Friday, 8 May 2020

நம் சகோதரர்களுக்காக ரத்தம்கூடக் கொடுக்க மாட்டோமா என்ன?- பிளாஸ்மா தெரபிக்கு ஆள் திரட்டும் ஹமீதுதீன்

28 Apr 2020 
என்.சுவாமிநாதன்

hameedudeen-interview

 Prof. Hameeduddin Photo: Courtesy. The Hindu


இந்தியாவில் கரோனா தொற்று தொடக்கத்தில் அதிகரிக்க டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாஅத் மாநாடும் ஒரு காரணமாகிப்போனது. விளைவாக, அந்த மாநாட்டில் பங்கேற்றோரும் அந்த அமைப்பும் கடும் தூற்றலுக்கு ஆளானார்கள். தொடர்ந்து, அரசு சொல்லியபடி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு குணம் அடைந்த பலரும் இன்று கரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் தங்களை ஒப்புக்கொடுப்பவர்களாக மாறியிருக்கின்றனர். அதாவது, கரோனா தொற்றுக்கான சிகிச்சையில் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் ‘பிளாஸ்மா தெரபி’க்கு ‘பிளாஸ்மா’ தானம் அளிப்பதில் இன்றைக்கு தப்லிக் ஜமாஅத் அமைப்பினரே முன்வரிசையில் நிற்கின்றனர். இப்படியான தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பதில் தீவிரமாகச் செயல்பட்டுவருபவரான ஹமீதுதீனுடன் பேசினேன். ‘என் அடையாளத்தை மறைக்காமலேயே பேட்டியை வெளியிடுங்கள்; கரோனா நாம் கடந்துவரக்கூடிய ஒரு சங்கடம்தானே தவிர, அச்சப்படவோ வெறுக்கவோ ஏதும் இல்லை என்பதை மக்கள் உணரட்டும்’ என்று உற்சாகமாகப் பேசினார்.


நீங்கள் ஒரு பேராசிரியர். ஆனாலும் எப்படி கரோனா பரவிக்கொண்டிருக்கும் நாட்களில் தப்லிக் மாநாடு போன்ற ஒரு கூடுகையில் பங்கேற்றீர்கள்?
தப்லிக் ஜமாஅத் ஆன்மிகத்தோடு இணைத்துக்கொண்ட ஒரு அமைப்பு. அரசியல் சார்ந்துகூட அவர்கள் கருத்துச் சொல்ல மாட்டார்கள். நான் ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன் அல்லவா, இப்படிப் பல்வேறு துறைகளிலும் இருப்பவர்கள் இறை நம்பிக்கையோடு பங்கேற்கும் சேவையாற்றும் ஒரு அமைப்புதான் அது. நாங்கள் ஊரிலிருந்து கிளம்பி டெல்லிக்குப் போன பின்புதான் ‘மக்கள் ஊரடங்கு’ அறிவிப்பைப் பிரதமர் அமல்படுத்தினார். அதாவது, அதற்குப் பின்னர்தான் கரோனாவின் தீவிரமே நாட்டுக்குப் புரிந்தது. இதைச் சொல்வதன் மூலம் நான் நடந்ததை நியாயப்படுத்தவில்லை. ஆனால், அது ஒரு சறுக்கல். மனிதர்கள் எல்லோருமே சறுக்குவது இயல்புதானே?
மாநாட்டுக்குப் போய் திரும்பிய உங்களுக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் வெளிப்பட்டனவா?
இல்லை. ஆனால், டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் நாங்களாகவே சோதனைக்குச் சென்றோம். கரோனா உறுதிசெய்யப்பட்டதும், 18 நாட்கள் சிகிச்சையில் இருந்தேன். இப்போது மீண்டு வெளியே வந்துவிட்டேன். ஆனால், கடைசி வரை எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை; சிகிச்சை என்பது நான் தனிமையில் இருந்தது மட்டும்தான்.
கரோனா ஒழிப்புப் பணியில் எப்படி இறங்கினீர்கள்?
கரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அதன் பாதிப்புகள், அறிகுறிகள் எதுவும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் அதற்கு அவரது உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியே காரணம் என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்டவர்களின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து, கரோனா தொற்றாளர்களுக்குக் கொடுத்து குணப்படுத்துவதும் இப்போது முயற்சிக்கப்படும் சிகிச்சைகளில் ஒன்று. சாதாரணமாகவே ஒருத்தருக்கு உதவி தேவை என்றால், ஓடோடி நிற்பவன் நான். முஸ்லிம் சமூகத்தில் பலர் அப்படி உண்டு. இப்போது மற்றவர்களுக்கு உதவ எங்களுடைய பிளாஸ்மாவை அளிப்பதை ஒரு வாய்ப்பாகக் கருதுகிறோம். தமிழ்நாட்டிலிருந்து டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்களில் அறுபதுக்கும் அதிகமானோர் இந்த பிளாஸ்மா கொடைக்குத் தம்மை அர்ப்பணித்துள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் எப்படி இருந்தன?
சாதாரணமாக மருத்துவமனையில் இருப்பதுபோலத்தான். சிகிச்சை தேவைப்படுபவர்களுக்குத் தேவையான சிகிச்சையை அளிக்கிறார்கள்; மற்றபடி தனிமையும் நல்ல சத்துமிக்க உணவும்தான் சிகிச்சை. நம்முடைய மருத்துவர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரை வெளிப்படுத்தும் அன்பும் அர்ப்பணிப்புமே எல்லாவற்றிலும் மேலானதாக நான் நினைக்கிறேன். நாங்கள் முழுக்க இப்போது பிரார்த்திப்பது அவர்களுடைய குடும்பங்களுக்காகத்தான். அவர்கள் உழைப்புக்கு முன் நாங்கள் ரத்தம் கொடுப்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. நம்முடைய சகோதரர்கள் உயிர் காக்கும் இந்தப் பெருமுயற்சிக்கு நாங்களும் சிறு உதவியாக இருப்பது பெருமைதானே!
- என்.சுவாமிநாதன், தொடர்புக்கு: swaminathan.n@hindutamil.co.in


No comments:

Post a comment

Mosque prayer ban in Bradford 'breach of worshippers' human rights'- Telegraph & Argus

A BAN on a mosque opening for Friday prayers due to the Covid-19 pandemic is a breach of worshippers' human rights, the High Court has...