அரசு சொன்னதைக் கேட்கும் மக்கள்தான் கேரளத்தின் வரம்!- கேரள செவிலியர் பாத்திமா பேட்டி

kerala-nurse-fathima-interview

Photo: courtesy : The Hindu 
காசர்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் குழுவில் இருக்கிறார் செவிலியர் பாத்திமா. கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி செவிலியரான இவர், அங்கு கரோனா நோயாளிகள் இல்லாததால் சிறப்புப் பணியாக காசர்கோடுக்கு அழைக்கப்பட்டவர். கோட்டயத்தில் நோயாளிகளை அடையாளம் காண வேண்டிய தொடக்கநிலை சோதனைப் பிரிவில் இருந்தார். வார்டுப் பணியைவிட அபாயகரமான இந்தப் பணி தந்த அனுபவத்தோடு இப்போது கரோனா வார்டில் பணிபுரியும் பாத்திமாவுடன் பேசினேன்.


கரோனா சிகிச்சையில் உங்கள் பங்களிப்பு என்னவாக இருக்கிறது?
என்னுடைய வேலை கரோனா வார்டில் அல்ல. வார்டில்கூட கரோனா நோயாளியுடன் இருக்கிறோம் என்பது தெரியும். நோயாளிகளுக்கும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற புரிதல் இருக்கும். நான் காய்ச்சலோடு வருபவர்களைச் சோதிக்கும் குழுவில் இருந்தேன். மார்ச் 27 வரை அந்தக் குழுவில்தான் இருந்தேன். மருத்துவமனையின் விடுதியிலேயே தங்கிப் பணியாற்றினேன். கணவர் ஷமு, இரண்டாம் வகுப்பு படிக்கும் மகன் முகமது பஹிமையும் மனம் தேடிக்கொண்டே இருக்கும். கணவர் தினமும் வீடியோ கால் செய்து மகனைக் காட்டுவார். பேசி முடிக்கும்போது, ‘மிஸ் யூ அம்மா’ என்று மகன் சொல்லும்போது மனம் பாரமாகிவிடும். சக செவிலியருக்கு நோய் தொற்றியதால் 14 நாட்கள் தனிமைப்படுத்தவும் பட்டேன். 35 நாட்களுக்குப் பின்புதான் வீடு திரும்பினேன். இப்போது இரண்டாம் கட்டமாக காசர்கோடில் கரோனா வார்டில் பணியில் இருக்கிறேன்.
கரோனா பணிக்கு எப்படித் தயாரானீர்கள்?
சீனாவில் கரோனா வந்தபோதே எங்களுக்கு மருத்துவப் பயிற்சி கொடுக்கத் தொடங்கியிருந்தார்கள். கரோனா அறிகுறி, வெளிநாட்டு பயணத் தொடர்பு இருந்தவர்களை சந்தேகத்தோடே அழைத்துவந்தார்கள். நாங்கள் அப்படி வரும் ஒவ்வொருவரையுமே ‘கரோனா பாசிட்டிவ்’ நபராகத்தான் அணுகினோம். சமூக இடைவெளி, தகுந்த பாதுகாப்பு உடை, முகக்கவசம் அணிந்ததோடு, அடிக்கடி கைகளையும் கழுவித்தான் பணியைத் தொடர்ந்தோம். ‘நெகட்டிவ் ரிசல்ட்’ வந்தவர்களையும்கூட இனிவரும் நாட்களில் எப்படி இருக்க வேண்டும் என வகுப்பெடுத்தே அனுப்பினோம். அனைவரையும் நோயாளியாகவே அணுகுவதே சிக்கலான ஒன்றுதான். அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை அவர்களுக்குக் கடத்த அதீத அன்பை, சமூக இடைவெளியோடு செலுத்த வேண்டி இருந்தது.
தனிமைப்படுத்தப்பட்ட நாள்கள் எப்படி நகர்ந்தன?
ஓடி ஓடி வேலை செய்துவிட்டுத் திடீரென ஒரு இடத்தில் தனியாக இருப்பது வலிக்கத்தான் செய்தது. இசையோடு கூடிய பாடல்கள் கேட்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். பாடவும் செய்வேன். தனி அறையிலும் இதைத் தொடர்ந்தேன். புத்தக வாசிப்பு, உறவுகள், நண்பர்களை செல்பேசியில் அழைப்பது என நேரம் நகர்ந்தது. தனித்திருத்தல் பழைய உறவுகளைப் புதுப்பித்துக் கொடுத்தது. நாளுக்கு நான்கைந்து முறை கணவரிடமிருந்து வரும் செல்பேசி அழைப்புகளும் தனித்திருத்தலை வீழ்த்தியது. கூடவே, நிறைய பேரை செல்பேசியில் அழைத்து கரோனா விழிப்புணர்வூட்டவும் இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டேன்.
கோட்டயத்திலிருந்து காசர்கோடு மருத்துவமனைக்கு வந்தது எப்படி?
கோட்டயத்தில் கரோனா நோயாளிகள் அனைவரும் குணமடைந்த பின்பு, அங்கேயே பொதுப் பிரிவில் வேலைசெய்தோம். அதேநேரம், காசர்கோடில் தொற்றின் எண்ணிக்கை அதிகம் இருந்தது. கரோனா களத்தில் பணியாற்றிய அனுபவத்தை வைத்துக்கொண்டு மாநிலத்தின் ஒரு பகுதியில் அதன் தீவிரத்தை வேடிக்கை பார்க்க முடியுமா? எங்கள் குழுவே தன்னார்வமாகக் கேட்டுத்தான் காசர்கோடு வந்தோம். பத்து மருத்துவர்கள் உட்பட 25 பேர் கொண்ட குழுவினர் 15-ம் தேதியிலிருந்து இங்கே பணியாற்றுகிறோம்.
கேரளம் கரோனாவை வீழ்த்தக் காரணமான அம்சங்களாக எதைச் சொல்வீர்கள்?
அரசின் தெளிவான திட்டமிடல் இதைச் சாத்தியமாக்கியிருக்கிறது. மருத்துவம், சுகாதாரத் துறையைத் தாண்டி பொதுமக்களும் இதற்குக் காரணம். அரசு ஒரு விஷயத்தைச் சொன்னால் அதை அப்படியே கடைப்பிடிக்கும் மக்கள் கேரளத்தின் வரம். ஒருவருக்குக்கூட நம்மிடமிருந்து நோய் தொற்றக் கூடாது எனப் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் இருந்த மனநிலை, கேரளத்தின் தன்னார்வலர்களின் பங்களிப்பு என நிறைய சொல்லலாம்.
- என்.சுவாமிநாதன், தொடர்புக்கு: swaminathan.n@hindutamil.co.in
Courtesy: The Hindu Tamil 23 April 2020


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...