2018 பெப்ருவரி 10இல் இலங்கையில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் எமது ‘வானவில்’ ஜனவரி மாத (85ஆவது) இதழ் வெளிவந்திருந்தது.
அந்த இதழில் முன்பக்க தலைப்புச் செய்தியாக, “ஜனாதிபதி – பிரதமர் உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றைப் பிரசுரித்திருந்தோம்.
அதேபோல அந்த இதழின் 6ஆம் 7ஆம் பக்கங்களில் “வடக்கின் உள்ளுராட்சித் தேர்தல் நிலைமை” என்ற தலைப்பில் புனிதன் என்பவர் எழுதிய கட்டுரையையும் பிரசுரித்திருந்தோம்.
அத்துடன் இந்த இதழின் 10ஆம் 11ஆம் பக்கங்களில் சயந்தன் என்பவர் எழுதிய “உள்ளுராட்சி தேர்தலின் பின் நாட்டில் அரசியல் – நிர்வாக ஸ்திரமின்மை உருவாகும் அபாயம்” என்ற தலைப்பிலான கட்டுரை ஒன்றையும் பிரசுரித்திருந்தோம்.
நாம் பிரசுரித்திருந்த மூன்று கட்டுரைகளிலும் கூறப்பட்டிருந்த விடயங்கள் சரியானவை என்பதை உள்ளுராட்சித் தேர்தலின் பின் நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் தெட்டத் தெளிவாக நிரூபித்து வருகின்றன. நமது எதிர்வு கூறல்கள் சரியென்பதையிட்டு நாம் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம்.

நமது முன்பக்கக் கட்டுரையில் குறிப்பிட்டவாறு, முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை இந்தத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய பொது எதிரணியும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் வலியுறுத்தி வருகின்றனர். பெரும்பாலான மக்களின் கருத்தும் அதுதான்.
அதுமட்டுமின்றி, தற்போதைய கூட்டரசாங்கத்தை முறித்துக் கொண்டு ஆட்சியின் பங்காளிக் கட்சிகள் இரண்டும் தத்தமது தனிக்கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முஸ்தீபுகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
வடக்கின் தேர்தல் நிலைமை பற்றி எழுதிய கட்டுரையில் வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி பல தமிழ் தேசியவாதக் கட்சிகளால் பங்கிடப்படும் என்றும், ஆனால் ஈ.பி.டி.பி. கட்சியின் வாக்கு வங்கி மட்டும் சிதைவுறாது என்றும் குறிப்பிட்டிருந்தோம். அது அப்படியே நடந்தேறியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஈ.பி.டி.பி. தனது வாக்கு வங்கியின் பலத்தை அதிகரித்துள்ளது.
அடுத்த கட்டுரையில் உள்ளுராட்சித் தேர்தலின் பின் நாட்டில் அரசியல் மற்றும் நிர்வாக ஸ்திரமின்மை உருவாகும் எனச் சுட்டிக்காட்டி இருந்தோம். அதுவும் அவ்வாறே நடந்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் ஐ.தே.க., சிறீ.ல.சு.க., சிறீ.ல.பொ.பெரமுன என மும்முனைப் போட்டி நிலவியதால், பல சபைகளில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை. வடக்கு கிழக்கிலும் இதே நிலைமைதான். ஏதோ ஒரு வகையில் இந்தச் சபைகளில் ஏதாவது ஒரு கட்சி ஆட்சி அமைத்த பின்னர்தான் அதைக் கொண்டு நடாத்துவதில் பல சிக்கல்களும் தடங்கல்களும் உள்ளன என்பது இன்னும் மிகத் தெளிவாகத் தெரிய வரும். எனவே பல மாதங்கள் இழுத்தடிக்கப்பட்டு, பெரும் தொகை பணச் செலவில் நடாத்தப்பட்;ட இந்தத் தேர்தலின் மூலம் மக்களுக்கு ஏதாவது பயனுள்ள விடயங்கள் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
இது ஒருபுறமிருக்க, இந்தத் தேர்தலின் மூலம் உள்ளுராட்சி சபைகளில் மட்டுமின்றி நாட்டை நிரவகிக்கும் மத்திய அரசாங்கத்திலேயே அரசியல் மற்றும் நிர்வாக ஸ்திரமற்ற நிலைமை உருவாகியுள்ளது. இந்த நிலைமை உள்ளுராட்சி தேர்தல் நடந்து முடிந்த பின்னர் திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. அது இந்த அரசாங்கம் உருவான நாளிலிருந்து உருவாகி வந்த ஒன்று.
தற்போது பதவியில் உள்ள “நல்லாட்சி” அரசாங்கம் என்று சொல்லப்படும் இந்த அரசானது, வெளிநாட்டு சக்திகள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமது மூலோபாயத் தேவைகளுக்காக எதிரும் புதிருமான இரண்டு கட்சிகளைக் கொண்டு சதித்தனமான முறையில் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். அதனால்தான் இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டு மூன்று வருடங்களைக் கடந்துவிட்ட போதிலும், அதனால் நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவோ, நாட்டில் அரசியல் மற்றும் நிர்வாகத் திறனுள்ள ஒரு ஆட்சியை நடாத்தவோ முடியவில்லை.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெற வைப்பதில் 2015 ஜனவரி 08 தேர்தலின் போது ஐ.தே.கவும் சிறீ.ல.சு.கவின் ஒரு பகுதியும் கைகோர்த்தன. அதன் பின்னர் அதே ஆண்டு ஓகஸ்ட்டில் நடந்த பொதுத் தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரி சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்து கொண்டே தனது கட்சிக்குத் துரோகம் இழைத்து ஐ.தே.கவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அவரது போசகரான சந்திரிகவும் வெளிப்படையாக ஐ.தே.கவையே ஆதரித்தார்.
அதன் மூலம் உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பு, தேசபக்த பிரிவினரான சிறீ.ல.சு.க. அணியினரை அழித்துவிடலாம் என மைத்திரியும், சந்திரிகவும் அவர்களது ஏகாதிபத்திய எஜமானர்களும் கனவு கண்டனர். ஆனால் அவர்களது கனவு பகல் கனவாகப் போய்விட்டது.
இவர்களது கபடத்தனமான நடவடிக்கைகளால் உண்மையான சிறீ.ல.சு.கவினரைத் திசைதிருப்ப முடியாது போனதுடன், இவர்களுடன் நின்ற சுதந்திரக் கட்சி அணியினரதும், நாட்டு மக்களினதும் வெறுப்பையும் கூட சம்பாதித்துக் கொண்டனர். அதன் காரணமாக கூட்டு எதிரணியுடன் இணைந்து நின்ற சுதந்திரக் கட்சியினரை வளைத்துப் போட்டு உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மைத்திரி தந்திரம் வகுத்துச் செயல்பட்டார். அந்தத் தந்திரமும் பலிக்கவில்லை.
கடைசியில் ஐ.தே.கவுடனும் கூட்டுச்சேர முடியாமலும், கூட்டு எதிரணியின் ஆதரவு கிட்டாமலும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு படுதோல்வி அடைந்து மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். தோல்வியின் தாற்பரியம் எப்படியென்றால், மைத்திரி தனது சொந்த ஊரான பொலநறுவ மாவட்டத்தையே மகிந்த அணியிடம் இழந்ததுடன், பண்டாரநாயக்கவினதும், அவரது மனைவி சிறீமாவோவினதும், அவர்களது மகள் சந்திரிகவினதும் பாரம்பரியமாக 50 வருடங்களுக்கும் மேலாக இருந்த வந்த அத்தனகல தொகுதியையே இந்தத் தேர்தலில் கூட்டு எதிரணியிடம் இழந்தனர்.
இருந்தும் மீண்டும் ஐ.தே.க. தனித்து அரசாங்கம் அமைப்பதற்கு வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கே மைத்திரி முயன்றார். ஆனால் அவரது கட்சிக்குள் எழுந்த கடுமையான எதிர்ப்புக் காரணமாக இறுதியில் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்துவிட்டு, கூட்டு எதிரணியின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கு (உள் மனதில் மனமின்றி) உடன்பட வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார். ஆனால் 19ஆவது திருத்தம், தனது அதிகாரங்களைத் தானே குறைத்துக் கொண்டமை போன்ற சுருக்குக் கயிறுகளைத் தனது கழுத்தில் தானே போட்டுக் கொண்டதால் அவரால் அதையும் செய்ய இயலவில்லை. இதைத்தான் ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்று சொல்வது.
அதுவுமல்லாமல், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொறுப்பான பொதுச் செயலாளர் பதவியை பல ஆண்டுகளாக வகித்துவிட்டு, முதல்நாள் இரவு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனும் அவரது சகாக்களுடனும் அலரி மாளிகையில் விருந்தில் கலந்து கொண்டு முட்டை அப்பம் சாப்பிட்டுவிட்டு, அடுத்த நாள் ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து’ எதிரணியின் பொது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய மைத்திரியின் நேர்மையையிட்டு எந்தவொரு மனிதனும் சந்தேகிக்காமல் இருக்க முடியாது. அத்தகைய ஒரு சூழ்நிலையில் மைத்திரியை நம்பி கூட்டு எதிரணி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசை அமைப்பதற்கு உடன்படுவது ‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை’யாகவும் முடியலாம்.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் சகல தோல்விகளுக்கும், அதன் காரணமாக உள்ளுராட்சித் தேர்தலில் ஆட்சியின் இரு பங்காளிக் கட்சிகளும் தோல்வி கண்டதற்கும் இரு கட்சிகளுமே காரணம். இந்த நிலைமையில் இரண்டில் ஏதாவது ஒரு கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதாலோ, பிரதமரையோ அல்லது மந்திரி சபையையோ மாற்றி அமைப்பதாலோ பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுவிட முடியாது. அப்படிச் செய்வது தலைவலியைக் குணமாக்க தலையணையை மாற்றுவது போன்றது. தலையணியை மாற்றுவதால் தலைவலி மாறாது. தலைவலி உடம்புக்குள் உள்ளது. தலையணி வெளியே உள்ள பொருள். தலைவலியை மாற்றுவதானால் உடம்புக்குத்தான் உரிய வைத்தியம் செய்ய வேண்டும்.
அந்தத் தேவையைத்தான் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் மூலம் மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். மக்கள் 2015 ஜனவரியிலும், ஓகஸ்ட்டிலும் இந்த அரசாங்கத்துக்குக் கொடுத்த அங்கீகாரத்தை உள்ளுராட்சித் தேர்தல் மூலம் திரும்பப் பெற்றிருக்கிறார்கள். அவர்களது உரிமையையும் இறைமையையும் யாரும் மீற முடியாது. மக்கள் வழங்கிய 2018 பெப்ருவரி 10 புதிய தீர்ப்பின்படி, நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தல் ஒன்றை நடாத்துவதே அரசாங்கத்துக்கு முன்னால் உள்ள ஒரேயொரு தெரிவு.
மக்களின் அந்தத் தெரிவையே கூட்டு எதிரணியும், ஜனநாயகத்தில் பற்றுக்கொண்ட அனைவரும் ஏகோபித்த குரலில் வலியுறுத்த வேண்டும்.
வானவில் இதழ் 86