யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே! – சுப்பராஜன்



மைத்திரி – ரணில் தலைமையிலான தற்போதைய மேற்கத்தைய சார்பு, நவ – தாராளவாத அரசு ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து அதன் ஜனாதிபதியும், பிரதமரும், நாட்டின் அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் செய்து, இனப் பிரச்சினைக்கும், நாட்டின் ஏனைய சகல பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்போவதாகச் சொல்லி வருகிறார்கள்.
மறுபக்கத்தில், அவர்கள் கூறுவதை மறுபேச்சில்லாமல் அப்படியே ஏற்கும்படியும், இந்த வருட முடிவுக்குள் இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஏற்பட்டுவிடும் என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி வருகின்றனர்.


இன்றைய மைத்திரி – ரணில் வலதுசாரி அரசைப் பதவிக்குக் கொண்டு வருவதில் வழக்கத்திற்கு மாறாக அவர்களுடன் இணைந்து செயல்பட்ட சில தமிழ் – சிங்களப் புத்திஜீவிகள், வெளிநாட்டுப் பணத்தில் மனித உரிமை பேசுவோர், அடிப்படைக் கொள்கைகளுக்குத் துரோகமிழைத்துவிட்டு வலதுசாரிகளுடன் கைகோர்த்த சில இடதுசாரிச் சந்தர்ப்பவாதிகள் போன்ற வகையறாக்களும், இன்றைய அரசு இனப் பிரச்சினை விடயத்தில் ஏதோ பெரிதாகப் ‘புடுங்கி அடுக்கப்’ போவதாக சோதிடம் கூறி வருகின்றனர்.
உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழ்கின்ற புலி ஆதரவுக் குழுக்களும் முன்னைய மகிந்த அரசுக்கு எதிராக விடாப்பிடியாக ‘சன்னதம்’ ஆடியது போல, மைத்திரி அரசுக்கு எதிராக ஆடாமல் அடக்கி வாசித்து வருகின்றனர்.

தமிழ் நாட்டில் எடுத்ததிற்கெல்லாம் ‘சிங்கள கொடுங்கோலர்களுக்கு’ எதிராகக் கூச்சல் போட்டு, ‘தமிழீழ தொப்புள் கொடி உறவுகளுக்காக’ கண்ணீர் சிந்தி, வாள் சுழற்றிய சீமான், வைகோ, நெடுமாறன், ராமதாசு, திருமாவளவன் போன்ற ‘தன்மானத் தமிழர்களும்’ இலங்கையைப் பார்ப்பதை விடுத்து, கண்மூடி மௌன விரதம் அனுட்டிக்கின்றனர்.
இவர்கள் எல்லோரையும் ஒரு நேர்கோட்டில் கொண்டு வந்த, அந்தச் சர்வ வல்லமை பொருந்திய சர்வதேச சக்தி எது என்பதை ஆராய்வது அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம்.
ஆனால் இன்றைய அரசின் தலைவர்கள் மட்டும் ஐ.தே.க. வழமையாகப் பின்பற்றும் தந்திரப் போக்கில் இருந்து மாறியதாகத் தெரியவில்லை. அவர்கள் மட்டுமின்றி, ‘பன்றியோடு சேர்ந்த பசுக்கன்றும்….’ எதையோ சாப்பிட்டது என்று சொல்வது போல, இன்றைய வலதுசாரி அரசுடன் பதவி மோகத்துக்காகக் கூட்டுச் சேர்ந்துள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரும் ஐ.தே.கவின் கீழ்த்தரமான தந்திரத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.

முன்னைய மகிந்த அரசு செய்தது போல, உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் ஒரே கொள்கையைப் பேசாது, வடக்குக் கிழக்கில் ஒரு பேச்சும், சிங்கள மக்கள் மத்தியில் செல்லும் போது இன்னொரு பேச்சும், சர்வதேச சமூகத்திற்கு வேறொரு பேச்சுமாக இன்றைய அரச தலைவர்கள் நாக்கைப் புரட்டி புரட்டிக் கபடத்தனமாகப் பேசி வருகின்றனர்.
புதிய அரசியல் அமைப்பின் மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப் போவதாகச் சொல்லி வருபவர்கள், தீர்வு என்ன அடிப்படையில் – அதாவது சமஸ்டி முறையிலா, பிராந்திய சுயாட்சி முறையிலா, மாகாணசபை முறையிலா அல்லது ஒற்றையாட்சிக்கு உள்ளேயா – எப்படி இருக்கப்போகின்றது என்பதைக் கூறாமல் இரகசியம் பேணுகின்றனர். இதனால் ‘சமஸ்டி அரசியல் அமைப்பு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு நாடு பிளவுபடப் போகின்றது’ என்ற அச்சத்தை சில சக்திகள் சிங்கள மக்கள் மத்தியில் கிளப்பிவிட்டுள்ளனர். இதனால், வழமைபோல சிங்கள மக்களின் எதிர்ப்பைக் கிளப்பிவிட்டு, இனப் பிரச்சினைக்கு ஒரு சாதாரண தீர்வுகூட வர முடியாத நிலையை இன்றைய அரசு திட்டமிட்டு ஏற்படுத்திவிட்டிருக்கிறது.

இந்த உண்மையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்னை அண்மையில் சந்தித்த அரச சார்பற்ற பிரதிநிதிகளிடம் வெளிப்படையாகவே கூறிவிட்டார். (உண்மையைக் கக்கியதற்காக அவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்) ஐக்கிய தேசியக் கட்சியின் தமிழ் கிளை போல, ஜனநாயக மக்கள் முன்னணி என்ற பெயரில் கட்சி ஒன்றை நடாத்தி வருபவரும், இன்றைய அரசில் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் (அதிகாரம் எதுவுமற்ற) அமைச்சராகப் பதவி வகிப்பவருமான மனோ கணேசனின் ஏற்பாட்டில் அண்மையில் பிரதமர் ரணிலை அலரி மாளிகையில் அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்தபோதே, பிரதமர் தென்னிலங்கை மக்கள் மத்தியில் உள்ள நிலைமையை (உண்மையில் அவரது அரசின் விருப்பத்தை) புட்டு வைத்திருக்கிறார்.

அந்தச் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த ரணில், “நல்லிணக்கம், நிலைமாறு நீதிப் பொறிமுறை மற்றும் சிறுபான்மையினருக்கான தீர்வுகளை வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தென் பகுதியிலுள்ள சிங்கள மக்கள் தொடர்ந்தும் எதிரான நிலைப்பாட்டிலேயே இருப்தாக” தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் இன்றைய அரசு இனப் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு எதனையும் காணப் போவதில்லை என்ற பட்டவர்த்தனமான உண்மையை ரணில் சூசகமாக வெளியிட்டிருக்கிறார். ரணிலின் இந்தக் கருத்து புதிதானதோ அல்லது ஆச்சரியத்துக்குரியதோ அல்ல.

ஏனெனில், ஐ.தே.க. கடந்த காலங்களில் தான் செய்த ஒவ்வொரு இனவாதச் செயலுக்கும் மக்கள் மேல்தான் பழியைப் போட்டு வந்திருக்கிறது. உதாரணமாக, 1958, 1977, 1981, 1983 ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்ட இன வன்செயல்களுக்கு பின்னணியில் நின்று செயல்பட்ட சூத்திரதாரி ஐ.தே.கவே. அதேபோல, இனப் பிரச்சினைத் தீர்வுக்காக கொண்டு வரப்பட்ட பண்டா – செல்வா உடன்படிக்கை, 1987இல் செய்யப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கை, 2000ஆம் ஆண்டில் சந்திரிக அரசு கொண்டு வந்த தீர்வுத் திட்டம், என்பனவற்றை நடைமுறைக்கு வரவிடாமல் தடுத்து நிறுத்திய கைங்கரியத்தைச் செய்ததும் ஐ.தே.கவே.

ஆனால், இவற்றைச் செய்த நேரங்களில் எல்லாம், இவற்றில் தனது பின்னணியை மறைத்து, சிங்கள மக்களே அவற்றைத் தன்னெழுச்சியாகச் செய்தார்கள் என ஐ.தே.க. பொய்யுரைப்பது வழமை. அந்தத் தந்திரத்தையே ‘அரசியல் குள்ளநரி’ என வர்ணிக்கப்படும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மருமகனான ரணிலும் இப்பொழுது செய்யப் பார்க்கிறார். அதாவது, தாம் இனப் பிரச்சினையைத் தீர்க்கத் தயாராக இருப்பது போலவும், ஆனால் சிங்கள மக்கள் தொடர்ந்தும் அதற்கு எதிராகவே இருக்கிறார்கள் எனவும், மனோ கணேசன் கூட்டிச் சென்ற அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் ரணில் கூறியதின் அர்த்தம் இதுதான்.

மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு, அரசியலில் அனுபவப்பட்டவர்களால் முன்னரே எதிர்பார்த்த விடயம்தான். ஏனெனில், தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் சமஸ்டித் தீர்வே தமது எதிர்பார்ப்பு என்று கூறிய சந்தர்ப்பங்களில் எல்லாம், தனது அரசு சமஸ்டித் தீர்வுக்கு ஒருபோதும் சம்மதிக்காது என ரணில் உடனுக்கு உடனேயே பதில் அளித்து வந்திருக்கிறார். அதேபோல, ஜனாதிபதி மைத்திரியும் தனது அரசு ஒற்றையாட்சி கொண்ட அரசாகவே இருக்கும் என ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கூறியிருக்கிறார். இந்த அரசின் ஜனாதிபதியும், பிரதமரும் அப்படிக் கூறிய பின்னர், இந்த வருட முடிவுக்குள் இனப் பிரச்சினைக்கு இன்றைய அரசு தீர்வு காணும் என தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் தமிழ் மக்களைப் பார்த்துக் கூறுவது சுத்த மோசடித்தனம் தவிர வேறல்ல.

தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை, அவர்களது தலைவர்களால் தொடர்ந்து ஏமாற்றப்படுவதே வரலாறாக இருக்கிறது. அவர்களது தலைவர்கள் இனப் பிரச்சினைத் தீர்வுக்குக் கிடைத்த சந்தாப்பங்களை எல்லாம் தமது அரசியல் இருப்புக்காக திட்டமிட்டு நழுவ விட்டவர்கள் என்பதை முதலில் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் புதிய தலைமையையும், புதிய கொள்கையையும் உருவாக்குவதை நோக்கி அவர்கள் செல்வது அவசியம். அவ்வாறு அவர்கள் செய்யத் தவறினால், தொடர்ந்தும் துன்பத்தில் உழல்வதைத் தவிர வேறு வழி இல்லை.
Source: Vaanavil 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...