"சொக்கா போட்ட நவாபு, செல்லாது உங்கள் ஜவாபு" எஸ்.எம்.எம்.பஷீர்
2019 ஏப்ரல் 21 ல் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களைத் தொடர்ந்து , அச் சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களாக அடையாளம் காணப்பட்ட சில பயங்கரவாத முஸ்லீம் நபர்களுக்காக ,  இலங்கை வாழ் முழு முஸ்லீம் சமூகமும் இன்னலுக்குட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். தினமும் முஸ்லீம் மக்கள் மீது பல்வேறு விதமான இனவாத அடக்குமுறைகள் சிங்கள, பௌத்த  இனவாத சக்திகளாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிறித்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நீர் கொழும்பு சிலாபம் ஆகிய பகுதிகளில்  முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் கால்கொண்டன,  அதனையடுத்து  மிக விரைவாக  சிங்கள பௌத்த இனவாத தனிமங்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் தங்களின் முஸ்லீம் இனவாத கைவரிசையைக் காட்டத் தொடங்கின.  வழக்கம் போலவே இந்த இனவாத வன்முறைகளின் பொழுதும் அரச சட்ட ஒழுங்கு இயந்திரம் கைகட்டி நிற்பதை முஸ்லீம் மக்கள்  கண்டனர்.  ஆட்சிப் பொறுப்பிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் கையாலாகாத்  தனத்தையும் கண்டனர், தங்களின் கையறு நிலையையும்  உணர்ந்தனர்.


Photo: New York Times

ஊரடங்கு சட்டம்   முஸ்லிம்களின் மீதான கலவரங்ககளை கட்டவிழ்த்து விடவே கொண்டுவரப்பட்டவை என்றும் முஸ்லிம்கள் அரசு மீது குற்றம் சாட்டினார் . இவ்வாறான அனுபவங்கள் முஸ்லிம்களுக்கு புதியவை அல்ல. கடந்த இரண்டு தசாப்தங்களில் சிங்கள காடையர்களால் முஸ்லீம் மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன  உடைமைகள் அழிக்கப்பட்டன.    2001 இல் மேற்கொள்ளப்பட்ட மாவனல்லை   தாக்குதல்கலாயினும் சரி , 2014 இல் மேற்கொள்ளப்பட்ட  அளுத்கம பேருவளை தாக்குதல்கலாயினும்  சரி, 2018 இல் அம்பாறை, திஹன  , தெல்தெனிய , கிந்தோட்ட தாக்குதலாயினும்  சரி , இப்பொழுது நீர்கொழும்பு , சிலாபம் , குளியாப்பிட்டிய போன்ற பல இடங்களில் பரவலாக இடம்பெற்ற தாக்குதலாயினும் சரி முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள் ஆளும் கட்சியில் அங்கத்தவர்களாக , அல்லது அரசியல் கூட்டின் மூலம் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்திருக்கிறார்கள் , பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்து வந்துள்ளார்கள்.

ஆனாலும் முஸ்லீம் மக்களின் மீதான தாக்குதல்களின் பின்னர் கவலை தோய்ந்த முகத்துடன்  "குசலம்" விசாரிப்பவர்களாக , தாக்குதல் நடைபெற்ற இடங்களுக்கு முஸ்லீம் அரசியல்வாதிகள் , அமைச்சர்கள் தமது பரிவாரங்களுடன் வருவதும் , மக்களுக்கு ஆறுதல் சொல்வதும், எதிர்க்  கட்சிகளை குற்றம் சாட்டுவதும், நஷ்ட ஈடு பெற்றுத்  தருவதாகக் கூறுவதும் என தமது அங்கிடுதத்தி அரசியல் நாடகத்தை  மிக கச்சிதமாக நடத்தி விட்டுப் போய் விடுவார்கள். இது போன்று முன்னரும் நடந்திருக்கிறது , அப்பொழுதெல்லாம் , காலத்துக்கு காலம் ,  தாம்  ஆட்சியில் அமர்த்தியதாக பீற்றிக் கொள்ளும் , அமைச்சுப் பதவிகளை அலங்கரித்து கொள்ளும் அரசுகளுடன் முஸ்லீம் மக்களை இனவாதிகளிடமிருந்து பாதுகாக்க , சட்டமும் ஒழுங்கையும் பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்த என்ன விதமான நடடிக்கைகளை எடுத்து வந்திருக்கிறார்கள் என்பதற்கு பின்னர் நடைபெற்ற தாக்குதல்கள் சான்றாக அமைந்து விடுகின்றன.  மாவனல்லையில் (2001)  இருந்து இன்றைய குளியாப்பிட்டிய  (2019) வரை நடந்த சம்பவங்களை மக்களும் இலகுவில் மறந்துவிட , மக்களின் அரசியல் ஆதரவை தக்கவைக்க பல்வேறு நாடகங்கள் எல்லாத்  தரப்பினராலும் அரங்கேற்றப்படும். இதற்கு ஆளும் அரசோ , எதிர்க் கட்சியோ விதி விலக்கல்ல.

வழக்கத்துக்கு மாறாக இலங்கை வரலாற்றில் ஆட்சியில் உள்ள ஐக்கியதேசியக் கட்சியின் அமைச்சர்கள், அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டு அரசின் பங்காளிகளாக உள்ள ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் , அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் என்பன , தாம்  வகிக்கும் அமைச்சு பதவி உட்பட பிரதி , ராஜாங்க அமைச்சுப் பதவிகளையம் இராஜினாமா செய்துள்ளனர். ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசில் தனித்து போட்டியிட்டு அரசியல் பிரதி அமைச்சராக இருக்கும் அலி ஜாஹீர் மௌலானாவும் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.  இந்த செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது என்றாலும் இதுவே ஒரு அரசியல் நாடகத்தின் ஒரு அங்கம் என்பது மிக விரைவில் புலப்பட்டுப் போகும். இந்த இராஜினாமா அரங்கேற்றம் பின்னர் மீண்டும் பதவிகளை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வுகளுடன் , அதற்கான காரணங்களாக முன்  வைக்கப்படப் போகும் சால்ஜாப்புகளுடன் முடிவுக்கு வரும். அப்பொழுது மக்கள் திருப்தி அடைந்து விடுவார்கள். அடுத்த தேர்தலில் இவர்கள் யாவரும் "வீராதி வீரர்களாக" வலம் வருவார்கள். வெற்றி வாகை சூடுவார்கள். ஆனாலும் சிங்கள மக்களின் வாக்குகளில் தங்கியிருக்கும் முஸ்லீம் வேட்பாளர்கள் தலதா மாளிகைக்கு ஒரு முறை விஜயம் செய்து மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்று விட்டாலோ ,  உள்ளூர் மட்ட தேர்களை கவனித்துக் கொண்டாலோ போதும் தாங்கள் வெற்றி எட்ட முடியும் என்பதை அவர்களுக்கு சொல்லாத தேவை இல்லை.

அரசாங்கத்திலிருந்து தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தவர்கள்  அரசுக்கு ஒரே ஒரு மாத அவகாசம் கொடுத்திருக்கிறார்கள் , முஸ்லீம் அரசியல்வாதிகள் மீதான விசாரணைகள் ஒரு மாத காலத்தில் முடிவு பெறுமா என்பதே பெரிய கேள்வி . ஒரு மாதத்தில் விசாரணை முடிவடையாவிட்டால் இக்கூட்டில் உள்ள மூன்று கடசிகளை பிரதிநிதுத்துவப்படுத்தும் முஸ்லீம் அமைச்சர்கள் பிரதி, ராஜாங்க அமச்சர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது ஒன்றும் ஆச்சரியமாக இருக்கப் போவதில்லை. கடசி அரசியல், எதிர் நோக்கும் தேர்தல்கள்  என்பன இக்கூட்டின் ஆயுளை மிக விரைவில் முடிவுக்கு கொண்டு வரும். இராஜினாமா சமாச்சாரம் இன்றைய அரசியல் நெருக்கடியை மட்டுமே தளர்த்தி உள்ளது என்பதே உண்மை. இப்பொழுதே இந்தக் கூட்டில் ரிசார்ட் பதுர்தீன் மெதுவாக காணாமல் போய்  கொண்டிருக்கிறார். மேடையை அலங்கரிக்க ஹக்கீம் முன் நிறுத்தப்படுகிறார். 

கண்டி தலதா மாளிகையின் முன்பாக சாவும் வரையான  உண்ணாவிரதத்தினை மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலிய ரத்ன தேரர்  , தனது உண்ணாவிரதத்தை கைவிட முன் வைத்த நிபந்தனையின் படி  ஆடசி அதிகாரத்தில் உள்ள அமைச்சர் ரிசார்ட், ஆளுநர்களான ஹஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் முறையே இராஜினாமாவும் , பதவி நீக்கமும் செய்யப் பட்டுள்ளனர். ஆனாலும் மிக முக்கியமாக ஆளுநர்கள் இருவரையும் ஜனாதிபதி பதவி நீக்கம் செய்தவுடனே ( இருவரையும் பொறுத்தவரை வெளிப்படையாக இராஜினாமா செய்தார்கள் என்று கூறினாலும் அவர்களுடன் ஜனாதிபதி மாற்றுப் பதவிகளை வழங்க ஆலோசனை செய்துள்ளார் என்பதாக அறிய முடிகிறது) குறிப்பாக பல அம்சக் கோரிக்கைகளை முன் வைத்தே ஆசாத் சாலி பதவி விலக முன் வந்ததாக அறிய முடிகிறது.  

இங்கு மிக முக்கியமான செய்தி என்னவெனில் ரிசார்ட் பதவி விலக முன்னரே ரத்னா தேரர்  தனது உண்ணாவிரதத்தை கைவிட்டு விட்டார். ஆளுநர் பதவி நியமனங்கள் , நீக்கங்கள் ஜனாதிபதிக்கு உட்பட்டது. ஆனால் ரிஸார்ட்டின் பதவி தொடர்பில் பிரதமரின் அனுசரணை இன்றி  ஜனாதிபதிக்கு செயற்பட முடியாது. இந்த நிலைமையில்  தமது இருபுற அரசியல் நலனுக்கும் நெருக்கடி ஏற்படாதவாறு தானே தனது பதவியை ரிசார்ட் ராஜினாமா செய்துள்ளார். மொத்தத்தில் ஜம்மியத்துல் உலமா மற்றும் முஸ்லீம் சிவில் அமைப்புக்கள் சேர்ந்து இந்த ராஜினாமாவை செய்யப் பணித்துள்ளார் என்று அறிய முடிகிறது

ரிசார்ட் , தனது இராஜினாமாவைத் தொடர்ந்து நாடாளுமன்ற எதிர் அணியில் உள்ள உறுப்பினர்களான விமல் வீரவன்சவுக்கும் , எஸ்.பீ .திஸ்ஸநாயக்காவுக்கு ஆகிய இருவரும் தமக்கு எதிரான பொய்க் குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதாகவும் , இன வெறுப்பூட்டும் வகையில் பேசுவதாகவும் போலீஸ் தலைமையகத்தில் முறைப்பாட்டினை செய்துள்ளார். ஆனால் தனக்கெதிராக குற்றம் சாட்டிய ,  தனது பதவியை ராஜினாமா செய்யக் கூறிய ரத்ன தேரருக்கு கெதிராக காட்டமாக பேசுவதில் அவரும் அவரின் கடசியினரும் கவனமாக இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் கூடவே அத்துரலிய தேரரின் பெயரையே உச்சரிக்க மறுக்கிறார்கள். இவரே முன்னர் மஹிந்த ஆடசியில் ஹெல உறுமய கூட்டின் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக , அவரின் தலைவர் பாட்டாளி சம்பிக்கவுடன் செயற்பட்டவர் என்பதும் இவர்களும் பின்னர் முஸ்லீம் அரசியல்வாதிக்குடன் சேர்ந்து மஹிந்தவை தோற்கடிக்க பாடுபட்டவர்கள் என்பதும் செய்திகளே.

ஆனால் ஹிஸ்புல்லாஹ் தனது வீடியோ உரையொன்றில் ரத்ன  தேரர் உட்பட கண்டியில் கூடியிருந்த சகல தேரர்களும் பொய் உரைக்கிறார்கள் என்று வெளிப்படையாகவே கூறி உள்ளார்,  மேலும் ஆளுநராக இருந்து கொண்டு , பதவியில் இருந்து கொண்டு பேச முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். முன்னரெல்லாம் பதவியில்  இருந்தால்தான் , மக்கள் அதிகாரம் தந்தால்தான் பேச முடியும் என்றவர் ,  இன்று ராஜினாமாவை செய்துவிட்டு பதவியில் இருந்தால் பேச முடியாது,  கட்டுப்பாட்டில்தான் பேச முடியும்  என்று குறிப்பிடுகிறார். மிகத் தெளிவாகவே ஒரு தேர்தல் வரும் வரை ஒற்றுமையாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று ஹிஸ்புல்லாஹ் சொல்லுவது, இந்த ஒற்றுமையின் காலக்கெடுவினை கட்டியம் கூறி நிற்கிறது. இவரோ ஜனாதிபதிக்கு இரண்டு வாரம் காலக்கெடு  கொடுத்துள்ளார். இந்த சவடால்கள் எல்லாமே கூடியிருக்கும் மக்களை குஷிப்படுத்தவேயன்றி வேறில்லை என்பதை நிச்சயம் இரண்டு வாரங்களின் பின்னர் அறிந்து கொள்ளலாம்.!

ஹிஸ்புல்லாஹ்  முதலில் 1989 இல் நாடாளுமன்றத்துக்கு மோட்டார்  பைசிக்கிள்லில் வந்தார், அவர் போலவே ரிஷாட்  பதுயுதீன் ஒரு ஷாப்பிங் பையுடன் அகதியாக வடக்கிலிருந்து அரசியலுக்கு வந்தார் என்றும் இவர்கள் இன்று பெரும் சொத்து சேர்த்துள்ளார்கள்  என்றும் , அதற்கு இலங்கையில் உள்ள அரசியல் முறைமைக்கே நன்றி சொல்ல வேண்டும் என்று இலங்கையின் ஒரு பிரபல முஸ்லீம் ஆங்கில பத்திரிகை பதியெழுத்தர் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.  எது எப்படியோ இந்த இராஜினாமா செய்தவர்கள் குறிப்பாக ஹக்கீம் ரிசார்ட் (புதிய ராஜினாமா கூட்டணியினர்) மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்கள்.  அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை  , நண்பனுமில்லை என்ற செய்தியைத் தவிர எதிர்க்கட்சித்  தலைவரை சந்திக்க வேண்டும் என்ற எந்த மரபும் இவர்களுக்கு இல்லை. அதனை நியாயப்படுத்த ஏனைய கட்சித் தலைவர்களையும் சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.  

விசாரணைக்கு கொடுத்த காலக்கெடு தங்களை பற்றிய விசாரணைகளைக் குறித்து மட்டுமே ஒழிய சுமார் 2000 பேர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில்  விசாரணை இன்றி வாடுகிறார்களே அவர்களை பற்றி இவர்களின் பகிரங்க அக்கறைகள் இந்த ராஜினாமாவில் வெளிப்படையாக பேசப்படவில்லை. சொந்த அரசியல் நலனை உறுதி செய்வதில் காட்டுகின்ற , அக்கறையினை இவர்கள் நாளாந்தம் மக்கள் துன்பங்களை துடைக்க மந்திரி சபையில் இருந்து ஒன்றும் செய்ய முடியாமல் , பின்வரிசையில் இருந்து அரசுக்கு ஆதரவு கொடுக்கப் போகிறார்கள். முதலில் எல்லோரும் சேர்ந்து செல்லாத கூட்டு ராஜினாமா நோட்டீஸ் கொடுத்ததும், தலைவர்கள் முன் வரிசையில் (ஹக்கீம், ரிஷாட்) தான் இருக்க வேண்டும் என்ற பொழுதும் பின்வரிசையில் இருக்கப் போவதாக சவடால் விட்டார்கள். பின்வரிசையில் இருக்க போவதாக கூறிய பின்னும் முன் வரிசையில் தலைவர்கள் இருவரும் இருக்க வேண்டும் என்பது நாடாளுமன்ற மரபு.  பின்-முன் வரிசைகளில் உட்கார்ந்து கொண்டு  அதுவும் ஒரு மாதத்தில் சூழ்நிலை மாற்றங்கள் ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்ன எடுக்கப் போகிறார்கள் என்று நீங்கள் வாயை பிளக்கத் தேவையில்லை ! அவர்கள் பழுத்த அரசியல் வாதிகள் வாக்காளர்களுக்கு  "ஜவாப் " சொல்ல தெரியாதா என்ன?.
 
தொடரும்.

No comments:

Post a Comment

The UK and the Pandora papers: A cesspit of the super-rich by Thomas Scripps

  No one in the UK needed to be told that the Johnson government is beholden to the interests of the super-rich. Indeed, it is a government ...