம் புறக்கணிக்கப்பட்டதாக ஆகிவிட்டன.


சமூகத்தில் படித்தவர்கள் முதலில் இந்தப் பழக்கத்தை நிறுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், லாகிரி வஸ்துகளின் உற்பத்தி, விற்பனை ஆகியவை இங்கே பெரும் கட்டுப்பாட்டுக்குள் இருந்திருக்கும். இனியேனும் அந்நிலை நோக்கி நாம் நகர வேண்டும். பேருந்துகளிலும் ரயில்களிலும் திரையரங்குகளிலும் புகைபிடிப்பது இப்போது அடியோடு ஓய்ந்துவிட்டது.
இதைப் போல எச்சில் துப்பும் அநாகரிகத்தையும் நிறுத்த எல்லோருமாகச் சேர்ந்து முயற்சிக்க இந்தத் தடை உரிய வகையில் செயல்படுத்தப்படுவதே வழிவகுக்கும். தன்னையறியாமல் இருமலோ தும்மலோ வந்தாலும் தம் கையாலோ புடவைத் தலைப்பாலோ கைக்குட்டையாலோ மூக்கையும் வாயையும் அனிச்சைச் செயலாக மூடிக்கொள்ளும் வழக்கத்தை நம் சமூகம் கற்க வேண்டும். மீறுவோரை உடனுக்குடன் பிடித்து அபராதம் விதிப்பதுடன் அந்த இடத்தைப் பலர் முன்னிலையிலேயே அவர்களைச் சுத்தப்படுத்த வைக்க வேண்டும். பொது இடங்களில் துப்பும் பழக்கம் 2020 உடன் இந்தியச் சமூகத்திலிருந்து விடைபெறட்டும்.

Courtesy: the Hindu (Tamil) 21 May 2020


No comments:

Post a Comment

The UK and the Pandora papers: A cesspit of the super-rich by Thomas Scripps

  No one in the UK needed to be told that the Johnson government is beholden to the interests of the super-rich. Indeed, it is a government ...