இலங்கையின் பயங்கரவாதத் தாக்குதல்களின் பலாபலன்களை அறுவடை செய்த நரேந்திர மோடி! அடுத்த இலக்கு என்ன?-வானவில் தலைப்புக்கு கட்டுரை


லங்கையில் இவ்வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், நடசத்திர விடுதிகள் மீதும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் தாக்கமே சமகால இலங்கையின் சகல விடயங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது.
நிச்சயமாக இது பாரதூரமான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயம் என்பதில் சந்தேகமில்லை. அதற்கும் அப்பால் இது பிராந்திய ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதிலும் சந்தேகமில்லை.


முதலில் இந்த தாக்குதல்கள் உள்ளூரைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு முஸ்லீம் பயங்கரவாத இயக்கத்தால்தான் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது எனவே கருதப்பட்டது. பின்னர் இந்தத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ். என்ற சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு உரிமை கோரிய பின்னர், இந்தத் தாக்குதல்கள் சர்வதேச சக்திகளின் திட்டமிட்ட நாசவேலை எனக் கூறப்பட்டது.
ஆனால் நாள் போகப்போக இந்தத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ். என்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கும் அப்பால் அந்த அமைப்பை பின்னால் இருந்து இயக்குகின்ற வேறு ஓரு பெரும் சக்தி செயல்பட்டிருக்கலாம் என்ற கருத்து வலுப்பெற்று வருகின்றது.
ஆரம்பத்தில் இந்தத் தாக்குதல்கள் வெறும் மத அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை எனவே நோக்கப்பட்டது. ஆனால் அது விளைவித்துள்ள அரசியல் ரீதியிலான தாக்கங்களை நோக்கும்போது இந்தத் தாக்குதல்களின் பின்னால் நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் நோக்கமும் நிகழ்ச்சி நிரலும் இருந்திருக்கின்றன என்பது நன்கு தெளிவாகின்றது.
இந்த தாக்குதல்கள் நடைபெற்ற நேரத்தில் இலங்கையின் மிக நெருங்கிய அண்டைநாடான இந்தியாவில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறத் தொடங்கியிருந்தது. அந்தத் தேர்தலில் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதாக் கட்சி படுதோல்வியடையும் என்ற உறுதியான கருத்து இந்தியா முழுவதும் பரவியிருந்தது. சர்வதேச அரங்கிலும் அந்தக் கருத்து நிலவியது. நரேந்திர மோடி உட்பட பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் அனைவரும் தோல்வியால் துவண்டு போயிருந்தனர்.
மோடியின் தோல்வியையிட்டு அவரது மேற்கத்தைய சகாக்கள் ஆழ்ந்த கவலையிலும் ஆழ்ந்திருந்தனர். உலக நாடுகளின் தேர்தல் முடிவுகள் பற்றி ஆரூடம் கூறும் பிரபல சஞ்சிகைகளான அமெரிக்காவின் ‘ரைம்’, பிரித்தானியாவின் ‘த எக்கோனோமிஸ்ற்’ போன்றவையும் மோடியின் இறங்குமுகம் குறித்து சமிக்ஞைகள் வெளியிட்டிருந்தன.
தோல்விப் பயம் காரணமாக நரேந்திர மோடி மிகமோசமான இனவாத, மதவாதப் பிரச்சாரங்களையும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான பிரச்சாரங்களையும், எதிர்க்கட்சிகள் மீது மிகக் கேவலமான அவதூறுகளையும் தேர்தல் பிரச்சார மேடைகளில் கட்டவிழ்த்துவிட்டு வந்தார். அதுமாத்திரமில்லாமல் தன்னைத் தோல்வியிலிருந்து காப்பாற்றும்படி கடவுளிடம் இறைஞ்சி வடக்கேயுள்ள மலைக்குகையொன்றில் சில மணித்தியாலங்கள் கண்மூடிப் பிரார்த்தனையும் செய்தார். அந்த நாட்களில் மோடியின் முகம் ‘பேயறைந்தது’ போலக் காணப்பட்டது.
இந்த நிலைமையில்தான் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. அதைத் தெடர்ந்து மோடி படுகுசியானார். உடனேயே ‘இலங்கையில் நடந்தது போன்ற நிலைமை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், இந்தியாவை பாதுகாப்பாகவும் உறுதியாகவும் வைத்திருக்க வேண்டுமானால் எனக்கு வாக்களியுங்கள்’ என பகிரங்கமாக இந்திய மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களும், மோடியின் அறைகூவலும், இடதுசாரிகளாலும் திராவிட இயக்கங்களாலும் ஓரளவு பகுத்தறிவு பெற்றிருந்த கேரள, தமிழக வாக்காளர்களைத் தவிர மற்றைய மாநிலங்களில் உள்ள கோடானுகோடி இந்துப் பாமர வாக்காளர்கள் மீது நேரடித் தாக்கம் செலுத்தியது. அதன் காரணமாக மக்களின் மனதில் எழுச்சி பெற்றிருந்த மோடி எதிர்ப்பலை மழுங்கடிக்கப்பட்டு, திடீர் மாற்றம் ஏற்பட்டு, அவர்கள் பாரதீய ஜனதாவுக்கு தமது வாக்குகளை பெருமெடுப்பில் அள்ளிப்போட வைத்துவிட்டது. இதன் காரணமாக யாருமே எதிர்பார்க்காத அமோக வெற்றியை மோடியும் அவரது கட்சியும் பெற்றுக்கொண்டனர்.
மோடி வெற்றி பெறுவதற்கு சர்வதேச சக்திகள் இந்தியாவில் ஏன் இந்தத் தாக்குதலை மேற்கொள்ளவில்லை எனச் சிலர் எண்ணக்கூடும். அதற்கும் ஒரு காரணம் உண்டு. தேர்தல் நேரத்தில் இந்தியாவில் அவ்வாறான ஒரு தாக்குதலை மேற்கொண்டால் முஸ்லீம் மக்களுக்கெதிரான மிகப்பெரிய உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டு, சில வேளைகளில் அது மோடியின் வெற்றி வாய்ப்பையும் பாதித்திருக்கக்கூடும். அதற்காகவே இந்தியாவில் தாம் வெற்றி பெறுவதற்காக இந்தியாவுக்கு நோகாமல் இலங்கைக்கு அடித்திருக்கிறார்கள்.
இதிலிருந்து ஒரு உண்மை புலனாகின்றது. அதாவது நீண்டகாலமாக மக்களிடம் படிப்படியாக வளர்ந்து உரம் பெற்று நிற்கும் ஒரு கருத்தை – போக்கைக்கூட, பிற்போக்கு சக்திகள் நினைத்தால் எந்தப் பஞ்சமாபாதகச் செயலையும் செய்து ஒரு நொடியில் மாற்றியமைத்து விடுவார்கள் என்பதே. அதை இப்போதைய இந்தியத் தேர்தலில் மட்டுமின்றி, இதற்கு முன்னர் உலகின் பல நாடுகளில் நடந்த பல சம்பவங்களிலும் பார்த்திருக்கின்றோம்.
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் பலாபலன்களை உலகின் ‘மிகப்பெரிய ஜனநாயக நாடு’ என முதலாளித்துவவாதிகளால் வர்ணிக்கப்படும் இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் படுபிற்போக்கான வலதுசாரிகள் மோடியின் தலைமையில் அறுவடை செய்ததைக் கண்முன்னே பார்த்துவிட்டோம். அத்துடன் நாடகம் முடிந்துவிடவில்லை.
அடுத்ததாக அவர்களது குறி இலங்கை என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் சர்வதேச சக்திகள் மிக நீண்டகாலமாகத் திட்டமிட்டு, பல முயற்சிகள் எடுத்து, இறுதியாக அவர்கள் கண்டுபிடித்த வழிமுறைதான் இலங்கையின் ஆளும் கட்சிக்குள் உடைவை ஏற்படுத்தி அதிலிருந்து உடைத்தெடுத்த ஒருவரை பொது 
வேட்பாளர் ஆக்கி 2015 ஜனவரி 8 ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் பெற்ற வெற்றி.
ஆனால் அவர்கள் கொண்டு வந்த அரசு செய்துவரும் மக்கள் விரோத, தேச விரோத நடவடிக்கைகளால் அந்த அரசு மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாத சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. பொதுவாக ஏகாதிபத்திய சக்திகளினதும், பிற்போக்கு சக்திகளினதும் ஏக பிரதிநிதியான ஐக்கிய தேசியக் கட்சி தமிழ், முஸ்லீம் சிறுபான்மை இன மக்களினது வாக்குகளைப் பெற்று தேர்தல்களில் வெற்றி பெறுவதே வரலாறாக இருந்து வந்துள்ளது. 2015 ஜனாதிபதித் தேர்தலிலும் அவ்வாறுதான் வெற்றி பெற்றார்கள்.
குறிப்பாக, கடந்த காலங்களில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ச அணியினரின் தலையில் போட்டு, முஸ்லீம் மக்களை ஏகோபித்த ரீதியில் மகிந்த அணியினருக்கு எதிராகத் திருப்பியே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். முஸ்லீம் மக்கள் இப்படி ஏகோபித்து தென்னிலங்கையின் பிரதான கட்சிகளில் ஒன்றின் பக்கம் மட்டும் நின்றதாக இதற்கு முன்னர் வரலாறு இருக்கவில்லை.
ஆனாலும் ஐ.தே.க. தலைமையிலான இந்த அரசாங்கத்திலும் முஸ்லீம்கள் மீது திட்டமிட்ட முறையில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த சூழ்நிலையில், அந்த மக்களில் கணிசமான ஒரு பிரிவினர் ஐ.தே.க. மீது வெறுப்படையத் தொடங்கியிருந்தனர். இந்த மாற்றம் நிச்சயமாக எதிர்காலத்தில் ஐ.தே.க. தேர்தல் வெற்றிகளை பாதிக்கும் என்பதை ஐ.தே.கவும் அவர்களது சர்வதேச எஜமானர்களும் நன்கு உணர்ந்திருந்தனர்.
வழமையாக, இந்த சர்வதேச சக்திகள் பௌத்தர்களையும் முஸ்லீம்களையும் மோதவிடுவதே வழமை. தீவிர சிங்கள பௌத்த மதவாத அமைப்பான பொதுபல சேனாவுக்கு இலங்கை விவகாரங்களில் அக்கறை கொண்ட ஒரு ஸ்காண்டிநேவியன் நாடுதான் பின்னணியில் இருந்து செயல்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதேபோல, முஸ்லீம் அடிப்படைவாத சக்திகளுக்குப் பின்னால் மத்திய கிழக்கில் உள்ள ஒரு பலமான நாடுதான் பின்னணியில் இருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். அதேபோல, இலங்கைத் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான இனமுறுகலின் பின்னணியில் தென்னாசியாவின் ஒரு சக்தி மிகுந்த நாடு பின்னணியில் இருப்பதும் இரகசியமல்ல. இதன் பின்னணியில்தான் இந்தியாவில் நீண்டகாலம் அஞ்ஞாதவாசம் இருந்த ஒருவர் போர் முடிந்த பின்னர் இலங்கை திரும்பி, இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் விழுதுகளில் ஒன்றான ‘சிவசேனா’ அமைப்பை வடக்கில் தொடக்கியிருக்கிறார்.
இதில் ஒரு முக்கியமான விடயமென்னவெனில், இலங்கையின் மூன்று மதங்களான பௌத்தம், இந்து, இஸ்லாம் என்பனவற்றைப் பின்பற்றுபவர்கள் மத்தியிலுள்ள மதவெறிச் சக்திகளை இயக்கும் வெவ்வேறு மூன்று நாடுகளும் மிகப்பெரிய சர்வதேச சக்தியொன்றின் நெருங்கிய நட்பு நாடுகளாக இருக்கின்றன என்பதுதான். இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில்; தமக்கு வேண்டப்படும் வலதுசாரிச் சக்திகளை வெற்றிபெற வைத்துள்ளார்கள்.
அவர்களது அடுத்த இலக்கான இலங்கையைப் பொறுத்தவரை தோல்வியின் விளிம்பில் நிற்கும் ஐ.தே.க. அரசை அடுத்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வைத்துவிட வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். அதன் முன்னோடியாக இந்தப் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி ஐ.தே.க. அரசைவிட்டு ஒதுங்கிப்போக ஆரம்பித்திருந்த முஸ்லீம் மக்களை மீண்டும் ஐ.தே.க. ஆதரவு நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள். அதேநேரத்தில் முஸ்லீம் மக்கள் உட்பட சிறுபான்மை இன மக்களை மேலும் மேலும் ஐ.தே.க. விரோத சக்திகளுக்கு எதிராகத் திருப்பும் வகையில் மீண்டும் பொதுபல சேனா மூலம் பௌத்த சிங்கள இன – மத வாதம் கிளறிவிடப்பட்டுளளது.
இத்தகைய ஒரு சூழலில் சர்வதேச பிற்போக்கு சகதிகள் இந்தியத் தேர்தலில் செய்தது போன்ற திட்டமிட் சதி சூழ்ச்சிகளின் மூலம் இலங்கையிலும் தமது விருப்பத்துக்கு உரிய ஐ.தே.கவை மீண்டும் ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு எடுக்கும் திட்டங்களை ஆரம்பத்திலேயே இனம் கண்டு முறியடிக்க வேண்டும்
மூலம்: வானவில் இதழ் 102 - ஜூன் 2019 தலைப்புக்கு கட்டுரை 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...