உண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளும் !! ( பாகம் நான்கு )




எஸ்.எம்..எம்.பஷீர் 
  
குரான் ஹதீஸ் எங்களின் யாப்பு என்று மேடைக்கு மேடை முழங்கியவர்களால்  மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியைக் காப்பாற்ற முடியவில்லை , கட்சியில் முதலாவது பிளவு ஹிஸ்புல்லாவால் 1990களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது , ஊர்கள் பிரிக்கப்பட்டன. ஒற்றுமை என்பது வெறும் ஆரசியல் கோசமே என்பதை மிகத் துரிதமாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்கள்  புரிந்து கொண்டார்கள். ஹிஸ்புல்லாஹ் மீண்டும் கட்சிக்குள் இணைக்கப்பட்டு தங்களின் உயர் கட்சி பீட போராளியாக மாற்றப்பட்டார் . புலிகளைப் போல் தமது கட்சியிலிருந்து (ஹக்கீமின் பாசையில் முஸ்லிம் காங்கிரஸ் இயக்கத்திலிருந்து ) வெளியேறி தங்களுக்கு சவாலாக மாறுவோரை  துரோகியாக்குவதும் , அவர்கள் மீண்டும் இணைந்ததும் தியாகியாக்குவதும் மிக சாதாராண முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் நடைமுறையாக அங்கீகரிக்கப்பட்டது. 


முன்னாள் ஓட்டமாவடி உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவிய போது , துரோகியாகி , பின்னர் முஸ்லிம் காங்கிரசில் இணைந்த பொழுது தியாகியாகி , அதன் பின்னர் பேரியல் அஸ்ரபுடன் இணைந்த பொழுது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஊடக விசுவாசி ஒருவர் (நபா) இந்த மொஹிதீன் யார் தெரியுமா அவரின் கடந்த கால துரோகத்தனங்கள் தெரியுமா என்று விலாவாரியாக அவர் வரலாற்றை எழுதிய சில நாட்களின் பின்னர் அவர் மீண்டும்  முஸ்லிம் காங்கிரசில் இணைந்து தியாகியாகிப் போனார். முஸ்லிம் காங்கிரசில் தியாகி , துரோகி என்று எந்த தொப்பியை அணிந்து கொள்வது என்பது புலிகளை விட அதிக குறைந்த இடைவெளியில் நடைபெறும் சமாச்சாரம். இப்படி முஸ்லிம் காங்கிரஸில் வெற்றி பெற்று கட்சி மாறும் நபர்கள் யார் , அவர்களுக்கான  பத்வா (மார்க்க தீர்ப்பு)  என்ன?

முஸ்லிம் காங்கிரஸ் , தனது முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் பிரேமதாசாவுடன் ( யானையுடன் ) இரகசியக் கூட்டு வைத்து , கிழக்கில் ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்களைப் போட்டியிடுவதிலிருந்து தடுத்து , அஸ்ரப் நாடாளுமன்றம் சென்ற பின்
தேர்தல் வெற்றியினை கொண்டு பிரேமதாசாவுடன் இணையலாம் என்ற அவரின் கனவு பொய்ப்பித்தது  என்றாலும் அவரின் தனிப்பட்ட ஆதரவாளர்களுக்கு அவ்வப்போது  பிரேமதாசாவின் தயவில் பல நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க முடிந்தது . ஆனால் அவரின் அமைச்சராகும் கனவும் தனது மக்களுக்கு பாரிய நலன்கள்  புரியும் எண்ணமும் மெய்ப்பித்தது சந்திரிகாவின் காலத்திலேதான்,
எல்லாவற்றையும் மறந்து ஒன்று சேர்ந்து எதுவுமே முன்னர் நடக்காததுபோல் துரோகிகளும் தியாகிகளும் சகோதர வாஞ்சையுடன் பழகும் போது, இவர்களின் அரசியல் முரண்பாடுகளுடன் சேர்ந்து அரசியலுக்காக நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் பலர் நிரந்தர அல்லது நீண்டகால பகையாளிகளாக மாறி போயுள்ளார்கள். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரசில் இப்படியான உதாரணங்களாக ஹிஸ்புல்லாஹ் அவ்வப்போது நடைபெற்ற சடு குடு ஆட்டம்   , நிசாம் காரியப்பர் பேரியல் அஸ்ரபுடன் பிரிந்து சென்று மீண்டும் காங்கிரசில் இணைந்தது , சேகு இஸ்ஸதீன் சேர்ந்தது , நசீர் அஹமது அவசர அவசரமாக முஸ்லிம் காங்கிரசில்  மீண்டும் இணைக்கப்பட்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளரானது ,மாற்றுக் கட்சியிலிருந்து வந்து ஆசாத் சாலி சேர்ந்தது , மூதூரில் குறுகிய காலத்தில் அதிக கட்சி மாறி  சாதனை படைக்கும் ஹசன் மௌலவி முஸ்லிம் காங்கிரசுக்கு தாவியது என்று இந்த துரோக அல்லது போராளி பட்டியல் அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது.

இந்த நேரத்தில் சென்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஞாபகத்துக்கு வருகிறது.. சென்ற மாகாண சபைத் தேர்தலில் சந்திரகாந்தனை முதலமைச்சராக நியமித்ததும்  மஹிந்த ராஜபக்ச முஸ்லிம்களுக்கு (தனக்கு) முதலமைச்சர்  பதவி தராமல்  முஸ்லிம்களை ஏமாற்றி விட்டார்  என்று ஹிஸ்புல்லாஹ் கொடுக்குக் கட்டிக் கொண்டு சவால் விட்டதும , மொத்தத்தில் ஒரு குழப்பமான சூழ்நிலை முஸ்லிம் அரச ஆதரவுத் தரப்பினரிடம்  நிலவியதும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கிழக்கின் பாதுஷாவாக (முதலமைச்சராக)  மாறிவிட்டால் தமது ஆயுட்கால முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் அதிகாரத்தை முதலமைச்சர் பதவியைப் பலப்படுத்தி ஆட்டங் காணாமல் வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம்   மேலோங்க ஹிஸ்புல்லாவின் மகிந்தவுடனான முரண்பாட்டை மூலதனமாக்க ஹசன் அலி அனுசரணையாக கருத்து வெளியிட்டார். இந்த சமிக்ஞை  ஹசன் அலியிடமிருந்து வெளிவந்ததும்  , ஹிஸ்புல்லாவும் கட்சி தாவும் எண்ணத்தினை நாசூக்காக வெளிப்படுத்தினார் . போராளிகள் கூட்டம் மீண்டும் போராட கூட்டமைக்கப் போகிறார்கள் என்ற ஒரு அரசியல் ஆரூடம் நிலவ விடப்பட்டது.

இந் தியாகி துரோகி , என்பதற்கப்பால் இன்னுமொரு வேதாகமத்திலுள்ள முக்கியமான ஒரு போதனைக் கதையான ( parable )  ஊதாரி மைந்தனைப் பற்றிச் சொல்லி , இது ஒன்றும் மொட்டத் தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போடும் கதையல்ல  என்பதை வலியுத்தி இப்போது கதைக்கு வருவோம்.

ஊதாரி மைந்தன்

ஒரு மனிதனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தன் தகப்பனிடத்தில்: தகப்பனே, சொத்தில் என் பங்கை எனக்குத் பிரித்து தரவேண்டும் என்றான். எனவே தகப்பன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக் கொடுத்தார். சில நாட்களுக்குப் பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் விற்று சேர்த்துக் கொண்டு, தூரநாட்டுக்குப் புறப்பட்டுப்போய், அங்கே தீய வழிகளில் வாழ்ந்து, தன் சொத்தை எல்லாம் அழித்தான். எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்தத் நாட்டில் கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி, அந்த நாட்டின் குடிகளில் ஒருவனிடத்தில் போய் சேர்ந்துக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்னும் தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஆனாலும் ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.

அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலையாள்கள் எத்தனையோ பேருக்குப் போதுமான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, இறைவனுக்கு எதிராகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதி உள்ளவனல்லன், உம்முடைய வேலையாள்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான்.
அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம் கொடுத்தார் . மகன் தகப்பனிடத்தில்: தந்தையே , இறைவனுக்கு எதிராகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதி உள்ளவனல்லன் என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் வேலையாள்களிடம்: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் காலணிகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து சிறந்த விருந்து சமையுங்கள். நாம் விருந்துண்டு, இன்பமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் இறந்தான், திரும்பவும் உயிர்த்தான் காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் இன்பமாயிருக்க தொடங்கினார்கள்.

அவனுடைய  இளைய குமாரன் திரும்பி தன வீட்டுக்கு திரும்பி வந்த பொழுது , அவனின் மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு, வேலையாள்களில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் விருந்து செய்கிறார் என்றான்.அப்பொழுது அவன் கோபமடைந்து, வீட்டினுள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தார். அவன் தகப்பனுக்குப் பதிலாக: இதோ, இத்தனை வருடகாலமாய் நான் உமக்கு வருந்தி உழைத்தேன், ஒருக்காலும் உம்முடைய கட்டளையை மீறாதிருந்தும், என் நண்பரோடே நான் இன்மாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. விபச்சாரிகளிடத்தில் உம்முடைய சொத்தை அழித்த உம்முடைய மகனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக சமைத்து விருந்து கொண்டாடுகிறாயே  என்றான். அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. உன் சகோதரனாகிய இவனோ இறத்தான், திரும்பவும் உயிர்த்தான் காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் ஆனபடியினாலே, நாம் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டாமோ என்று சொன்னார்.

அக்கதை இங்கே நினைவு கூரப்பட வேண்டிய   காரணத்தை பற்றி தொடர்ந்து பார்ப்போம் (இன்னும் வரும்)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...