லங்கை தமிழ் அரசியல் அரங்கில் மாகாண சபைகள் பற்றிய விடயம் மீண்டும்சூடு பிடித்துள்ளது.

இலங்கை அரசியலில் இனம், மொழி, மதம் சம்பந்தப்பட்ட விடயங்கள் எப்போதுமே முக்கிய பேசுபொருள்களாக இருந்து வந்துள்ளன. இதில் முக்கியமாக தமிழ் மக்களின் இன மற்றும் மொழிப் போராட்டங்கள் முக்கியமான இடம் பிடித்து வந்துள்ளன.

1957 இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ‘சிங்களம் மட்டும்’ சட்டம் மூலம் மொழிப் பிரச்சினை தீவிரம் அடைந்தது. அது பின்னர் சுமார் 30 வருடங்கள் கழித்து முடிவுக்கு வந்தது.

ஆனால், இனப் பிரச்சினை சம்பந்தமான தீர்வு இன்னமும் அனுமான் வாலாக இழுபட்டுச் செல்கிறது. நாட்டை ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தமது ஆட்சிக் காலங்களில் தமிழ் தலைமைகளுடன் இனப் பிரச்சினை குறித்து சில ஒப்பந்தங்களைச் செய்த போதிலும் அவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.

அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. இனவாதமே ஆட்சிக்கு வருவதற்கான குறுக்கு வழியாக இருந்ததால், ஆட்சியில் இருக்கும் கட்சி தமிழர் தரப்புடன் இனப் பிரச்சினை சம்பந்தமாக ஒரு தீர்வுக்கு வந்தால், எதிரணியில் இருக்கும் பிரதான கட்சியோ அல்லது கட்சிகளோ சேர்ந்து அதைக் குழப்புவது ஒரு வழமையாக இருந்தது. அது மாத்திரமின்றி, வெளியில் உள்ளவர்கள் குழப்பாமல் ஒப்பந்தத்தைச் செய்த ஆட்சியாளர்களே தம்மால் செய்யப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தாமல் தட்டிக் கழித்த வரலாறும் உண்டு.

இந்தச் சூழ்நிலையில்தான் 1976 இல் தமிழ்த் தலைமை ‘தமிழ் மக்களுக்கென ஒரு தனிநாடு அமைப்பதே தமிழர்களின் பிரச்சினைக்கான ஒரே தீர்வு’ என்ற தூரதிருஸ்டி அற்ற முடிவை எடுத்து அதை நோக்கிப் போராடும்படி தமிழ் இளைஞர்களைத் தூண்டிவிட்டது. அந்தச் சூழ்நிலையில் 1977 இல் ஆட்சிக்கு வந்த அமெரிக்கா சார்பான ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு, ஒரு பக்கத்தில் தமிழ் மிதவாத தலைமையுடன் கூடிக்குலாவிக் கொண்டு, மறு பக்கத்தில் தமிழ் இளைஞர்களின் போராட்டங்களை ஒடுக்குவது என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது இராணுவ ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது.

ஒரு பக்கத்தில் ஜே.ஆரின் ஆட்சியில் அமெரிக்க சார்பான போக்கு அதிகரித்தமையும், மறுபக்கத்தில் இந்தியாவின் தமிழ் நாட்டு மக்களுடன் இரத்த உறவைக் கொண்டிருந்த இலங்கைத் தமிழர்கள் ஜே.ஆரின் அரசால் இராணுவ ஒடுக்குமுறைக்கு உள்ளானமையும், அமெரிக்க வல்லரசின் போட்டியாளரான சோவியத் யூனியனுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டிருந்த இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசை நெருக்கடியிலும் வெறுப்பிலும் ஆழ்த்தியது.

எனவே, ஜே.ஆரின் அரசை அமெரிக்காவின் பிடியிலிருந்து தன் வழிக்குக் கொண்டு வரும் ஒரு உத்தியாகவும், தமிழ் நாட்டு மக்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடனும் இந்திரா காந்தி அரசு இலங்கைத் தமிழ் இளைஞர்கள் இந்தியா சென்று ஆயுதப் பயிற்சிகள் பெறவும், அதன் மூலம் ஜே.ஆர். அரசுக்கெதிரான ஆயுதப் போராட்டத்தைக் கொண்டு நடத்தவும் உதவிகள் வழங்கியது. இருந்தும் ஜே.ஆர். அரசு எதற்கும் அடிபணியாது தமிழ் பிரதேசங்களில் தனது மிலேச்சத்தனமான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது.

இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் பிரதமர் இந்திராகாந்தி தனது சீக்கிய மெய்ப் பாதுகாவல்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமர் பதவிக்கு வந்தார். அவரது காலத்தில் இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும், இலங்கை அரசு தனது இராணுவவாதப் போக்கை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்தது.

இந்த நிலைமையில்தான் இந்தியா ஜே.ஆரின் அரசை நிர்ப்பந்தித்துப் பணிய வைத்து 1987 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் என்ற பெயரில் ஒப்பந்தமொன்றைச் செய்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அரசியல் யாப்பில் திருத்தம் செய்யப்பட்டு மாகாண சபைகள் அமைக்கப்பட்டன. அந்தத் திருத்தம் 13 ஆவது திருத்தச் சட்டம் என அழைக்கப்பட்டது.

இந்தத் திருத்தத்தின் மூலம் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த வட கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டது. இந்த மாகாண சபையின் அமைவு இனப் பிரச்சினைக்கான ஓரளவான அதிகாரப் பகிர்வாகப் பார்க்கப்பட்டது. மாகாண சபை முறைமை ஏறத்தாழ இந்தியாவின் மாநில அரசு முறையை ஒத்ததாக நோக்கப்பட்டது. அதே நேரத்தில், இலங்கையின் ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் தனித்தனி மாகாண சபைகள் அமைக்கப்பட்டு, அவை பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வாக நோக்கப்பட்டது.

மாகாண சபைகளை உருவாக்கிய இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் இலங்கைத் தரப்பில் எந்தவொரு தமிழ் தலைமையும் கையொப்பம் இடவில்லை. இலங்கை அரசும், இலங்கைத் தமிழர்கள் சார்பாக என்று கருதக்கூடிய அளவுக்கு இந்திய அரசுமே கையெழுத்திட்டன. அதன் காரணமாகவே, அதுவரை காலமும் இனப் பிரச்சினை சம்பந்தமாக செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் இந்த ஒப்பந்தம் மட்டுமே அரசியல் அமைப்பு ரீதியாக ஏற்கப்பட்டு நடைமுறைக்கும் வந்தது. இந்தியா தலையிட்டிருக்காவிட்டால், இத்தகைய ஒரு ஒப்பந்தம் கூட வருவதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. மாகாண சபைகள் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரு முழுமையான தீர்வல்ல என சில பகுதியினர் வாதிட்டாலும், அம்மணமாக நின்ற தமிழர்களுக்கு இடுப்பில் சுற்ற ஒரு துண்டாவது கிடைத்தது என்ற வகையில் அதன் பெறுமானத்தை எவரும் ஏற்காமல் இருந்துவிட முடியாது.

ஆனால், தூரதிஸ்ட்டவசமாக தனிநாடு கோரி போராடிய பிரதான இயக்கங்களில் ஒன்றான விடுதலைப் புலிகள் மாகாண சபைகளை ஏற்காததுடன், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை அது செய்யப்பட்ட பொழுது பிரதமராக இருந்து எதிர்த்த ஆர்.பிரேமதாசவுடன் சேர்ந்து இலங்கையில் மாகாண சபை செயற்பாட்டை உறுதிப்படுத்த வந்திருந்த இந்திய அமைதிப்படையுடன் போர் புரிந்ததுடன், பிரேமதாச மூலம் இந்திய அமைதிப்படையைத் திருப்பி அனுப்பி, வட கிழக்கு மாகாண சபையையும் இயங்காமல் செய்தனர். அது மட்டுமல்லாமல், மாகாண சபைகளை ஆதரித்து நின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமான அ.அமிர்தலிங்கத்தையும் சுட்டுப் படுகொலை செய்தனர்.

அதன் மூலம் பிரதான தமிழ் கட்சியின் ஆதரவை மாகாண சபைகளுக்கு இல்லாமல் செய்தனர். முக்கியமாக தமிழரசுக் கட்சி மாகாண சபைக்கான ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டு புலிகளின் முன்னால் பெட்டிப்பாம்பாக அடங்கிக் கொண்டது. அது மாத்திரமின்றி, முன்னர் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்பி மாகாண சபைத் தேர்தல்களில் பங்குபற்றிய ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புளொட் இயக்கங்கங்களும் மாகாண சபைக்கான ஆதரவைக் கைவிட்டு புலிகளின் குண்டாந்தடிக்குப் பயந்து அவர்களின் பின்னால் சென்று விட்டனர்.

இந்த சூழல், மாகாண சபை முறையை இல்லாதொழித்து ஒற்றையாட்சியையும், சிங்களப் பேரினவாதத்தின் மேலாண்மையையும் திரும்பவும் நாட்டில் வலுப்படுத்த எதிர்பார்த்திருந்த சிங்கள இனவாத சக்திகளுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. அத்தகைய ஒரு சூழலை உருவாக்கியதில் புலிகளுக்கும் அவர்களை ஆதரித்து நின்ற தமிழ் கட்சிகளுக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

ஓன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்பாத புலிகள், தமக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் நழுவவிட்டு, ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்து, தனிநாடு அமைக்கும் முயற்சியில் விடாப்பிடியாக நின்று, இறுதியில் 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசால் அழிக்கப்பட்டு விட்டனர். மறுபக்கத்தில் மாகாண சபை தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்று சொல்லிக்கொண்டு புலிகளின் வாலில் தொங்கிய தமிழ் கட்சிகளும் மாகாண சபைக்கு மேலாக எதையும் பெற முடியாத கையறு நிலையில், ஈரொட்டு வியாபாரம் செய்பவர்கள் போல, மக்களிடம் தேர்தல் காலங்களில் வாய்க்கு வந்த பொய்களைச் சொல்லி வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டனர்.

இந்த நிலைமையில்தான் தற்போதைய அரசாங்கம் இலங்கைக்கு புதிய அரசியல் அமைப்பொன்றை வரையும் பணியில் விரைந்து செயற்பட்டு வருகின்றது. அந்த அரசியல் சாசனம் அமுலுக்கு வரும்போது, பெரும்பாலும் மாகாண சபை முறைமை இல்லாமல் செய்யப்பட்டுவிடும் என்ற கருத்து பரவலாக அரசியல் அரங்கில் நிலவுகின்றது. அப்படி நடந்தால், தமிழர்கள் இடையில் சுற்றியிருந்த துண்டையும் இழந்து அம்மணமாக நிற்கும் நிலை ஏற்படும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இப்படியான ஒரு சூழ்நிலையில்தான், காலம் கடந்த சூழ்நிலையில், திடீர் ஞானம் வந்தது போல, தமிழ் கட்சிகள் சில ஒன்றுகூடி மாகாண சபைகளை முழு அதிகாரங்களுடன் இயங்குவதற்கு இலங்கை அரசை வலியுறுத்தும்படி இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கின்றனர். மாகாண சபைகள் உருவாவதிற்கு இந்தியா முக்கிய பங்களிப்பு செய்தது என்ற வகையில் இந்தியாவுக்கு கடிதம் எழுதுவதில் தவறில்லை. ஆனால் இவர்கள் செய்த மாபெரும் தவறு என்னவென்றால், இந்தியாவின் ஆதரவை நாடுவதற்கு முன்பாக இலறங்கை அரசுடன் அது பற்றிப் பேசியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் நேரடியாக இந்தியாவை அணுகியதின் மூலம் அரசாங்கம், தென்னிலங்கை அரசியல் கட்சிகள், சிங்களப் பொதுமக்கள் ஆகியோரின் சந்தேகத்தையும் வெறுப்பையும் தூண்டி விட்டுள்ளனர்.

அடுத்ததாக, இலங்கை அரசாங்கம் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் போது, அதில் சிறுபான்மை இனங்களின் உரிமைகளையும் உத்தரவாதம் செய்யும் சரத்துகளையும் உள்ளடக்கக் கூடியதாக தமிழ் கட்சிகள் கூட்டாக முயற்சி எடுத்திருக்க வேண்டும். அதற்கு ஆதரவளிக்கக் கூடிய ஏனைய சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும், தென்னிலங்கைக் கட்சிகளையும் திரட்டியிருக்க வேண்டும். ஆனால் தமிழ் கட்சிகள் அவ்வாறான முயற்சிகள் எதிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.

இதற்கெல்லாம் ஒரேயொரு காரணம், பிச்சைக்காரனின் புண் போல, தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினை தீர்ந்து விடாமல் தமக்கு அரசியல் வாழ்வளிக்கும் நித்திய சஞ்சீவியாக நிலைமை தொடர வேண்டும் என தமிழ் தலைமைகள் விரும்புவதைத் தவிர வேறு காரணம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

 Author: manikkural

Source: vaanavil 134 February 2022