வானவில்’ வாசகர்களுக்கு ஒரு மடல்!- வானவில்’ ஆசிரிய குழு



hands
‘வானவில்’ 5ஆவது ஆண்டைப் பூர்த்தி செய்து ஆறாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ‘வானவில்’ தொடங்கப்பட்ட நேரத்திலிருந்து அதன் ஆதரவாளர்களாலும், எதிர்ப்பாளர்களாலும் மின்னஞ்சல் மூலமாகவும், காதில் விழக்கூடிய வாய்மொழி மூலமாகவும், பல விமர்சனங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. அவை எல்லாம் எமது வளர்ச்சிக்கான உரமாகவும், நீராகவும் இருந்து வந்துள்ளன என்றால் மிகையாகாது.

பொதுவாக, ‘வானவில்’ பற்றி முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள்தான், இந்தக் குறிப்பை எழுதுவதற்கான தூண்டுகோலாய் அமைந்தன என்பதை முதலில் சொல்லிவிட வேண்டும். இனி ‘வானவில்’ பற்றிய விமர்சனங்களைப் பார்ப்போம்.


‘வானவில்’ தமிழ் தேசியத்துக்கு எதிரானது என்பது ஒரு கருத்து. இன்னொன்று, ‘வானவில்’ மகிந்த அரசுக்கு அல்லது சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசுகளுக்கு ஆதரவானது என்பது. இன்னொரு சாரார் ‘வானவில்’ இடதுசாரிப் பத்திரிகை போலத் தன்னைக் காட்டிக் கொண்டாலும், அது 100 வீதம் ஒரு மார்க்சிச – லெனினிசப் பத்திரிகையாக இல்லை என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இலங்கையில் வாழும் நண்பர்கள் சிலர் ‘வானவில்’ இலங்கை விடயங்களை விட, சர்வதேச விவகாரங்களுக்கே அதிக முன்னுரிமை கொடுக்கின்றது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இவை சில பொதுவான விமர்சனங்கள் அல்லது குற்றச்சாட்டுகள்.
இவ்வாறாக, ‘வானவில்’ பற்றி பலரும் பல்வேறு விதமான அபிப்பிராயங்களை முன்வைத்து வருகின்றனர். “காய்த்த மாமரம் கல்லெறி வாங்கத்தானே செய்யும்” என நாம் இவற்றை ‘வானவில்’ எந்தவொரு அரசியல் கட்சி சார்பாகவோ அல்லது அல்லது அப்படியான அமைப்பொன்றை உருவாக்கும் நோக்குடனோ அல்லது ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை பிரச்சாரம் செய்யும் நோக்குடனோ தொடங்கப்பட்டது அல்ல. இதை வழிநடாத்தும் குழுவில் மார்க்சியவாதிகள், ஜனநாயகவாதிகள், முற்போக்கு தேசியவாதிகள், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள், யதார்த்தவாதிகள், காரியார்த்தவாதிகள் எனப் பலதரப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருக்கும் பொதுவான ஒரு தேவை இருந்தது. அதாவது, இலங்கையில் 1977 இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், படிப்படியாக ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு வந்து, அந்த அரசின் இன ஒடுக்குமுறை கொள்கையால் தமிழ் தேசியவாதிகள் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னர், மக்களின் சகலவிதமான உரிமைகளும் போரில் ஈடுபட்ட இருதரப்புகளான அரசாலும், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் முற்றாகவே மறுக்கப்பட்டன. குறிப்பாக, பாசிசப் போக்குக் கொண்ட புலிகளால் தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரம் முற்றுமுழுதாக நசுக்கப்பட்டது.

சுமார் 30 வருடங்கள் இந்த அசாதரண சூழல் நீடித்தது. 2009இல்
போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும், தமிழ் சூழலில் தமிழ் தேசியவாதம் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்கவில்லை. பயமுறுத்தலாலும், நீண்டகால தமிழ் தேசியவாத மூளைச் சலவையாலும், பாரம்பரிய தமிழ் தேசியவாதிகள் மட்டுமின்றி, மாற்றுக்கருத்துப் பேசியோர், ஏன் மார்க்சியம் பேசியோர் கூட, தமிழ் தேசியவாதம் என்ற அபினி மயக்கத்தில் வீழ்ந்து கிடந்தனர். அவர்கள் எந்த மாற்றுக் கருத்தையும் தமிழ் தேசியத்துக்கு எதிரானதாகவும், துரோகத்தனமானதாகவும் உடனடியாக முத்திரை குத்தினர்.

இந்தச் சூழலில்தான், ஒப்பீட்டு வகையில் முதலாளித்துவ ஜனநாயகம் நிலவும் மேற்கு நாடொன்றில் இருந்து, நம்மில் சிலர் இணைந்து உலகளாவிய தமிழ் மக்களுக்காக உண்மையான ஒரு மாற்று ஊடகமான ‘வானவில்’லை ஆரம்பித்தோம். இந்த சிறு விளக்கத்திலிருந்து ‘வானவில்’ தொடங்கப்பட்டதின் நோக்கத்தை நமது வாசகர்கள் ஓரளவு புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.

இன்னும் தெளிவாகச் சொல்வதானால், ‘வானவில்’லின் நோக்கம், தேசிய – சர்வதேசிய நிலவரங்களை முற்போக்கான கண்ணோட்டத்தில் வாசகர்களுக்குக் தருவதுதான். அதன்படி பார்த்தால், இன்றைய உலகின் பிரதான பிரச்சினைகளான வறுமை, வேலையின்மை, சுகாதாரச் சீர்கேடுகள், யுத்தம், இயற்கை அழிவுகள், இனவாதம், நிறவாதம், மதவாதம் என்பன முதலாளித்துவத்தாலும், அதன் உச்சகட்டமான ஏகாதிபத்தியத்தாலும் ஏற்படுத்தப்பட்டவை என்பது புலனாகும். எனவே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அதன் நுகத்தடியிலிருந்து விடுதலை பெறப் போராடும் சகல மக்களுடனும், தேசங்களுடனும், நாடுகளுடனும் ‘வானவில்’ கரம் கோர்த்து நிற்பது எமது கொள்கையாகும்.
உள்நாட்டைப் பொறுத்தவரை, இந்த ஏகாதிபத்திய சக்திகளின் அடிவருடிகளான தமிழ் – சிங்கள பிற்போக்கு சக்திகளுக்கு எதிரான நிலைப்பாடே ‘வானவில்’லின் நிலைப்பாடாகும். அப்படிப் பார்க்கையில், இலங்கை சுதந்திரமடைந்த 1948ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சி மக்களின் விரோதிகளான இலங்கையின் பெருமுதலாளிகளினதும், நிலப்பிரபுத்துவ சக்திகளினதும் நலன்களைப் பாதுகாப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வந்ததுடன், பேரினவாதக் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தி, ஏகாதிபத்திய நலன்களுக்கும் சாதகமாகச் செயற்பட்டு வந்துள்ளது. எனவே, உள்நாட்டில் மக்களின் பிரதான விரோதி ஐ.தே.க. என்பதுவே ‘வானவில்’லின் கருத்தாகும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அவர்களது முதலாவது அரசியல் கட்சியான தமிழ் காங்கிரஸ் முதல், பின்னர் காலத்துக்குக் காலம் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கிய தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைப் புலிகள், இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரை, எல்லாக் கட்சிகளுமே தமிழ் பிற்போக்கு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, சாதி வெறி மற்றும் தமிழ் இனவாத சக்திகளின் பிரதிநிதிகளாகச் செயற்பட்டு வந்ததுடன், ஐ.தே.கவுடன் கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு, ஏகாதிபத்தியத்துக்குச் சார்பாகவும் செயற்பட்டு வந்துள்ளன. எனவே பிற்போக்குத் தமிழ் தலைமை என்பது, தமிழ் மக்களினது சொந்த விரோதி என்பது ‘வானவில்’லின் நிலைப்பாடாகும்.

இந்த இரு தரப்பையும் நாம் எதிர்க்கையில், நாம் ஆதரிக்கக்கூடிய சக்திகள் எவை என்ற கேள்வி எழுவது இயல்பானதே. அப்படிப் பார்க்கையில், சில வரலாற்றுத் தவறுகளை விட்டிருந்தாலும், ஏகாதிபத்தியத்தை உறுதியுடன் எதிர்த்து, நாட்டின் தேசிய சுதந்திரத்தையும் இறைமையையும் பாதுகாப்பதிலும், இலங்கை மக்களுடைய ஏற்றத்தாழ்வான, சீரழிந்து போன சமூக அமைப்பை மாற்றி, ஒரு சமதர்ம சமுதாயத்தை நிறுவுவதற்காகவும், சகலவிதமான இனவாதங்களுக்கு எதிராகவும் போராடும் முன்னணிச் சக்தியாகவும் இடதுசாரிக் கட்சிகளே திகழ்ந்து வந்திருக்கின்றன.

அந்தக் கட்சிகளுடைய கொள்கை அளவுக்கு தீவிரமான சோசலிசக் கொள்கைகளைக் கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை முதலாளி வர்க்கத்தின் தேசபக்தியுடைய தேசிய முதலாளித்துவத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, அதன் ஸ்தாபித காலத்திலிருந்து ஏகாதிபத்தியத்தையும் அதன் அடிவருடியான ஐ.தே.கவை எதிர்ப்பதிலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிலைநாட்டியுள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், நவீன இலங்கையின் உருவாக்கத்தில் இடதுசாரிக் கட்சிகளினதும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியினதும் பங்களிப்பு இல்லாமல் அது சாத்தியமாகி இருக்காது.

எனவே, தற்போதைய சூழலில் வேறு மாற்றுத் தெரிவுகள் இல்லாத ஒரு நிலையில், இந்த அணியினரையே ‘வானவில்’ ஆதரிக்கின்றது என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்வதில் ‘வானவில்’லுக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. கடந்த காலத்தில் மட்டும் இன்றி, எதிர்காலத்திலும், ஏகாதிபத்திய எதிர்ப்பு, பூரணமான தேசிய விடுதலை, சோசலிசம் என்பனவே ‘வானவில்’லை வழிநடாத்தும் கொள்கைகளாக இருக்கும் என்பதை ஓங்கி உரத்து உலகத்துக்குப் பெருமையுடன் சொல்லிக் கொள்கின்றோம்.

அதேநேரத்தில், மக்களுக்கு விரோதமில்லாத மாற்றுக் கருத்துகளுக்கு கடந்த காலத்தில் இடம் கொடுத்தது போலவே, வருங்காலத்திலும் ‘வானவில்’ களம் அமைத்துக் கொடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Source: -‘

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...