கூட்டமைப்பு ரணிலை ஆதரித்ததிற்கு இவையும் காரணங்கள் – புனிதன்


னாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணிலை பிதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததிற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பம் முதல் வன்மத்துடன் செயற்பட்டதற்கு அதன் வழமையான ஐ.தே.க. ஆதரவு நிலைப்பாடு காரணம் மட்டுமின்றி சில உடனடிக் காரணிகளும் இருந்தன.

மகிந்த தலைமையிலான புதிய அரசாங்கம் சிறையிலுள்ள புலிப் பயங்கரவாத சந்தேக நபர்களை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வது குறித்து பதவி ஏற்றவுடனேயே தீவிரமாக ஆராய்ந்து வந்தது. அப்படி அவர்கள் விடுதலை செய்யப்பட்டால், அது கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் மத்தியில் பாரிய செல்வாக்கு சரிவை ஏற்படுத்தியிருக்கும். ஏனெனில் நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போலி எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கத்தை கடந்த மூன்றரை வருடங்களாக ஆதரித்து வந்தபோதிலும் இந்த தமிழ் கைதிகளின் விடுதலை உட்பட தமிழ் மக்களின் எந்தவொரு உடனடிப் பிரச்சினைக்கும் கூட தீர்வு கண்டிருக்கவில்லை.

கூட்டமைப்பு ரணிலை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்ததிற்கு வேறொரு காரணமும் உண்டு. பிரதான தமிழ் தலைமைகள் சுமார் 70 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக தமிழ் மக்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்து வந்தபோதிலும், இனப் பிரச்சினைக்கான தீர்வு மட்டுமின்றி, தமிழ் மக்களின் நாளாந்த பிரச்சினைகளுக்கு கூட தீPர்வு கண்டது கிடையாது.
இந்த நிலைமையில் காலத்துக்காலம் ஆட்சியில் இருந்த அரசுகளுடன் ஒத்துழைத்த அல்பிரட் துரையப்பா, அருளம்பலம், தியாகராசா, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களே தமிழ் மக்களுக்காக சில சேவைகளைத் தன்னும் செய்தார்கள். ஆனால் தமிழ் தலைமைகள் இவர்களைத் “துரோகிகள்” என முத்திரை குத்தி, அல்பிரட் துரையப்பா, தியாகராசா போன்றோரை புலிகள் மூலம் படுகொலை செய்வித்தனர். அருளம்பலத்தையும் கொல்ல முயன்றனர். டக்ளஸ் தேவானந்தாவை ஒரு தடைவ அல்ல, பல தடவைகள் கொலை செய்வதற்கு முயன்றனர்.


அதற்குக் காரணம் அரசுகளுடன் ஒத்துழைத்துச் செயற்பட்டவர்களில் ஆகக் கூடுதலான சேவைகளை வடக்கு மக்களுக்குச் செய்தவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே. அதுமட்டுமின்றி, மற்றவர்கள் போலல்லாமல் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்ற ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி, பிரதான தமிழ் தலைமைக்கு எதிரான ஒரு மாற்றுத் தலைமையாக அதை வளர்த்து, அதற்கென தனியான ஒரு வாக்கு வங்கியையும் கட்டியெழுப்பியுள்ளார்.

ஈ.பி.டி.பியின் தொடர்ச்சியான மக்கள் சேவை காரணமாக கடந்த பெப்ருவரியில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் அது கணிசமான வாக்குகளைப் பெற்றதுடன், சில சபைகளின் ஆட்சியதிகாரத்தையும் கைப்பற்றியது. இந்த உண்மையை தமிழ் கூட்டமைப்பாலும் நிராகரிக்க முடியவில்லை. உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் குறித்து வடமராட்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், “தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடும் எங்களை விட, அபிவிருத்தி பற்றிக் கதைத்த சில கட்சிகளின் வாக்குகள் அதிகரித்துள்ளன” என வயிற்றெரிச்சலுடன் குறிப்பிட்டார்.

அண்மையில் மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்ற பொழுது, டக்ளஸ் தேவானந்தாவும் மீள் குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சராகப் பதவியேற்றார். மகிந்தவின் அரசு உள்நாட்டு – வெளிநாட்டு பிற்போக்கு சக்திகளின் சதி சூழ்ச்சிகளால் அற்ப ஆயுளில் மரணித்துப் போனாலும், அந்தக் குறுகிய காலத்துக்குள் – 52 நாட்களில் – டக்ளஸ் தேவானந்தா தனது அமைச்சைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு தன்னால் செய்யக்கூடிய சேவைகளைச் செய்ய ஆரம்பித்திருந்தார். அதில் முக்கியமானது வடக்கு கிழக்கு மக்களுக்கான வீட்டுத் திட்டமாகும்.
டக்ளஸ் தேவான்தாவின் இந்த வேகமான செயற்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்பை கிலி கொள்ள வைத்தது என்பது இரகசியமானதல்ல. எனவே தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனப்பிழையாக வர வேண்டும் என்ற மனப்பான்மையில், தமிழ் மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை டக்ளசின் அமைச்சுப் பதவியை இல்லாமல் செய்ய வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கங்கணம் கட்டிச் செயற்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.
Source: Vaanavil 12.2018

No comments:

Post a Comment

The danger of US-China war and Australia’s anti-democratic election laws-by Peter Symonds

The new anti-democratic election laws in Australia, aimed at deregistering so-called minor parties, go hand in hand with the efforts of the ...