சொக்கா போட்ட நவாபு, செல்லாது உங்கள் ஜவாபு” (2) எஸ்.எம்.எம்.பஷீர்




 THENEEWEB  16TH JUNE 2019


இக்கட்டுரையின் முதல் பகுதியில்  எதிர்வு கூறியது போலவே இலங்கையில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ராஜினாமா நாடகத்தின் சில அங்கங்கள் இதுவரை அரங்கேற்றப்பட்டு விட்டன. மிகுதி அங்கங்கள் தொடர்ந்து சுப முடிவுவரை அரங்கேற்றப்படும். பிரதி அமைச்சர்களுக்கான பதவி நியமனங்கள் அந்த நாடகத்தின் ஒரு அங்கமாக இடம்பெற்றன, ஆனாலும் இராஜினாமா செய்த முஸ்லீம் அமைச்சர்களுக்கான பதில் நியமனங்கள் இதுவரை இடம்பெறவில்லை.அவர்களின் அமைச்சுக் கதிரைகள் இவர்களை மீண்டும் எதிபார்த்தவாறு  காலியாகவே காத்திருக்கின்றன. முஸ்லீம் அமைச்சர்கள் , பிரதி அமைச்சர்கள் , ராஜாங்க அமைச்சர்களின் முதல் நாடகமே பிரதம மந்திரின் வாசஸ்தலத்தில் அரங்கேற்றப்பட்டது. இவர்கள் தங்களின் இராஜினாமா நாடகத்தினை தனிப்பட்ட ஒரு பொது இடத்தில் செய்யவில்லை, மாறாக  சென்ற வருட இறுதி பகுதியில் பிரதமரை ஜனாதிபதி நீக்கியது தவறு என்றும் , பதவி நீக்கம் சட்ட ஆட்சிக்கு உட்பட்டதல்ல என்றும்  இரவிரவாக முற்றுகைப் போராட்டம் நடத்திய அதே பிரதமந்திரின் அலரி மாளிகையிலே தங்களின் பதவிகளை ராஜினாமாச்  செய்தார்கள்.



பதவிகளை இராஜினாமா செய்தாலும் தங்கள் அரசுக்கு ஆதரவளிப்போம் என்ற செய்தியினை மிக அழுத்தமாகவே அவர்கள்  தெரியப்படுத்தி , ஒருபுறம் முஸ்லீம் மக்களுக்காய் பதவிகளை துச்சமாக தூக்கி எறிவோம் என்ற அங்கத்தை அரங்கேற்றி , திரையின் பின்னல் நடந்த ஒத்திகையையை மிக கச்சிதமாக  முன்னரங்கில் நடித்துள்ளனர். அடுத்த தேர்தலுக்கு முஸ்லீம் மக்களை தயார் படுத்திவிட்டார்கள்.  மவுனமாய் அதுவரை இருந்த மகாநாயக்க தேரர்கள் வாய் திறக்க , அவர்களை சந்திக்க ஓட்டினார்கள். இப்பொழுது கபீர் காசிம் பிரதான தேரரொருவரை தனிப்பட்ட வகையில் சந்தித்து தனது சிங்கள வாக்காளர்களை தனக்கு ஆதரவாக தெருவில் இறக்கி விட்டார், பதவியை மீதும் அலங்கரிக்க தீர்மானித்து விட்டார். அதுவே ஏனையோரை குறிப்பாக  முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அமைச்சர்

பாவுஸி , ஹலீம் ஆகியோர் , தங்கள் பௌத்த குருபீடத்தின் வேண்டுதலை மதித்து இன சௌஜன்யத்துக்காக இன நல்லுறுவுக்கு “குந்தகம் விளைவிக்கும்” எதிர் கடசியினருக்கு சந்தர்ப்பம் வழங்கிவிடக் கூடாது, விசாரணைகள் இடம்பெற்றுவிட்டன அல்லது இடம்பெற்று வருகின்றன என்றெல்லாம் கூறி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தமது பங்களிப்பை வழங்க மீண்டும் பதவிகளை அலங்கரிக்க   விரைவில் தயாராகி விடுவார்கள்.

இந்த பின்னணியில் , இரத்தின தேரர் ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு சென்று தனது இறுதிக்கு கடமையை செய்து விட்டு ஓய்ந்து விட்டார்.  நாடாளுமன்றத் தெரிவுக்கு குழு விசாரணைகளில் ஹக்கீம் குந்தியிருக்கிறார்.  முன்னாள்  அமைச்சர் பவுசியின்  வீட்டில் கூடிய ஆலோசனைக் கூட்டத்தில்  இராஜினாமா செய்ய சொன்ன ஜம்மியத்துல் உலமாவின்  தலைவர் ரிஸ்வி முப்தி , ராஜினாமா முடிவுக்கு ஒத்தூதிய , தனது ஆளுநர் பதவியையம் இராஜினாமா செய்த ஆசாத் சாலியும் ,  அத்தீர்மானத்தின் பங்காளியாகாவிருந்து தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த ரவூப் ஹக்கீம் முன்னிலையில் விசாரணை அளித்து வருகிறார்கள். இது எப்படி ஒரு நீதியான நேர்மையான விசாரணையாக அமைய முடியும் !

முன்னொரு பொழுதில், (2001-2003) நோர்வேயின் அனுசரணையுடன் இலங்கையில் புலிகளுக்கும் அரசுக்கும் ஏற்பட்ட யுத்த நிறுத்தத்தின் பொழுது  முஸ்லீம்கள் புலிகளால் கொல்லப்பட்ட பொழுது . கடத்தப்பட்ட பொழுது ஹக்கீம் மூதூரில் சத்தியாக்கிரகம் பண்ணினார். அன்றைய பிரதமராகயிருந்த சாட்சாத் இன்றைய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவை தனது காலடிக்கு மூதூருக்கு  வரவேண்டும் என்று சவால் விட்டார். “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்”  என்ற கதையாய் ரணில் இவரின் சவடால்களை பொருட்படுத்தவே இல்லை. கொழும்புக்கு திரும்பினார் ஹக்கீம். அது போலவே வாழைச்சேனையில் புலிகள் கொலை செய்து புதைத்த  இரண்டு முஸ்லிம் இளைஞர்களின் சடலங்களைத் தோண்டி எடுத்து  அவர்களின் பெற்றோர்களை புதைக்க அனுமதிக்காமல்  நீதிபதி , மரண விசாரணை அதிகாரி முன்பாக புலிகள் டயரில் போட்டு அவர்களின் கண் முன்பாகவே எரித்தனர். ரணில் விக்ரமசிங்க அரசு கையாலாகாத அரசாகவே அன்று இருந்தது.   அதே அரசில்தான் ஹக்கீம் வெறும் வாய் சவடால்கள் விட்டுக் கொண்டு ஆட்சியில் இருந்தார். அப்பொழுது தனது அமைச்சுப் பதவியை அவர் இராஜினாமா செய்யவில்லை.

மாவனெல்லையில் 2001 இல் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலின்  பின்னர் சந்திரிக்கா அரசியில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவராக இராஜினாமா செய்ய முன் வரவில்லை. எதிர் வரிசையில் உட்காந்தார். மீண்டும் மக்காவை நபிகளார் வெற்றி கொண்டதுபோல ஆட்சியில் அமர்வோம் என்றெல்லாம் தனது “மார்க்க புரிதல்” பற்றி பிதற்றினார். தான் நீதி அமைச்சராகவிருந்த பொழுது அனுராதபுரம் ஸியாரத்துடனான பள்ளிவாயல் சிங்கள இனவாதிகளால் உடைக்கப்பட்ட பொழுது சீறி எழுத்த ஹக்கீம் , பள்ளி உடைக்கப்பட்டபொழுது கைகட்டி வேடிக்கை பார்த்த காக்கிச் சட்டைக்காரர்களின் “சொக்காக்களை” (சட்டைகளை) கழட்டுவேன் என்று சவால் விட்டார். என்ன நடந்தது , வழக்கம் போலவே எதுவுமே நடக்கவில்லை. தம்புள்ள பள்ளிவாயல் பௌத்த புனித பிரதேசத்தில் உள்ளதாக பிரச்சினை எழுந்தது. ஹக்கீம் நகர அபிவிருத்தி அமைச்சராக பதவிக்கு வந்தார் , என்ன நடந்தது. எதுவுமே நடக்கவில்லை.

இன்று இலங்கை முஸ்லிம்கள் அரச , பௌத்த தீவிரவாத தனிமங்களின்  கெடுபிடிகளுக்கு மத்தியில்  சிக்கித் தவிக்கின்ற நிலையில் நீரோ ( மன்னன் )  பிடில் வாசித்த கதையாய் தமிழ்நாட்டிலே இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவர் காதர் மொஹிதீன் உடனான தொடர்பைக் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலினின்  மேடையைப்  பயன்படுத்தி உள்ளார் ஹக்கீம். போதாக்குறைக்கு அவரின் மதிப்புக்கும் வாஞ்சைக்குமுரிய   “பெருந் தலைவர்” பிரபாகரனுக்கும் அவரின் பயங்கரவாத புலிகள்  இயக்கத்துக்கும்  சாமரம் வீசி சமரசம்  செய்துள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.

இன்றைய அரசியல் சூழலில்  தான் எந்தவிதமான அரசியல் கூட்டை ஏனைய முஸ்லீம் அணியினருடன் ஏற்படுத்தினாலும் தனக்கென தனி இடம் உண்டு என்பதை  நிலைநாட்ட  தமிழக தி.மு.க அரசியல் மேடை ஹக்கீமுக்கு உதவியிருக்கிறது. பார்வையாளர்களின் காதுக்கு இனிமையாக உரை நிகழ்த்தியுள்ளார். மொத்தத்தில்  சில முஸ்லீம் தலைவர்கள் விசாரணைகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் தனது அரசியல் தளத்தை பலப்படுத்த இது போன்ற சமாச்சாரங்கள் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் அரங்கில் தனது செல்வாக்கை தக்க வைக்க ஹக்கீமுக்கு நிச்சயமாக உதவும்.

மொத்தத்தில் முஸ்லீம் தலைவர்கள் துணிச்சலாக தங்களின்  நாடாளுமன்ற பதவிகளை ராஜினாமா செய்து தமது மக்களின் நலனை உறுதிப்படுத்த  இன்றைய அரசியல் சூழலை ஒரு பேரம் பேசும் புள்ளியாக பயன்படுத்தாவிடின்,  இவர்களின் ராஜினாமா நாடகம் பெரிதாக மாற்றம் எதனையும் ஏற்படுத்தாது.  முஸ்லிம்களின் முதுகுகளை (முதுகெலும்பு) நிமிர்த்த ரணிலை ஆதரிப்போம் என்று ஒரு பொழுது ஹக்கீம் ரணிலுடன் அரசியல் ஒப்பந்தம் செய்தபோது முழங்கினார். முஸ்லிம்கள் புலிகளுக்கு தாரை வார்க்கப்பட்டனர். முதுகெலும்புகள் முறிக்கப்பட்டன.

அளுத்கம வெருவளை கலவரங்களையம்  , ஞானசேரரரையம்  காரணம் காட்டி  மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக்கினார். ரணிலை பிரதமராக்கினர்.  சர்வதேச நிகழ்ச்சி நிரல்கள் வெற்றிகரமாக அரங்கேறின. ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இவர்களின் “ஜவாபு”க்கள் எதுவுமே  இவர்களே கொண்டுவந்த அரசிடம் செல்லவில்லை. அதனைப் பாதுகாக்க ராஜினாமா நாடகம் அரங்கேற்றப்பட்டது.

அதே  ஞானசேரர்  முஸ்லிம்களின்  ஆபத்பாந்தவராக போற்றப்பட்ட ஜனாதிபதியால் களமிறக்கப்பட்டுள்ளார்.ஆசாத் சாலி ஞானசேரரை “அரை முஸ்லிமாக” மாற்றியுள்ளார் .  இன்று இந்த ஆட் சியினை கொண்டு வந்ததாக கூறும் றிசாட் பதியுதீன் “முதுகெலும்பு இல்லாதவர்கள் ஆட்சிபீடமேறுவதற்கு உதவியது வருத்தமளிக்கிறது ” என்கிறார். இவர்களின் அரசியல் அபத்தங்களுக்கு முஸ்லீம் மக்கள் முற்றுப்புள்ளி வைக்காதவரை,  இவர்கள் இப்படி ஏதோ “ஜவாபுகளை” காலத்துக்கு காலம் சொல்லிச் சொல்லி  முஸ்லீம் மக்களுக்கு குல்லாப் போட்டு கொண்டே இருப்பார்கள்.

முற்றும்.





No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...