உண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளும் !! ( பாகம் ஐந்து )
எஸ்.எம்..எம்.பஷீர் 

ஊதாரி மைந்தனின் கதை ஒன்றும் மொட்டத் தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போடும் கதையல்ல  என்பதை இப்போது பாப்போம்.

முஸ்லிம் காங்கிரஸ் சென்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் , தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாததால் கணிசமான செல்வாக்குடன் திகழந்த ரணில் விக்ரமசிங்க கூட்டணியுடன் சேர்ந்து சம்பந்தனின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்   ஆசீர்வாதத்துடன் போட்டியிட்டு  இரண்டு ஆசன வித்தியாசத்தில்  கிழக்கு மாகான சபையை கைப்பற்ற முடியாமல் போனதும் , ஒருபுறம் "சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்"  என்ற விதத்தில் , முதலமைச்சர் பதவி பற்றி ஹக்கீம் பரிகசித்துக் கொண்டு  , மறுபுறம் தேர்தலில் முறைகேடு நடைபெற்றது என்றும் நீதிமன்றம் வரை சென்று போராடுவோம் என்று முஸ்தீபுகளில் இறங்கினார்.   அந்த நிலையில்  ஹிஸ்புல்லாஹ் தங்களுடன் இணைந்தால் , அவருடன் முரண்பட்டு நிற்கும் அவர் சார்ந்த அவரின் கட்சி முஸ்லிம் உறுப்பினர்களும் தங்களுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸின் தொப்பிகளை சால்வைகளை மீண்டும் அணிந்து கொண்டால் , தாணே கிழக்கின்  முதலமைச்சர்  (பாதுஷா) என்று ஹக்கீம் கனவு காணத் தொடங்கிய பொழுதுதான். கொழும்பின் பிரபல ஆங்கிலப் பத்திரிகை நிருபர் ஒருவர் ஹக்கீமிடம்   முதலமைச்சர் பதவி முஸ்லிம்களுக்கு கிடைக்காதால் உங்களுடன் ஹிஸ்புல்லாஹ் இணைவது பற்றி  சமிக்ஞை காட்டியுள்ளாரே , அப்படி அவர் உங்களுடன் இணைய வந்தால் , அவரை இணைத்துக் கொள்வீர்களா என்று கேட்டபொழுது ஹக்கீம் ஆங்கிலத்தில் அவர் ஒரு "ஊதாரி மைந்தன்" (Prodigal Son)  என்ற வேதாகமக் கதையின் மூலம் ஆங்கில மொழியில் வந்த சொற்றொடரான   சொல்லையே அந்த ஆங்கில பத்திரிகைகாரருக்கு சொல்லி , (தன்னை  விட்டு நீங்கிச் சென்று கெட்டழிந்து திருந்தி மீளும் மகனை மீண்டும் சேர்த்து மகிழும்  வேதாகமக் கதைத் தந்தையைப் போல் ) அவரை சேர்த்துக் கொள்வோம் என்று கூறியிருந்தார். ஏனெனில்  ஹிஸ்புல்லாவின் கட்சி மாறும் சமிக்ஞை  ஹக்கீமைப் பொறுத்தவரை  பழம் நழுவி பாலில் பாலில் விழுத்த  கதைதான்.  வடக்கு கிழக்கிலே முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்றுதனித்தனியாக தங்களை அரசியலில் நிலை நிறுத்திக் கொள்ளும்  முஸ்லிம் காங்கிரஸ் "துரோகிகளின்" எண்ணிக்கை அதிகரித்து செல்லும்  சூழலில் , தான் முதலமைச்சராவதன் மூலம் , "ஊதாரி மகனையோ" அல்லது கட்சிமாறி "சமூகத் துரோகிகளையோ" கட்சிக்குள் உள்வாங்கி ,   தனது தலைமைத்துவத்தின் அத்திவாரமான கட்சியையும் கிழக்கிலே பலப்படுத்தி கிழக்கு மக்களின் தலைவனாக தன்னை ஆயுள் காப்புறுதி செய்து கொள்ளலாம் என்பதே ஹக்கீமின் நிலைப்பாடாகவிருந்தது. 

ஆனால் ஜனாதிபதியைச் சந்தித்த பின்னர் ஹிஸ்புல்லா சந்திரகாந்தனின் முதலமைச்சர் நியமனத்தை அங்கீகரித்து வாளாவிருந்து விட்டார். ஏமாற்றியதாக கூறப்பட்ட ஜனாதிபதியை எல்லையற்றுப் புகழ்ந்தார். இது ஒன்றும் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் புதியதல்லவே!  புலிகளின் பயங்கரவாதத்துக் கெதிரான யுத்தம் குறித்தும் யுத்த வெற்றி குறித்தும் மஹிந்த ராஜபக்சவை வசைப்பாடித் திரிந்த தலைவர் ரவூப் ஹக்கீம், சில மாதங்களின் பின்னர்  திடீரென்று பல்டி அடித்து பதினெட்டாவது திருத்தத்துடன் ,   அரசின் பங்காளியாக நுழைந்து தொப்பியை மாற்றி துணிச்சலும் தீர்க்கமான முடிவும் எடுத்து யுத்தத்தை நடத்தி வெற்றி கண்டவர் மகிந்த ராஜபக்ச என்று போற்றிப் புகழ்ந்தவர் . அது மட்டுமா அவர் சிறந்த கலைஞர் (ஏதோ ஒரு சினிமா நடித்திருக்கிறாராம் மஹிந்த ராஜபக்ச) என்பதால்தான் அவர் சாதனை படைத்து வருகிறார் என்று தவிசாளர் பசீர் சொல்ல , எப்போதுமே ஹசன் அலியை ஆட்சிக்கு எதிராக சிங்கள பேரினவாதத்திற்கெதிராக பகிரங்கமாகக் கதைப்பதற்கு தயார் படுத்தி வைத்திருக்கிறார்கள். (அது கூட கதைப்பதற்கான அனுமதி யாருக்கென்று வழங்குவது என்ற விசயமும் புதிய யாப்பில் உண்டு). 

இதணை இவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கற்றுக் கொண்ட உபாயம். ஹசன் அலி மறந்து அரசினை ஆதரித்தோ அல்லது அரசத் தலைவரை  ஆதரித்தோ பேசக் கூடாது அல்லது நாட்டில் அரசு  எந்த நன்மை செய்தாலும் , அதனை அவர் கண்டு கொள்ளக் கூடாது. அவருக்குப் பணி கூட்டணிக்கு ஆதரவாகக் கதைப்பது , அரசுக்கும் பேரினவாதத்துக்கும் அடிக்கடி அறை கூவல் விடுவது , முஸ்லிம் சமூகத்தை கிழக்கில் இனவாத அலைக்குள் மிதக்க விடுவது .  ஹசன் அலி அப்படிக் கதைப்பது பற்றி எங்கேனும் கேள்வி வந்தால், அது அவரின் தனிப்பட்ட கருத்து கட்சியின் கருத்தல்ல என்று நழுவிவிடும்  உபாயமே அது.  இதனையொத்த பணியையே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சிறிதரனும் சுரேஷ் பிரேமசந்திரனும் செய்வார்கள். கடும் போக்காளர்களையும் மென் போக்காளர்களையும் ஒரு சேர வைத்து பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும்  காட்டும் ரசியல் கலை அது குரு குல "சம்ப"ந்தம்தான்  வேறென்ன!

ஹக்கீம் தெகியத்த கண்டியில் சிங்களவர்களுக்கு மத்தியில் தமது சிங்கள போராளிகளை ஆதரித்து பண்ணுகின்ற பிரச்சாரத்துக்கும் , ஏனைய முஸ்லிம் பகுதிகளில் செய்கின்ற பிரச்சாரத்துக்குமிடையே உள்ள வேறுபாட்டை  ஆழ்ந்து பார்க்காமலே அவதானிக்க முடியும் . இரண்டிலும் தொனியே வேறு . தெகியத்த கண்டியில் சிங்களவர்களிடம் ஹக்கீம் தொடக்கி வைத்த அரசியல் கூட்டத்தில் அவரின் அரச ஊழியரான (அமைச்சர் என்ற வகையில்) அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி மஹிலால் டி சில்வா உரையாற்றி இருக்கிறார். வேறு சில இடங்களிலும் அவர் ஹக்கீமுடன் காணப்படுகிறார் என்று சொல்லப்படுகிறது. அவருக்கும் முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பிரச்சாரக் கூட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஒருவேளை அவரும் முஸ்லிம் காங்கிரஸ் போராளியாக மாறியிருப்பாரோ !

அது மாத்திரமல் ஒருபுறம் கிழக்கில் ஆவேசமான உணர்ச்சியூட்டும் பிரச்சாரங்களை அரசுக் கெதிராக முன்னெடுத்து வரும் ரவூப் ஹக்கீமும் அவரின் அணியினரும் பற்றி அண்மையில் அரசிலுள்ள அமைச்சர் டலஸ் அழகபெருமாவிடம் ஒரு நிருபர் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கிலே தனித்து கேட்பது பற்றி  கேட்ட வினாவிற்கு , அவர் அனுராதபுரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தங்களோடு தங்களின் சின்னத்தில் வேட்பாளரை நிறுத்தியிருப்பது பற்றியும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் கட்சிகள் அனைத்தும் மஹிந்த சிந்தனையை தங்களின் கொள்கையாகவும் மஹிந்த ராஜபக்ச அவர்களை தங்களின் தலைவராகவும்  ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்  என்று கூறியிருந்தார். (  The SLMC and all other constituent parties of the UPFA have accepted the Mahinda Chintana as their policy document and President Mahinda Rajapaksa as their leader. ) அச்செய்தி ஏரிக்கரைப் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. இன்றுவரை அது பற்றி எந்தக் கருத்தும் ஹக்கீம் கூறவில்லை. 

ஹக்கீம் குழுவினர் கிழக்கு மாகாண சபையில் போட்டியிடுவதற்காக தமது நாடாளுமன்றப் பதவிகளை மறைந்த கட்சித் தலைவரின் அடக்கத்தலத்துக்குச் சென்று  , அப்பதவி விலகலுக்கு ஒரு ஐதீக பெறுமானத்தை ஏற்படுத்தி , இராஜினாமாச் செய்து , கிழக்கு முஸ்லிம் மக்களை அந்த அஸ்ரப் மீதான உணர்வுமயப்படுத்தப்பட்ட மாயைக்குள் தள்ளி தேர்தலில் நின்று , கடைசியில் தங்களின் கனவில் இடி விழுந்ததும் , மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் , நுழைந்து கொண்டனர். ஹக்கீமும் அவரின் ஐக்கிய தேசிக் கூட்டாளிகளும் மாகாண சபைத் தேர்தலுக் கெதிராக கொண்டுவந்த வழக்கு வழக்கொழிந்து போனது. !!.

இவ்வளவு இலகுவாக சமூகத் துரோகிகளை நண்பர்களாக்கும் , சமூக நண்பர்களை துரோகிகளாக்கும் அரசியல் கோட்பாடுகள் என்ன ?, அது பற்றி ஹிஸ்புல்லாஹ்விடமிருந்தே  பர்ர்போம். ஹிஸ்புல்லாஹ் எம்.பீ யாகி இரண்டு வருடத்துக்குள் முஸ்லிம் காங்கிரசுக்கு சவால் விட்டவர் , நீதி மன்றுக்கு அழைத்தவர் , முஸ்லிம் காங்கிரசினை சந்தி சிரிக்க வைத்தவர். ஆனால்  முஸ்லிம் காங்கிரஸ் அவரை மீண்டும் ஓரிரு வருடங்களுக்குள் இணைத்துக் கொண்டது.  1996 ஆம் ஆண்டளவில் முஸ்லிம் காங்கிரசின் உயர் மட்ட முக்கிய தலைவரிடம்  "எப்படி நீங்கள் மீண்டும் ஹிஸ்புல்லாவை கட்சியில் சேர்த்துக் கொள்ள முடிந்தது "  என்று இக்கட்டுரையாளர் கேட்ட பொழுது , அவர் சொன்னார் ஹிஸ்புல்லாஹ் ,ஒரு "necessary evil" என்று சொன்னார்.   விரும்பாவிடியினும் செய்துதான் ஆக வேண்டும் , அல்லது விரும்பாவிடினும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்ற விடயமே “ necessary evil “  என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. 

அப்படி அவர் சொன்னதும் ஏன் அப்படியான ஒரு அவசியம் உங்களுக்கு ஏற்பட்டது என்று கேட்டபொழுது " . ஹிஸ்புல்லாவிடம்  வாக்கு வங்கி இருக்கிறது எனவே வேறு வழியில்லை"  என்று அவர்  சொன்னார்.  ஆக மொத்தத்தில் கொள்கைகள் கோட்பாடுகளின் அடிப்படையில் அல்ல எதிரிகளும் நண்பர்களும் முஸ்லிம் காங்கிரசில் தீர்மாணிக்கப்படுகிறார் கள்.
முஸ்லிம் காங்கிரசில் தனக்கு ஒரு எம்.பீ யாக முடியவில்லையே என்ற காழ்ப்புணர்ச்சி கொண்ட முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் சேகு இஸ்ஸதீன் முஹிதீனுக்கு எதிராக ஹிஸ்புல்லாவை தூண்டி வளர்த்தவர். ஆனால் அவரும் முஸ்லிம் காங்கிரஸை விட்டு விலகிய பின்னர் , முஸ்லிம் காங்கிரஸை விட்டு ஏற்கனவே விலக்கியிருந்த/விலக்கப்பட்டிருந்த ஹிஸ்புல்லா மீண்டும் அஸ்ரபுடன் சேர்ந்த பொழுது "தந்தையுடன் மகன் சேர்ந்து விட்டார்"  என்று தனிக் கட்சி அமைத்து , அக்கட்சிப் பத்திரிகையில் "தந்தையுடன் சேர்ந்து விட்டார் தனயன் " என்றவாறு எழுதப் பன்னியவர்.  அவரின் படி அவர் வேதாகமக் கதை உதாரணம் சொல்லவில்லை. அப்பத்திரிகையின் படி அஸ்ரபும் கெட்டவர் அவரோடு சேர்ந்த ஹிஸ்புல்லாவும் கெட்டவர் என்பதே அவரின் பத்திரிகை செய்தியின்  பொருளாகும்.

இன்னும் வரும் 


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...