Friday, 1 January 2016

21ம் நூற்றாண்டின் இடதுசாரிகள் மற்றொரு கதவின் வழியாக வரலாற்றுக்குள் நுழைவார்கள். டி.ஈ.டபிள்யு குணசேகரா


Dew-Gunasekara
முன்னாள் அமைச்சரும், ‘கோப்பின்’ (அரச நிறுவனங்களுக்கான குழு) தலைவரும் மற்றும் ஸ்ரீலங்கா கம்யுனிஸ்ட் கட்சியின் செயலாளருமான டி.ஈ.டபிள்யு குணசேகராவின் சமீபத்தைய இந்திய விஜயம் குறித்தும் ‘கோப்பின’; எதிர் காலம் குறித்தும் டெய்லி மிரர் அவரிடம் நேர்காணல் நடத்தியது. அவரது நேர்காணலின் சில பகுதிகள்.
கேள்வி: கம்யுனிஸ்ட் கட்சிகளின் ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நீங்கள் இந்தியா சென்றிருந்ததாக நாங்கள் அறிந்தோம். அதன் விளைவுகள் என்ன?
ஆம், இந்தியன் கம்யுனிஸ்ட் கட்சி(சி.பி.ஐ)யினால், இந்தியாவின் கம்யுனிச இயக்கத்தின் அர்ப்பணிப்பான 90-வது வருட நினைவினையொட்டி நடத்தப்பட்ட மாநாட்டில் பங்கு பெறுவதற்கு நான் அழைக்கப்பட்டேன். மேலும் டபிள்யு.சி.பி.ஐ இன் பொதுச் செயலர் தோழர் சுதாகர் ரெட்டியின் ஒரு தனிப்பட்ட அழைப்பும் எனக்காக விடுக்கப்பட்டிருந்தது. ஆகவே அவரது வேண்டுகோளுக்கு நான் பதிலளிக்க கடமைப் பட்டிருந்தேன்.

  • கேள்வி: சி.பி.ஐ மட்டுமா?
இல்லை, உண்மையில் அது ஆசிய கம்யுனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் மற்றும் சி.பி.ஐ என்பனவற்றின் மாநாடு. இந்தியாவிலுள்ள அனைத்து இடதுசாரி கட்சிகளும் மற்றும் மேற்கு ஆசியா, சீனாவிலுள்ள ஆளும் கட்சிகள், வியட்நாம் மற்றும் நேபாளம் என்பனவற்றைத் தவிர ஆசியாவின் அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள இடதுசாரி கட்சிகளும் அதற்கு சமூகமளித்திருந்தன. ஆசியாவிலுள்ள சில தடை செய்யப்பட்ட அல்லது சட்டவிரோதமான கம்யுனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்புகள் விடுக்கப் படவில்லை.
  • கேள்வி: தற்கால அரசியல் கண்ணோட்டத்தில் அதன் முக்கியத்துவம் என்ன?
கோட்பாடு மற்றும் அதேபோல அதை நடைமுறைப்படுத்தும் விடயம் என்பனதான் முக்கியமானவை. கோட்பாட்டின்படி, விவாதிக்கப்பட்ட பொதுவான உலக அபிவிருத்தியின் தற்போதைய உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சனைகளின் முழு வீச்சும் சவாலுக்கு உரியதாகவே இருந்தன. உதாரணமாக தற்போதைய நவ – தாராளத்துவ வாதத்தின் அலைகள் மற்றும் உலக சமுதாயத்தின் மீதான அதன் தாக்கம் என்பன.
நடைமுறைப்படி தற்போதைய உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகளின் வீச்சு, சர்வதேச பயங்கரவாதம், பிராந்திய மற்றும் இன அடிப்படை வாதத்தின் போக்கு, தற்போது நடைபெற்றுவரும் உலகளாவிய நிதி நெருக்கடி, பொருளாதாரத்தின் உருகுநிலை, மற்றும் அது தொடர்பான ஏனைய விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. மேற்காசிய மற்றும் அரபு உலகம் என்பன கொந்தளிப்பாக உள்ளன மற்றும்  உலக சமுதாயத்தின்மீது அதன் அழிவுக்குரிய விளைவுகள் அளவுக்கதிகமாக உள்ளன. குடியேற்றம் மற்றும் அகதிகள் போன்ற புதிய பிரச்சினைகளும் ஐரோப்பாக் கண்டத்தின்மீது அதன் தாக்கமும்தான் இரண்டுநாள் கருத்தரங்கில் ஆலோசிக்கப்பட்ட மையப்பிரச்சினைகளாக இருந்தன.
  • கேள்வி: அவை ஸ்ரீலங்காவுக்கு எவ்வளது தூரம் தொடர்புடையனவாக இருந்தன?
முதலாவதாக, நாங்கள் அனைவரும் சர்வதேசியவாதிகளே. ஆகவே இந்தப் பிரச்சினைகள் உலக சமுதாயத்தை தாக்கம் செலுத்துவதைப்பற்றி நாங்கள் கவனம் செலுத்தினோம். இரண்டாவதாக தவிர்க்கமுடியாதபடி அவை ஸ்ரீலங்கா மீதும் ஒரு தாக்கத்தைக் கொண்டிருந்தன. உதாரணமாக காலநிலை மாற்றம்,சர்வதேச பயங்கரவாதம், சமய மற்றும் அடிப்படைவாத போக்குகள் ஏற்கனவே ஸ்ரீலங்காமீது ஒரு தாக்கத்தை செலுத்தியுள்ளன. எவ்வாறு எண்ணெய் விலைகள் சடுதியாக கீழ்நோக்கி சரிகிறது? 2001 செப்ரம்பர் 11ல் புஷ் அவரது பயங்கரவாதத்தின் மீதான போர் என்கிற தனது விருப்பத்தை ஆர்வமாக அறிவித்தாரோ அந்த நாளில் இருந்து எண்ணெய் விலைகள் வேகமாகவும் மற்றும் தீவிரமாகவும் மாற்றமடையத் தொடங்கின. அது பரலுக்கு 110 டொலரில் இருந்து 37 டொலர் வரை சரிவடைந்தது. அமெரிக்காவின் இந்த அதிரடி தீர்மானத்துக்கு பின்னால் இருந்த இலக்கு ரஷ்யா, மற்றும் எண்ணெய் உற்பத்தி நாடுகளான லத்தீன் அமெரிக்கா மற்றும் ஈரான் என்பன. ஏற்கனவே ஆர்ஜன்ரீனா, பிரேசில் மற்றும் செனிசுவெலா போன்ற நாடுகள் பிரச்சனைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தன. இப்போது உலக நாணய நிதியம் (ஐ.எம்.எப்) வரப்போகும் ஒரு நிதி நெருக்கடி பற்றி சவுதி அரேபியாவை எச்சரித்துள்ளது.
ஆப்கானிஸ்தான், ஈராக், யேமன், லிபியர் மற்றும் சிரியா போன்றவை உயிர் இழப்புகள் விடயத்தில் மட்டுமன்றி அவற்றின் பொருளாதாரத்திலும் கூட முடக்கப்பட்டோ அல்லது அழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அவற்றின் ஒட்டுமொத்த விளைவும், உலகளாவிய முதலீட்டு ஓட்டம்(எப்.டி.ஐ) மற்றும் உலக வர்த்தகம் என்பனவற்றில் உலக பொருளாதார வளர்ச்சியை குறைவடையச் செய்துள்ளன. 2008 – 2013 பொருளாதார மந்த நிலை அளவிட முடியாத எதிர்மறையான முன்னேற்றத்துடன் மீண்டும் திரும்பியுள்ளது. நிச்சயமாக எண்ணெய் விலைகளின் சரிவு  ஐதேக - ஸ்ரீ.ல.சு.க அரசாங்கத்துக்கு ஒரு எதிர்பார்க்காத அதிர்ஷ்டம். ஏனைய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் செலவில் நாங்கள் ஒரு குறுகிய கால நன்மையை பெற்றுள்ளோம். அதேவேளை எங்கள் பொருளாதாரம் உலக எண்ணெய் சந்தையில் ஒரு மேல்நோக்கிய போக்கில் இந்தக் கட்டத்தில் இருந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள், நிச்சயமாக நாங்கள் ஒரு மூன்று கட்ட நெருக்கடி நிலையில் இருந்திருப்போம் - அரசாங்க வருவாய், பணப் பரிமாற்றம் மற்றும் கடன் என்பனவற்றில் தாக்கங்கள் இப்போதே அனுபவப்பட்டுள்ளன.
  • கேள்வி: இந்தோ - ஸ்ரீலங்கா உறவுகள் போன்ற அரசாங்கங்களுக்கு இடையோன தொடர்புகள் பற்றி நீங்கள் கவனம் செலுத்தவில்லையா?
குறிப்பாக இல்லை. வியட்நாம் மற்றும் சீனா என்பனவற்றுக்கு இடையே உள்ள உறவில் தென் சீனக் கடல் பிரச்சினை தொடர்பாக நாங்கள் பொதுவாக விவாதித்தோம். சீனா மற்றும் வியட்நாம் என்பனவற்றில் உள்ள இரண்டு சகோதரத்துவ கட்சிகளிடம், ஆசியாவில் சமாதானமும் ஸ்திரமும் தேவையாக உள்ள இந்தக் கட்டத்தில் அவர்களிடமுள்ள முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என அழுத்தங்களை மேற்கொண்டோம். பின்னர் நேபாளத்தின் புதிய கம்யுனிஸ்ட் நிருவாகம் நேபாளம் மற்றும் இந்தியா இடையே உள்ள உறவு தொடர்பான சில குழப்பமான பிரச்சினைகளில் முரண்பட்டு நிற்கிறது. இந்தியாவின் இடதுசாரி அமைப்புகள் எடுத்துள்ள சில முயற்சிகள் இதிலும் மற்றும் இந்தோ – பாகிஸ்தான் உறவுகள், இந்தோ – பங்களாதேஷ் உறவுகள், பங்களாதேஷ் - பாகிஸ்தான் உறவுகளிலும் கூட சாதகமான சில விளைவுகளை உருவாக்கியுள்ளன. இந்தப் பிரச்சினைகள்தான் அரசாங்கங்கள் இடையேயான உறவுகள் தொடர்பாக நாங்கள் ஆழமாக கருத்தில் எடுத்துக்கொண்டவை. பதற்றம் தீவிரமடைவதற்கு சாதகமான காரணங்களை நாங்கள் ஆராய்ந்தோம். ஸ்ரீலங்கா - இந்தியா உறவுகளைப் பொறுத்தமட்டில் அவை மிகவும் சிறப்பாகவும் மற்றும் ஆழமாகவும் உள்ளன.
  • கேள்வி: ஸ்ரீலங்கா இடதுசாரி இயக்கங்களுக்கு ஏதாவது செய்திகள்?
ஆம். இடதுசாரி அமைப்புகளிடையே அதிக ஒற்றுமை தேவை என்பதுதான் செய்தி. இந்தியாவில் இன்று அனைத்து இடதுசாரி அமைப்புகளும் அவர்களது சித்தாந்த வேற்றுமைகளைக் களைந்துவிட்டு ஒற்றுமை மற்றும் ஐக்கியத்தை கட்டியெழுப்பும் செயல்முறையில் உள்ளன. பிகாரில் அவர்கள் பரிசோதனையை முயற்சித்தார்கள். மார்க்கசிட் கம்யுனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்த கம்யுனிஸ்ட் கட்சி அனைத்து இடதுசாரிகளையும் ஒன்றுதிரட்டி போட்டியிட்டு மூன்று ஆசனங்களில் வெற்றி பெற்றுள்ளது, ஸ்ரீலங்காவிலுள்ளதை போலன்றி இந்திய தொழிற்சங்கங்களிடையே அதிக ஒற்றுமை உள்ளது. இதுதான் ஜனரஞ்சக மோடியின் அரசியல் தாக்குதலுக்கான நேருக்கு நேரான பதிலடி. வெளிப்புறமான தோல்விகள் மற்றும் பின்னடைவுகள் நீண்ட போராட்டத்தில் கடந்து செல்லும் கட்டங்கள். சந்தேகமின்றி ஐரோப்பாவில் சோசலிசத்தின் வீழ்ச்சி அனைத்து இடதுசாரி,முற்போக்கு மற்றும் தீவிரமான இயக்கங்களை நேரடியாகப் பாதித்துள்ளன. 21ம் நூற்றாண்டின் இடதுசாரிகள் மற்றொரு கதவின் வழியாக வரலாற்றுக்குள் நுழைவார்கள். அரசியல் பொருளாதாரம் ஒரு தீர்க்கமான காரணியாக இருக்கும். இலக்குக்கான புற நிலைக் காரணிகளின் நிலமை சரியானதும் அகநிலை காரணிகள்(இயக்கம்) திரும்பவும் மேல் நிலைக்கு வரும். எனது கண்ணோட்டத்தில், முன்னேறி வரும் உலகத்தில் ஒரு நல்ல காலநிலை உருவாக்கப்பட்டு வருகிறது. உலக யதார்த்தங்களை  நீங்கள் புரிந்துகொண்டால் சித்தாந்த வேற்றுமைகள் மறைந்து விடும்.
  • கேள்வி: அரசியலுக்கு அப்பால் வெளியேறும் தலைவர் என்கிற வகையில் புதிய ‘கோப்’ பற்றிய உங்கள் கருத்து என்ன?
ஹந்துநெத்தி தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ‘கோப்பா’விற்கு( பொதுக் கணக்கு குழு) புதிய தலைவராக லசந்த அழகியவன்ன தெரிவாகியிருப்பதும் அதற்குச் சமமான மகிழ்வினைத் தருகிறது. இருவருமே என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அந்தப் பதவிகளுக்கு பொருத்தமான ஏராளமான தகுதிகளைக் கொண்டவர்கள். உண்மையில் நான் ஜே.வி.பியின் பொதுச்செயலாளரை ஹந்துநெத்தியுடன் சந்தித்தபோது எதிர்;தரப்பின் தலைமைப் பொறுப்பை கைப்பற்றுமாறு அவர்களைத் தூண்டினேன். எனது தெரிவு ஹந்துநெத்தி.
  • கேள்வி: உங்களின் பதவிக்கு வந்துள்ளவருக்கு ஏதாவது ஆலோசனைகள்?
அவர்களுக்கு ஆலோசனையோ வழிகாட்டல்களோ தேவையில்லை. அவர்களிடம் நான் கேட்டுக் கொள்வது, நான் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து செல்லும்படி. எனது ஒரே அறிவுரை இரண்டு தலைவர்களும் ‘கோப்’ மற்றும்’ ’கோப்பா’ வினை அரசியல்மயமாக்குவதிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்பது. நீதிபதிகளைப் போல செயற்படுங்கள் எந்தப் பகுதியில் இருந்து அழுத்தம் வந்தாலும் எதிர்த்து நில்லுங்கள் அரசாங்க அதிகாரிகளிடம் நியாயமாக நடவுங்கள் மற்றும் அமைச்சர்கள் கோப் கூட்டங்களில் தங்கள் அதிகாரிகளை பாதுகாக்க அனுமதிக்காதீர்கள். என்னுடைய பதவிக் காலத்தின்போது மூன்று அமைச்சர்களை (அனைவரும் ‘கோப்பின்’அங்கத்தவர்கள்) நான் எச்சரிக்கை செய்யவேண்டி இருந்தது. 31 வருடங்களாக (1979 – 2010) குவிந்து கிடந்தவைகளை நான் சுத்தமாக்கினேன்.
“நிலையியற் கட்டளைகளை மாற்றி அமையுங்கள். இந்த ஒரு விடயம்தான் நான் நடைமுறைப் படுத்த தவறியது, நிலையியல் கட்டளைகளில் மாற்றங்கள் வருவதை சிலர் எதிர்க்க முயற்சிக்கிறார்கள் என்று அவர்களை நான் எச்சரித்தேன். எனினும் இறுதியாக இதை நடைமுறைப்படுத்துவது நிறைவேற்று அதிகாரம் கொண்டவரிடமே தங்கியுள்ளது. இந்த செயல்படுத்தல் கண்ணோட்டத்துக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்டவரால் தடை ஏற்படுத்த முடியும். காலநிலை மாற்றம், சர்வதேச பயங்கரவாதம், சமய மற்றும் அடிப்படைவாத போக்குகள் என்பன ஏற்கனவே ஸ்ரீலங்காமீது ஒரு தாக்கத்தை செலுத்தியுள்ளன”
  • கேள்வி: மத்திய வங்கியின் பிணை முறி பிரச்சினை பற்றிய உங்கள் அறிக்கைக்கு என்ன நடந்தது?
குறைவாகப் பேசுவதுதான் நல்லது. அதைப்பற்றி கருத்துக்கூற நான் விரும்பவில்லை, அது குமட்டலை ஏற்படுத்துகிறது. புதிய தலைவர் அதைக் கையாளட்டும். பாராளுமன்றம் கலைக்கப் படுவதுக்கு முன்பே எனது அறிக்கை வெளியாகி இருக்கும். உண்மையில் என்ன நடந்தது என்று புதிய தலைவருக்கு தெரியும், அந்த நாளில் சமூகமளிக்காத மூன்று அங்கத்தவர்களும் வருகை தந்திருந்தால் அந்த அறிக்கை பாராளுன்றக் கலைப்புக்கு முன்பே சமர்ப்பிக்கப் பட்டிருக்கும். ஆகவே முடிவில் நீதிபதியே குற்றவாளியாக மாறியதுதான் விளைவாக இருந்தது. பாராளுமன்றத்தின் நாணயத்தை காப்பற்றுவதற்காக நான் ஊமையானேன்.
‘கோப்’முன்பாக சாட்சியமளிக்க தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று பிரதமர் என்மீது குற்றம் சுமத்தினார். அமைச்சர்களுக்கு அழைப்பு அனுப்புவதற்கு நிலையியல் கட்டளைகள் ‘கோப்’ இற்கு அனுமதி வழங்கவில்லை. நிலையியற் கட்டளைகளை மாற்றியபின் பிரதமருக்கு அழைப்பாணை அனுப்புங்கள். அமைச்சர்களுக்கு அழைப்பாணை அனுப்ப இயலுமான விதத்தில் நிலையியற் கட்டளைகளை மாற்றியமைப்பதற்கு அவர் சம்மதிக்கிறாரா என்று பார்ப்போம். கொள்கையளவில் அந்த நிலைப்பாட்டை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ‘கோப்’ பாராளுமன்றத்தின் ஒரு அங்கம்.அமைச்சர்கள் அழைக்கப்பட்டால் ‘கோப்’ முற்றாக அரசியல் மயமாக்கப்பட்டுவிடும். பிரதமரை சபையில் வைத்து கேள்வி கேட்கலாம். அதனால்தான் நான் பிரதமரை அழைப்பதற்கு விரும்பவில்லை. பாராளுமன்றக் கலைப்புக்கு முன்னதாக அவர் ஒரு அரசியல் விளையாட்டை நடத்தியிருந்தார் – ஒரு அரசியல் ஏமாற்றுவித்தை.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார் Source: http://www.thenee.com/010116/010116-1/010116-1.html

No comments:

Post a Comment

UK media, MPs unveil latest Assange deception

≡ Menu UK media, MPs unveil latest Assange deception 13 April 2019 In my last blog post, I  warned  that the media and p...