“கருணாவினால் அல்ல”


எஸ்.எம்.எம்.பஷீர்

"அமைதியான புரட்சியை சாத்தியமற்றதாக ஆக்குபவர்கள், வன்முறையான புரட்சியை தவிர்க்கமுடியாததாக ஆக்குகிறார்கள் "                  ( ஜான். எப் . கென்னடி )  
இலங்கை தமிழ் அரசியலில் தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பின் உருவாக்கம், அதன் அங்கத்தவர்கள் , நோக்கம் குறித்த சர்ச்சைகள் சூடு பிடித்துள்ளன. அதுவும் இலங்கை அரசும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரப் பரவலாக்கம் குறித்து சமிக்ஞைகளை காட்டியுள்ள நேரத்தில் , தமிழ் மக்களின் "ஏகபோக " பிரதிநிதிகள் எனப்படும் தமிழர் கூட்டமைப்பு ஒரு புதிய சவாலை எதிர்கொண்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

தமிழர் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்த கூட்டணிக் கட்சிகளின் தலைமைப் பிரதிநிதிகள் , (சித்தார்த்தன் , சுரேஷ் பிரேமச்சந்திரன்) கூட்டமைப்பின் மாகாண சபை பிரதிநிதிகள் சிலர் தமிழர் பேரவையை தங்களின் கூட்டமைப்பினுடனான அங்கத்துவங்களை விட்டும் வெளியேறாமல் தமிழர் பேரவையில் அங்கத்துவம் வகிக்கின்றனர். ஏதோ ஒரு விதத்தில்  அக புற சவால்களை தமிழர் கூட்டமைப்பு எதிர் கொண்டுள்ளது.
இந்த அமைப்பின் இணைத்  தலைவராக செயற்படும் விக்னேஸ்வரன் தமிழர் கூட்டமைப்பின் முதலமைச்சர் என்றாலும் , அவர் கூட்டமைப்பில் உள்ள  எந்தக் கட்சியினதும் அங்கத்தவர் அல்ல என்பதும் , அவர் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்தால் வட மாகாண சபையில் போட்டியிட தெரிவு செய்யப்பட்டவர். போட்டியிட்டு மாகாண சபையின்  முதலமைச்சர்  ஆனவர்.

தேர்தல் காலங்களில் பிரபாகரனை ஒரு மாபெரும் தேசிய வீரனாக போற்றிப் புகழ்ந்தவர் ,பிரபாகரனின் நாமத்தை உச்சரித்து புளகாங்கிதம் அடைந்தவர். 

பதவிக்கு வந்த பின்னர் "நாமார்க்கும் குடியல்லோம் " என்ற விதத்தில் செயற்பட்டவர். பதவிப்  பிரமாணம் எடுக்க மஹிந்தவிடம் செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தவர்.பின்னர் சம்பந்தனாரின் அதிகாரப் பிரயோகத்தில் மஹிந்தரிடமே பதவிப் பிரமாணம் செய்தவர்.

தமிழ் மக்கள் பேரவையினைப் பற்றி மிக ஆழமான விமர்சனங்கள், விளக்கங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.விமர்சனங்கள்  ஆரோக்கியமானதாகவோ ,அங்கதமாகவோ இருக்கலாம்.இந்தக் கட்டுரையின் நோக்கம் தமிழ் மக்கள் பேரவையினைப் பற்றி பலரும் எழுதிய விவகாரங்களை , விஸ்தரிப்பதோ , விமர்சனம் செய்வதோ , விளக்குவதோ   அல்ல !
தமிழர் விடுதலைக் கூட்டணி அமைத்து , தனிநாடு பிரகடனப்படுத்தி இரத்தத் திலகம் இட்டு ஆயதப் போராட்டத்துக்கு வழிகாட்டிய காலம் ஒன்றிருந்தது.

பின்னர் அதுவே ஆயதப் போராட்டத்துக்கு வழிகாட்டிய தலைவர்களின் தலைகளை உருட்டியது.
தமிழர் கூட்டணி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின்னர் பெற்ற தனி நாட்டு மக்கள் ஆணையைக் கைவிட்டு சென்றதையும் , அதற்காக ஆயுதம் தரித்த இளைஞர்கள் அந்தக் கோரிக்கையை -ஆணையைக் - கையில் எடுத்ததையும் இப்போதைய நிகழ்வுகள் ஞாபகமூட்டுகின்றன.

ஆனால் ஆயதப் போராட்டம் ஒன்று மீண்டும் எத்தகைய தீர்வையும் பொருட்படுத்தாது தனி நாட்டுக்காக போராடப் புறப்படுமா என்பது நடைமுறையில் சாத்தியமாகத் தெரியவில்லை ! மாறாக தமிழர் தரப்பில் இணக்கமான தீர்வுகள் எட்டப்படுவதில் பல சங்கடங்களை இவர்கள் உருவாக்க முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
அந்தப் பாடம் மிக நன்றாகவே தமிழ் மிதவாதத் தலைவர்களால் உணரப்பட்டுள்ளது. அதன் மாற்றங்களை மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளார்கள்.
மீண்டும் முன்னாள் போராளிகள் கூட்டமைத்து தேர்தல் களத்தில் போராடுவதை  கூட மக்கள் நிராகரித்து விட்டார்கள். அதுபோலவே அதி தீவிர பிரிவினை , சிங்கள விரோத கோட்பாடுகளைக் கொண்ட ஏனைய தமிழ் தரப்பினரும் தேர்தல் களத்தில் தோல்வியையே தழுவி வருகிறார்கள்.   

ஆனாலும் விக்னேஸ்வரன்  தான் அதிக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றமைக்கு மறைந்த "மாவீரன் " பிரபாகரனும் ஒரு காரணம் என்று நம்புகிறார். மொத்தத்தில் அதி தீவிர தமிழ் அரசியல் நிலைப்பாடுகளை தம்மால் எடுக்க  முடியும் , அதற்கான தீவிர தமிழ் மக்கள் அணியொன்று வடக்கு கிழக்கிலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ளது என்று அவர் நம்புகிறார் போலும் ! போதக் குறைக்கு தீவிர இனவாதம் பேசும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் வேறு அவருக்கு நம்பிக்கை ஊட்டுகின்றன.
வளர்த்த கடா மார்பில் பாய்ந்த  கதையாய் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வீறு கொண்டு எழுந்திருக்கிறார், தன்னை வளர்த்துப்  போஷித்த  சம்பந்தன் அணியை முட்டத் துணிந்துள்ளார்.   தமிழ் மக்கள் , இது எங்கு போய் முடியுமோ என்று ஆதங்கத்துடன் காத்திருக்கிறார்கள்  !
தமிழ் மக்களுக்கான அரசியல்  தீர்வில் உச்ச பட்ச தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பதில் தமிழர் தேசியக் கூட்டமைப்பு (சம்பந்தன் தலைமை) தமிழர்களை ஏமாற்றப் போகிறது , தமிழர் கூட்டமைப்பு வட மாகாண சபைத் தேர்தலில் வெளியிட்ட ,அம்மக்களின் ஆணை பெற்ற தீர்வினைப் பெற முயற்சிக்கவில்லை என்பதே தமிழ் பேரவையின் பிரதான நோக்கம்.
முன்னாள் சட்டமா அதிபரும், பின்னாளில் புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ,குறிப்பாக இடைக்கால தன்னாட்சி வரைபுகளில் தனது கைவரிசையைக்  காட்டிய சிவா பசுபதி இந்தப் பேரவைக் கூட்டில் இணைய விரும்பவில்லை என்றும் , அதற்கான  விக்னேஸ்வரனின் அழைப்பை நிராகரித்துவிட்டதாக செய்திகள் சொல்கின்றன. சிவா பசுபதி புலிகளுக்கு சமாதான காலத்தில் தனது துறைசார் நிபுணத்துவத்தை வழங்கப் போய், அல்லற்பட்டவர். அதனால் மீண்டும் ஒரு தொந்தரவுக்குள் தன்னை ஆட்படுத்த விரும்பியிருக்க மாட்டார் என எண்ணத் தோன்றுகிறது.

இதற்குள் தான் முன்னாள் புலிகளின் தளபதியும் , சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் ,தற்பொழுது எந்த கட்சியிலும் அங்கத்துவம் வகிக்காத  கருணாவும் , தன்னையும் மக்கள் பேரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. அந்த வேண்டுகோளுக்கு விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.
" கருணா, டக்ளஸ் ஆகியோரின் ஒத்துழைப்பு தமிழ் மக்கள் பேரவைக்குக் கிடைத்தால் நல்லதாக இருக்கும். ஆனால் தமிழ் மக்கள் பேரவைக்கு என்று ஒரு கொள்கை உள்ளது. அதில் நாம் சற்றும் நெகிழ்வுத் தன்மை காட்டோம்." என்று விக்னேஸ்வரன் சொன்னலும் ,இவ்விருவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என்பதன் மூலம் தனது முன்னாள் எதிரிகளையும் தமது பேரவையின் நோக்கத்தை அங்கீகரிப்பவர்களாக ஏற்றுக் கொள்வதில் கூட்டமைப்பின் எதிரிகள் எனக்கு நண்பர்கள் என்று ஒரு அரசியலை தமிழ் மக்களின் பெயரால் செய்ய விழைகிறார் விக்னேஸ்வரன்.
இந்தப் பதிலைக் கண்டதும் கேட்டதும் "விரைவில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் விக்னேஸ்வரனை நேரில் சந்தித்து பேசி உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ள உள்ளேன். மேலும் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்துகொள்வது பற்றி பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். அவரும் சாதகமான பதிலை வழங்கியுள்ளார் " என்று பத்திரிக்கைகளுக்கு கருணா தெரிவித்துள்ளார்.
சங்கரியும் , தமிழர் பேரவை ஒரு அரசியல் கட்சியாக கட்டமைக்கப்பட வேண்டும் என்று ஆசீர்வாதம்  வழங்கி உள்ளார்.
தமிழ் பேரவை ஒரு அரசியல் கட்சி அல்ல , அரசியல் கட்சியாக செயற்படும் எண்ணமும் எமக்கு இல்லை என்கிறார்கள் கட்சியை அமைத்தவர்கள். ஆனால் தீவிர தமிழ் தேசியவாதிகள் தமது  ஆசீர்வாதங்களை  அள்ளிச் சொரிகின்றனர்.  
அண்மையில் ஆளுக்கு ஆள் முதுகு சொரியும் அரசியலில் கருணா  சங்கரி  ஆகியோர் பற்றி விக்னேஸ்வரன் என்ன அபிப்பிராயம் கொண்டிருந்தார் என்பதும் இப்போதைக்கு  மீட்டிப்பார்க்க வேண்டிய தேவையை ஏற்படுத்தி உள்ளது.
இக் கட்டுரையாளர் விக்னேஸ்வரனை ஒரு தடவை சங்கரி பற்றி வினவிய பொழுது  புலிகளுக்கு எதிராக சங்கரி செயற்பட்டதை -தமிழ் மக்களின் போராட்டத்துக்கு எதிராகவே - செயற்படுவதாகவே அவர் கருதினார் என்பது அவரின் கருத்துக்களில் புலப்பட்டது.
சங்கரி சிங்கள அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகிறார் என்ற கருத்தை  விக்னேஸ்வரன்  கொண்டிருந்தார்.
அதுபோலவே கருணா விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்ததும் அவரை ஒரு துரோகியாகவே கண்டு , அவரின் துரோகத்தனம் தோற்கடிக்கப்படும் என்று கருத்தையும் ஒரு கூட்டத்தில் பகிரங்கமாக கருணாவின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடாது மிக நாசூக்காக குறிப்பிட்டிருந்தார். மொத்தத்தில் புலிகள் விட்டச் சென்ற தீவிரவாத தனிநாட்டுக் கோரிக்கை  , துரோகத்தனம் பற்றிய கருத்தியல்களை இவரும் அடியொற்றியே வந்துள்ளார்.

கருணா ,  நோர்வே முன்னெடுத்த  சமாதான  கால கட்டத்தில் விடாக்கண்டன் கொடக்கண்டனாக பிரபாகரன் இருக்கிறார். இனிமேல் யுத்தம் வேண்டாம் சமாதானமே வேண்டும் என்று தான் விரும்பியதாகவும் , கிழக்கு மாகாண "போராளிகள்"  மீது காட்டப்பட்ட ஓர வஞ்சனை தன்னைப் பாதித்ததாகவும் , அதனால் அவர் புலியில் இருந்து விலகுவதாகவும்  குறிப்பிட்டிருந்தார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் கருணாவின் பிரிவுடன் வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்தது.
வெளிநாட்டுப் பேச்சுவார்த்தைகள் முடங்கிய பொழுது கருணாவிற்கு கிழக்கில் தங்க அவகாசம் கிடைத்தது. கிழக்கில் உள்ள சக "போராளிகளுடன்"  பரஸ்பர ஆதங்கங்களை பகிர்ந்து கொள்ள , கலந்துரையாட வாய்ப்புக்கள் கிடைத்தன . 
  
கருணா தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தலைமையுடன் கருத்து வேறுபாடு கொண்டதும் வன்னிக்கு செல்வதற்கு அஞ்சினார் . எனினும் தமது முரண்பாடுகளுக்கான காரணத்தை ஒரு கடிதம் மூலம் பிரபாகரனுக்கு 02/03/2004இல் எழுதினார்.
அந்தக் கடிதத்தில் :- 
"இனிமேல் தென் தமிழீழ மக்களுக்கு கடமை செய்யவே நான் விரும்புகிறேன்.  
இதுவரை நடந்த போராட்டத்தில் 4550 மட்டக்களப்பு அம்பாறைப் போராளிகள் களத்தில் வீரச்சாவடைந்துள்ளார்கள் . இவர்களில் கிட்டத்தட்ட 2248 வீரர்கள் உங்கள் கட்டளையை ஏற்று வந்து யாழ் , வன்னி மண்ணில் வீரச்சாவடைந்துள்ளார்கள்.
குறைந்தது 30க்கு மேற்பட்ட தமிழீழத்துறைப்   பொறுப்பாளர்கள் இதுவரையில் உங்களால் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் எவருமே மட்டக்களப்பு அம்பாறையைச் சேர்ந்தவர்கள் கிடையாது .
இதைவிடப் பெரிய விடயம் நிலப்பிரதேசம் பற்றிய அறிவாகும் .இதுவும் தமிழீழத்துறைப் பொறுப்பாளர்களுக்கு அறவே தெரியாது. இவ்வாறு இருக்கும்போது இவர்களால் எவ்வாறு இங்கு நிர்வாகம் செய்ய முடியும் ? இதைவிட வேதனையான விடயம்   இவ்வளவு தமிழீழ நிர்வாகத்துறை பொறுப்பாளர்களும் கிளிநொச்சி நகரில் சொகுசு வாகனங்களில் உலாவரும்பொழுது 400ற்கும் மேற்பட்ட மட்டக்களப்பு அம்பாறையைச் சேர்ந்த ஜெயந்தன் படைப்  போராளிகள் பளை காவலரண்களிலே     சென்றி பார்க்கிறார்கள் .இது எந்த வகையில் நீதியாகும் ? “
இங்குள்ள வீரர்கள அங்கு வந்து மடிவதை அனுமதிக்கப் போவதில்லை என்று கருணா திட்டவட்டமாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் நடந்தவை யாவும் சரித்திரங்களாகி விட்டன .

காலங்கள் மாறின , இலங்கையில் "உள்நாட்டு யுத்தம்"  முடிவுக்கு வந்தது.!
உண்மையில் சமாதானப் பேச்சுவார்த்தலின் பொழுது கருணா தாய்லாந்து பிரான்ஸ் நோர்வே என்று பயணங்களை மேற்கொண்ட பொழுது , கிழக்கு தமிழ் மக்கள் , மொத்த தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் பேச்சுவார்த்தைகளில் கொண்டிருந்த மிக மிகக் குறைந்த வகிபாகம் கருணாவை பாதித்தது. 

யாழ் மேலாதிக்க சக்திகளின் ஆளுமைக்கு முன்பு தனி ஒருவனாக கருணாவால் ஈடு கொடுக்க முடியவில்ல. தான் கறிவேப்பிலையாக கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருப்பதை கருணா உணர்ந்திருக்க வேண்டும். யாழ் மேலாதிக்க சக்திகள் பேச்சுவார்த்தைகளில் சுப தமிழ்செல்வனை உள்வாங்கி இராவிட்டால் , தமிழ் சாதி ஆதிக்க சக்திகளின்  சமாதான பேச்சுவார்த்தையாகவே அவை அமைந்திருக்கும். தமிழ் மேட்டுக் குடியினர் தம்மிலும் குறைந்த தரத்தில் உள்ள பிரபாகரனை தமது தலைவனாக அங்கீகரித்திருந்தாலும்  ,அவற்றின் பின்னணியில் பரந்துபட்ட தமது ஆதிக்க சுயநலம் உள்ளடங்கி இருந்தது.எது எப்படியோ , கருணா மட்டக்களப்பை சேர்ந்த சிலரை பிரான்சில் சந்தித்த பொழுதும் ,தொடர்ந்த யுத்தத்தால் பல கிழக்கின் சிறுவர்களை பலியிட்டு , வட மாகாண மேல்தட்டு வர்க்கம் வெளி நாடுகளில் பயன் பெற்றிருப்பதை கருணா கண்டார். பேச்சுவார்த்தைகளில் கூட கருணாவால்   சமதரத்தில் ஈடு கொடுக்க முடியில்லை , அதற்கான சந்தர்ப்பங்களும் அவருக்கு வழங்கப்படவில்லை.  கிழக்கில் தன்னால் இயக்கத்தில் இணைக்கப்பட்ட சிறார்களின் உயிர்பலிக்கு தானும் ஒரு காரணம் என்ற ஒரு குற்ற உணர்வு கருணாவை ஆட் கொண்டது . இந்த உண்மைகளை  இன்றுவரை கருணா வெளிப்படையாகச் சொல்லவில்லை.

அடிக்கடி இப்பொழுது கருணா அரசியலில் அடிக்கடி பல்டி அடித்து வருகிறார். அதற்கு  காரணம்
அரசியலில் அவர் ஆட்சி அதிகார அனுகூலங்களை அனுபவித்திருந்தார். அவை யாவும் பறிக்கப்பட்டுவிட்டன.
ஆட்சி மாற்றம் அவரையும் அனாதையாக்கி விட்டது. !
நாங்கள்தான் கருணாவை புலியிருந்து பிரித்தோம் என்று சொல்லும் ஐக்கிய தேசியக் கட்சியினர்  கூட கருணாவை கண்டு கொள்ள விரும்பவில்லை. அவர்களுடன் கூட்டரசு செய்யும் சுதந்திரக் கட்சியையும் கண்டு கொள்ள அனுமதிக்கவில்லை . அதற்கு காரணம்
கருணா ஒரு மஹிந்த அபிமானி என்பதுமாகும்.விக்ரமசிங்காவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் சந்திரிக்கா ஆட்சியில் , அவர்கள் யாரும் வழங்காத இடத்தை கருணாவிற்கு வழங்கியவர் மஹிந்த.  
கருணா பிரான்சில் இருந்த பொழுது அவரின் மனதில் ஏற்பட்ட  மாற்றங்களைப் பிரதிபலிக்கும் புகைப்படங்களை இங்கு பார்வையிடுகின்றவர்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.
ஒரு காலத்தில் கருணா  ஆயுத அதிகாரத்துடன்  வாழ்ந்தவர்.
இன்னுமொரு  காலத்தில் அரசியல் அதிகாரத்துடன் வாழக் கிடைத்தவர்.
இப்பொழுது கருணா போக்கிடம் தேடுகிறார் . அதற்கு அவருக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறதா . மீண்டும் வடக்கு அரசியல் தலைமையுடன் சேர்ந்து கொண்டு ஒரு புதிய தீவிரவாத அரசியலை முன்னெடுக்கும்  சந்தர்ப்பம் கருணாவிற்கு வழங்கப்படுமா ?.அல்லது எங்காவது எப்படியாவது அரசியலில் கண்ணுக்குப் படும்படி தோற்றம் அளிக்க விரும்புகிறாரா ? . 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...