‘நல்லாட்சி’ அரசு இராணுவ அரசாக உருமாறப் போகிறதா?



ரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் “நல்லாட்சி” என்று சொல்லிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இன்றைய மைத்திரி – ரணில் அரசாங்கம், தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமலும், நாட்டில் பூதாகரமாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமலும் தத்தளிக்கின்ற சூழ்நிலையில், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்கின்றதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தால் தமது பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் எனக் கூடுதலாக எதிர்பார்த்தவர்கள் நாட்டின் சிறுபான்மை இனங்களைச் சேரந்த மக்களே. அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்தனர். அதற்குக் காரணம் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி மைத்திரி – ரணில் கூட்டை ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, “நல்லாட்சி”யின் மூலம் தமிழ் மக்களின் அத்தனை பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிடும் எனக் கொடுத்த அபரிமிதமான நம்பிக்கைதான்.




60 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாது இருக்கும் இனப் பிரச்சினை நல்லாட்சியின் முதலாவது ஆண்டிலேயே தீர்க்கப்பட்டுவிடும் என கூட்டமைப்புத் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு அடித்தும் அறுதியிட்டும் கூறினர். வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைக்கப்படும், இணைந்த வடக்கு கிழக்கிற்கு சமஸ்டி அடிப்படையிலான அதிகாரம் வழங்கப்படும், போர்க் குற்றவாளிகள் (முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட) சர்வதேச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள், இராணுவத்தின் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும், காணாமல் போனவர்கள் கண்டறியப்படுவார்கள், விசாரணையின்றி சிறைகளில் வாடும் தமிழ் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், என்றவாறான பல விதமான வாக்குறுதிகளை தமிழ் கூட்டமைப்பு மக்களுக்கு வழங்கியது.

ஆனால் அவர்கள் சொன்னதில் ஒரு வீதத்தைக்கூட நல்லாட்சி இன்றுவரை செய்யவில்லை. இனிமேலும் அரசாங்கம் அவற்றைச் செய்வதற்கான எந்த அறிகுறியும் கூடத் தென்படவில்லை.
இந்த நிலைமையில்தான், மக்கள் தமது தலைவர்களை நம்பிப் பிரயோசனம் இல்லை, எனவே தாமே வீதியில் இறங்கிப் போராடிப் பார்த்தால் என்ன என்ற தற்துணிபுடன் ஆங்காங்கே தமது கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டங்களை ஆரம்பித்தனர். இந்தப் போராட்டங்கள் சொற்ப நாளில் பிசுபிசுத்துவிடும் என அரசு மட்டுமின்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிர்பார்த்தனர். ஆனால் மக்கள் முன்வைத்த காலைப் பின்வைக்கவில்லை எனக் கண்டதும்தான் இரு பகுதியினரும் ஓடி விழித்தனர். இந்த நிலைமையை இப்படியே விட்டால் தமது அதிகாரத்துக்கு ஆபத்து வந்தவிடும் என உணர்ந்த அவர்கள், மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு கடிவாளம் போட வேண்டியதின் அவசியத்தை உணர்ந்து கொண்டனர்.

வட கிழக்கின் நிலைமை இப்படியென்றால், தென்னிலங்கை மக்களின் நிலைமை வேறொரு வடிவத்தை எடுத்தது. தென்னிலங்கையைப் பொறுத்த வரை, வட கிழக்கின் பாரம்பரியமான இனப் பிரச்சினைக்கான போராட்டம் போலன்றி, எப்பொழுதும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களிலும், மக்கள் நலப் போராட்டங்களிலும், வர்க்கப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்த அந்த மக்கள் திரும்பவும் அந்த வழியிலேயே பயணிக்க ஆரம்பித்தனர்.
நாட்டின் வளங்களை அந்நியருக்குத் தாரைவார்ப்தற்கு எதிரான போராட்டம், கல்வி மற்றும் மருத்துவத்துறையை தனியார்மயப்படுத்துவதற்கெதிரான போராட்டம், ஊழலுக்கெதிரான போராட்டம், மத்திய வங்கியில் நடந்த பல கோடி ரூபா பண மோசடிக்கு எதிரான போராட்டம், விலைவாசி உயர்வுக்கெதிரான போராட்டம், சம்பளவுயர்வுக்கான போராட்டம், வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு எதிரான போராட்டம், என பலதரப்பட்ட போராட்டங்கள் தென்னிலங்கையில் வெடித்துக் கிளம்பித் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

மறுபுறத்தில், இன்றைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் முன்னைய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அநேகமான அபிவிருத்தித் திட்டங்கள் யாவும் நிறுத்தப்பட்டுவிட்டன. முன்னைய அரசுதான் நாட்டைக் கடனாளியாக்கியது என்று சொல்லிக்கொண்டே தற்போதைய அரசு மேலும் மேலும் வெளிநாடுகளிடம் கடன் வாங்கி நாட்டை நிரந்தரக் கடனாளியாக்குவதுடன், நாட்டின் வளங்களையும் அந்திய நாடுகளுக்குத் தாரை வார்க்கும் கைங்கரியத்திலும் ஈடுபட்டு வருகின்றது.
பொதுவாக, இன்றைய அரசு நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளையும் கொண்ட, உலகுக்கே முன்மாதிரியான தேசிய அரசு என்று தன்னைத்தானே புளுகிக் கொண்டாலும், தமிழ் மக்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவரும் இந்த அரசின் மீது நம்பிக்கை இழந்து வெறுக்கும் நிலையே தோன்றியுள்ளது.

இதன் காரணமாகவே தனது தோல்வியை மறைப்பதற்காக அரசாங்கம் உள்ள+ராட்சித் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாது இரண்டரை ஆண்டுகளாக இழுத்தடித்து வருகின்றது. உள்ள+ராட்சித் தேர்களை நடத்தாது அரசு இழுத்தடித்தாலும், தென்னிலங்கையில் ஜனாதிபதி மைத்திரியின் சொந்த இடமான பொலநறுவ உட்பட சில பகுதிகளில் நடந்த கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களில் அரசின் பங்காளிக் கட்சிகள் இரண்டும் கூட்டு எதிரணியிடம் மண் கவ்வியுள்ளன. அதுதவிர, இவ்வருட மேதினத்தின் போது காலிமுகத்திடலில் எதிரணி நடாத்திய மேதினப் பேரணியில் திரண்ட இலட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தைக் கண்டு நல்லாட்சி அரசு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

இந்த நிலைமைகள் காரணமாக பொதுவாக எல்லா முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கும் உருவாகும் விபரீதமான எண்ணம் போல மைத்திரி – ரணில் அரசுக்கும் ஒரு விபரீத எண்ணம் உருவாகியுள்ளது. அதாவது, உண்மையான அதிகாரமான முதலாளித்துவ சர்வாதிகாரம் என்னும் மூலஸ்தானத்தை மறைத்து நிற்கும் பாராளுமன்ற ஜனநாயகம் என்ற போலி ஜனநாயகக் திரையைக் கிழித்தெறிந்துவிட்டு, அப்பட்டமான இராணுவ சர்வாதிகாரத்தை நிலைநிறுததுவதற்கு அரசு முற்படுகிறது.

இதனை முதலில் வெளிப்படுத்தியவர் எப்பொழுதும் வெளிப்படையாகவும், தான்தோன்றித்தனமாகவும் பேசும் அமைச்சரவைப் பேச்சாளரான சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன. வாராந்த அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை ஊடகவியலாளர்களுக்கு வெளியிட்ட அவர், “நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால், இரண்டு வருட காலத்துக்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகவிடம் அதிகாரத்தைக் கொடுத்து, அவர் விசேட படையணி ஒன்றின் மூலம் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்” என்ற குண்டொன்றை அவர் தூக்கிப் போட்டார்.

உடனடியகவே சரத் பொன்சேகவிடமிருந்து அதற்குச் சாதகமான கருத்தும் வெளியிடப்பட்டது. அவர் தான் இப்பொழுது வகிக்கும் அமைச்சுப் பதவியைத் துறந்துவிட்டு புதிய பொறுப்பை ஏற்கத் தயார் என அறிவித்தார். இலங்கையின் உள்நாட்டுப் போரில் திளைத்த அவருக்கு, ‘கரும்பு தின்ன கைக்கூலியா வேண்டும்?’.
உடனடியாகவே அவரது கூற்றுக்கு எதிர்வினைகள் ஆற்றப்பட்டன. அரசாங்க தரப்பைச் சேர்ந்த சில அமைச்சர்கள் ஜனாதிபதி அப்படியொரு தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும், ராஜித சேனரத்ன சொல்வது அவரது சொந்தக் கற்பனை எனவும் அவர்கள் எகிறிக் குதித்து மறுத்தார்கள். இது சம்பந்தமாக கூட்டு எதிரணியும், சில மனித உரிமை அமைப்புகளும் தமது கண்டனத்தை வெளிப்படுத்தின. (வழக்கம் போல உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பும், சோசலிசத்தின் பாதுகாவலர்களான ஜே.வி.பியும் இந்த தேசிய அபாயம் குறித்து மௌனமாக இருந்து கொண்டன) அதைத் தொடர்ந்து அப்படியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுப்பறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
ஆனால் பிரதமரால் அவசரமாக இந்த இராணுவ ஆட்சியை நோக்கிய நகர்வு மறுக்கப்பட்டாலும், ஜனாதிபதி மைத்திரி இந்தக் கூற்றிலுள்ள சரி பிழையைப் பற்றி இன்றுவரை வாய் திறக்காமல் இருக்கிறார். அவரது மௌனம் ‘நெருப்பில்லாமல் புகையாது’ என்ற சொற்றொடரைத்தான் ஞாபகப்படுத்துகிறது.

நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டு ஆட்சிபீடNறியவர்கள், ஆட்சியைக் கொண்டு நடாத்த வக்கில்லாத நிலைமையில், இராணுவ அதிகாரத்தின் மூலம் ஆட்சியை நடாத்தவும், அதைத் தக்க வைத்துக் கொள்ளவும் முற்படுவதையே இது எடுத்துக் காட்டுகிறது.
அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த நபர் யார் என்பது அடுத்த கேள்வியாகும். இலங்கையின் உள்நாட்டுப் போரில் ஒரு குறிப்பிட்ட காலம் இராணுவத் தளபதியாக இருந்து போர்க் குற்றச்சாட்டுகளுக்கும், உரிமை மீறல்களுக்கும் காரணகர்த்தா எனக் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை அரசாங்கம் தெரிவு செய்ததின் மூலம், போர்க் குற்ற மீறல்கள் குறித்து அரசாங்கம் பொறுப்புக் கூறல் சம்பந்தமாக சர்வதேச சமூகத்துக்கும், நாட்டு மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளைக் கேலிக்கூத்தாக்கியுள்ளது.

அதுமட்டுமல்ல, இந்த பொன்சேகதான், இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில், “இலங்கையில் தமிழர்கள் வேணடுமானால் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் உரிமை கிரிமை என எதையும் கோரக்கூடாது” என பச்சை இனவெறியைக் கக்கியவர்.

அதுமாத்திரமன்று, 2010 ஜனாதிபதித் தேர்தலின் போது புலிகளுடனான போரின் வெற்றி நாயகன் தானே என மார்தட்டிக் கொண்டு, உள்நாட்டு வெளிநாட்டு பிற்போக்கு சக்திகளின் ஆதரவுடன் ஏகாதிபத்திய எதிர்ப்பு வேட்பாளரான மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிக்க களம் இறங்கியவர்.
ஆனால் அரசாங்கம் இப்பொழுது தனது திட்டத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதாக ஒரு வேடத்ததைப் புனைந்துள்ளது.

அரசாங்கம் பொதுமக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி தனது இராணுவ ஆட்சிக்கான கனவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலும், அந்த அபாயம் நீங்கிவிட்டது என்று சொல்லிவிட முடியாது. நாட்டில் அரசுக்கு எதிரான போக்கு மேலும் மேலும் அதிகரித்து வருவதால், ஏதோ ஒரு கட்டத்தில் இந்த ‘நல்லாட்சி’ அரசாங்கம் இராணுவ ஆட்சியை நோக்கிக் காலடி எடு;து வைக்கும் நாசகார அரசாக மாறப்போவது உறுதி.

எனவே ஜனநாயகத்தையும் நாட்டையும் நேசிக்கின்ற முற்போக்கு, ஜனநாயக, தேசபக்த சக்திகள் நாட்டில் பிற்போக்கு வலதுசாரி சக்திகளால் உருவாக்கப்படப் போகின்ற எதேச்சாதிகார அரசியல் போக்கிற்கு எதிராக மிகவும் விழிப்புடன் இருந்து செயல்படுவது அவசியம்.

மூலம்:  வானவில் இதழ் 77



மே 24, 2017

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...