அரசாங்கம் பதவி விலக வேண்டும்!


maithri-and-ranil_colour
2015 ஜனவரி 8ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கும், அதே ஆண்டு ஓகஸ்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் பிரதமராகப் பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்தர்ப்பவாத ‘தேன் நிலவு’ முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரும் இணைந்து உருவாக்கிய தற்போதைய அரசாங்கத்திற்குள் ஆரம்பம் முதலே ஏராளமான முரண்பாடுகளும், இழுபறிகளும் இருந்து வந்தபோதிலும், இரு தரப்பினரதும் பரஸ்பர நலன்களுக்காக அவை மூடி மறைக்கப்பட்டே வந்தன.


ஆனால் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணிலால் நேரடியாகக் கையாளப்படும் குற்றப்புலனாய்வுப் பிரிவு, பாரிய நிதி மோசடி விசாரணைப் பிரிவு, இலஞ்ச விசாரணை ஆணைக்குழு என்பனவற்றின் செயற்பாடுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என விமர்ச்சித்து, தேவை ஏற்படின் தான் அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன் எனப் பகிரங்கமாக அறிவித்த பின்னர், அரசாங்கத்திற்குள் உள்ள எதிரும் புதிருமான போக்கு அம்பலத்துக்கு வந்துள்ளது.

ஜனாதிபதியின் குற்றச்சாட்டை அடுத்து, இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவின் தலைவியான டில்றுக்சி விக்கிரமசிங்க (இவர் ரணிலின் நெருங்கிய உறவினர் எனக் கூறப்படுகிறது) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன், அவரது பதவி விலகலை ஜனாதிபதி வழமையான சம்பிரதாய மறுப்பு ஏதுமின்றி ஏற்றும் உள்ளார். இதிலிருந்து ஜனாதிபதி தனது கருத்தில் உறுதியாக உள்ளார் என்பது தெளிவாக உள்ளது.

அதுமட்டுமின்றி, முன்னாள் மத்திய வங்கி ஆளுநரும், ரணிலின் நெருங்கிய சகாவுமான அர்ச்சுனா மகேந்திரன் மத்திய வங்கி பிணை முறியை தனது நெருங்கிய உறவினருக்கு வழங்கிய விவகாரத்தில் பல கோடி ரூபா மோசடி நடந்ததும் அம்பலத்துக்கு வந்து, அதன் மீது ஜனாதிபதியின் நடவடிக்கைக்காக காத்துக் கிடக்கிறது.

இன்னொரு பக்கத்தில் தற்போதைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களின் ஊழல் நடவடிக்கைகளையும் விசாரிக்கும்படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. தற்போதைய அரசாங்கத்தின் ஆறு முக்கிய அமைச்சர்கள் பாரிய ஊழல்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதிக்கு தகவல் கிடைத்ததின் அடிப்படையிலேயே ஜனாதிபதி இவ்வாறான ஒரு உத்தரவை விடுத்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அந்த அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் பிரதமர் ரணிலின் நெருங்கிய சகாக்கள் என்றும் கூறப்படுகிறது.
கடந்த காலத்தில் தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம் மீது நாட்டின் முற்போக்கு – ஜனநாயக – தேசபக்த சக்திகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்துள்ளன. அதற்குக் காரணம் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த நாளிலிருந்தே மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்கு மாறாக, தமது அரசியல் எதிரிகளை, குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரையும், அவரை ஆதரிப்போரையும் பழிவாங்குவதிலேயே பெரிதும் ஈடுபாடு காட்டி வந்துள்ளது.

இதுபற்றி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் அடிக்கடி குறிப்பிட்டு வந்துள்ள போதிலும். ரணில் அரசாங்கம் அதைப்பற்றி எவ்வித கவனமும் செலுத்தாமல் தமது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதிலும், முடமாக்குவதிலும்தான் அக்கறை செலுத்தி வந்தது. ஐக்கிய தேசியக் கட்சி அரசுகளைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதுமையான விடயமல்ல.
1947இல் நடந்த சுதந்திர இலங்கையின் பொதுத் தேர்தலின்போது, இந்திய வம்சாவழித் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் வாழும் மலையகப் பகுதிகளில் ஐ.தே.கவுக்கு எதிரான வேட்பாளர்களை அதிக அளவில் அந்த மக்கள் வெற்றிபெற வைத்துவிட்டார்கள் என்பதற்காக, அவர்களைப் பழிவாங்குவதற்காக அந்த மக்களின் பிரஜாவுரிமையையும், வாக்குரிமையையும் பறித்து, அவர்களை நாடற்றவர்களாக்கியவர் அப்போதைய ஐ.தே.க. பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க.

அதுமட்டுமின்றி, 1977இல் ஆட்சிக்கு வந்த ஐ.தே.கவின் அப்போதைய தலைவரும், ரணில் விக்கிரமசிங்கவின் மாமனாருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தனக்கு எதிரான எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் என்பனவற்றை அடக்கியொடுக்கியதுடன், முன்னாள் பிரதமரும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியுமான சிறீமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமையையும் பறித்தார்.

அந்தப் பாரம்பரியத்தையே இன்றைய ஐக்கியக் கட்சிப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்கிறார் போலத் தெரிகிறது. ஆனால் இம்முறை ஒரு வித்தியாசமான விடயம் என்னவெனில், வழமையாக ஐ.தே.க. அதிகாரத்துக்கு வரும் நேரங்களில் தனித்தே தனது அரசியல் எதிரிகளான சிறீ.ல.சு.கட்சியையும், இடதுசாரிக் கட்சிகளையும் பழிவாங்குவது வழக்கம். இந்தத் தடவை ஐ.தே.க. தனித்து இதைச் செய்யவில்லை. முன்னாள் ஜனாதிபதியும், சிறீ.ல.சு.கட்சி முன்னாள் தலைவியுமான சந்திரிகவையும், இந்நாள் ஜனாதிபதியும், சிறீ.ல.சு.கட்சி தலைவருமான மைத்திரியையும் சேர்த்துக் கொண்டே செய்கிறது.
ஆனால் சர்வாதிகாரி, ஊழல் மோசடிக்காரர் என இன்றைய அரசாங்கத் தலைவர்களால் வர்ணிக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த, தனது அரசியல் எதிரிகள் மீது இப்படியான அரசியல் பழிவாங்கல்கள் எதிலும் ஈடுபட்டார் என்பதற்கு ஓர் உதாரணத்தைக்கூட காட்டுவது சிரமம்.

முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில், இன்றைய அரசாங்கம் பதவிக்கு வந்ததே நேர்மையான வழிமுறைகளில் அல்ல என்பதையே. இன்றைய அரசாங்கத்தை சதித்தனமான முறையில் பதவிக்குக் கொண்டு வந்ததில் சில உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் கைகள் பின்னணியில் இருந்து செயல்பட்டுள்ளன என்பது இரகசியமான விடயமல்ல.

உள்நாட்டைப் பொறுத்தவரை நீண்டகாலம் அதிகாரப் பசியுடன் காத்திருந்த ஐ.தே.க. அதிகாரத்துக்கு வருவதற்கு துடித்துக் கொண்டிருந்தது. அதன் விருப்பத்தை நிறைவேற்ற அதன் வெளிநாட்டு எஜமானர்களான ஏகாதிபத்திய சக்திகள் வியூகம் வகுத்துக் கொடுத்தன. அத்துடன் வெளிச் சூழ்நிலைகளையும் உருவாக்கிக் கொடுத்தன.

அதற்கு உடந்தையாக புதிதாக ஏகாதிபத்திய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டவரும், மகிந்த மீது தனிப்பாட்ட குரோதம் கொண்டிருந்தவருமான சந்திரிக செயல்பட்டு, தனது சொந்தக் கட்சியையே உடைத்து, மைத்திரியை ‘பொது வேட்பாளர்’ என்ற மகுடத்தின் கீழ் ஜனாதிபதி வேட்பாளராக்கி ஐந்தாம் படை வேலையைச் செய்தார். தனக்கென தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் எதுவுமற்ற மைத்திரி, ஐ.தே.கவினதும், சந்திகவினதும் சதி வலையில் சிக்கியதற்கு தனக்கு மகிந்த ஆட்சியில் பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் காரணமாக அமைந்தது.

சர்வதேச அரங்கைப் பொறுத்தவரையில், மகிந்த அரசாங்கத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டாலும், அவரது அரசு சீனா, ரஸ்யா, கியூபா, ஈரான், லிபியா, வெனிசூலா, வியட்நாம், பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்த காரணத்தாலும், அவரது அந்த நிலைப்பாடு தமது பூகோளரீதியிலான நலன்களுக்கு இடையூறாக இருக்கின்றது எனக் கருதிய அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளும், இந்தியாவும் அவரை எப்படியும் பதவியில் இருந்து இறக்க வேண்டும் எனக் கருதி வேலை செய்தன.

இவற்றின் ஒட்டுமொத்தமான கூட்டு வேலையின் விளைவே 2015 ஜனவரி 8 ஆட்சி மாற்றம். ஆட்சி மாற்றங்கள் ஏற்படுவதென்பது ஜனநாயக ஆட்சி முறையில் இயல்பானது. ஆனால் அந்த ஆட்சி மாற்றம் மக்களுக்கு எதிரானதாகவும், அரசியல் எதேச்சாதிகாரமாகவும் மாறும்போது அந்த அரசாங்கம் ஆட்சி செய்வதற்கான தார்மீக உரிமையை இழந்துவிடுகிறது. அதுதான் இபபொழுது இலங்கையில் நிகழ்ந்துள்ளது.

‘நல்லாட்சி’ வழங்கப் போவதாகக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் அதற்கு எதிர்மாறாகச் செயல்படுகிறார்கள்.

முன்னைய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன.

விலைவாசியும், வேலை இல்லாத் திண்டாட்டமும் கட்டுக்கடங்காமல் ஏறிச் செல்கின்றன.
அரச பொதுச் சொத்துக்களைத் தனியார் கைகளுக்கு மாற்றும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
கல்வி, வைத்தியத்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மத்திய வங்கி போன்ற நாட்டின் தலைமை நிதி நிறுவனங்களியே அரச உயர்மட்டத்தின் ஆதரவுடன் பல போடி ரூபா நிதி மோசடி நடைபெற்றுள்ளது.

அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுடன் இலங்கையின் பொருளாதார நலன்களையும், இறைமையையும் பாதிக்கும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை காலமும் இருந்த நாட்டின் அணிசேராக் கொள்கை மிக வேகமாக ஏகாதிபத்திய சார்பாக மாற்றப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதியின் கூற்றே அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுகிறது என்ற உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

இப்படிப் பல விடயங்களைப் பார்க்கையில் இந்த அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத, அதற்குப் பதிலாக மக்களின் விரோதியாகவும், நாட்டுக்கு விரோதமாகவும் செயல்படுவது பட்டவர்த்தனமாக வெட்டவெளிச்சமாகியுள்ளது.
மக்களின் ஆதரவை மட்டுமின்றி, மக்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் ஆதரவையும் இழந்துள்ள பிரதமர் ரணில் விக்கிலமசிங்க தலைமையிலான இன்றைய அரசு பதவியில் தொடர்வதற்கான தார்மீக உரிமையை இழந்துள்ளது.

எனவே, மக்களினதும், நமது தாய்நாட்டினதும் நலன்களை உண்மையிலேயே முன்நிறுத்தக்கூடிய அரசொன்றை மக்கள் மீண்டும் தெரிவு செய்வதற்காக, இன்றைய அரசு தானாகவே விலகிக் கொண்டு வழிவிடுவதே ஜனநாயக நெறிமுறையாகும். அப்படி ஜனநாயகத்தை மதித்து இன்றைய அரசு பதவி விலக மறுப்பின், ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்றைய அரசைப் பதவி நீக்கம் செய்துவிட்டு, புதிதாகத் தேர்தலுக்கு உத்தரவிட்டு மக்களின் இறைமையை நிலைநாட்ட உதவ வேண்டும். அதன் மூலம் அவர் சதிகாரர்களின் தூண்டுதலால் நாட்டைத் தவறான வழியில் இட்டுச் சென்றதற்கு பிராயச்சித்தம் தேட முடியும்.

இது ஒன்றே மூழ்கும் கப்பலாக மாறிக் கொண்டிருக்கும் நாட்டையும், மக்களையும் மீட்பதற்கான இன்றுள்ள ஒரே வழியாகும்.

vaanavil-68-69-70_2016

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...