‘நல்லாட்சி’யின் நாட்கள் எண்ணப்படுகின்றனவா?- vaanavil-71_2016


good-governance-1
லங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைய உள்ள சூழலில், புதிய அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றத் தவறியதினால் நாடு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி நிற்கிறது. அதன் காரணமாக ஆட்சியில் பங்காளிகளாக உள்ள இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகளும் நாளுக்கு நாள் கூர்மையடைந்து வருகின்றன.


குறிப்பாக, அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகளினாலும், செயலற்ற தன்மையினாலும், பணவீக்கம் மோசமாக அதிகரித்து, விலைவாசிகள் கட்டுக்கடங்காத நிலையை எட்டியுள்ளன. இது சாதாரண மக்களின் வாங்கும் திறனை வீழ்ச்சிக்குள்ளாக்கி, அவர்களது வாழ்க்கை நிலைமையை அதளபாதாளத்தில் தள்ளியுள்ளது. இருந்தும் அரசாங்கம் நாட்டின் ஏகப்பெரும்பான்மையான சாதாரண மக்களைப் பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காது ‘வற்’ வரியின் மூலமும், வரவு செலவுத் திட்டத்தின் மூலமும் மக்களின் மேல் மேலும் மேலும் சுமைகளை ஏற்றி வருகிறது.

இன்னொரு பக்கத்தில் முன்னைய அரசால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் யாவும் கைவிடப்பட்டதால், போருக்குப் பின்னர் வேகமாக ஏற்பட்டு வந்த வளர்ச்சி நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேசிய வருவாயில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், வேலை வாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. இந்த உண்மையை அரசாங்கம் சமர்ப்பித்துள்ள அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் உணர்த்தி நிற்கிறது.
போர் முடிவுற்ற போதிலும் அரசாங்கம் நவீன போர்த்தளபாடங்களைத் தொடர்ந்து கொள்வனவு செய்வதிலும், பாதுகாப்புப் படைகளைப் பலப்படுத்துவதிலும் அதிக முனைப்புக் காட்டி வருகிறது. தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புத் துறைக்கே அதிகளவான, அதாவது 283.44 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சுகாதார அமைச்சுக்கு 160.94 பில்லியனும், கல்வி அமைச்சுக்கு 76.94 பில்லியனும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செலவீனத்துக்கான தொகையும் 200 சதவீதத்துக்கும் மேலால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தினசரி செலவு 1 கோடி ரூபாவுக்கும் அதிகமானதாகும்.

அதேநேரத்தில் அரசாங்கம் நாட்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதில் முனைப்புக் காட்டி வருவதினால், மக்கள் மத்தியில் அரசாங்கம் மீது கடுமையான அதிருப்தி நிலவுகின்றது.
ஒருபக்கத்தில் முன்னைய அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வழக்குகள் தொடுத்து வரும் அரசாங்கம், மறுபக்கத்தில் மத்திய வங்கிப் பிணை முறிகளை முறைகேடாக வழங்கி பல நூறு கோடி ரூபா பணத்தைத் தவறான முறையில் தனது மருமகன் சுருட்டுவதற்கு வழிவகுத்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ச்சுனா மகேந்திரன் மீது இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காது காலம் கடத்தி வருவது அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
அதுமாத்திரமின்றி, ‘கோப்’ அறிக்கை மூலம் அர்ச்சுனா மகேந்திரன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னரும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அவரது ஐ.தே.கவும் மகேந்திரனைப் பாதுகாப்பதற்கு பல வழிகளிலும் முயற்சித்து வருகின்றனர். அவரது பாரிய மோசடியை முழுப் பூசனிக்காயை ஒரு கவளம் சோற்றில மறைக்க முற்படுவது போல மறைக்க முயற்சிக்கின்றனர்.

ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கத்தின் இந்த மாதிரியான நடவடிக்கைகளை ஜனாதிபதிப் பதவியில் குந்தியிருக்கும் ‘திருவாளர் பரிசுத்தம்’ மைத்திரிபால சிறிசேன கண்டும் காணாமல் இருப்பது அவரது சிறீ.ல.சு.கட்சியினர் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி பதவிக்கு வந்த நாள் முதலாய் கட்சிக்குள் இருந்த முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானவர்களை சட்டவிரோதமாக நீக்கி, தனக்கு வேண்டியவர்களை கட்சிப் பதவிகளில் அமர்த்தி, கட்சியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மைத்திரியும், அவரது வழிகாட்டியான சந்திரிகவும் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி கண்டுள்ளன.

ஓட்டு மொத்தத்தில் தற்போதைய ‘நல்லாட்சி’ அரசாங்கம் சகல துறைகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. அதன் காரணமாக இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்த பங்காளிக் கட்சிகள் மத்தியில் அரசுக்கு எதிரான போக்குகள் வளர ஆரம்பித்துள்ளன.
பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹந்துநெத்தி தலைமையிலான ‘கோப்’ விசாரணைக் குழுவே முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ச்சுனா மகேந்திரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து அவரைக் குற்றவாளியாகக் கண்டது. ஆனால் அரசாங்கம் இதுவரை அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காததினால், ஜே.வி.பி. அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையை வெளியிட்டதுடன், வேறு பல விடயங்களிலும் அரசாங்கத்தின் செயலற்ற தன்மையையும் சுட்டிக்காட்டி, இந்த அரசாங்கம் இனியும் பதவியில் இருக்கத் தகுதியில்லை என அறிவித்துள்ளது.
இன்னொரு பங்காளிக் கட்சியான ஹெல உருமய, அரசாங்கம் தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி எதனையும் நிறைவேற்றாதபடியால், தாம் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ளப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
மறுபக்கத்தில் இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதில் முக்கிய பங்கு வகித்த முஸ்லீம் கட்சிகளும் அரசாங்கத்தின் மீது பலத்த அதிருப்தியில் இருக்கின்றன. அதற்குப் பிரதான காரணம் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள அரசியல் சாசனத்தில் முஸ்லீம் மக்களின் நீண்டகால கோரிக்கையான அதிகாரப் பகிர்வு குறித்து எதுவுமே சேர்க்கப்படவில்லை என்பதாகும். அதுமாத்திரமின்றி, ஐ.நாவின் யுனெஸ்கோவில் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய சியோனிச அரசாங்கம் மேற்கொள்ளும் கலாச்சார அழிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்துக் கொண்டு வரப்பட்டு ஏகப் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை பங்குபற்றாமல் ஒதுங்கியிருந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக நடந்து கொண்டது முஸ்லீம் மக்கள் மத்தியில் அரசின் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையிலும் கூட அரசின் மீதான நம்பிக்கை தகர்ந்து போயுள்ள நிலையே உருவாகியுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும், நாடாளுமன்றத் தேர்தலின் போதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது வர்க்க விசுவாசம் காரணமாக இந்த அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்கியதோடு, இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையிலான தீர்வொன்றை வழங்கும் என்றும் கூறி வந்தது. ஆனால் இந்த அரசாங்கமும் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் இந்திய – இலங்கை ஒப்பந்த அடிப்படையிலான மாகாணசபைகளுக்கு மேலால் எதையும் செய்யப் போவதில்லை என்பது தற்பொழுது தெளிவாகியுள்ளது. அதன் காரணமாக தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் இனத் தீவிரவாதம் தலையெடுக்கும் சூழல் தோன்றியுள்ளது.
இனப் பிரச்சினைத் தீர்வு ஒருபுறமிருக்க, இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல், தமிழ்ப் பிரதேசங்களில்; இராணுவப் பிரசன்னத்தைக் குறைத்தல், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்தல், காணாமல் போனோரைக் கண்டறிதல் அல்லது அவர்களது குடும்பங்களுக்கு போதிய நஸ்டஈடு வழங்குதல், இடம் பெயர்ந்தோரின் மீள் குடியமர்வு, யுத்தத்தால் பாதிக்கப்படடோருக்கான புனர்வாழ்வு போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளிலும் தற்போதைய அரசாங்கம் உருப்படியான காரியம் எதனையும் செய்யவில்லை என்ற அதிருப்தியும், அவநம்பிக்கையும் தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக நிலவுகின்றது.

இந்த நிலைமையில், இந்தப் பிரச்சினைகளை மையமாக வைத்து ஆளும் கூட்டணியின் இரண்டு பிரதான கட்சிகள் மத்தியிலும் நாளுக்குநாள் விரிசல் அதிகரித்து வருகிறது. அதன் பிரதிபலிப்பையே ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரி அண்மையில் பகிரங்கமாக விமர்ச்சித்த சம்பவம் எதிரொலித்தது. முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் மகேந்திரன் விவகாரத்திலும் அரசியல்வாதிகளின் தலையீடு இன்றி விசாரணை நடாத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்ததும், ரணில் தரப்பினருக்கு விடுத்த எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.

இதன் காரணமாக இரண்டு கட்சிகளும் தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இரகசிய மந்திராலோசனைகளில் இறங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது. முரண்பாடு தீவிரமடைந்து இரண்டு கட்சிகளும் பிரிய வேண்டிய நிலைமை ஏற்பட்டால், எந்தெந்தக் கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு தமது தலைமையிலான அரசாங்கத்தை நிறுவலாம் என்பதில் இரு கட்சியின் தலைமைப்பீடங்களும் அக்கறையுடன் ஆராய்ந்து வருவதாக உள் தகவல்களை அறிந்தவர்கள் மூலம் அறிய வருகிறது.

தமக்குச் சார்பான தற்போதைய அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்த மேற்கத்தைய சக்திகள் இந்த அரசாங்கம் வீழ்வதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள் என்பதுடன், என்ன விலை கொடுத்தும் இந்த அரசைப் பாதுகாப்பதில் பகீரதப் பிரயத்தனம் எடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதேநேரத்தில் இலங்கையின் ஆட்சி மாற்றங்களில் எப்பொழுதுமே நேரடிச் செல்வாக்குச் செலுத்தும் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்பதிலேயே இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது.

எதுஎப்படியிருப்பினும், அடுத்த ஆண்டில் இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடிய திசையை நோக்கியே அரசியல் நிலவரங்கள் சென்று கொண்டிருக்கிறன என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கின்றது.
 vaanavil-71_2016

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...