அடிக்கல்லை கடலில் வீசிய ‘நல்லாட்சி;’ அரசாங்கம்! --பி. வீரசிங்கம்


மகிந்த ராஜபக்ச தலைமையிலான முன்னைய ஆட்சிக்காலத்தில் சீன
அரசாங்கத்தின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் கொழும்பு
துறைமுக நகரத் திட்டத்தை ஆரம்பிக்கப்படுவதற்காக சீன ஜனாதிபதி சி ஜின்பிங் இலங்கை வருகை தந்தபோது நாட்டப்பட்ட அடிக்கல்லை தற்போதைய அரசாங்கம் பிடுங்கி கடலில் வீசியுள்ளதாகத் தெரிய வருகிறது. அதற்கான காரணம் இந்த அடிக்கல்லில் சீன ஜனாதிபதியின் பெயருடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தமையே.

ஆட்சியில் இருக்கும் போது ஒரு ஆட்சித் தலைவர் நாட்டும் அடிக்கல்லை பின்னர் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் அகற்றும் இந்த மாதிரியான அநாகரிகச் செயல் முன்னொருபோதும் எந்த நாட்டிலும் நடந்ததில்லை. முதல் தடவையாக இந்த ‘நல்லாட்சி’யில்தான் இந்த இழிவான செயல்
நடத்தப்பட்டிருக்கிறது. மகிந்த ராஜபக்சவின் செல்வாக்கை ஒழிப்பதாக
நினைத்துக் கொண்டு இந்த இழிவான செயலைச் செய்துள்ளார்கள். இது
சீப்பை ஒளித்து வைப்பதன் மூலம் கலியாணத்தை நிறுத்தலாம் என
நினைத்துச் செய்யும் முட்டாள்தனமான செயலாகும்.



தற்போதைய மேற்கத்தைய சார்பு அரசாங்கத்தின் சீனாவை
அவமரியாதைப்படுத்தும் இந்த நடவடிக்கையால் இலங்கை சீன உறவில் பாரிய விரிசல் ஏற்படலாம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது.
சிறிது நாட்களுக்கு முன்னர்தான் இலங்கையின் பொறுப்பற்ற
வெளிவிவகாரக் கொள்கையின் விளைவாக ரஸ்யா இலங்கையிலிருந்து
அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை உட்பட விவசாயப்
பொருட்களுக்குத் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்னர் மலையகத்தில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரையும் இந்த அரசாங்கத்தின் சில
மலையக அடிவருடிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ‘நல்லாட்சி’ அரசாங்கம் மாற்றியது. அதற்கு மலையக மக்களிடமிருந்து பாரிய எதிர்ப்பு கிளம்பியது. அதுமாத்திரமின்றி இந்திய அரசாங்கமும் அசாங்கத்தின் இந்தச்
செயலுக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்தது. இப்படியாக இன்றைய மேற்கத்தைய சார்பு மைத்திரி – ரணில் வலதுசாரி அரசாங்கம் தனது நெருங்கிய நட்பு நாடுகளான இந்தியா, சீனா, ரஸ்யா போன்ற நாடுகளுடன் விரோதத்தை வளர்த்து வருகிறது. இதன் மூலம் இலங்கையின் வளர்ச்சிக்கு பாரிய பின்னடைவை இந்த அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது.

மூலம்  :  வானவில் இதழ்  85 -பெப்ருவரி 2018

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...