தமிழர் அரசியலில் மூன்றாவது அணி சாத்தியமா? – சங்கரன்


ரசியல் அரங்கில் மூன்றாவது அணி அமைப்பது பற்றி காலத்துக்காலம் பேசப்படுவது வழமை. இப்பொழுது இலங்கைத் தமிழ் அரசியல் அரங்கில் அப்படியொரு கலந்துரையாடல் மீண்டும் ஆரம்பமாகி இருக்கிறது. அதற்குக் காரணம் இலங்கை போன்ற பிரித்தானிய வெஸ்ற்மினிஸ்ரர் ஆட்சிமுறை நிலவும் நாடுகளிலே இருகட்சி ஆட்சிமுறை இருப்பதும், அந்த இரு கட்சிகளும் ஏதோ ஒருவகையில் ஒத்த தன்மையுடையனவாக இருப்பதால் அதிருப்தி அடையும் அரசியல் சக்திகள் மூன்றாவது வழியொன்றைத் தேடுவதும் காலத்துக்குக் காலம் நிகழ்ந்து வருகின்றமையுமாகும்.
இந்த மூன்றாவது அணி அமைப்பது சம்பந்தமாக இரு கேள்விகள் இருக்கின்றன. முதலாவது கேள்வி, அரசியல் ரீதியாக மூன்றாவது அணி அமைப்பது சரியானதா என்பது. இரண்டாவது கேள்வி அப்படி அமைப்பது சாத்தியமா என்பது. இந்த இரண்டு கேள்விகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளதால், இந்த விடயம் குறித்துப் பொதுவாகவே ஆராயலாம்.
இயற்கை விஞ்ஞானமும் சரி, சமூக விஞ்ஞானமும் சரி, ஒரு பொருளில் அல்லது ஒரு விடயத்தில் எதிரும் புதிருமான இரண்டு அம்சங்களே இருக்கும் என நிறுவியுள்ளன. அதன் அர்த்தம் இந்த இரண்டு விடயங்களைத் தவிர வேறு விடயங்கள் எதுவும் இருக்காது என்பது அல்ல. இருக்கின்ற வேறு பல விடயங்கள் இந்த இரண்டில் ஒன்றைச் சார்ந்து அல்லது இணைந்தே இருக்கும் என்பதுதான் இதன் அர்த்தம்.
இலங்கை அரசியலை எடுத்துக் கொண்டால் சில உதாரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக தென்னிலங்கை அரசிலை எடுத்துக்கொண்டு பார்க்கலாம்.
இலங்கையில் தொடங்கப்பட்ட முதலாவது அரசியல் கட்சி 1935இல் ஆரம்பிக்கப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சியாகும். இந்தக் கட்சி ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு, மக்கள் நலன்பேண் இடதுசாரிக் கட்சியாகும். அன்றைய நிலையில் சமசமாஜக் கட்சிக்கு எதிரான பிரதான எதிர் அணியாக இலங்கையை ஆட்சி புரிந்த பிரித்தானிய ஏகாதிபத்தியம் இருந்தது. ஆக இரண்டு அணிகளே அரசியலில் இருந்தன. மூன்றாவது அணி என்று எதுவும் இருக்கவில்லை.
1948 பெப்ருவரி 4இல் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிவிட்டு பிரித்தானிய ஏகாதிபத்தியம் வெளியேறிய போது, அதன் இடத்தை ஏகாதிபத்திய சார்பு தரகு முதலாளித்துவ பிற்போக்குக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துக் கொண்டது. அதன் பின்னர் இடதுசாரி கட்சிகளான சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பனவற்றுக்கும் ஐ.தே.கட்சிக்கும் இடையிலேயே பிரதான முரண்பாடு இருந்தது.
ஆனால் இலங்கை இடதுசாரிகள் இலங்கையின் பருண்மையான நிலைமைகளைச் சரிவரப் புரிந்துகொண்டு வேலைசெய்யத் தவறியதால், அவர்களது இடத்தை ஐ.தே.கட்சியிலிருந்து எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையில் வெளியேறிய தேசிய முதலாளித்துவ சக்திகள் அமைத்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துக் கொண்டது. அதன் பின்னர் பிரதான முரண்பாடு ஐ.தே.கவுக்கும் சிறீ.ல.சு.கவுக்கும் இடையில் மாறியது.
மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்ட இடதுசாரிகள் காலத்துக்காலம் ‘இடதுசாரி முன்னணி’, ‘சோசலிச முன்னணி’ என்ற பெயர்களில் மூன்றாவது அணியை அமைக்க முயன்றனராயினும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. (1977 பொதுத் தேர்தலின் போது இடதுசாரிகள் மூன்றாவது அணியாகப் போட்டியிட்டு வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற ஆசனம் எதையும் பெறத் தவறியதுடன், ஐ.தே.கவின அமோக வெற்றிக்கும் வழிவகுத்தனர்) அதன் காரணமாக அவை அரசியலில் இருப்பதென்றால் ஏகாதிபத்திய – எதிர்ப்பு சிறீ.ல.சு.கவுடன் கூட்டுச்சேர வேண்டும் என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டனர். அதன் காரணமாகத்தான் அவை இன்றுவரை அரசியலில் நின்றுபிடிக்க முடிகிறது. (இதன் அர்த்தம் இடதுசாரிக் கட்சிகள் சுயமாகச் செயல்பட்டு ஐ.தே.கவுக்கு எதிரான பிரதான அணியாக வரக்கூடாது என்பதல்ல)
இடதுசாரிக் கட்சிகள் இரண்டும் பலமிழந்த பின்னர், இடதுசாரிக் கோசங்களுடன் உருவான ஜே.வி.பி. தான்தான் இலங்கையின் உண்மையான இடதுசாரி இயக்கம் என்று சொல்லிக்கொண்டும், மூன்றாவது அணியாகத் தன்னைப் பாவனைப்படுத்திக் கொண்டும் மக்கள் முன் வந்தது. ஆனால் அவர்கள் பிரதான எதிரியான ஏகாதிபத்தியத்தையும் அதன் அடிவருடியான ஐ.தே.கவையும் இனங்காணத் தவறி, 1971இல் சிறீமாவோ தலைமையிலான ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சியில் இறங்கி பெருத்த அழிவுகளுடன் தோல்வி கண்டனர். அதன்மூலம் அவர்கள் அடிப்படையில் தவறிழைத்து, பின்னர் ஒன்றன்பின் ஒன்றான தோல்விகளைச் சந்தித்தனர்.
பின்னர் அவர்கள் ஒரு கட்டத்தில் சந்திரிக தலைமையில் இருந்த சிறீ.ல.சு.கவுடனும், இப்பொழுது ரணில் தலைமையிலான ஐ.தே.கவுடனும், உத்தியோகபூர்வமாகவும் உத்தியோகபூர்வமற்றும் கூட்டுச் சேரந்து செயற்பட்டு வருகின்றனர். அதன் காரணமாக மூன்றாவது அணி என்ற ஜே.வி.பியின் நடைமுறைச் சாத்தியமற்ற நிலை தோல்வி கண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பன நடைபெற்ற பின்னர், ஐ.தே.கவும் சிறீ.ல.சு.கவில் மைத்திரி தலைமையில் இருந்த வலதுசாரிப் பிரிவும் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்த பின்னர், மகிந்த ராஜபக்சவை உத்தியோகபூர்வமற்ற தலைவராகக் கொண்டு சிறீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சி புதிதாகத் தோற்றம் பெற்றது. அக்கட்சியை மூன்றாவது அணி என அரசியல் நோக்கர்கள் வர்ணித்தும் வந்தனர். ஆனால் சிறீ.ல.சு;கவின் அடிப்படைக் கொள்கைகளை அக்கட்சி சுவீகரித்துக் கொண்டதன் மூலம், அக்கட்சியே ஐ.தே.கவுக்கு எதிரான பிரதான கட்சியாக முன்னுக்கு வந்துள்ளது. அதன் காரணமாக மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டது. இதை கடந்த பெப்ருவரியில் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலின் போது தெளிவாகக் காண முடிந்தது. ஆனால் மைத்திரி அணி நீண்ட காலத்துக்கு மூன்றாவது அணியாகத் தொடர யதார்த்த சூழல் இடம் கொடுக்காது. அவ்வணியின் ஒருபகுதி ஐ.தே.கவுடனும், மறுபகுதி சிறீலங்கா பொதுஜன பெரமுனவுடனும் அணிசேரும் நிலையே காணப்படுகின்றது.
இதிலிருந்து தென்னிலங்கை அரசியலில் மூன்றாவது அணி சாத்தியமில்லை என்பதை வரலாறு திரும்பத் திரும்ப நிரூபித்துள்ளதைத் தெரிந்து கொள்ள முடியும். இது ஒருபுறமிருக்க தமிழ் அரசியல் சூழலில் இந்த ‘மூன்றாவது அணி’ என்ற கருதுகோள் எப்படிச் செயல்பட்டு வந்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையில் உருவான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியே தமிழர்களின் முதலாவது அரசியல் கட்சியாகும். அக்கட்சி உருவான போது அக்கட்சியே தமிழ் தேசிய முதலாளிகளின் கட்சி என்று கருதிக்கொண்டு அக்கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தை கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு பிரிவினர் (தோழர் அ.வைத்திலிங்கம் போன்றோர்) முன்வைத்தனர். ஆனால் தமிழ் காங்கிரஸ் கட்சி, தமிழர்கள் மத்தியிலுள்ள சாதிவெறி பிடித்த, நிலப்பிரபுத்துவ சக்திகளின் பிரதிநிதி என்ற கருத்தை கட்சியிலுள்ள பெரும்பான்மையானோர் (தோழர் மு.கார்த்திகேசன் போன்றோர்) வலியுறுத்தியதால் நிகழவிருந்த தவறு தவிர்க்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி பற்றி கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முடிவு சரியென்பதை தமிழரசுக் கட்சியின் தோற்றம் நிரூபித்தது. காங்கிரசிலிருந்து கு.வன்னியசிங்கம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பிரிந்து வந்து தோற்றுவிக்கப்பட்ட தமிழரசுக் கட்சி, ஓரளவு குழந்தைப் பருவத்திலிருந்த தமிழ் தேசிய முதலாளித்துவ சக்திகளினதும், குறிப்பாக அரச ஊழியர்களான தமிழ் மத்தியதர வர்க்கத்தினதும் பிரதிநிதியாகத் தன்னை ஆரம்பத்தில் இனம் காட்டியது. அதனால் கம்யூனிஸ்ட் கட்சி தமிழரசுக் கட்சியை நட்புச் சக்தியாகக் கருதி, ஆரம்ப காலத்தில் அக்கட்சி மீது காங்கிரஸ் கட்சியினர் தொடுத்த தாக்குதல்களிலிருந்து அக்கட்சிக்கு பாதுகாப்பும் வழங்கியது. அதேநேரத்தில் தமிழ் அரசியலில் பிற்போக்கு தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரதான அணியாக இருந்த வடபகுதி இடதுசாரிகள் தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஆனால் தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ் சென்ற அதே பாதையில் சென்றதால் அவர்களுக்கெதிரான அணிக்கான வெற்றிடம் மீண்டும் காலியானது. 1975இல் தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரசும், வி.நவரத்தினத்தின் தமிழர் சுயாட்சிக் கழகமும், சி.சுந்தரலிங்கத்தின் அடங்காத் தமிழர் முன்னணியும் இணைந்து ‘தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி’ (வுருடுகு) என்ற அமைப்பை உருவாக்கிய பின்னர் தமிழர் அரசியலில் ஒரு தெளிவான இடைவெளி ஏற்பட்டு இவர்களுக்கு எதிரான பிரதான அணியொன்றின் தேவை முன்னரிலும் கூடுதலாக உணரப்பட்டது. அதாவது இவர்களுக்கு எதிரான பிரதான அணியாக இடதுசாரிகள் உருவெடுக்கும் சூழல் மீண்டும் உருவானது.
ஆனால் சில புறச் சூழ்நிலைகள் இடதுசாரிகள் தமிழர் அரசியலில் மீண்டும் சக்தி பெறுவதற்கு இடையூறாக அமைந்துவிட்டன. அதில் ஒன்று இடதுசாரிக் கட்சிகளும் அங்கம் வகித்த சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள். இரண்டாவது, இடதுசாரிப் போர்வையில் இருந்த ஜே.வி.பி. 1971இல் செய்த எதிர்ப் – புரட்சி ஆயுதக் கிளர்ச்சி. மூன்றாவது வடக்கில் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் மூலம் புரட்சிகரமாகவும் சக்தியாகவும் வளர்ந்து வந்த புரட்சிகர (சீனசார்பு) கம்யூனிஸ்ட் கட்சியில் 1972இல் ஏற்பட்ட பிளவு.
இருந்தும் சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவான மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழர் பிரச்சினையில் ஒரு சரியான அணுகுமுறையை எடுத்து தேசிய இனப் பிரச்சினையில் இடதுசாரிகளின் வகிபாகத்தை மீண்டும் முன்னணிக்கு கொண்டுவர முயன்றது. அதற்காக ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ என்ற பரந்துபட்ட அமைப்பையும் உருவாக்கியது. இந்தக் கட்டத்தில்தான் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 1976இல் வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ‘தனித் தமிழீழம்’ என்ற கருத்தை முன் வைத்தது.
தமிழ் ஈழக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட பின்னர் தமிழர் அரசியலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் மாற்றங்கள் ஏற்பட்டன. தமிழர் விடுதலைக் கூட்டணி ஏகப் பிரதிநிதியாக முன்வந்து, இடதுசாரிகளோ அல்லது மாற்றுக் கருத்துள்ள வேறு சக்திகளோ செயல்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற அரசியல் தோல்வி கண்டு ஆயுதப் போராட்ட அரசியல் முன்னணிக்கு வந்தது.
ஆயுதப் போராட்ட அரசியலிலும் தமிழ் பிற்போக்கு சக்திகளின் மொத்தப் பிரதிநிதியாகவும், பாசிச இயக்கமாகவும் உருவெடுத்த புலிகளுக்கு எதிராக இடதுசாரித் தன்மை கொண்ட பல இயக்கங்கள் உருவான போதும் அவற்றின் மத்தியில் ஒற்றுமையின்மையாலும், அவற்றின் அராஜகப் போக்குகளினாலும், பின்னர் அவற்றை புலிகள் ஆயுத ரீதியில் ஒழித்துக் கட்டியதாலும் அவை அரசியல் அரங்கிலிருந்து முற்றாகத் துடைத்தெறியப்பட்டன.
2009இல் போர் முடிவுற்ற பின்னர் தமிழர் அரசியல் கள நிலவரம் மாறியது. புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதான அரசியல் சக்தியாக தொடர்ந்தும் நீடித்தது. இந்த கூட்டமைப்பில் முன்னர் புலிகளால் அழிக்கப்பட்ட பல மாற்று இயக்கங்கள் புலிகளின் காலத்திலேயே உள்வாங்கப்பட்டிருந்தன. ஒரேயொரு விதிவிலக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மட்டும் கூட்டமைப்புக்கு எதிரணியில் இருந்தது (தொடர்ந்தும் இருக்கின்றது). அதன் காரணமாக பாரம்பரியமாக தமிழ் பிற்போக்குத் தலைமைக்கு எதிராக இருந்து வந்த இடதுசாரிகள், ஜனநாயகவாதிகள், மாற்றுக் கருத்துள்ளோரின் தெரிவாக ஈ.பி.டி.பி. கட்சியே இருக்கின்றது.
இன்றைய தமிழ் அரசியல் சூழலை எடுத்து நோக்கினால் ஒரு பக்கம் தமிழ் பிற்போக்கு சக்திகளின் பிரதிநிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மறுபுறம் உண்மையான தமிழ் தேசியவாதிகள், இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள், மாற்றுக் கருத்தாளர்கள் ஆகியோரின் பிரதிநிதியாக ஈ.பி.டி.பியும் இருக்கின்றன. யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இதுதான் தமிழ் அரசியலின் இன்றைய கள நிலவரம். பல்வேறு அரசியல் சக்திகள் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு இதில் ஏதாவது ஒரு அணியுடன் இணைந்து கொள்வதன் மூவமே தமது எதிர்கால அரசியலை முன்னெடுக்க முடியும் என்ற நிலையே காணப்படுகின்றது.

இத்தகைய ஒரு சூழ்நிலையில், இந்த இரண்டு அணிகளுக்கும் எதிராக அல்லது மாற்றாக மூன்றாவது அணியொன்றை உருவாக்குவது என்ற கருத்து யதார்த்தபூர்வமானது அல்ல. ஏற்கெனவே இந்த மூன்றாவது அணி முயற்சியில் இறங்கியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தோல்வி கண்டுள்ளது. அதேபோல தற்பொழுது இன்னொரு மூன்றாவது அணியை உருவாக்க முயலும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் முயற்சியும் தோல்வியடையும்.
எனவே, இலங்கையின் சிங்களவர் அரசியலில் மட்டுமின்றி, இலங்கையின் தமிழர் அரசியலிலும் ‘மூன்றாவது’ அணி என்பது நடைமுறைச் சாத்தியமற்ற பகல் கனவு மட்டுமே.

இந்திய அனுபவம்

இந்த மூன்றாவது அணி விடயத்தில் இந்திய இடதுசாரிகளின் அனுபவமும் ஏறத்தாழ இலங்கையின் அனுபவம் போன்றதே.
இந்தியப் பெரு முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு, இந்திய காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராகவும், இந்திய இடதுசாரிகள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று மூன்றாவது அணியை உருவாக்கிப் பார்த்தார்கள். அதனால் எவ்விதமான பயனும் கிடைக்கவில்லை. கடந்த பொதுத் தேர்தலின் போது இவர்களது மூன்றாவது அணியின் உருவாக்கம் வலதுசாரி இந்துத்துவ பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம் பதவிக்கு வருவதில் போய் முடிந்தது.
அதேபோல, தமிழ்நாட்டில் சில தடவைகள் இடதுசாரிக் கட்சிகள் வேறு சில கட்சிகளுடன் சேர்ந்து மூன்றாவது அணியை உருவாக்கினார்கள். அப்படி கடந்த சட்டசபைத் தேர்தலின் போது உருவாக்கிய ‘மக்கள் நலக் கூட்டணி’ என்ற மூன்றாவது அணி, அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உதவியதில் முடிந்தது.
இந்த அனுபவங்களில் இருந்து பாடம் படித்த மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஸ் கரத், ‘மூன்றாவது அணி என்பது நடைமுறைக்கு ஏற்றது அல்ல’ என்ற சாரப்பட சில மாதங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.
எனவே, இலங்கைத் தமிழர் அரசியலிலும் மூன்றாவது அணி என்பது, தற்போது செல்வாக்கு இழந்து வரும் பிற்போக்கு தமிழ் தேசியக் கூட்டமைக்கு வாய்ப்பாகவே அமையும். இந்த உண்மையை தமிழ் முற்போக்கு – ஜனநாயக சக்திகள் கவனத்தில் எடுத்துக்கொண்டு, வலதுசாரிகளின் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஓரணியாகச் செயல்படுவதே பயனுள்ளதாக அமையும்.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...