நோர்வேக்கு மீண்டும் செங்கம்பள வரவேற்பு! – குரு


norway 1
“போன மச்சான் திரும்பி வந்தான் திரும்பி வந்தான் பூ மணத்தோடை” என்பது ஒரு தமிழ் சிலேடைத் தொடர். அது இப்போது நோர்வே நாட்டுக்கும் பொருந்தும் போல இருக்கின்றது.
இலங்கை இனப்பிரச்சினையில், குறிப்பாக அரசாங்கத்தும் புலிகளுக்கும் இடையில் சமாதானத் தரகு முயற்சிகளில் நோர்வேக்கும், அது நியமித்த ‘விசேட சமாதானத் தூதர்’ எரிக் சோல்கெய்ம்முக்கும் இருந்த ஈடுபாடு உலகப் பிரசித்தமானது. (இஸ்ரேல் – பாலஸ்தீன தரப்புகளுக்கிடையே நோர்வே சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு தோல்வியில் முடிந்த சம்பவம் இன்னொரு பிரசித்தமான வரலாறு)


சந்திரிக குமாரதுங்க ஆட்சிக்காலத்தில்தான், அவரால் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளில் நோர்வே உள் நுழைக்கப்பட்டது. பின்னர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியான பின்னரும் கூட நோர்வேயின் முயற்சி சில காலம் தொடர்ந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் நோர்வேயின் சமாதான முயற்சிகளில் சந்தேகப்பட்டோ (புலிகளுக்குச் சாதகமாகச் செயற்படுகிறது என), அல்லது நம்பிக்கை இழந்தோ, மகிந்த நோர்வேயை ஓரம்கட்டிவிட்டு, யுத்தத்தை உறுதியுடன் முன்னெடுத்து, புலிகளை அழித்து போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். நோர்வேயின் சமாதான முயற்சிகள் தொடர்ந்திருந்தால், புலிகள் அழிக்கப்படவோ, யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்படவோ இன்றுவரை முடிந்திருக்காது என்பது பலரின் அபிப்பிராயம்.

நோர்வேயின் சமாதான முயற்சிகளின் மீது இலங்கையர்கள் பலர் சந்தேகப்பட்டதற்கு பல காரணங்கள் இருந்தன. முக்கியமான காரணம், புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் உட்படப் பல நாடுகள் தடை செய்திருந்த போதிலும், நோர்வே இன்றுவரை அவ்வாறு செய்யவில்லை. இன்றும் புலிகளின் பல முக்கிய பிரமுகர்களின் சரணாலயமாக நோர்வேதான் இருக்கின்றது.
போர் முடிவுற்ற பின்னர், நோர்வேயின் பக்கச்சார்பு குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நோர்வே மீது பகிரங்கமாகவே குற்றச்சாட்டு சுமத்தியதும், அதற்கு எரிக் சோல்கெய்ம் பதிலளித்ததும் எல்லோரும் அறிந்த விடயம். அதைவிட, அண்மையில் லண்டனில் ஒரு நிகழ்வில் பேசிய எரிக் சோல்கெய்ம், “தமிழரின் உரிமைகளை சிங்களவர்கள் அன்பளிப்பாகத் தரமாட்டார்கள், போராடியே பெற வேண்டும்” எனக் கருத்துத் தெரிவித்ததாக. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ பத்திரிகை 2015 ஒக்ரோபர் 15இல் செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. அவர் அவ்வாறு பேசியிருந்தால், அது மிகவும் பாரதூரமான விடயமாகும். ஏனெனில், அக்கருத்தின் பொருள், புலிகள் தமிழர்களின் உரிமைகளைப் பெற ஆயுதம் ஏந்திப் போரிட்டது சரி என்பதாகும்.

இலங்கையில் 2015 ஜனவரி 8இல் மைத்திரிபால சிறிசேன தலைமையில் மேற்கத்தைய சார்பு அரசாங்கம் ஏற்பட்ட பின்னர், இலங்கையில் மீண்டும் சமாதான முயற்சிகளைத் தொடரும் தனது அவாவை சோல்கெய்ம் வெளிப்படுத்தினார். அதிலிருந்து நோர்வேஜியர்களுக்கு இலங்கை மீது உள்ள அபரிமிதமான ஈடுபாட்டைப் புரிந்து கொள்ள முடியும்.
இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான், தற்போதைய நோர்வே அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்ட் இலங்கைக்கு விஜயம் ஒன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தார். அவருக்கு இலங்கை அரசாங்கம் செங்கம்பள வரவேற்பு அளித்து மிகக் கௌரவமாக வரவேற்றுள்ளது. (வழமையாக அரச தலைவர்களுக்குத்தான் செங்கம்பள வரவேற்பு அளிப்பது வழமை) கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய நோர்வே வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் மைத்திரி – ரணில் அரசின் நடவடிக்கைகளைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.

பொதுவாக இலங்கை மீது மேற்கு நாடுகள் அதீத அக்கறை கொள்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. ஒன்று, இலங்கையின் மிகவும் செழிப்பான இயற்கை வளங்களாகும். 400 வருட காலனித்துவ ஆட்சியில் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என, இலங்கையைக் கைப்பற்றி ஆட்சி புரிந்த மேற்கு ஏகாதிபத்தியவாதிகள் இலங்கையின் வளங்களைச் சுரண்டி சூறையாடி ருசி கண்டிருக்கிறார்கள். அந்த ஆசை இன்றுவரை தொடர்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இரண்டாவது காரணம், உலகப் போக்குவரத்தின் கேந்திரமானதொரு அமைவிடத்தில் இலங்கை அமைந்திருப்பது. அதனால்தான், சீனாவுடன் பல்வேறு துறைகளில் போட்டியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்காவும், இந்தியாவும், அவர்களது கூட்டாளி நாடுகளும், முன்னைய மகிந்தவின் அரசு சீனாவுடன் நெருங்கிச் செல்வதை விரும்பாமல், அவருடைய அரசில் பிளவை ஏற்படுத்தி, இறுதியில் அவரைப் பதவியில் இருந்தும் அகற்றி, தமக்குச் சாதகமான தற்போதைய அரசைப் பதவிக்குக் கொண்டு வந்தன.

நோர்வேயைப் பொறுத்தவரையில், இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் என்ற விடயத்தை விட, அதன் அபரிமிதமான கடல் வளங்களிலேயே கண் வைத்துள்ளது. இலங்கையில் போர் ஆரம்பமாவதற்கு முன்னர், நோர்வே இலங்கையில் கடல்வளத்துறை சார்ந்த பல முயற்சிகளில் பெரும் முதலீடுகளைச் செய்திருந்தது. குறிப்பாக, வட பகுதிக் கடலில் மீன், இறால், நண்டு, கடல் அட்டை, சங்கு, சிப்பி என்பன அதிகமாக இருந்ததால், அங்கு நோர்வே பல தொழில்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வந்தது. காரைநகரில் அமைந்திருந்த வள்ளங்கள், வலைகள் தயாரிக்கும் நோர்வே முதலீட்டுடனான சீ நோர் நிறுவனமும், நாவற்குழியில் அமைந்திருந்த இறால் பதனிடும் அன்றூஸ் நிறுவனமும் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

நோர்வேயின் இலங்கை மீதான பொருளாதார ஈடுபாட்டை அண்மையில் அங்கு சென்ற அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரும் உறுதிப்படுத்தவிட்டுச் சென்றிருக்கிறார். அவர் அங்கு ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், “இலங்கை தற்போது மிக முக்கியமான மறுசீரமைப்புகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கையின் அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்வதில் சர்வதேச சமூகம் உங்களது அரசுடன் வலுவான ஒத்துழைப்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றது. இலங்கையுடனான நோர்வேயின் ஒத்துழைப்பைப் பொறுத்த வரையில், மீன்பிடித்துறையில் மீட்சி பெறுவதையும், அதன்பின்னர் நீரியல் வளங்கள் அபிவிருத்தியையுமே அவர்கள் எதிர்பார்க்கிறனர்”.

இங்கு அவர் இலங்கை மிக முக்கியமான மறுசீரமைப்புகளை என்று குறிப்பிடுவது, இதுவரை காலமும் இருந்து வந்த இலங்கையின் ஓரளவு சுயாதீனமான அரசியல், பொருளாதார நிலையை தற்போதைய வலதுசாரி அரசாங்கம் மேற்குலகு சார்பாக மாற்றுவதற்கு எடுத்துள்;ள முயற்சிகளையும், ‘சர்வதேச சமூகம்’ என அவர் குறிப்பிடுவது மேற்கத்தைய நாடுகளையே என்பதையும், ஒருவர் விளங்கிக் கொள்வதற்கு விசேடமான பாண்டித்தியம் எதுவும் தேவையில்லை.

Source: 

வானவில்  இதழ் 61 -

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...