"மாடுகள்" இபுனுஅஸ்மத்


........................
மாடு என்றாலே
எம்மைப் பற்றிப் பேசுவதாக
வாரிச் சுருட்டிக் கொண்டு
மாரடைத்துப் போகும்
மாடுகளைவிடக் கேடுகெட்ட
கூட்டங்களாக
மாறிப் போனோம்!

எனவே,
எம்மை வீழ்த்த
மாட்டையே கையில் எடுத்தால் போதுமென
எந்த
சோற்று மந்தைகளுக்கும் தெரியும்!


இது - அந்த
தலிபான்களுக்கும்
புக்காஹறாக்களுக்கும்
தெரியாமல் போனது
எமது சமூகத்தின் துரதிஸ்டம்!
தெரிந்திருந்தால்
கல்விக் கூடங்களில்
குண்டுகள் வைக்காமல் -
மாட்டு மந்தைகளுக்கு மட்டும்
வேட்டு வைத்துக் கொண்டிருப்பார்கள்!
அப்பாவிகள் பலர்
தப்பித்திருப்பார்கள்!
ஆக
கல்வியில் எங்களை
வீழ்த்த வேண்டுமா?
அரசியலில் எங்களைப்
புறட்ட வேண்டுமா?
அடியோடு எங்களை
அழிக்க வேண்டுமா?
மாடுகளை வெட்டாமல்
வளர்க்கும்படி
சட்டம் கொண்டு வந்தாலே போதும்
உள உடல் ரீதியில்
சூம்பிப் போய்
கபுருக்குள் சீக்கிரமே
கால்களை நீட்டி விடுவோம்
என்பதை
பேரினவாதம் புரிந்து வைத்திருக்கிறது!
படிக்காதே என்றாலும்
பொறுத்துக் கொள்கிறோம்! மாட்டைக்
கடிக்காதே என்றதும்
வெறுத்துப் போகிறோம்!
ஆக - நாங்கள்
மாட்டு இலக்கணத்தின்
மரபுக் கவிதைகளாகிப் போனோமென்று
அவர்கள்
சீர், தலை, தொடை என
தொடர்ந்தும்
அசை போட்டுக் கொண்டே
கொம்பு சீவிக்கொண்டிருக்கிறார்கள்!
காடு வெட்டத் தடையில்லை
என்றாலும்
மாடு வெட்டத் தடை என்பதால்
நாம்
மலடுகளாகிப் போவோம் என
வேதம் ஓதிக் கொண்டிருக்கிறார்கள்!
எனவே
தமிழன் என்றால்
நாடில்லை என்றும்
முஸ்லிம்கள் என்றால்
மாடில்லை என்றும் கூறினால்
பேரினவாத வாக்குகளில்
தேர்தல்களைக் கொண்டாடலாம் என்பது
அவர்களது அரசியல்!
நாமும் அப்படியே
மிருக வழி சென்று
கால்நடைகளாகிப் போகிறோம் என்பதே
காலத்தின் காயமாக வளர்கிறது!
காலை எழுந்ததும் குதிரை - மூன்று
வேளை வந்ததும் மாடு - தேர்தல்
ஓலை வந்ததும் யானை எனப்
பழக்கப்படுத்திக் கொண்டோம்!
இதுவே அவர்களுக்கு
வேதமாகிப் போனது!
புதுக் கடைகளைத் திறந்தாலும்
மதுக் கடைகளாகத் திறப்;போருக்கு
மாடுகள் பற்றி அக்கறை வருவது
மாற்றம்தான்!
உண்மையான மாற்றம்தான்!
போகப் போக
மனிதர்களைவிட
மாடுகளுக்கே மரியாதை அதிகம்!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுத் தடை! -
இலங்கையில் மாடு வெட்டுக்குத் தடை!
இரண்டு கால் மாடுகளின் அரசியல்
நான்கு கால் மாடுகளுக்குத் தெரியாது!
தெரிய வந்தால் -
நான்கு கால் மாடுகள் அரசியலில்
இரண்டு கால் மாடுகள் நடுத்தெருவில்!

ஆக -
மாடு வெறும் குறியீடு மாத்திரமே!
வெட்டுவதும் - வெட்டாததும் பதிலீடு அல்ல!
மாடு என்றால் குழம்பத் தேவையில்லை!
ஏனெனில் நாம்
மாடுகளல்ல!
இனவாத எருமைகள் நனையும் போது
நாம் குடை பிடிப்பதா?
நாடு பற்றி கவலைப்படாதோர்
மாடு பற்றி கவலைப்படுவதால்
பன்றிகள் அதிகரித்துவிட்டதாகவே அர்த்தம்!
இதில்
காட்டுப் பன்றிகள் என்ன...
நாட்டுப் பன்றிகள் என்ன...
மாடுகள் இருக்கும் வரை நாட்டில்
தேர்தல்கள் வரும்!
தேர்தல்கள் வரும்போதேல்லாம்
மாடுகளும் வரும்!
மாடுகள் இல்லையே என்ற
கவலை வேண்டாம்!
முட்டுவோர் முட்டட்டும்!
வெட்டுவோர் வெட்டட்டும்!
(வகவத்தின் 23/01/2016 பௌர்ணமி கவியரங்கில் இபுனுஅஸ்மத்
Ibnu Asumath
பாடிய கவிதை)

மூலம் :இபுனு அஸ்மத் தின் முகப் புத்தகத்திலிருந்து 

No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...