ஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு


ஜி. ஜி. பொன்னம்பலம் மற்றும் எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோரது ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் நடைபெற்ற 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பில் இடம்பெறுகின்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
இந்த நாட்டில் இன, மத வன்முறைகளைத் தூண்டுகின்ற அனைத்துத் தரப்பினரினதும் செயற்பாடுகள் முற்று முழுதாகவே ஒழிக்கப்பட வேண்டும்.


எமது வரலாற்றை எடுத்துக் கொண்டால், இந்த நாட்டில் தனிச் சிங்கள மொழிச் சட்டம் அரச கரும மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்தே இனமுரண்பாடு உத்வேகம் கொண்டது. ஆனால் தமிழ் மக்கள் சிங்கள மொழியையும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும் கற்கவேண்டும் என்ற இரு மொழிக்கொள்கை அன்றே சட்டமாக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ் பேசும் மக்கள் சிங்களத்தை கற்க வேண்டும் என்றால் சிங்கள மக்களும் தமிழ் மொழியை கற்க வேண்டும். இவ்வாறு அன்று நாடாளுமன்றத்தில் உரைத்தவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பருத்தித்துறை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பொன் கந்தையா அவர்கள்.
அது போலவே, ஒரு மொழி இரு நாடு! இரு மொழி ஒரு நாடு! என நாடாளுமன்றத்தில் தீர்க்கதரிசனமாக உரைத்தவர் தோழர் கொல்வின் ஆர். டி. சில்வா அவர்கள். இந்த இருவரினதும் தொலை தூர சிந்தனையை தமிழ் சிங்கள அரசியல் தலைமைகள் அன்றே ஏற்றிருந்தால், இங்கு இனப்பிரச்சினை தோன்றியிருக்காது. இரத்தக்காடாக இலங்கைத்தீவு மாறியிருக்காது.
1956இல் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை இலங்கையின் ஆட்சி மொழியாக ஆங்கில மொழியே இருந்து வந்திருக்கின்றது. ஆங்கில ஆட்சி மொழியை மாற்றி இலங்கைத்தீவில் சுதேச மொழிசட்டத்தையே அன்று கொண்டு வர நினைத்தார்கள். சிங்களமும் தமிழும் என இரண்டு மொழிகளுமே இந்த நாட்டின் சுதேச மொழிகள். இந்த நிலையில், அன்று தமிழ் மக்களின் தலைவர்களாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த ஜி. ஜி. பொன்னம்பலம், எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோர் எடுத்திருந்த தீர்மானம் மாபெரும் வரலாற்று தவறு என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆங்கிலத்தில் சிந்தித்து, ஆங்கிலத்தில் சிரித்து, ஆங்கில மோகத்தில் மூழ்கியிருந்த ஜி. ஜி. பொன்னம்பலமும் செல்வநாயகமும்; அன்று கொண்டுவரப்பட இருந்த சுதேச மொழிச் சட்டத்தை எதிர்த்திருந்தார்கள். இதை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய தென்னிலங்கை அரசியலின் கடும் போக்காளர்கள் தனிச்சிங்களச் சட்டத்தை நிறைவேற்றினார்கள்.
அன்று ஆங்கில மோகத்தில் இருந்து விடுபட்டு எமது மூத்த அரசியல் தலைவர்கள் சுதேச மொழிச் சட்டத்தை ஏற்றிருந்தால் சிங்கள மொழிக்கு நிகராக தமிழ் மொழியும் இந்த நாட்டின் ஆட்சி மொழியாக இன்று இருந்திருக்கும்.
அந்த மூத்த தலைவர்களின் வழிவந்த சக தமிழ் தலைமைகள் தமிழ் மக்கள் சிங்களம் கற்கக்கூடாது என்று அடம் பிடித்து,.. தாமும் தமது பிள்ளைகளும் மட்டும் சிங்கள மொழியை கற்றுகொண்டனர். தமக்கொரு நியாயம்! தமிழ் மக்களுக்கு இன்னொரு நியாயம்!! போலி தமிழ் தேசியம் பேசும் இவர்கள் இன்று சிங்களத்தில் சிந்தித்து, சிங்களத்தில் பேசி, சிங்களத்தில் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டும் இருக்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...