உண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளும் !!எஸ்.எம்.எம்.பஷீர்

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் “ - குர்ஆன் 2:42. .

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் இனவாத மதவாத  அரசியல் கலவையுடன் களை கட்டத் தொடங்கி விட்டது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவும் , தமிழர் பிரச்சினையில் சர்வதேசத்தை திரும்பிப் பார்க்க வைக்கவும் கிழக்கு மாகான சபைக்கான தேர்தல் ஒரு சந்தர்ப்பம்  என்று தமிழ் தேசியத் தரப்பு தம்பட்டம் அடிக்க ( தம்பட்டம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் ஒரு பக்கம் தோலால் மூடப்பட்டிருக்கும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும்.)   முஸ்லிம் காங்கிரஸ் தரப்பு தம்புள்ளை பள்ளிவாசலை தெகிவளை பள்ளிவாசலை அவ்வப்போது , ஆங்காங்கே நடைபெறும்  பௌத்த தீவிரவாத சக்திகளின் அடாவடித்தனங்களை,  தமது கட்சியின் உள்ளூர் மட்ட அரசியல் வாதிகள் மூலம் ,கிழக்கில் மட்டும் தேர்தல் பிரச்சாரத்துக்காக றபான் அடிக்க  ( றபான் ஒரு தோல் இசைக் கருவி )   தெஹியத்தகண்டிய சிங்களவர்கள் சிலரும்  முஸ்லிம் காங்கிரஸின் " சிங்களப் போராளிகளாக " பேரினவாதிகளாகவிருந்து அல்லது பேரினவாதிகளின் கட்சிகளிலிருந்து விலகி புனர் ஜென்மம் எடுக்கிறார்கள்.


ஆக மொத்தத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இனவாதக் கட்சியல்ல என்று ஹக்கீம் முழங்க
,  அப்பாவி கிராமப்புற சிங்களவர்கள் முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்டு , அக்கட்சிக்கு ஆதரவளித்து தாங்கள் இனவாதிகள் அல்ல என்று ஒரு மதவாத இனவாதக் கட்சிக்கு ஒரு புதிய முகத்தைக் கொடுக்கிறார்கள். அதற்கு பகரமாக சிங்கள முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு (போராளிகளுக்கு ) , தமிழ் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு  ( போராளிகளுக்கு ) முஸ்லிம் காங்கிரசின்  முஸ்லிம் "போராளிகள்" வாக்களிக்க வேண்டும் , அவர்களை வெற்றியடையவும் செய்ய வேண்டும், அப்போதுதானே  மூவினப் போராளிகளும் முஸ்லிம் காங்கிரசை இனவாதக் கட்சி இல்லை என்றாக்க முடியும். ஏற்கனவே யட்டிநுவர பிரதேச சபையில் ஒரு சிங்கள பெண்மணி வேறு முஸ்லிம் காங்கிரசில் இணைந்து போராடி சிங்கள முஸ்லிம் காங்கிரஸ் பெண் போராளியாக திகழ்கிறார்.!

மொத்தத்தில் முஸ்லிம்கள் மட்டுமே போராளிகள் அல்ல முஸ்லிம்களுக்காக போராடுவதற்கு சிங்கள் போராளிகள் எங்களுடன் இருக்கிறார்கள் என்று புதிய பேரம்பேசலை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்காலத்தில் மேற்கொள்ளலாம். அனால் சிங்களவர்கள் தங்களின் கட்சிகளில் யாரையும் போராளிகள் என்று அழைப்பதில்லை ஏனெனில் அவர்களில் பெரும்பான்மயானோர்தான் " பேரினவாதிகள் ஆயிற்றே ! அவர்களுக்கெதிராகத்தானே போராட்டங்கள். எனவே சிங்களவர்கள் தமிழர்கள் பறங்கியர்கள் போராளியாக வேண்டுமென்றால் முஸ்லிம் காங்கிரஸில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒரு புதிய விதியை செய்து விட்டார்கள்.

முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்கும் சாமான்ய மக்களை போராளிகள் போராளிகள் என்று உசுப்பேத்தி தங்களின் அரசியல் அதிகாரத்தினை உறுதி செய்து கொண்டு தங்களின் சொந்த நலன்களை மேம்படுத்திக் கொள்வதில் முஸ்லிம் காங்கிரஸ் பாசறையில் வளர்ந்த அத்தனை அரசியல்வாதிகளும் அசகாயசூரர்கள்.   இப்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் முன்னாள் தலைவர் உட்பட  ,  குளு குளு அறைகளில் இருந்து அரச சம்பளத்துடன் தங்களின் உயர் கல்வியையும் ஆசுவாசமாக பெற முடிந்தது. சிங்கள தமிழ் கட்சித் தலைவர்கள் கூட அரசியலுடன் அட்டகாசமான வாழ்க்கை வசதிகளுடன் இப்படியெல்லாம் உயர் கல்வித்தகமைகளைப் பெற முடியவில்லையே! சும்மா சொல்லக் கூடாது தன் பிள்ளைகள் படிக்காவிட்டாலும் பரவாயில்லை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் முதுமாணிக் கல்விகள் பெற வேண்டும் என்பதற்காகவும் கூட  அவர்களை அரசியல் அதிகாரத்தில் இருத்திய இலங்கை முஸ்லிம் சமூகம் உலகின் உன்னத சமூகமே. !!

தமிழர் தேசியக் கூட்டமைப்பும் பியசெனாவை சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தி வெல்ல வைக்க
, அவர் பின்னர் தேசியக் கட்சியான ஸ்ரீ ல. சு கட்சி ஆட்சியில் ஆசனம் தேடிக் கொண்டார். அவராவது அரைவாசித் தமிழ்- சிங்களவர் , ஆனால் இப்போது முஸ்லிம் காங்கிரசின் சிங்களப் போராளிகள் , தனிச் சிங்களவர்களேதான் !!

வேடுவ முஸ்லிம் காங்கிரஸ் போராளி

இந்த சிங்கள முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு முன்னரே வேடுவ முஸ்லிம் காங்கிரஸ் போராளி ஒருவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேசிய சபாவின் ஆட்புல எல்லைக்குட்பட்ட  மங்களகம எனப்படும் சிங்கள பிரதேசத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் சார்பில்   2008ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினார் . இவரின் பெயர் முதியான்சலாகே நந்தசிறி. இவரின்  வம்ச பின்னணியை பார்க்கும் பொழுது இவர் ஆதி வேடுவ சமூகத்திலிருந்து சேனைப் பயிர்ச் செய்கையிலீடுபட்டு வேட்டையாடுவதைக் கைவிட்ட  " யகஷா  கோத்ரா"  எனப்படும்சமூகப் பிரிவினரைச் சேர்ந்தவராகும். எனவே இவரே முதல் முஸ்லிம் காங்கிரஸ் வேடுவப் போராளி என்றால் மிகையாகாது. அதிலும் சுவாரசியமானது என்னவென்றால் அவரின் சகோதரர்  முதியான்சலாகே தயானந்த , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு அதே தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். எனவே இனிமேல் ஒரு பறங்கி முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரை கண்டு பிடித்துவிட்டால் இலங்கையின் எல்லா இனத்தையும் இணைத்த கட்சியாக முஸ்லிம் காங்கிரசை சொல்லலாம் அல்லவா!. சரி இந்த முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடத்துக்கு அவர்கள் யாரையும் தெரிவு செய்யலாமா ? இன மத  பேதமற்ற கட்சி என்றால் அவ்வாறான எதிர்பார்ப்பும் நியாயமானதே. 

உண்மை முஸ்லிமும் உண்மைச் சிங்களவரும்

1989 ஆம் ஆண்டு அஸ்ரப் பிரேமதாசாவுடன் ஒப்பந்தம் வைத்துக் கொண்டு (பிரேமதாசாவின் ஜனாதிபதித் தேர்தலில் ) அவரின் வெற்றிக்கு ஒத்தாசை புரிந்து , பின்னர் பொதுத் தேர்தலில்  தனது அரசியல் எதிரிகளை கிழக்கில் போட்டியிடுவதிலிருந்து தடுத்து முஸ்லிம் காங்கிரசை வெற்றியை நோக்கி நகர்த்திய அரசியல் அணுகுமுறையில் உள்ளிடையாக செயற்பட்ட போது , மறுபுறத்தில் வெளிப்படையாக ஐக்கிய தேசியக் கட்சி கெதிராக , சுதந்திரக் கட்சிக் கெதிராக தீவிர எதிர்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டு , அதிலும் குறிப்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் ஐக்கியதேசிய கட்சியின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபடியால் அவர்களுக்கு வாக்களிப்பது முஸ்லிம்களுக்கே எதிரானது என்று பிரச்சாரம் பண்ணினார். அன்றைய தேர்தல் பிரச்சார பிரசுரங்களில் " ஆதலால் எந்தவொரு உண்மை முஸ்லிமின் வாக்கும் யு என்.பீ யின் யானைச் சின்னத்திற்கு போடப் படக் கூடாது." என்று வலியுறுத்தப்பட்டது. அப்படி வாக்களித்தால் அவன் உண்மை முஸ்லிமாகமாட்டான் என்ற எதிர்க் கருத்தினுக்கு அது இட்டுச் சென்றது. ஜனாதிபதித் தேர்தலில் யானைக் வாக்களியுங்கள் என்று சொல்லி சில மாதங்களின் பின்னர் , யானைக்கு உண்மை முஸ்லிம் வாக்களிக்க மாட்டான் என்று கூறுவதை யார் கேள்வி கேட்க துணிந்தார். முஸ்லிம்களின் அறிவை மறைத்து என்ன?

இந்தப் பின்னணியில்தான் அண்மையில் கிழக்கு மாகான முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக காத்தான்குடியிலிருந்து முபீன் "முஸ்லிம்கள் எவரும் வெற்றிலைச்சின்னத்திற்கு வாக்களிக்கமாட்டார்கள்." என்று தனது எதிபார்ப்பை மட்டுமல்ல , அப்படி வாக்களித்தால்  முஸ்லிம்களுக்கெதிராக இந்த நாட்டில் இடம் பெற்றுவரும் அநியாயங்களை முஸ்லிம்கள் பார்த்து விட்டும் வெற்றிலைச்சின்னத்திற்கு வாக்களிப்பார்கள் என்றால் அது நாம் நமது பள்ளிவாயல்களை உடைப்பதற்கு வழங்கும் அங்கீகாரமாகும். " என்று குறிப்பிடுள்ளார். காலத்துக்கு காலம் முஸ்லிம்களுக்கு அநீதிகள் இழைக்கப்படும்போது அந்தவேளையில் ஆட்சியிலிருக்கும் அரசுக் கெதிராக கூக்குரலிடுவதும் பின்னர் அந்த அரசுடன் தங்களின் வசதிக்காக கூட்டு வைப்பதும் முஸ்லிம் காங்கிரசுக்கு மட்டுமல்ல அவர்களின் பாசறையில் வளர்ந்து இன்று பிரிந்திருப்போருக்கும் சகஜமானதே. முஸ்லிம் மக்களை முஸ்லிமாகவோ உண்மை முஸ்லிமாகவோ எப்படி இருப்பது என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களிடம் முஸ்லிம் மக்கள் வகுப்பு எடுக்க வேண்டி இருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் வரலாற்றில் உண்மைச் சிங்களவரும் உண்மை முஸ்லிமும் பற்றி பார்ப்பதும் ஒப்பீட்டுக்கு உதவும்  (இன்னும் வரும்)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...