அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பொறுப்பை மக்களிடம் விட வேண்டும்!-வானவில்


லங்கையில் சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த அரசியல் குழப்ப நிலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தது அரசியல் அமைப்புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புடன் முடிவுக்கு வந்துவிட்டது என்றதொரு தோற்றப்பாட்டை சில அரசியல் கட்சிகளும் பெரும்பாலான ஊடகங்களும் உருவாக்கி வருகின்றன.
ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு பெரும் யுத்தத்தில் ஒரு கள நடவடிக்கைதான் (One Field Operation) முடிந்துள்ளது என்பதுதான் கள நிலவரம்.

ஏனெனில், இந்த விடயம் ஜனாதிபதி மைத்திரி நாடாளுமன்றத்தைக் கலைத்ததுடன் சம்பந்தப்பட்டது மட்டுமானது அல்ல. அதனால் அது 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பல கோடி ரூபா பெறுமதியில் ஆட்களை விலைக்கு வாங்கி பெரும்பபான்மையை நிரூபிப்பதாலோ அல்லது 2 கோடி சனத்தொகை கொண்ட ஒரு நாட்டில் ஏழு நீதிகள் வழங்குகின்ற ஒரு தீர்ப்பினாலோ முடிவுக்கு வந்துவிடப் போவதில்லை என்பதே உண்மை.

அதற்குக் காரணம், நாட்டின் உண்மையான எஜமானர்களாகவும், ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாகவும், தமது உடன் பிறப்பான இறையாண்மையைப் பிரயோகிப்பவர்களாகவும் திகழ்கின்ற இலட்சோப இலட்சம் மக்களின் கருத்துக்களை கணக்கில் எடுக்காமல், விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் நாடாளுமன்றத்தினதும், சட்டப் புக்ககங்களினதும் தயவில் தங்கி நின்று எடுக்கும் முடிவுகளையே அதிகார வர்க்கம் முதலும் முடிவுமாகக் கொள்ளும் ஒரு போக்கு முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தில் தொன்றுதொட்டு நிலவி வருகின்றது.
முதலில் இந்த அரசியல் நெருக்கடி எதனால் ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து பார்த்தால்தான் நோய்க்கான வைத்தியத்தைச் செய்ய முடியும்.



அப்படிப் பார்த்தால் 2015 ஜனவரி 8இல் உள்நாட்டு – வெளிநாட்டு பிற்போக்கு சக்திகளின் பின்னணியுடன் எதிரெதிரான கொள்கைகளைக் கொண்ட இரண்டு அணிகள் இணைந்து ஒரு ஜனாதிபதியைத் தெரிவு செய்ததில்தான் இந்தக் குழப்பம் ஆரம்பமாகிறது. நாட்டு நலன் கருதி இவ்வாறான ஒரு ஏற்பாட்டைச் செய்திருந்தால் அதை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் அப்படியில்லாமல் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமது வல்லாதிக்க நோக்கங்களை ஈடேற்றுவதற்காகவே சர்வதேச – பிராந்திய வல்லாதிக்க சக்திகள் அந்த ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டன.

அடுத்ததாக, அதே வருடம் ஓகஸ்டில் நடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து அதே எதிரும் புதிருமான இரண்டு கட்சிகளும் சேர்ந்து அமைத்த ‘நல்லாட்சி’ அல்லது ‘தேசிய அரசாங்கம்’ என்பது இன்னொரு பொருந்தாக் கலியாணமாகும். ஜனாதிபதித் தேர்தலின் தொடர்ச்சியாகவே இது மேற்கொள்ளப்பட்டது.

இந்த இரண்டு நடவடிக்கைகளும் இலங்கை மக்களின் உண்மையான நலன்களைப் புறந்தள்ளி மேற்கொள்ளப்பட்ட அரசியல் சதி சூழ்ச்சி நடவடிக்கைகளாகும். இந்த சூழ்ச்சியில் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டது சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், அதன் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவுமாகும். அது எப்படி நடந்தது?
‘தேசிய அரசாங்க’த்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நீண்டகால நோக்கில் தனது அதிகாரத்தை நிறுவி அந்நிய எஜமானர்களுக்குச் சேவை செய்யும் வகையில் பல நேரடி மற்றும் மறைமுகத் திட்டங்களைத் தீட்டிச் செயல்படத் தொடங்கியது. அது பின்வரும் செயல்பாடுகளில் இறங்கியது.

இலங்கை தனது அரசியல், பொருளாதார சுயாதிபத்தியத்தையும், இறையாண்மையையும் பாதுகாக்கும் கொள்கைகளைப் புறந்தள்ளிய ஐ.தே.க., 1977இல் தற்போதைய அக்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மாமனாரும், கடைந்தெடுத்த ஏகாதிபத்திய விசுவாசியுமான ஜே.ஆர்ஜெயவர்த்தன அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதாரக் கொள்கைகளை நவ தாராளவாத வடிவத்தில் மேற்கொள்ளும் முயற்சிகளை ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆரம்பித்தது. அதை அவர் ஒருமுறை வெளிப்படையாகவும் குறிப்பிட்டார். இந்தப் போக்கு நீண்ட காலம் ஏகாதிபத்திய எதிர்ப்பு சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் ஊறித் திளைத்த ஜனாதிபதி மைத்திரிக்கும் அவரது அணியினருக்கும் ஒவ்வாத ஒன்றாகும். இந்தப் பிரச்சினையே தேசிய அரசாங்கத்தில் முரண்பாடு முளை விடுவதற்கு அத்திபாரமாக அமைந்தது.

அடுத்ததாக, பிரதமர் ரணில் தனது அதிகார வரம்புக்கு அப்பால் சென்று ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைத் தனது கையில் எடுத்து தன்னிச்சையாக பிரயோகிக்கத் தொடங்கினார். அதே நேரத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையிலும், எதிர்காலத்தில் இலங்கையில் ஐ.தே.க. எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கம் ஒன்று பதவிக்கு வர முடியாத வகையிலும் அரசியல் அமைப்பில் 19ஆவது திருத்தச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தனர்.

இவற்றுக்கும் அப்பால் இன்னொரு நடவடிக்கையையும் ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டது. அதாவது தமது பிரதான எதிரியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் அதிகாரத்துக்கு வர முடியாத வகையில் அதன் முன்னாள் அரசாங்கத் தலைவர்கள் மீது பல பொய் வழங்குகள் போடப்பட்டன. அது மாத்திரமின்றி, பாசிசப் புலிகளுக்கு ஆதரவான வெளிநாட்டுச் சக்திகளைத் திருப்திப்படுத்துவதற்காக நாட்டை ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவான பயங்கரவாத இயக்கத்திடமிருந்து மீட்டெடுத்த படையினர் மீது தண்டனைகள் விதிக்கவும் ரணில் அரசு முயற்சிகளை மேற்கொண்டது.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் அரசாங்கத்தில் அங்கம் வகித்த இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையிலும் நாளுக்குநாள் மோதல் போக்கை வளர்த்துச் சென்றது. மறுபக்கத்தில் ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் இத்தகைய மக்கள் விரோத – தேச விரோத செயற்பாடுகள் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் கோபாவேசத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருந்தது. மக்கள் தமது வெறுப்பை அரசாங்கத்தால் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு பின்னர் 2018 பெப்ருவரி 10இல் நடத்திய உள்ளுராட்சி தேர்தலில் வெளிப்படுத்தினர். இந்தத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்தின் இரண்டு பங்காளிக் கட்சிகளான ஐ.தே.கவையும், சுதந்திரக் கட்சியையும் தோற்கடித்து, புதிதாக உருவான சிறீலங்கா பொதுஜன பெரமுனவை அமோகமாக வெற்றிபெற வைத்தனர்.

பொதுஜன பெரமுனவின் இந்த அமோக வெற்றி, ஐ.தே.கவும் அதனது சர்வதேச எசமானர்களும் எதிர்பார்க்காத ஒன்று. எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் நடந்தாலும் அரசின் பங்காளிக் கட்சிகள் இரண்டையும் தோற்கடித்து பொதுஜன பெமுரனதான் வெற்றிவாகை சூடும் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டு விட்டது. அதே நேரத்தில் இந்த வளர்ச்சிப் போக்குத்தான் ஜனாதிபதியினதும் அரசுடன் இணைந்திருந்த ஒருபகுதி சுதந்திரக் கட்சியினரதும் கண்களையும் திறக்க உதவியது. அதாவது அரசியல்வாதிகள் செய்ய முடியாத மாற்றத்தை மக்கள் சக்தியே உருவாக்கியது.
இந்தச் சூழ்நிலையில்தான் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி அணியினரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான சுதந்திரக் கட்சி (சிறீலங்கா பொதுஜன பெரமுன என்ற பெயரில் செயல்பட்டு வந்த) அணியினரும் மீண்டும் ஒன்றிணையும் சூழல் உருவானது. இந்த நிலைமை உருவாவதைப் பொறுக்காத சக்திகள்தான் ஜனாதிபதியைளயும், ராஜபக்ச குடும்பத்தினரையும் கொலை செய்வதற்குத் திட்டம் தீட்டினர்.

நாடு இப்படியான ஒரு அபாயகரமான சூழலை எதிர்கொண்ட பின்னரே ஜனாதிபதி மைத்திரி அவசரம் அவசரமாக ரணிலைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். இது ஒரு தற்காலிகத் தீர்வுதான் என்று கருதிய ஜனாதிபதி, நாட்டில் ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை உருவாக்கும் பொருட்டு மக்களிடம் ஆணை கேட்டுச் செல்வதற்காக நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு அறிவிப்பு விடுத்தார்.
ஆனால் மைத்திரி நாட்டைக் காப்பாற்ற எடுத்த இந்த அதிரடி நடவடிக்கைகள் இரண்டு பாரிய தடைகளைச் சந்தித்தது.

ஓன்று, நாடாளுமன்றத்தில் இருந்த பல வகையான பிற்போக்கு சக்திகளை வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் ஐ.தே.கட்சியால் திரட்ட முடிந்ததால், புதிய பிரதமர் மகிந்தவால் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.
இரண்டாவது, ஐ.தே.க. தலைமையிலான சக்திகள் நீண்ட நோக்குடன் இப்படியான ஒரு நிலைமை உருவாகலாம் எனக் கணித்து 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதால், நாடாளுமன்றக் கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.

ஆனாலும், இந்த அரசியல் நெருக்கடி அரசியல் காரணங்களால் உருவானது என்பதே உண்மையாகும். எனவே அதை அரசியல் ரீதியாகத் தீர்ப்பதுதான் முறை.
அப்படிப் பார்த்தால், புதிதாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தி மக்களிடம் புதிதாக ஆணை பெறுவதொன்றே இதற்கான தீர்வாகும்.

அதை விடுத்து நாடாளுமன்றத்தில் விலைக்கு வாங்கப்பட்ட உறுப்பினர்கள் மூலமும், பிற்போக்கு அரசியல் நோக்கங்கள் மூலமும் உருவாக்கப்பட்ட பெரும்பான்மையைக் காட்டி வலுக்கட்டாயமாக ஆட்சியைத் தொடர்வதற்கு ஐ.தே.கட்சிக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. அதுமட்டுமல்ல, பெரும்பான்மை பலம் என்று பார்த்தாலும் கூட இன்று எதிரணியில் இருக்கும் பொதுஜன பெரமுனையும், சுதந்திரக் கட்சியும் கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் ஐ.தே.கவை நான்கில் மூன்று பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடித்திருக்கின்றன. எனவே, புதிதாக மக்கள் தீர்ப்பைப் பெறுவதுதான் இன்றைய அரசியல் நெருக்கடி தீர்வதற்கான ஒரே வழியாகும்.

ஒரு தனி மனிதனின் கையில் இருக்கும் நிறைவேற்று அதிகாரத்தை விட, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருக்கும் சட்டவாக்க அதிகாரத்தை விட, விரல் விட்டெண்ணக்கூடிய நீதிபதிகளின் சட்ட வியாக்கியான அடிப்படையிலான தீர்ப்புகளை விட, இலங்கையின் இரண்டு கோடி மக்களினால் ஜனநாயக முறைப்படி நடத்தப்படும் தேர்தல் ஒன்றில் வழங்கப்படும் தீர்ப்புதான், ஜனநாயக ரீதியானதும், இறையாண்மை மிக்கதும், தேசப்பற்று மிக்கதுமாகும்.
எனவே, ‘நாடு பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும்’ என அனைத்து மக்களும் ஏகோபித்து குரல் எழுப்ப வேண்டும்.
Source: வானவில் இதழ் 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...