சுமந்திரன் – சம்பந்தன் அடாவடித்தனம் இப்படியும் முடியலாம்! – திரிலோகமூர்த்தி


ன்றைய இலங்கையின் நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய அணியாக 98 உறுப்பினர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு திகழ்கின்றது. மூன்றாவது பெரிய அணியாக 16 உறுப்பினர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகழ்கின்றது. அதிலும் இரண்டு உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு ஒதுங்கிவிட்டதால் உண்மையான கூட்டமைப்பின் எண்ணிக்கை 14 மட்டுமே.

கடந்த ஒக்ரோபர் மாதத்துக்கு முன்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து ‘தேசிய அரசாங்கம்’ என்ற போர்வையில் இருந்ததால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 54 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தனியாக ‘கூட்டு எதிரணி’ என்ற பெயரில் செயல்பட்ட போதும், அவர்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்காது தமிழ் தேசியக் கூட்டமைப்பையே உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக அங்கீகரித்து, அவர்களுக்கு உரிய வரப்பிரசாதங்களைக் கொடுத்து வைத்திருந்தது ரணிலின் அரசாங்கம்.
ஆனால் போலி எதிர்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி ஒன்றுக்குரிய வரப்பிரசாதங்களையும் சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு, ரணில் அரசாங்கத்தின் துணைக்குழுவாகவே செயல்பட்டு வந்தது. அதுமாத்திரமின்றி, அண்மையில் நாட்டில் அரசியல் குழப்ப நிலை தோன்றிய பொழுது கூட்டமைப்பு முற்றுமுழதாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க வேண்டும் என கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் எழுத்து மூலமான ஆதரவையும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலைமையில் நாட்டின் அரசியல் அரங்கில் இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஒன்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஐ.தே.கவுடனான கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துவிட்டதால், அதுவே யதார்த்தத்தில் உண்மையான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
இரண்டாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எண்ணிக்கை வெறுமனே 14 என்பதாலும், அது வெளிப்பிடையாக ரணில் அரசாங்கத்தின் பங்காளி போல செயல்பட்டு வருவதாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.


இந்த நிலைமையை தவிர்க்க முடியாமல் ஏற்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பாக மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தார்.
இந்த நியமனத்தைப் பொறுக்க முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஐ.தே.கவின் சில உறுப்பினர்களும் சம்பந்தனையே தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என போலியான நியாயங்களை முன் வைக்கின்றனர். குறிப்பாக, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், கூட்டமைப்பை இன்று வழிநடத்தும் ஐ.தே.க. புறோக்கர் சுமந்திரனும் பதவி ஆசை காரணமாகவும், ஐ.தே.க. விசுவாசம் காரணமாகவும் ஏதேதோ எல்லாம் பிதற்றுகின்றனர்.
அவர்களது வாதம் என்னவெனில், அரசாங்கத்தின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருப்பதால், அவரும் அரசாங்கத்தின் அங்கம் என்றபடியால் அவர் தலைமைதாங்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சிப் பதவி வழங்கக்கூடாது என்பதாகும். இந்த வாதம் நியாயத்தினதும் சட்டத்தினதும் அடிப்படையிலான வாதமல்ல. இது குதர்க்க வாதம்.
அவர்களது குதர்க்க வாதத்தின்படி பார்த்தாலும். ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்டு ஜனாதிபதியாகத் தெரிவானவர் அல்ல. அவர் பொது வேட்பாளராக பொதுச் சின்னத்தில் போட்டியிட்டே வெற்றி பெற்றவர்.

அத்துடன் அவர் நாடாளுமன்ற உறுப்பினரும் அல்ல. நாட்டின் அரசியல் சாசனப்படி நாட்டு மக்களின் தலைவர் என்ற வகையில் எந்த அரசாங்கம் பதவியில் இருந்தாலும் தலைமைதாங்க வேண்டியது ஒரு ஜனாதிபதியின் கடமையாகும். அதற்காக அவரை ஆளும் கட்சியின் உறுப்பினர் என்று வரையறுக்க முடியாது. அதுமட்டுமில்லாமல் ஜனாதிபதி மைத்திரி இன்றைய ஐ.தே.க. அரசாங்கத்துக்கு எதிரான தனது கடுமையான நிலைப்பாட்டைத் தொடர்ந்தும் வெளிப்படுத்தியும் வருகின்றார்.
நிலைமை இப்படி இருக்க, சம்பந்தனும் சுமந்திரனும் மகிந்த ராஜபக்ச நாட்டின் பிரதமராக இருக்கவும் முடியாது, எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்க முடியாது என்று அடம் பிடிக்கின்றனர். அதாவது அரசாங்கமும் தங்களிடம் இருக்க வேண்டும், எதிர்க்கட்சி பதவியும் தங்களிடம் இருக்க வேண்டும் எனவும் விதண்டாவாதம் செய்கின்றனர். இவர்கள் இருவரினதும் அடாவடித்தனத்தைப் பார்த்து இவர்களை ஆதரித்த தமிழ் மக்களே “எண்டாலும் இவர்களுக்கு இவ்வளவு பேராசையும் அடாவடித்தனமும் தேவையில்லை” என புலம்புகிறார்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரும் புதிருமாகப் போட்டியிட்டவர்களில் மைத்திரி சுமார் 62 இலட்சம் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவானார். மகிந்த தோல்வியடைந்தாலும் சுமார் 59 இலட்சம் வாக்குகள் பெற்றார். அவர் பெற்ற வாக்குகள் அவ்வளவும் சுத்தமான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு வாக்குகள். மைத்திரிக்கு வாக்களித்தவர்களில் பெரும் பகுதி ஐ.தே.க, தமிழ் தேசியச் கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் கட்சிகளின் வாக்குகள் என்றாலும், அதில் இருபது இலட்சம் என்றாலும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகள் எனக் கொள்ளலாம். இன்று மைத்திரியும் மகிந்தவும் திரும்பவும் ஒற்றுமைப்பட்டு ஓரணியில் இருப்பதால், கடந்த ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு கணிப்பீட்டின்படி அவர்கள் இருவரினதும் மொத்த வாக்கு வங்கியின் பலம் சுமார் 80 இலட்சமாகும்.
இந்த நிலைமையில் நாட்டிலுள்ள மொத்த வாக்காளர்களில் வெறுமனே 3 (மூன்று) வீதத்தை (கடந்த பெப்ருவரியில் நடந்த உள்ளுராட்சி தேர்தல் வாக்களிப்பின்படி அதுவும் குறைவடைந்துவிட்டது) மட்டும் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவிதமான நீதி நியாயமும் இன்றி 80 இலட்சம் வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை விடுத்து தனக்குத்தான் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என அடம் பிடிப்பதைத்தான் கலிகால கொடுமை என்று சொல்வார்களோ?
இவர்களது செய்கையைப் பார்க்க ஒரு விடயம்தான் நினைவுக்கு வருகிறது. 1965 பொதுத் தேர்தலின் பின்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தனது தலைமையில் அரசமைக்க தமக்கு ஆதவளிக்கும்படி விடுத்த அழைப்பை நிராகரித்த ‘தந்தை’ செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியும், ;விண்ணன்’ ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் கட்சியும் வீம்புத்தனமாக முடிவெடுத்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவளித்தன. அவர்களது இந்த ஒருதலைப்பட்சமான முடிவு சிங்கள – தமிழ் மக்களது சிந்தனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவு என்ன?

அடுத்த வந்த 1970ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழ் கட்சிகளின் தயவு இல்லாமல் ஒரு ஆட்சியை அமைக்கக்கூடிய நிலையை, அதாவது மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கக்கூடிய ஒரு நிலையை, நாட்டு மக்கள் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசுக்கு வழங்கினர்.
அதுமட்டுமல்ல, தமிழ் கட்சிகள் இரண்டும் எடுத்த முடிவை தமிழ் மக்களும் அங்கீகரிக்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டின. தமிழ் கட்சிகள் இரண்டினதும் ஜம்பவான்களான ‘தளபதி’ அ.அமிர்தலிங்கம், ‘விண்ணன்’ ஜீ.ஜீ.பொன்னம்பலம், ‘இரும்பு மனிதன்’ ஈ.எம்.வி.நாகநாதன், ‘உடுப்பிட்டி சிங்கம்’ மு.சிவசிதம்பரம், ‘அடலேறு’ மு.ஆலாலசுந்தரம் ஆகியோரை அத்தேர்தலில் தமிழ் மக்கள் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினர்.
அது போன்ற ஒரு நிலையைத்தான் இப்பொழுதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தனும் சுமந்திரனும் உருவாக்குகின்றனர். மைத்திரி – மகிந்த அணியினர் அரசாங்கத்தையும் அமைக்க முடியாது, எதிர்க்கட்சியாகவும் செயல்பட முடியாது இவர்கள் ஆடும் தாண்டவக் கூத்தினால், அடுத்த பொதுத் தேர்தலில் 1970 தேர்தல் போன்று நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மைத்திரி – மகிந்த அணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்குவதுடன், மறுபக்கத்தில் தமிழ் மக்கள் தமது கடமையாக கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களை வீட்டுக்கு அனுப்பும் வேலையைச் செய்தாலும் ஆச்சரியமில்லை.
ஏனெனில், சில வேளைகளில் வரலாறு தேவை கருதி மீண்டும் மீண்டும் நிகழ்ந்து வந்திருப்பதை நாம் காண முடியும்.
Source:Vanvail 96. 2018 

No comments:

Post a Comment

UK Tory Party threatens war against Russia, prepares class war at home By Thomas Scripps

  Warning Russian President Vladimir Putin of “what could be a very, very bloody war”, UK Defence Secretary Ben Wallace announced yesterday ...