அரசாங்கத்தை மிரள வைத்த பாதயாத்திரை! -இக்பால் இத்திரீஸ்


protest
ன்றுபட்ட எதிரணியினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கண்டியிலிருந்து கொழும்பு வரை மேற்கொண்ட மூன்றுநாள் பாதயாத்திரை பெரும் வெற்றியளித்தது என்று சொல்ல முடியாவிட்டாலும், மைத்திரி – ரணில் அரசை ஒரு கலக்கு கலக்கி விட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.


அரசாங்கம் பலமான அழுத்தங்களைப் பிரயோகித்து பாதயாத்திரை பற்றிய செய்திகளை ஊடகங்களில் வராமல் பார்த்துக் கொள்வதற்கு பெரும் பிரயத்தனம் எடுத்தது. ஆனால், மறுபக்கத்தில் ஜனாதிபதியும், பிரதமரும், எப்பொழுதும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அரசியல் எதிராளிகளைத் திட்டும் ஐ.தே.கவின் லக்ஸ்மன் கிரியெல்ல போன்றவர்களும் பாதயாத்திரையை அடிக்கடி வசைபாடியதின் மூலம், தம்மை அறியாமலேயே பாதயாத்திரைக்கு போதிய பிரச்சார முக்கியத்துவத்தைக் கொடுத்தனர். பாதயாத்திரைக்கு மக்கள் ஆதரவு இல்லை என்றால், அவர்கள் ஏன் இவ்வளவு தூரம் துள்ளிக் குதிக்க வேண்டும் என்ற நியாயமான கேள்வி இருக்கிறது.

அதுமட்டுமின்றி, பாதயாத்திரை கண்டி நகரிலிருந்து ஆரம்பிக்கப்படுவதற்குத் திட்டமிட்டிருந்த போதும், மக்களின் ஜனநாயக உரிமையை மறுக்கும் வகையில் அரசாங்கக் கட்சியினர் நீதிமன்றத்தில் அதற்கு எதிராக மனுத் தாக்கல் செய்து, கண்டியிலிருந்து பாதயாத்திரையை ஆரம்பிக்க முடியாதபடி தடை உத்தரவொன்றைப் பெற்றுக் கொண்டனர். அதேபோன்ற ஒரு உத்தரவை மாவனல்லை நகருக்குள் பாதயாத்திரையினர் நுழையக்கூடாது என்றும் நீதிமன்றத்தின ஊடாகப் பெற்றுக் கொண்டனர்.

கேகாலை நகரிலும் அவ்வாறு ஒரு உத்தரவைப் பெற அரசாங்க அடிவருடிகள் முயன்றபோதும், அதை ஏற்காத நீதிமன்றம், ஒரேயொரு பாதையால் மட்டும் பாதயாத்திரை செல்ல அனுமதி அளித்தது. நித்தம்புவிலும் அவ்வாறான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாயினும், அந்தப் பகுதி சந்திரிகவின் செல்வாக்குப் பிரதேசமாக இருந்த போதிலும், அங்குள்ள நீதிபதி நித்தம்புவ நகருக்குள் பாதயாத்திரை செல்வதற்குத் தடை விதிக்க மறுத்துவிட்டார். (இந்த இலட்சணத்தில் இலங்கையில் நீதித்துறை சுதந்திரமாகவும், பக்கச்சார்பின்றியும் செயல்படுகிறது என்றால், அதைச் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளுமா?)

இதுதவிர, அத்தனைகலையிலுள்ள பண்டாரநாயக்கவின் சமாதியை பாதயாத்திரையினர் தாக்கப் போகிறார்கள் என்ற ஒரு புரளியை சந்திரிக கிளப்பிவிட்டு, அச்சமாதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டிருந்த போதிலும், சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. பதிலுக்கு அவரது சமாதியைக் கடக்கும் போது, பாதயாத்திரையினர் கோசங்கள் எதுவும் எழுப்பாமல் அமைதியாகச் சென்றதுடன், பண்டாரநாயக்கவுக்கு மரியாதை செலுத்தும் விதமாகத் தாம் அணிந்து சென்ற தொப்பிகளையும் அகற்றிவிட்டே சென்றனர். பண்டாரநாயக்கவின் சமாதியைத் தாக்கும் அளவுக்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரான எதிரணியினர் முட்டாள்கள் அல்ல என்று சந்திரிகவுக்குத் தெரிந்திருந்தும், இந்தக் கீழ்த்தரமான புரளியைக் கிளப்பி அரசியல் இலாபம் தேட முயன்றிருக்கிறார்.
பாதயாத்திரையில் இலட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளவில்லை என்பது உண்மையே. இன்றைய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒன்றரை வருட காலத்துக்குள் மக்களின் தீவிரமான வெறுப்பைச் சநதித்;திருக்க முடியாது என்பது எதிரணியினருக்கும் நன்கு தெரியும். ஆனாலும், எதிர்பார்த்ததை விட, இந்த ‘நல்லாட்சி’ அரசாங்கம் மக்களின் வெறுப்பை வெகு வேகமாகச் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளது. அதனால் இலட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளாவிடினும் பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரையில் கலந்து கொண்டனர். ஆனால், பாதயாத்திரை சென்ற வீதியின் இருமருங்கும் கூடிய இலட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரைக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர். எதிர்காலத்தில் அரசுக்கு எதிராக மக்கள் பெரிய அளவில் அணி திரளப்போவதை அது கட்டியம் கூறுவதாக இருந்தது.

பாதயாத்திரையின் முடிவில் கொழும்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கும் எதிரணியினர் தீர்மானித்திருந்தனர். அதற்காக ஹைபார்க் மைதானத்தையும் தெரிவு செய்திருந்தனர். ஆனால் அரசாங்கம் அதைத் தடுப்பதற்காக கொழும்பு மாநகர சபையின் மூலம் அந்த மைதானத்தில் சில குழிகளைத் தோண்டிவிட்டு, மைதானத்தில் திருத்த வேலைகள் நடைபெறுவதாகவும், எனவே அதில் கூட்டம் எதுவும் நடாத்த முடியாது எனவும் அறிவித்தது. இதில் நகைச்சுவையான விடயமென்னவெனில், அந்த மைதானம் மகிந்த ஆட்சிக் காலத்தில்தான் நல்ல முறையில் திருத்தி அமைக்கப்பட்டிருந்தது.

அத்துடன், வேறு சில மைதானங்களில் எதிரணியினர் கூட்டம் நடத்தலாம் என்ற அச்சத்தில் அரசாங்கம் அந்த மைதானங்களிலும் குழிகளைத் தோண்ட ஆரம்பித்துவிட்டது. அதுமாத்திரமல்லாமல், அதன் பின்னர் கொழும்பு நகரப் பகுதிகளில் பல மைதானங்களில் எதிர்காலத்தில் கூட்டங்கள் எதுவும் நடாத்த முடியாது எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையைப் பார்க்கும்போது, சீப்பை ஒழித்து வைத்துவிட்டு கலியாணத்தை நிறுத்த முயன்ற கதைதான் நினைவுக்கு வருகிறது.

ஆனால், அரசாங்கம் தான் தோண்டிய குழியில் தானே விழுந்துகொண்ட நிலைமைதான் இறுதியில் ஏற்பட்டது. நாட்டில் மகிந்தவின் எதேச்சாதிகார ஆட்சியை ஒழித்துக்கட்டிவிட்டு நல்லாட்சியைக் கொண்டு வரப்போவதாகச் சொல்லி ஆட்சிபீடம் ஏறிய மைத்திரி – ரணில் அரசு, சாதாரணமான அகிம்சை அடிப்படையிலான அமைதியான பாதயாத்திரையையே பொறுக்க முடியாமல் அதைச் சீர்குலைப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளும், பாதயாத்திரை மேற்கொண்டவர்கள் மீது பல விதமான அவதூறுச் சேற்றை வாரி இறைத்த நிலைமையும், இந்த அரசாங்கத்தின் ஜனநாயக முகமூடியைத்தான் கிழித்தெறிய உதவியுள்ளது.
அரசாங்கத்தின் இந்தவிதமான நடவடிக்கைகள், எதிர்காலத்தில் அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழப்போகும் மக்களையும், அவர்கள் சார்பாகக் குரல் எழுப்பப்போகும் ஜனநாயக எதிரணிச் சக்திகளையும், பாசிச நடவடிக்கைகளின் மூலம் அடக்கியொடுக்கப் போவதற்கான முன்னேற்பாட்டு ஒத்திகையாகவே காட்சியளிக்கின்றன.
Source: Vaanavil 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...