பழையபடி தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேதாளம் முருங்கை மரத்தில்! – சுப்பராயன்


மிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒருமுறை தனது ஏகாதிபத்திய சார்பு விசுவாசத்தையும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பு வர்க்க விசுவாசத்தையும் வெளிக்காட்டியிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. அரசு அமைவதற்கு 14 தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எழுத்து மூல ஆதரவினை வழங்கியதன் மூலம் இது வெளிப்பட்டிருக்கிறது.

இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதலாக, தமிழ் மக்களுக்குத் தலைமைதாங்கிய எல்லாத் தமிழ் தலைமைகளுமே ஏதோ ஒரு வகையில் பிற்போக்கு வலதுசாரிக் கட்சியான ஐ.தே.கவுடன் கைகோர்த்தே செயல்பட்டு வந்திருக்கின்றன. எனவே தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமை அந்த அடிச்சுவட்டைப் பின்பற்றி நடந்து கொண்டமை ஒன்றும் ஆச்சரியகரமான விடயமல்ல. ஒரேயொரு வித்தியாசம் என்னவெனில், முன்பு இருந்த தமிழ் தலைமைகள் மூடி மறைத்து ஐ.தே.கவுடன் செய்த கொடுக்கல் வாங்கல்களை இப்பொழுதுள்ள தலைமை எந்தவித தயக்கமுமின்றி, வெட்கமுமின்றி பகிரங்கமாகவே செய்கின்றது.


அதற்குக் காரணம், தற்போதைய தமிழ் தலைமையும் முன்னைய ஐ.தே.க. சார்புத் தமிழ்த் தலைமைகளின் தொடர்ச்சி என்பது ஒருபுறமிருக்க, தற்போது தலைமையில் இருக்கும் இரா.சம்பந்தன் திரிகோணமலையில் பிரபல்யமான ஐ.தே.க. சார்பு குடும்பம் ஒன்றைச் சார்ந்தவராக இருப்பதும், அவருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருக்கும் எம்.ஏ.சுமந்திரன் நீண்டகால ஐ.தே.க. நண்பர் என்பதுமாகும். (சுமந்திரனை ஐ.தே.கதான் திட்டமிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் அனுப்பியதாகவும் ஒரு பலமான அபிப்பிராயம் உண்டு)
தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காகவே தாம் ஐ.தே.க. அரசை ஆதரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை கூறுகிறது. முன்னரும் கூறியது. 2015 ஜனவரி 08இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், பின்னர் அதேயாண்டு ஓகஸ்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் ஐ.தே.க. தலைமையிலான வேட்பாளர்களை எந்தவிதமான நிபந்தனையும் இன்றி ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அதன் பின்னரான மூன்றரை வருட காலத்தில் ஐ.தே.க. தலைமையிலான அரசை எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்துகொண்டு தொடர்ச்சியாக ஆதரித்து வந்துள்ளது. இவ்வளவத்தையும் செய்தும் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் ஒன்றைத்தன்னும் ஐ.தே.க. அரசைக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பால் நிறைவேற்ற முடிந்ததா?

சுதந்திர இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து வைத்தது, மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்தது, 1958, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழர்களுக்கெதிரான இனவன்முறைகளை முன்னின்று நடத்தியது, இனப்பிரச்சினைத் தீர்வுக்காக 1957இல் செய்யப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தையும், 1987இல் செய்து கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையும், 2000ஆம் ஆண்டில் சந்திரிக அரசு கொண்டு வந்த தீர்வுத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தப்பட விடாமல் குழப்பியது, அரசியல் ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டிய இனப்பிரச்சினையை யுத்தமாக மாற்றியது என்பன ஐ.தே.க. காலத்துக்குக்காலம் செய்த தமிழர் விரோத நடவடிக்கைகளில் சில.
ஐ.தே.கவின் இந்த தமிழர் விரோத பழைய வரலாறுகள் ஒருபுறமிருக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் பதவிக்கு வந்த தற்போதைய ஐ.தே.க. அரசு, கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது தமிழ் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் – அவற்றில் சில உடனடிப் பிரச்சினைகளாக இருந்தபோதிலும் – தீர்த்து வைத்ததா என்றால், பதில் “இல்லை” என்பதுதான். அப்படியிருக்க, எப்படி கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை ஏதுமின்றி ஐ.தே.க. அரசு அமைய ஆதரவளித்ததோ, அவ்வாறே தற்போதும் ஐ.தே.க. அரசு அமைவதற்கு நிபந்தனை ஏதுமின்றி எழுத்து மூல ஆதரவை அளித்துள்ளது.
தமிழ்த் தலைமை தமிழ் மக்களுக்குச் செய்துள்ள இந்தத் துரோகம், வரலாற்றில் இதுதான் முதல் தடவை அல்ல.

1965இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளில் ஒன்றுக்காவது ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மை கிடைத்திருக்கவில்லை. ஆனால், சிறீலங்கா சுதந்திரக் கட்சியை விட, ஐக்கிய தேசியக் கட்சி சற்றுக் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தது. (2015 பொதுத் தேர்தல் முடிவுகள் போல) தமிழரசு, தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவில்லாமலும் ஐ.தே.கவால் வேறு சில சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்க முடியும். ஆனால் நாடாளுமன்றத்தில் ஐ.தே.க. அரசாங்கம் ஏதாவதொரு மசோதாவைக் கொண்டு வந்து அதை பிரதான எதிர்க்கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்து, அதனுடன் தமிழரசு – தமிழரசுக் கட்சிகளும் சேர்ந்து எதிர்த்தால் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டு அரசு கவிழும் நிலை இருந்தது.
ஆனால் சிறீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரை அவ்வாறானதொரு நிலை இருக்கவில்லை. தமிழ் கட்சிகள் இரண்டும் ஆதரித்தால் மட்டுமே அக்கட்சியால் ஆட்சியமைத்திருக்க முடியும். இந்த நிலை அன்றைய காலகட்டத்தில் தமிழரசுக் கட்சித் தலைமை சொல்லி வந்த, ‘பிரதான கட்சிகளுக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத போது நிபந்தனையுடன் பேரம்பேசி ஆட்சியமைக்க ஆதவளிப்பதன் மூலம் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்’ என்ற தந்திரோபாயத்தைக் கையாள்வதற்கு கிடைத்த அரிய சந்தர்ப்பமாக எல்லோராலும் பார்க்கப்பட்டது.
ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்கும்படி சுதந்திரக் கட்சியின் தலைவி சிறீமாவோ பண்டாரநாயக்க தமிழரசுக் கட்சிக்கும் தமிழ் காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பும் விடுத்தார். தமிழ் கட்சிகள் முன்வைக்கும் நிபந்தனைகள் சிலவற்றை ஏற்பதற்கும் தயாராக இருந்தார்.
ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைகள் சிலவற்றைத்தன்னும் தீர்ப்பதற்கு கிடைத்த அந்த அரிய சந்தர்ப்பத்தை தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் ஊதாசீனம் செய்துவிட்டு, ஐ.தே.க. கொடுத்த “மாவட்ட சபைகள் அமைக்கப்படும்” என்ற போலி வாக்குறுதியை ஏற்று ஐ.தே.க. அரசில் ஆர்.ஜீ.சேனநாயக்க, கே.எம்.பி.ராஜரத்தன போன்ற தீவிர சிங்கள இனவாதிகளுடன் இணைந்து ஐ.தே.க. தலைமையிலான ஏழுகட்சி கூட்டரசாங்கத்தில் இணைந்து கொண்டன. ஆனால், இறுதியில் ஐ.தே.க. வாக்குறுதி கொடுத்த மாவட்ட சபையைப் பெற முடியாமல் நான்கரை ஆண்டுகள் கழித்து தமிழரசுக் கட்சி அரசிலிருந்து வெளியேறியது.

தமிழரசுக் கட்சி அன்று தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொண்ட இந்தத் துரோகம் காரணமாகவும், தமிழரசக் கட்சியும் அங்கம் வகித்த ஐ.தே.க. அரசாங்கம் தமிழர்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகக் கொண்டு வந்த ஆள் அடையாள அட்டை மசோதாவை எதிர்த்துமே அன்று அக்கட்சியின் ஊர்காவற்றுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வி.நவரத்தினம் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறி தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். (ஆனால் இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் அப்படியான கொள்கைப்பற்றுள்ள ஒருவரையாவது காண முடியவில்லை)

அதுமாத்திரமின்றி, தமிழரசுக் கட்சி செய்த இந்த இரண்டக வேலை காரணமாகவே, 1970இல் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது தமிழ் கட்சிகளின் தயவில்லாமல் ஒரு ஆட்சியை அமைக்கும் வண்ணம் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணிக்கு நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றியை ஈட்டிக் கொடுத்தனர்.
ஏறத்தாழ 53 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த அரசியல் நிலைமை போன்ற ஒரு நிலை அண்மையிலும் உருவாகியது. 2018 ஓக்டோபர் 26இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசைப் பதவி நீக்கம் செய்த பின்னர், நாடாளுமன்றத்தில் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ரணில் தரப்பினரும், மகிந்த தரப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை நாடினர்.

ரணில் தரப்பினரை விட, மகிந்த தரப்பினருக்கு சற்றுக் குறைவான நாடாளுமன்ற ஆசனங்கள் இருந்ததால், அவர்கள் ஆட்சியமைக்க ஆதரவு வழங்குவதாக இருந்தால், வலுவான கோரிக்கைகளை முன்வைத்து பேரம் பேசும் வாய்ப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்தது. ஆனால் தமிழ்த் தலைமை இந்தத் தடவையும் அந்த வாய்ப்பை ஊதாசீனப்படுத்தி, ஐ.தே.க. மீது இருந்த வர்க்க பாசம் காரணமாகவும், ஏகாதிபத்திய எஜமானர்களின் ஆலோசனைப்படியும் செயற்பட்டு, ரணில் தலைமையிலான ஐ.தே.க. அரசு அமைய ஆதரவு கொடுத்துள்ளது.
இதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைக்கு தமிழ் மக்களின் நலன்களை விட, தமது வரக்க சகாக்களான ஐ.தே.கவினதும், ஏகாதிபத்திய எஜமானர்களினதும் நலன்களே முக்கியம் என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது. எதிர்காலத்திலும் தமிழ் மக்களுக்கு இந்த வகையான பிற்போக்கு இனவாத சக்திகள் தலைமைதாங்கும் வரையும் இவ்வாறானதொரு நிலையே தொடரப்போகின்றது.

இங்கே விழித்துக் கொண்டு செயற்பட வேண்டியவர்கள் தமிழ் மக்கள்தான். செய்வார்களா? அல்லது தொடர்ந்தும் கண்ணை மூடிக்கொண்டு இந்த வங்குரோத்துப் பாதையில் சென்று செத்து மடியப் போகிறார்களா என்பதே அவர்கள் முன்னாலுள்ள கேள்வி.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...