ஜனாதிபதி – பிரதமர் உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும்! -வானவில் இதழ் 85 பிப்ரவரி 1, 2018


ற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசு மூன்று வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள நிலையில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் இரண்டுக்கும் இடையிலான விரிசல்களும் மோதல்களும் முன்னெப்போதையையும் விட தீவிரமடைந்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பகிரங்கமாக விமர்சித்து வரும் நிலையில் ஜனாதிபதியும் பதிலுக்கு ஐ.தே.கவை நேரடியாகவே விமர்சித்து வருகின்றார்.

ஜனாதிபதி தமது விமர்சனங்களில் ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கம் கடந்த மூன்றாண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் எதனையும் செய்யவில்லை என்றும், இனிமேல் பொருளாதார விடயங்களைத் தானே நேரடியாக நிர்வகிக்கப் போவதாகவும் அண்மையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த அறிவிப்பு அரச பங்காளிக் கட்சிகள் இரண்டுக்குமிடையிலான மோதலின் உச்சக் கட்டத்தை எடுத்துக் காட்டுகின்றது.




இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில், மூன்றாண்டுகளுக்கு முன்னர், தான் பொதுச் செயலாளராக இருந்த தனது சொந்தக் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டு, ஐ.தே.கவின் உதவியுடன்தான் மைத்திரி ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அன்றிலிருந்து சர்வ வல்லமை படைத்த அரச தலைவராக மைத்திரியே இருந்து வருகின்றார். எனவே பொருளாதாரப் பின்னடைவு உட்பட நாட்டில் உருவாகியுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி மைத்திரியும் பொறுப்புக் கூற வேண்டிய பிரதான நபராவார்.

அப்படியிருக்க ஐ.தே.கவை மட்டும் குற்றஞ்சாட்டி விட்டு, தான் தப்பிக்க முயற்சிப்பது ஜனாதிபதி மைத்திரியின் அரசியல் நேர்மையீனத்தையே எடுத்துக் காட்டுகிறது. அதுவும் மூன்றாண்டுகளாக தவறுகள் நடைபெறுவதை கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு இப்பொழுது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில், தனது சுதந்திரக் கட்சி மூன்றாவது நிலைக்குத் தள்ளப்படப் போகின்றது (புலனாய்வு அறிக்கைகளும் அவ்வாறே கூறுகின்றன) என்ற அச்சத்தில் மைத்திரி திடீரெனக் கூச்சலிடுவது நாட்டு மக்களுக்கு வேடிக்கைக் காட்சியாக இருக்கின்றது.

இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலின் போதும், நாடாளுமன்றத் தேர்தலின் போதும் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எண்ணிலடங்காதவை. அதிலும் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் ரணில் – மைத்திரி குழுவினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் திட்டமிட்டு நடாத்திய நாடகங்கள். அப்படி வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒரு சதவீதம் கூட இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.
அதற்குப் பதிலாக இந்த அரசாங்கத்தால் செய்யப்பட்ட சாதனைகள் என்னவென்றால், முன்னைய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்தியமை, மேலும் பல்லாயிரம் கோடி ரூபாவை வெளிநாடுகளிடமிருந்து கடனாகப் பெற்று நாட்டு மக்களை மேலும் கடனாளிகளாக்கியமை, நாட்டின் வளங்களை அந்நியருக்கு அறாவிலையில் தாரைவார்த்தமை, விலைவாசிகளையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் அதிகரித்தமை, எதிர்க்கட்சியினர் மீது பல போலிக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வழக்குகள் தொடர்ந்தமை, தமது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடும் அரச ஊழியர்கள், தனியார்துறைத் தொழிலாளர்கள், மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டமை போன்ற விடயங்களைச் சாதித்தமைதான்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களது நீண்டகாலக் கோரிக்கையான இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு வாக்குறுதி அளித்தபடி எவ்வித பூர்வாங்க நடவடிக்கையும் கூட இதுவரை எடுக்கப்படவில்லை. அதுமட்டுமில்லாமல் போரினால் உருவான காணாமல் போனோர் விவகாரம், இராணுவத்தினர் கையகப்படுத்திய பொதுமக்களின் காணி விவகாரம், நீண்டகாலமாக விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் விவகாரம், மீள் குடியேற்றம் மற்றும் புனர்நிர்மாண விவகாரம் போன்ற விடயங்கள் கூட யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்தும் தீர்வுகாணப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரப்படுகின்றது.
இவையெல்லாவற்றையும் விட இந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனை வரலாற்றில் முன்னொருபோதும் இடம் பெறாத வகையில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமையாகும். முன்னைய ராஜபக்ச அரசு ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாகச் சொல்லிப் பதவிக்கு வந்தவர்கள், பதவிக்கு வந்த ஒரு வருட காலத்திலேயே மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபா பண மோசடியில் ஈடுபட்டார்கள்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட அவரது நண்பர் அர்ஜூனா மகேந்திரன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனது மருமகனின் நிறுவனம் ஒன்றின் மூலம் நாட்டு மக்களுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாக்களை சூறையாடியுள்ளார். இந்த மோசடியில் பிரதமர் ரணில் உட்பட ஐ.தே.கவின் பல பெரும் புள்ளிகளுக்குப் பங்குண்டு என்பதை ‘கோப்’ விசாரணை அறிக்கையும், ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழு விசாரணை அறிக்கையும் அம்பலத்துக்குக் கொண்டு வந்துள்ளன. இருந்த போதிலும் பிரதமர் ரணிலும் அவரது ஐ.தே.கவினரும் தாம் குற்றமற்றவர்கள் எனக் கூறி முழுப் பூசனிக்காயை ஒரு கவளம் சோற்றுக்குள் மறைக்க முயல்கின்றனர்.

பிரதமரும் ஐ.தே.வினரும் தமது மீதான குற்றச்சாட்டுகள் வெளியானவுடனேயே சுதந்திரமான சுயாதீனமான விசாரணைக்கு இடமளித்து தார்மீக ரீதியில் பதவி விலகி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் ‘யார் என்ன சொன்னாலும் நாங்கள் பதவி விலக மாட்டோம்’ என்ற கணக்கில் இன்றுவரை பதவியில் அழுங்குப்பிடியாக ஒட்டிக்கொண்டு இருக்கின்றனர். இதுதான் இந்த நல்லாட்சி அரசாங்கத் தலைவர்களின் இலட்சணமாக இருக்கின்றது.
அதேநேரத்தில் கடந்த மூன்று வருடங்களாக வெளிநாட்டு எஜமானர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்த அரசாங்கத்தின் உயர்மட்டம் மேற்கொண்ட அனைத்துவிதமான ஊழல்களையும் மோசடிகளையும் தெரிந்தும் அவற்றைத் தடுத்து நிறுத்தாமல் கண்ணை மூடிக்கொண்டு இருந்த ஜனாதிபதி மைத்திரியும் அவரது கட்சியினரும் கூட இந்த விவகாரத்தில் குற்றவாளிகள்தான். இவ்வளவு காலமும் தூங்கிக் கொண்டு இருந்த அவர்கள் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில் மட்டும் விழித்துக் கொண்டவர்கள் போல நடிப்பது ஏற்கக் கூடியது அல்ல. அது மக்களைத் திசை திருப்பும் ஏமாற்று வேலையாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும், நாடாளுமன்றத் தேர்தலின் போதும் இன்றைய அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை முழுமையாகத் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதையே அரச பங்காளிக் கட்சிகள் இரண்டினதும் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.
எனவே நாட்டில் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற அனைத்து மோசடிகள் ஊழல்களுக்கும் ஜனாதிபதி, பிரதமர் உட்பட முழு அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். அதன் அடிப்படையில் நாட்டில் ‘நல்லாட்சி’யை மட்டுமல்ல, சாதாரண ஆட்சியைக் கூட நடாத்தத் தகுதி இழந்துவிட்ட இன்றைய அரசாங்கம் முழுமையாக பதவி விலகி புதிதாக ஜனாதிபதித் தேர்தலையும், நாடாளுமன்றத் தேர்தலையும் நடாத்துவதற்கு வழிவிட வேண்டும். அதேநேரத்தில் இந்த அரசாங்கத்தின் கீழ் நடைபெற்ற அனைத்து ஊழல் மோசடிகளையும் பக்கச்சார்பின்றி விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் உள்ளடக்கிய சுதந்திரமான ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு துரிதமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் பெப்ருவரி 10 இல் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலை நாட்டு மக்கள் ஒரு கருத்துக் கணிப்பாக நினைத்து அரசுக்கு எதிராக, அதாவது அரசின் இரண்டு பங்காளிக் கட்சிகளுக்குமெதிராக ஏகோபித்த முறையில் அணிதிரண்டு தமது வாக்குகளை அளிக்க வேண்டும்.

Source: Vaanavil - 85 பிப்ரவரி 1, 2018

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...