உண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளும் !! ( பாகம் மூன்று )




எஸ்.எம்..எம்.பஷீர் 

1992 ஆம் ஆண்டின் முஸ்லிம் காங்கிரஸின் கட்சி அரசியல் யாப்பில் இலங்கையின் இஸ்லாமிய மத விவகாரங்களில் உச்ச அதிகாரம் கொண்ட மத அறிஞர்களைக் கொண்ட ஜம்மியத்துல் உலமா பிரதிநிகள் முஸ்லிம் காங்கிரஸின் மஜ்லிஸ் ஏ சூராஹ் (MAJLIS –E-SHOORA  6.9  a. All Ceylon Jamiyathul Ulama would constitute the Majlis-e-Shoora of the Sri Lanka Muslim congress ) கலந்துரையாடல் கூட்டங்களில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கும் சந்தர்ப்பம் பின்னர் 2011 வந்த யாப்பில்  (MAJLIS –E-SHOORA 7.4    a.  The leader in consultation with the High Command of the party constitute an Advisory Council of the party known as the Majlis–e-Shoora from among the past members of the High Command and or the High Command who continue to be actively involved in party activities  நீக்கப்பட்டதன் முக்கிய காரணங்களில்  ஒன்று முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட  வேண்டுமென்ற அழுத்தங்களை ஜம்மியத்துல் உலமா பிரயோகிக்கக் கூடிய சூழல்கள் நிலவியமையும் அவதானிக்கப்படக் கூடியதாகவிருந்தது.


உண்மை முஸ்லிம் என்றால் யார் முஸ்லிம் என்றால் யார் என்று பத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புக்கள்)  முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் அவரின் சிஷ்யர்களும்  வழங்கத் தொடங்கிய காலகட்டத்தில் அது பற்றி ஜம்மியத்துல் உலமா எனும் முஸ்லிம் மத விவகாரத்துக்கான சுயேட்சையான நிறுவனம் கூட ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அதன் பின்னணியைப் பார்க்கின்றபொழுது , அது முஸ்லிம் அரசியலை , அரசியல்வாதிகளின் அபத்தங்களைக் (Blunders) பொருட்படுத்தவில்லை என்பது ஒன்று மற்றொன்று , மதம் தொடர்பான தீர்மானங்களில்  வேறு பல முக்கியமான விவகாரங்கள் பற்றி அவை கவனம் செலுத்தத வேண்டியிருந்தன. உதாரணமாக காத்தான்குடி ரவூப் மௌலவி , பயில்வான் போன்ற பிருகிருதிகளின் பிரச்சினகள் ,

ஆனால் ஜம்மியத்துல் உலமா பிரதிநிதி,  மசூரா சபையில் பிரதிநித்துவம் வகிக்க கூடிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சி யாப்பின் ஏற்பாடு,   ஜம்மியத்துல் உலமாவிற்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் கூட அஸ்ரபின் காலத்தில் தர்ம சங்கடங்களை ஏற்படுத்தியிருந்தது.  அதாவது மறைந்த முஸ்லிம் காங்கிரஸின்  தலைவர் அஸ்ரப்  திகவாப்பிய பௌத்த கோவிலுக்கு ஒரு வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையையும் புறக்கணித்து , அரசியல் பிரமுகர்களுடன் மற்றும் பௌத்த குருமாருடன்" மல் பூஜா"  நிகழ்விற்கு அவர்களுடன் செல்ல நேரிட்டபொழுது மலர்த் தட்டு தூக்கிச் சென்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்த பொழுது ஜம்மியத்துல் உலமாவிற்கும்  அதிலும் குறிப்பாக அப்போதைய தலைவராகவிருந்த ரியால் மௌலவிக்கும் நெருக்கடி ஏற்பட்டது. ஜம்மியத்துல் உலமா அரசியல் அதிகாரமும் மக்கள் செல்வாக்கும் பெற்ற ஒரு தலைவரை அதட்டிக்  கேட்க முடியால் போய்விட்டதா ? என்று கேள்வி எழுந்தது. இறுதியில் அது தொடர்பில் தீர்மானம் ஒன்று ஏதோ ஒரு மேற்கொள்ளப்பட்டது.! பகிரங்க விளக்கமொன்றை தேசியத் தொலைக்காட்சியில் சொல்ல வேண்டி நேரிட்டது.  எனினும் அது பற்றி ஆழமாகப் பார்ப்பது  எமது இக்கட்டுரையின் நோக்கமல்ல , ஆனால் அரசியலில் முஸ்லிம் தலைவர்கள் விடும் மதம் சம்பந்தப் பட்ட தவறுகளையும் அவர்களின் பதவி அதிகாரம் என்பவற்றுக்கப்பால்  சுட்டிக்காட்ட வேண்டிய அதிகாரம் ஜம்மியத்துல் உலமாவிற்கு உண்டு , 1990 ஆண்டுகளைப் போலல்லாது இலங்கையில் பல முஸ்லிம் கட்சிகள்  (ஹக்கீமின் பிடிவாதத்தாலும் , புண்ணியத்தாலும் ) உருவாகியிருக்கின்ற , அரசியல் ஆதிக்கம் பெற்றிருக்கின்ற   சூழ்நிலையில்  ஒரு முஸ்லிம் கட்சியின்  ஆலோசனைக் கூட்டங்களில் ஜம்மியத்துல் உலமா பிரதிநிதி கலந்து கொள்வது நியாயமானதல்ல. மேலும்  ஜம்மியத்துல் உலமாவிற்கும் அதன் முஸ்லிம் காங்கிரசின் தலைவரோடு முறுகிக் கொண்ட அனுபவமும் உண்டு என்பதால் ஜம்மியத்துல் உலமாவே அவ்வாறானா பிரதிநிதித்துவத்தை விரும்பமாட்டார்கள்.
இந்த சமாச்சரத்தை விட   அஸ்ரபின் மறைவின் பின்னர் முஸ்லிம் முஸ்லிம் காங்கிரசுக்கு சவாலாக எழுந்தது கட்சியின் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினையுமாகும்.

எனவே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதனங்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் ( Chapter: Viii : Properties and Trustees of the Party)  பற்றிய 1992ம் ஆண்டின் யாப்பின் சரத்துக்கள் மற்றம் செய்யப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. லிபியாவின் மறைந்த தலைவர் கடாபியின் உதவியினால் தம்மால் உணர்வூட்டப்பட்ட தமக்கு வாக்களித்த ஏழைப் பாமர கிழக்கு முஸ்லிம் மக்களுக்கு  எதனையும் பெற்றுக் கொள்ள இவர்கள் வழி சமைக்கவில்லை,  மாறாக ஆண்டுதோறும்  இஸ்லாமிய அழைப்பு சமூகம் (Islamic Call Society) எனும் கடாபியின் வருடாந்த கூட்டங்களுக்கு கப்பலேறிச் செல்வதும் கைச்செலவுக்கு காசு பெறுவதும் , கட்சியின் அலுவலகத்தை கடாபியின் உதவியினால்  கட்டிப் பெருப்பித்ததுமாகும். அந்த நன்றியுனர்வினால்தான் என்னவோ முஸ்லிம் காங்கிரசின் சார்பில் ஹக்கீம் அரபு வசந்தம் பற்றி பேசும் போது எகிப்து துனீசியா என்று மட்டும் கூறி லிபியாவை பற்றி மூச்சே விடாமல் விட்டு விட்டார். ஹக்கீமும் கடாபியின் அழைப்பில் லிபியா சென்று வந்தவர் என்பதுடன் கடாபியின் அனுசரணையால் அமெரிக்காவிற்கும் சென்று அங்கு நேசன் ஒப் இஸ்லாம் (Nation of Islam) எனப்படும் (இவர்கள் பிரதான முஸ்லிம் நீரோட்டத்துள் அடங்க மாட்டார்கள் ) இயக்கத்தின் தலைவர் லூயிஸ் பாராகானை (Louis Farrakhan) சந்திக்க சென்றார். சுருக்கமாக சொன்னால் முஸ்லிம்கள் கொடுத்த அரசியல் அதிகாரத்தை வைத்துக் கொண்டு கடாபின் தயவில் கூட சுகம் அனுபவித்தவர்கள்.  அந்த வகையில் பார்த்தால் ஐக்கிய தேசியக் கட்சியில் பிரதி அமைச்சராகவிருந்த மறைந்த முன்னாள் மட்டக்களப்பு பிரதி அமைச்சர் பாரீத் மீராலேப்பை தனது இராக் விஜயத்தினை -சதாம் ஹுசைனுடனான சில மணித்தியாலத் தொடர்பினைக்  கொண்டு ஏறாவூரில் சதாம் ஹுசைன் எனும் கிராமத்தையே  கட்டிஎழுப்பினார். அதனைக் கூட சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர்  அந்தப் பெயரே கிராமத்துக்கு உள்ளூராட்சி சபையின்  பதிவில் இல்லை என்று மறுக்கும் சாதனையையே முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பசீரால் செய்ய முடிந்தது.

அஸ்ரபின் மறைவின் பின்னர் ஏற்பட்ட சொத்து , பதவிச் சண்டைகளில் அதிலும் குறிப்பாக திருமதி அஸ்ரப் , நசீர் அஹமத் , அதாவுல்லாஹ் என பல தரப்பாக உரிமை.  உடமை என உட்கட்சி போராட்டம் வெடித்த போது காங்கிரஸின் உயர் பீட போராளிகள் யார் என்று அரசியலை ஆக்க பூர்வமாக அணுகுவோருக்கு தெளிவானது.  பிரச்சினைகள் எழுந்த போதுதான் கட்சியின் யாப்பிலுள்ள ஓட்டைகளை முஸ்லிம் காங்கிரஸ் சட்ட நிபுணர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். அஸ்ரப் மறைந்தவுடன் ஏற்பட்ட  உள்கட்சி சொத்து நம்பிக்கைப் பொறுப்பு பிரச்சினைகள் ஒருவாறு தீர்க்கப்பட சுமார் பத்து வருடங்கள் பிடித்தன. ஆகவேதான் கட்சியின் யாப்பு ஒரு கட்சியின் சொத்துக்களை தனிநபர்கள் கட்சியின் பெயரால் உரிமை கொண்டாடுவதை , (நம்பிக்கைப் பொறுப்பாக  ஹாபிஸ் நசீர் அஹமது போல்  உரிமை கொண்டாடுவதை ) எதிர்காலத்தில் தடுக்கும் வண்ணம் அல்லது அவ்வாறான சூழ்நிலைகளில் வழக்காட , அச்சொத்துக்களை மீள் கொள்ள ,மேலும் சொத்துக்களை கட்சியின் தேவைக்காக -வருமானத்திற்காக- எல்லா விதத்திலும் , பயன்படுத்தி கட்சிக்கு வருமானமுள்ளதாக மற்றும் வகையில் ஏற்பாடு செய்ய கட்சியின் யாப்பு திருத்தப்பட்டது. மேலும் பல திருத்தங்களை 2011 புதிய கட்சி யாப்பு கொண்டுள்ளது,

ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் , உத்தியோகபூர்வமாக கட்சியாகப் பதிவு செய்யப்பட்டு முதலில்  கிழக்கு மகான சபைத் தேர்தலை எதிர்கொண்ட காலத்திலிருந்து  பகிரங்க வெளியீடாக கட்சியின் யாப்பினை      1992  ஆண்டில் வெளியிடும் வரை கட்சியின் யாப்பு குர் ஆண் ஹதீஸ் என்று சொல்லப்பட்டு தங்களின் கட்சி அரசியல் மத அரசியலே என்பதாக முஸ்லிம் மக்களுக்கு காட்டப்பட்டது. குர் ஆணிலிருந்து  அவ்வப்போது வசதிக்காக மேற்கோள்கள் காட்டப்பட்டன. ஆயினும் குரானின் பல வசனங்கள் முஸ்லிம் காங்கிரசின் பிரச்சார வசனங்களாக தேர்தல் காலங்களில் மிகத் தீவிரமாக பயன்படுத்தப்பட்டன.   ( இன்னும் வரும்)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...