Sunday, 20 January 2019

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கவில்லை! – பிலிப்பையா


னாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிதாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பால் ஜனநாயகம் செய்துவிட்டது என்று கூப்பாடு போட்ட ஒரே அரசியல் ‘இனத்தை’ச் சேர்ந்த ஐ.தே.க., தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி., அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட்ட சில கட்சிகளும் அமைப்புகளும் அதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தன.

வழக்கை விசாரித்த 7 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசியல் சாசனப்படி ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தது தவறானது என ஏகமனதாகத் தீர்ப்பளித்து, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு தடை போட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள சில சக்திகள் “ஆகா, இலங்கை நீதித்துறை சுயாதீனமாகச் செயற்பட்டு ஜனநாயகத்தைப் பாதுகாத்துவிட்டது” என தலையின் மேல் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர் அதுபற்றி மக்கள் மத்தியில் பல விதமான கருத்துக்கள் நிலவி வந்தன.
இதில் ஆழமான அரசியல் பார்வையும் அனுபவமும் கொண்ட ஒரு சிலர் மட்டும் தற்பொழுது வழங்கப்பட்டுள்ள மாதரியான ஒரு தீர்ப்புதான் வரும் என மிகவும் திடமாக நம்பினர். அவர்களிலும் ஒரு சாரார் அரசியல் சாசனப்படி நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இல்லை என்ற அடிப்படையில் அந்த முடிவுக்கு வந்திருந்தனர். இன்னொருசாரார், ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளும் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாலும், மேற்குலக நாடுகள் ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான அழுத்தங்களை வெளிப்படையாகப் பிரயோகித்து வந்ததாலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் அதன் தாக்கத்துக்கு உட்பட்டே தீர்ப்பை வழங்குவர் எனக் கருதினர்.


மற்றொரு பிரிவினர், தீர்ப்பு எப்படி அமைந்தாலும் ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் ஒருமனதாக இல்லாமல் பிரிந்து நின்று தீர்ப்பை வழங்குவர் என நம்பி இருந்தனர். ஜனநாயகத்தில் அப்படி நடப்பதுதான் வழமை என்ற கருத்தால் அவர்கள் அந்த நிலைப்பாட்டுக்கு வந்திருந்தனர்.
ஆனால் நாட்டின் உண்மையான எஜமானர்களான பொதுமக்கள் வேறொரு கருத்தைக் கொண்டிருந்தனர். அவர்கள் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு அறிவிப்பு விடுத்ததை சரியென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என நம்பி இருந்தனர்.
அப்படி அவர்கள் நம்பியதற்கு பல காரணங்கள் இருந்தன.
முக்கியமான காரணம், 2015 ஓகஸ்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கோ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கோ ஆட்சியமைக்கக்கூடிய அறுதிப் பெரும்பான்மை கிட்டியிருக்கவில்லை. எனவே ரணில் தலைமையிலான ஐ.தே.முன்னணியும், ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான ஐ.ம.சு.கூட்டமைப்பும் இணைந்து ‘நல்லாட்சி’ என்ற பெயரில் கூட்டரசாங்கம் ஒன்றை அமைத்தன. அவர்கள் அவ்வாறு செய்ததிற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது.

முன்னர் ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசை வீழ்த்துவதற்கு வெளிநாட்டு சக்திகளின் ஆசிர்வாதத்துடன், 2015 ஜனவரி 8 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக நியமித்து அதில் வெற்றியும் பெற்றிருந்தனர். எனவே மகிந்த அணி மீண்டும் தலைதூக்காமல் இருப்பதற்கு அந்த அரசியல் ஐக்கியம் தொடர வேண்டியது தேவையெனவும் அவை கருதின.

ஆனால், மூன்றரை வருடங்களாக நடைபெற்ற ‘நல்லாட்சி’யில் ஐக்கிய தேசியக் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் அதிகாரங்களையும் தன்னிச்சையாக தனது கைகளில் எடுத்துக்கொண்டு செயற்படத் தொடங்கினார். அதுமட்டுமின்றி, வழமையான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் சார்பு நிலைப்பாட்டுக்கு எதிராக ரணிலின் அரசு செயற்பட்டு, மக்களுக்கு மேல் ஏராளமான நெருக்கடிகளை ஏற்படுத்தியது. பொதுச் சொத்துகளை தனியார்மயப்படுத்தியது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி உட்பட பலவிதமான ஊழல்களில் ஈடுபட்டது. இதன் காரணமாக முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு மக்களின் அனைத்துப் பிரிவினரும் தினசரி போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தனர்.
2018 பெப்ருவரி 10 நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல் நாட்டு மக்களின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டியது. அந்தத் தேர்தலில் ஆளும் கட்சிகள் இரண்டும் படுதோல்வி அடைந்தன. மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிதாக உருவான சிறீலங்கா பொதுமக்கள் முன்னணி அமோக வெற்றியீட்டியது.

இதன் காரணமாக ஆட்சியின் இரு பங்காளிக் கட்சிகளுக்கிடையிலும் ஏற்கெனவே இருந்த விரிசல் ஆழமாகி மோதலாக உருவெடுத்தது. இந்தச் சூழ்நிலையில்தான் மக்களில் பெரும்பான்மையோரின் கருத்துக்கு செவிசாய்த்து ‘நல்லாட்சி’ அரசிலிருந்து தனது ஐ.ம.சு.கூட்டமைப்பை ஜனாதிபதி விலக்கி கூட்டரசாங்கத்துக்கு முடிவு கட்டினார். அதுமாத்திரமின்றி, ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான மக்கள் விரோத, தேச விரோத அரசைக் கலைத்து, மகிந்த தலைமையில் தற்காலிக அரசொன்றை நியமித்தார். தற்காலிக அரசொன்றை அமைத்தாலும், அந்த அரசாலும் நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்று கருதியதாலேயே, நாடாளுமன்றத்தைக் கலைத்து மக்கள் விரும்பும் புதிய அரசை மக்கள் தேர்தல் ஒன்றின் மூலம் ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்யத் தீர்மானித்தார்.

ஜனாதிபதியின் இந்த முடிவை நாட்டின் பெரும்பான்மையான மக்களும், மதத் தலைவர்கள், கல்விமான்கள், பொது
அமைப்புகள் என்பனவும் வரவேற்றனர். ஆனால் ஐ.தே.க. ஜனாதிபதியின் ஜனநாயக பூர்வமான, நீதியான இந்த நிலைப்பாட்டை எதிர்த்ததுடன், தனது கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் மூலம் நாடாளுமன்றச் செயற்பாடுகளையும் சீர்குலைத்தது. இதனால் நாடு பெரும் அரசியல் குழப்பத்தில் ஆழ்ந்தது. நாட்டில் இரண்டு மாதங்களாக ஏற்பட்டிருந்த குழப்ப நிலையைப் பார்த்த பொதுமக்களும், ஜனநாயக விரும்பிகளும் இந்தப் பிரச்சினைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதானால் பொதுத் தேர்தல் ஒன்றுதான் ஒரேவழி என்ற முடிவுக்கே வந்தனர்.
இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பெரும்பான்மையான நாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாக வந்துள்ளது. இது தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளின் தவறல்ல. அவர்கள் நாட்டின் அரசியல் நிலைமைகளை அல்லது மக்களின் விருப்பத்தை அடிப்படையாக வைத்துத் தீர்ப்புகளை வழங்குவதில்லை. நாட்டின் அரசியல் அமைப்பின் பிரகாரமும், அதன் அடிப்படையிலான சட்டங்களின் பிரகாரமுமே அவர்களால் நீதிமன்றத் தீர்ப்புகளை வழங்க முடியும்.
எல்லா நாடுகளிலும் அரசியல்வாதிகளே சட்டங்களை இயற்றுகிறார்கள். சட்டங்களை இயற்றும் அரசியல்வாதிகள் சில நோக்கங்களின் அடிப்படையிலேயே அதை ஆக்குகிறார்கள். ஒரு சட்டம் இயற்றப்பட்ட பின்னர் அதை மதித்து ஒழுக வேண்டிய கடமை எல்லாத்தரப்பு மக்களுக்கும் – பொதுமக்கள், அரச ஊழியர்கள், அரசியல்வாதிகள், நீதித்துறையினர் எல்லோருக்கும் கட்டாயமானதாகும்.

எனவே இலங்கையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் அவ்வாறே அமைந்துள்ளது. அந்தத் தீர்ப்பு மக்களின் எதிர்பார்ப்புக்கு விரோதமாக இருந்தாலும் அதற்கு மதிப்பளிக்க வேண்டியது கடமை மட்டுமின்றி, கட்டாயமானதுமாகும்.
தற்போதைய சட்டம் சரியில்லை என மக்கள் கருதினால், நான்கரை ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்து, அதன் பின்னர் நடைபெறும் பொதுத் தேர்தலில் சரியான பிரதிநிதிகளைத் தெரிவு செய்து, அவர்கள் மூலம் மக்கள் சார்பான சட்டங்களை இயற்ற வைப்பதே மக்களுக்கு முன்னாலுள்ள ஒரே தீர்வாகும்.

No comments:

Post a Comment

UK media, MPs unveil latest Assange deception

≡ Menu UK media, MPs unveil latest Assange deception 13 April 2019 In my last blog post, I  warned  that the media and p...