புலம்பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் இறுதி யுத்தத்தின் போது இறந்தவர்களின் தொகை ஒன்றரை இலட்சம், இரண்டு இலட்சம் என நாளொரு தொகையை வாய்க்கு வந்தபடி கூறி வருகின்றன. அதேநேரத்தில், ஐ.நாவும், சில மேற்கு நாடுகளும் நாற்பதாயிரம் வரையிலான மக்கள் மக்கள் இறந்ததாகக் கூறி வருகின்றன.
மறுபக்கத்தில் அரசாங்கமும், காணாமல் போனோரைக் கண்டறிய முன்னைய மகிந்த அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம குழுவினரும் நாற்பதினாயிரம் பேர் இறந்ததாகக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என வாதிடுகின்றன.
அவர்களது வாதத்தில் அண்மையில் தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியமும் இணைந்து கொண்டுள்ளது. ஒரு பகுதி சர்வதேச சமூகமும், சில நிறுவனங்களும் அப்படி ஒரு தொகையைக் கூறி வருகின்ற போதிலும், அது தவறானது என்றும், அதைத் தாம் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் அந்த ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த தேசிய பல்கலைக்கழக ஆசிரிய ஒன்றியத்தின் செயலாளரும், ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளருமான டொக்டர் சன்ன ஜெயசுமன, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் இந்தப் போலிப் புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதுஎப்படியிருந்த போதிலும், இறுதிக்கட்டப் போரின்போது நூற்றுக்கணக்கில் அல்ல, ஆயிரக்கணக்கில் மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டன என்பது உண்மையே. அதேநேரத்தில், இந்த இழப்புகள் அரச படைகள் மற்றும் புலிகள் என்ற இரண்டு தரப்பாலும் ஏற்படுத்தப்பட்டன என்பதும் யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இது ஒருபுறமிருக்க, இங்கே கேள்வி என்னவென்றால், ஏன் இதுவரை காலமும் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் தொகையை இலங்கை அரசாங்கத்தாலோ அல்லது ஐ.நா. போன்ற சர்வதேச நிறுவனங்களாலோ கணக்கிட முடியவில்லை என்பதாகும். இதுவரை அதற்கான ஒரு பொறிமுறையோ, முயற்சிகளோ தானும் ஏன் மேற்கொள்ளப்படவில்லை? இங்கேதான் சம்பந்தப்பட்ட தரப்புகள் மீது சந்தேகம் வருகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை, மற்றைய பல நாடுகளில் இல்லாத அரச நிர்வாகக் கட்டமைப்பு முறை ஓரளவு சிறப்பாக உள்ளது. மக்களால் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்றம், மாகாணசபைகள், பிரதேச சபைகள், மாநகர சபைகள் ஒருபுறமிருக்க, அரச நிர்வாகத்தைத் தடையின்றி கொண்டு நடாத்தும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசாங்க அதிபர்கள், உதவி அரசாங்க அதிபர்கள், கிராமசேவை அலுவலர்கள் என ஒரு சீரான கட்டமைப்பு உண்டு.
இதில் கிராமசேவை அலுவலர்கள் என்போர்தான் அரச நிர்வாகத்தை அடிமட்டம் வரை கொண்டு செல்லும் முதுகெலும்பாக இருக்கின்றனர். இலங்கையின் எல்லாக் கிராமங்களுமே ஏதாவதொரு கிராமசேவை அலுவலர்களுக்குக் கீழ்தான் நிர்வகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மனிதர்களினதும், வதிவிட அத்தாட்சி, அடையாள அட்டை, பிறப்பு – இறப்பு, திருமணம், பல்வகை நிவாரணங்கள் என கிராமசேவை அலுவலர்களுக்குத் தெரியாமல் எதுவுமே நடைபெறுவதில்லை.
அப்படியிருக்க, இந்தக் கிராமசேவை அலுவலர்கள் ஊடாக இறுதி யுத்தத்திற்கு முன்னர் ஒவ்வொரு கிராமசேவை அலுவலர் பிரிவிலும் யார் யார் வசித்தார்கள், இப்பொழுது யார் இல்லை, அவர்களுக்கு என்ன நடந்தது போன்ற விடயங்களை ஏன் அரசாங்கத்தால் இதுவரை திரட்ட முடியாமல் இருக்கின்றது? இதற்கான முயற்சி ஏதாவது எடுக்கப்பட்டதா? போன்ற விபரங்கள் யாருக்குமே தெரியாது. அரசாங்கம் இந்த விடயத்தில் அசட்டையாக (அல்லது திட்டமிட்டு) இருப்பதால், ஆளுக்காள் தமது தேவைகளுக்காக இறந்தவர்களது எண்ணிக்கைப் புள்ளி விபரங்களை வாய்க்கு வந்தபடி சொல்லுவதற்கு அரசாங்கமே வாய்ப்புத் தேடிக் கொடுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
அரசாங்கம் ஒருபக்கம் இருக்கட்டும். புலிகள் இருக்கும் வரை அவர்களே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என்றும், அவர்கள் அழிக்கப்பட்ட பின்னர் தாங்களே ஏகப்பிரதிநிதிகள் என்றும் சொல்லி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்த விடயத்தில் கபடத்தனமான மௌனம் சாதிப்பது எதற்காக?
அது ஒருபுறமிருக்க, தர்க்கரீதியாகப் பார்க்கும் போது, கொல்லப்பட்டவர்களின் தொகை சம்பந்தமாக வெளியிடப்படும் புள்ளி விபரங்கள் பொருத்தமற்றவையாக இருப்பதைக் காண முடிகின்றது. ஏனெனில், இறுதி யுத்த நேரத்தில் களத்தில் நின்று செயல்பட்ட வைத்திய அதிகாரிகளினதும், சில தொண்டர் அமைப்புப் பிரதிநிதிகளினதும், சில பொதுமக்களினதும் தகவல்களின்படி, எறிகணை வீச்சாலேயே அநேகமானோர் மரணமடைந்திருக்கின்றனர் எனத் தெரிய வருகின்றது. எறிகணைகள் தனி ஒரு மனிதனுக்காக ஏவப்படுவதில்லை. அதுவுமல்லாமல், இறுதி நேரத்தில் இலட்சக்கணக்கான மக்கள் ஒரு சிறிய பிரதேசத்தில் மிகவும் நெருக்கமாக முண்டியடித்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். எனவே இராணுவத்தினரின் எறிகணை ஒரு இடத்தில் வீழ்ந்து சுமார் பத்து பேரளவில் இறந்தால், அவர்களைச் சுற்றி இருந்த ஐம்பது பேராவது காயமடையக்கூடிய சாத்தியம் உண்டு. அதுவும் அது கொத்தணிக் குண்டாக இருந்தால் (அப்படி ஒரு குற்றச்சாட்டு இலங்கை அரசு மீது சுமத்தப்பட்டுள்ளது) நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். அப்படிப் பார்த்தால், ஐ.நாவும், மேற்கு நாடுகளும் சொல்லும் நாற்பதாயிரம் பேர் இறந்திருந்தால், குறைந்தபட்சம் நாலு இலட்சம் பேர் காயமடைந்திருக்க வேண்டும்.
அதேபோல, புலிகளின் ஆதரவாளர்கள் சொல்லும் ஒன்றரை இலட்சம் பேர் இறந்திருந்தால், குறைந்தபட்சம் பதினைந்து இலட்சம் பேராவது காயமடைந்திருக்க வேண்டும். ஆனால், இவ்வளவு தொகையான பேருக்கு அந்த நேரத்தில் அங்கு கடமையாற்றிய வைத்தியர்களோ, செஞ்சிலுவைச் சங்கமோ சிகிச்சை அளித்ததாக தகவல் ஏதும் இல்லை.
மறுபக்கத்தில், இறந்தவர்கள் தொகையிலும், காணாமல் போனவர்கள் தொகையிலும் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பியோடி மறைந்து வாழ்வதாக பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகளே கடந்த காலங்களில் சொல்லி வந்திருக்கிறார்கள். இதுவும் ஒரு மிகைப்படுத்தப்பட்ட, உண்மையை மறைக்க முயலும் கதையாகும். வசதி வாய்ப்புகள் கிடைத்த ஒரு சிலர் தப்பிச் சென்றது உண்மையேயாயினும், இவ்வளவு பெரும் தொகையானோர் தப்பிச் சென்றது என்பது நம்ப முடியாத கட்டுக்கதையாகும்.
இந்த விவகாரத்தில் நடைபெறும் இழுபறிகளையும், கண்ணாமூச்சி விளையாட்டுகளையும் வைத்துப் பார்க்கையில், அரசாங்கமும், தமிழ் தரப்பும் தத்தமது அரசியல் இலாபங்களுக்காக திட்டமிட்டு நாடகம் ஆடுவதாகச் சந்தேகிக்க இடமுண்டு. அல்லாவிடின், இவ்வளவு காலமாக இந்தப் பிரச்சினைக்கு இவர்களால் ஏன் தீர்வுகாண முடியாமல் இருக்கின்றது?
முன்னைய மகிந்த ஆட்சியை விடுவோம். நல்லாட்சி வேண்டும் என்று இன்று பதவியில் இருக்கும் மைத்திரி – ரணில் அரசைப் பதவிக்குக் கொண்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மை தேசிய இனக் கட்சிகளோ அல்லது முழுமக்களுக்கும் விடுதலையையும், சோசலிசத்தையும் கொண்டு வரப்போவதாக சூளுரைத்து வரும் ஜே.வி.பியினரோ கூட, இந்த விடயத்தில் பேசாமடந்தைகளாக இருப்பதின் மர்மம் என்ன?
எனவே, இந்தப் பிரச்சினையை அரசாங்கமோ அல்லது அரசியல் கட்சிகளோ, ஐ.நாவோ அல்லது வேறெந்த வெளிநாடுகளுமோ தீர்த்து வைப்பார்கள் என்று நம்புவதற்கு இனியும் இடமில்லை. இருக்கின்ற ஒரே வழி, நாட்டிலுள்ள உண்மையான ஜனநாயகவாதிகள், தேசபக்தர்கள், அறிவுஜீவிகள், மனித உரிமைவாதிகள், தொழிற்சங்கவாதிகள், சமய – சமூகத் தலைவர்கள் ஆகியோரைக் கொண்ட சுயாதீனமான ஒரு உண்மையைக் கண்டறியும் குழுவை அமைத்து, இந்த விடயத்தில் உண்மைகளைக் கண்டறிவதுடன், அரசாங்கத்தினதும் அரசியல்வாதிகளினதும் மோசடித்தனங்களையும் அம்பலத்துக்குக் கொண்டுவர வேண்டும். இதைத்தவிர, இப்போதைக்கு வேறு வழி எதுவும் இருப்தாகத் தெரியவில்லை.
Source: Vaanavil
No comments:
Post a Comment